29 மே 2012

சந்திரநேரு சந்திரகாந்தன் கைதாகி விடுதலை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் 3மணிநேரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்!
கடந்த வருடம் திருக்கோயில் நடந்த கலவரம் தொடர்பாக பொத்துவில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிமன்றுக்கு வந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்று மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளார்.
கடந்த வருடம் திருக்கோவில் பகுதியில் (12.8.2011 ) மூன்று மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடித்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் பொலிசார் இவ் மர்ம மனிதர்களை (கிறீஸ் மனிதன்) விடுவிக்க முயற்சி யெடுப்பதாக அறிந்த பொதுமக்கள் மிகவும் கோபமுற்று பொலிஸ் நிலை யத்தை முற்றுகையிட்டனர்.
அதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையங்களைச் சுற்றி பொல்லுகள், தடிகள் சகிதம் திரண்ட பொது மக்கள் மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோசங்களை எழுப்பினர். பின்னர் பொதுமக்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டதுடன் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர்.
இவ் வேளையில் அங்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திர காந்தன் சந்திரநேரு இப்பிரச்சனையை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பொதுமக்கள் சார்பில் பொலிசாருடன் பேசினார்.
மக்களின் எதிர்ப்பு அதிகமானதால் படையினர் ஸ்தலத்துக்கு வந்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர் படையினரை கற்களால் திருப்பி தாக்கினர். பின்னர் மீண்டும் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் செய்தே மக்களை விரட்டியடித்தனர் படையினர்.
இச்சம்பவத்தில் மக்களைத்திரட்டி கலகத்தில் ஈடுபட்டதாக திருக்கோயில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாறு சந்திரநேருவை அழைத்திருந்தும் கூட அவர் லண்டன் சென்றிருந்ததால் அவரால் சமூகமளிக்க முடியவில்லை. இதனால் இவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நிதிமன்றிற்கு ஆஜராகியிருந்தார். இதன்போது வழக்கை விசாரித்த நிதிபதி மூன்று மணித்தியாலங்கள் அவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் சாட்சிகள் வரவழைக்கப்பட்டு சந்திரகாந்தனை பிணையில் செல்ல அனுமதியளித்தார். மீண்டும் அடுத்த மாதம் 30அம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக