31 அக்டோபர் 2012

இந்தியா எமக்கு பெரும் தலைவன் இல்லை",குணதாச அமரசேகர

திவிநெகும சட்டமூலம் தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாடு, மாகாண சபை முறைமை, திவிநெகும சட்டமூலம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
திவிநெகும தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த சட்டமூலம் பலவந்தமாக கொண்டு வரப்பட்டது. இதனை நீக்க எவருக்கும் அச்சமடைய தேவையில்லை. இந்தியா எமக்கு பெரும் தலைவன் இல்லை எனவும் குணதாச அமரசேகர கூறியுள்ளார்.

ஐ.நாவில் எந்த உறுதிமொழியும் வழங்கமாட்டோம்!சிறீலங்கா சொல்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின்போது பொறுப்புக்கூறும் கடப்பாட்டை இலங்கை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டுமென சர்வதேச சமூகம் வலியுறுத்திவரும் நிலையில், குறித்த கூட்டத்தொடரில் எந்தவொரு வாக்குறுதியையும் தாம் அளிக்கப் போவதில்லை என்று இலங்கை ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது.
அத்துடன், குறித்த கூட்டத்தொடரில் மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பில் தொடுக்கப்படும் கேள்விக்கணைகளுக்கு உரிய வகையில் பதிலடிகொடுக்கத் தாம் தயார் என்றும் இலங்கை அரசு சூளுரைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் ஆரம்ப கட்ட அமர்வுகள் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றன.
குறித்த கூட்டத்தொடரில் இலங்கைக்குள்ள சவால்கள் தொடர்பில் கருத்துக் கேட்டபோதே இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளவை வருமாறு:
ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள விசாரணையை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றோம். குறிப்பாக மீளாய்வு அமர்வுகளில் சுமார் 99 நாடுகள் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ளதுடன், இவற்றில் 90 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே பேசும்.
காலக்கிரம மீளாய்வு அமர்வுகளின்போது இலங்கை தன்னார்வ அடிப்படையில் எந்தவொரு வாக்குறுதியையும் அளிக்காது. அதேவேளை, குறித்த கூட்டத்தொடரில் இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகள் கண்காப்பு நாடுகளாக உள்ளன. 19 ஆவது ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்கூறப்பட்ட நாடுகள் வாக்களித்திருந்தது  தெரிந்ததே.

30 அக்டோபர் 2012

ராஜிவ் கொலையில் பதுக்கப்பட்ட “வீடியோ கேசட்”.

 Rajiv Gandhi Assassination Video Suppressed ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மிக முக்கியமான வீடியோ கேசட் சாட்சியம் ஒன்று பதுக்கப்பட்டதாகவும், இதைச் செய்தவர் அப்போது ஐபி தலைவராக இருந்த எம்.கே.நாராயணன் என்றும், அதை வழக்கை விசாரித்த கார்த்திகேயன் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாகவும், இந்த வழக்கில் சிபிஐயின் தலைமை புலனாய்வு அதிகாரியாக செயல்பட்ட கே. ரகோத்தமன் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ரகோத்தமன் ஏற்கெனவே "ராஜிவ் கொலை வழக்கு- மர்மம் விலகும் நேரம்" என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். தற்போது "Conspiracy to kill Rajiv Gandhi - From CBI files" என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்த இரண்டு புத்தகங்களிலும் முக்கியமான விஷயமாக ரகோத்தமன் சொல்வது ஒரு வீடியோ கேசட் மறைக்கப்பட்டுவிட்டு என்பதுதான்!
ராஜிவ் கொல்லப்பட்ட மறுநாள் அப்போதைய பிரதமர் சந்திரசேகருக்கு ஐ.பி அமைப்பின் தலைவராக இருந்த தற்போதைய மேற்குவங்க ஆளுநரான எம்.கே. நாராயணன் ஒரு கடிதம் எழுதினார். அதில் எங்களிடம் ஒரு முக்கிய கேசட் உள்ளது. அதில் "அந்த பெண்மணியை" அடையாளம் காண முயற்சிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஆனால் கடைசிவரை ஐ.பி வசம் இருந்த அந்த கேசட் சிபிஐயிடமும் சரி.. வேறு எந்த ஒரு விசாரணை அமைப்பிடமும் ஒப்படைக்கப்படவே இல்லை என்பதுதான் ரகோத்தமனின் குற்றச்சாட்டு.
அந்த கேசட்...
ராஜிவ் கொலை வழக்கில் ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள்தான் பிரதான ஆதாரமாக இருந்தது. இந்த நிலையில் சிவராசன், தணு உள்ளிட்டோர் சில மணிநேரம் ஸ்ரீபெரும்புதூர் மைதானத்தில் காத்திருந்து ராஜிவை கொலை செய்திருக்கின்றனர். அந்த சில மணி நேரங்களில் அவர்கள் யார் யாருடன் பேசினர்..? எப்படி ராஜிவுக்கு மாலையிடும் இடத்துக்கு மெதுமெதுவாக நெருங்கினர் என்பது போன்ற விவரங்கள் ஐபி வசம் இருந்த கேசட்டில் பதிவாகி இருக்கலாம் என்பதுதான் ரகோத்தமனின் சந்தேகம்.
மரகதம் சந்திரசேகரைக் காப்பாற்ற?
தமது முந்தைய புத்தகத்தில் இதுபற்றி எழுதியுள்ள ரகோத்தமன், அப்படி ஒரு கேசட் கிடைத்தால் மரகதம் சந்திரசேகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரச்சனை வரும் என்று கருதி முழுப்பூசணியை மறைத்துவிட்டது ஐ.பி. என்று சாடியுள்ளார். அத்துடன் "இறந்த தலைவரைவிட இருக்கும் பிரமுகர்கள் முக்கியமாகி விடுகிறார்கள்" என்றும் ரகோத்தமன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
சிவராசன் ஊடுறுவ மரகம்தான் காரணம்
காங்கிரஸ் பிரமுகரான மரகதம் சந்திரசேகர் மூலமே சிவராசன் குழுவினர் ஸ்ரீபெரும்புதூர் மைதானத்துக்குள் நுழைய முடிந்தது என்பது பலதரப்பிலும் வெளியான தகவல். ஆனால் ராஜிவ் கொலை வழக்கில் அவர்கள் சேர்க்கப்படவில்லை என்பதால் ரகோத்தமன் இத்தகைய சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தற்போதைய புத்தகத்திலும் கேசட் பற்றிய எம்.கே. நாராயணின் 1991-ம் ஆண்டு மே 22-ந் தேதி கடிதம் பற்றியும் இந்த கேசட்டுக்கு என்னாச்சு என்றும் மீண்டும் ரகோத்தமன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அந்த கேசட் பற்றிய உண்மை தெரிஞ்சாகனும்....என்கிற ரகோத்தமன் குரலுக்கு எப்ப விடை கிடைக்குமோ?

போர்க்குற்ற ஆதாரங்களால் சிறீலங்கா அச்சத்தில் மூழ்கியுள்ளது!

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு தொடர்பில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும் தெரியவருகிறது.
இந்த மாநாட்டின்போது இறுதிப்போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன் அரச படையினரின் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய காணொலி ஆதாரங்கள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் அரசு இது தொடர்பில் முழுமையான அச்சத்தில் உள்ளது. இதன் அடிப்படையில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது சுமத்தி இருந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை தயார் செய்யும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது என அறியவந்துள்ளது.
அதன் ஒரு கட்டமாகவே திருகோணமலையில் இடம்பெற்ற மாணவர்களின் கொலை மற்றும் மூதூரில் இடம்பெற்ற தொண்டு பணியாளர்களின் படுகொலை போன்றவை தொடர்பிலான விசாரணைகளை மீண்டும் அரசு ஆரம்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்து, இது தொடர்பில் பேச்சு நடத்துவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

29 அக்டோபர் 2012

ஐ.நா.விசாரணையில் பா.ம.க.பங்கேற்கும்.

சிறீலங்காவில் நடத்தப்பட்ட போர் படுகொலைகள் குறித்து ஐ.நா. அமைப்பு நடத்தும் விசாரணையில் பாமக பங்கேற்கும் என்று நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறீலங்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இதற்காக சிறீலங்கா ஆட்சியாளர்கள் மீது போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற முழக்கம் உலகெங்கும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சிறீலங்காவில் போருக்குப் பிறகும் மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கபட்டன என்பது குறித்த முழுமையான காலமுறை மதிபீட்டாய்வு, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அக்டோபர் 22ம் நாள் தொடங்கி நவம்பர் 5ம் நாள் வரை நடைபெறும் காலமுறை மதிப்பீட்டாய்வு பணிக்குழுவின் 14 வது கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த விசாரணையை நடத்தும் பொறுப்பு இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளிடம் ஒப்படைக்கபட்டிருக்கிறது. இந்த விசாரணையின் போது இந்தியா நடுநிலையாக செயல்பட்டு சிறீலங்காவுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என ஏற்கனவே நான் வலியுறுத்தியுள்ளேன்.
சிறீலங்காவுக்கு எதிரான விசாரணையின் முதற்கட்டமாக நாளை மறுநாள் நடைபெறும் விசாரணையில் மனித உரிமை அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கவுள்ளன.
அதைத் தொடர்ந்து நவம்பர் 1ம் நாள் சிறீலங்கா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த இறுதி விசாரணை நடத்தபட்டு, அதன் முடிவுகள் நவம்பர் 5ம் நாள் அறிவிக்கபடவுள்ளன. என்னை நிறுவனராகக் கொண்டு செயல்படும் பசுமைத்தாயகம் ஐ.நா.வின் சிறப்பு ஆலோசனைக் குழுவாக அங்கீகரிக்கபட்டிருப்பதால், இந்த விசாரணையில் பங்கேற்க பசுமைத் தாயகம் அமைப்பிற்கு ஐ.நா.மனித உரிமை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி நாளை மறுநாள் நடைபெறவுள்ள விசாரணையில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி பங்கேற்று சிறீலங்கா மீது ஏன் போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும்? என்பதற்கான வாதங்களை முன்வைக்க உள்ளார். தொடர்ந்து நவம்பர் 1ஆம் நாள் நடைபெறவுள்ள விசாரணையில் ஜி.கே. மணியுடன் பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர. அருளும் கலந்து கொள்கிறார்.
பின்னர், இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவும், பிரிட்டிஷ் தமிழ் பேரவையும் இணைந்து வரும் நவம்பர் 6ஆம் நாள் முதல் 9ஆம் நாள் வரை லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில் நடத்த விருக்கும் சர்வதேச மாநாட்டிலும் இந்த இருவரும் பங்கேகற்பார்கள்.
இந்த மாநாட்டிலும் சிறீலங்காவுக்கு எதிராக போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும். சிறீலங்கா இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக, உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.
சிறீலங்கா போரின் போது போர்க்குற்றங்கள் இழைக்கபட்டதற்கு பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்திருப்பதால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நடைபெறும் சிறீலங்காவுக்கு எதிரான விசாரணையின் போது இந்தியா நடுநிலையுடன் செயல்பட்டு, சிறீலங்காவுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் பிரிவினைவாதப் போரை ஏற்படுத்த கோத்தபாய ராஜபக்ஷ பிள்ளையார்சுழி!

News Serviceஎதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுத் தொடரில் இலங்கைக்குப் பேராபத்து காத்திருப்பதாக முன்மொழிவு கூறியுள்ளார் விக்கிரமபாகு கருணாரட்ண .
கடந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் சர்வதேசத்துக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் எவையும் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில், உலக நாடுகள் அனைத்தும் இலங்கையின் மனித உரிமை நிலைவரம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகள் குறித்து கேள்விக் கணைகளைத் தொடுக்கத்தயார் நிலையில் உள்ளன.
அதுமட்டு மன்றி, உள்நாட்டிலும் மஹிந்த அரசுக்கு ஒரு பயங்கரமான நெருக்கடி நிலை ஏற்படவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் நவசம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.
நாட்டில் மீண்டும் பிரிவினைவாதப் போரை ஏற்படுத்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பிள்ளையார்சுழி போட்டுள்ளார். இவரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனவாதப் போர் தற்போது நாட்டில் அதியுச்சம் அடைந்துள்ளது என்றும் பாகு தெரிவித்தார்.
13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பது குறித்து பேசுவதற்கு கோத்தபாயவுக்கு அருகதையில்லை. அவர் ஓர் அரச அதிகாரி. இதை புரிந்துகொள்ளாமல் அவர் எக்காளமிடக் கூடாது. 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்குத் தீர்வாகாது என்றால் அவர்களுக்கான தீர்வு என்ன என்றும் விக்கிரமபாகு கேள்வியெழுப்பினார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு..
நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த அரசின் உயர்மட்ட நடவடிக்கைகளை சாதகமாக அமைத்துக்கொள்வதற்காகக் கீழ் மட்டத்தில் சிறுபான்மை மக்களது வழிபாட்டுத் தலங்களும், புனித சின்னங்கள் மீது தாக்குதல் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
நாட்டில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்ற கோஷம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் எழுப்பப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் சிறுபான்மை மக்களது வழிபாட்டுத் தலங்களைத் தாக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாட்டில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து மாபெரும் அரச எதிர்ப்புப் போராட்டம் நாடு முழுவதுமுள்ள மக்களால் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே, இவற்றைக் கட்டுப்படுத்தி மக்களைத் திசைதிருப்பவே அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது என்றார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.

28 அக்டோபர் 2012

புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு அந்த அமைப்பின் சுவிட்சர்லாந்து இணைப்பாளர் பி.சிவநேசன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரயோகித்துள்ள தடையை நீக்குமாறு அவர் கோரியுள்ளார். சென்னை சட்டத்தரணி ராதகிருஸ்ணன் என்பவரின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1967ம் ஆண்டு சட்டவிரோத செயற்பாடுகள் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தியா தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் புலிகள் செயற்படவில்லை என இணைப்பாளர் சிவநேசன் சட்டத்தரணியின் ஊடாக தெரிவித்துள்ளார். சிவநேசன் புலிகளின் இணைப்பாளர் என்பதற்கும், ராதகிருஸ்ணன் அவரது சட்டத்தரணி என்பதற்கு என்ன ஆதாரங்கள் என இந்திய நீதமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிவநேசனின் கடவுச் சீட்டுப் பிரதி உள்ளிட்ட சில ஆவணங்களை இதன் போது சட்டத்தரணி ராதகிருஸ்ணன் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 29ம் திகதி மதுரையிலும், நவம்பர் மாதம் 3ம் திகதி சென்னையிலும் நடைபெறவுள்ளது.

லண்டனில் நடைபெறவுள்ள தமிழர் பேரவை மாநாட்டில் தி.மு.க.விற்கு முக்கியத்துவமா?

லண்டனில் அடுத்த மாதம், 6ம் தேதி நடக்கும், பிரிட்டன் தமிழர் பேரவை மாநாட்டில், தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்கின்றனர். இதனால், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆகியோர், இந்த மாநாட்டை புறக்கணிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை தமிழர்களின், மனித உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக, நியூயார்க்கில் உள்ள ஐ.நா.,சபை, மற்றும் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்திடம் மனுக்களை கொடுக்க தி.மு.க., முடிவெடுத்துள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், ஐ.நா., சபையில் அளிக்கவுள்ள, டெசோ மாநாட்டுத் தீர்மானங்களின் வரைவு மனு காட்டப்பட்டு, அவரது ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.இம்மாதம், 30ம்தேதி, சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்படுவது குறித்தும், அங்கே உள்ள நிகழ்ச்சிகள் குறித்தும், யார், யாரை சந்திக்க இருக்கிறோம் என்பது பற்றியும், கருணாநிதியிடம் விளக்கப்பட்டுள்ளது.
ஐ.நா., சபையில், மனுவை அளித்துவிட்டுத் திரும்பும் நிலையில், அடுத்த மாதம், 6ம்தேதி லண்டனில் நடைபெறவுள்ள, "பிரிட்டன் தமிழர் பேரவை' சார்பில் நடைபெறும் தமிழ் மாநாட்டில் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். லண்டன் மாநாடு நிகழ்ச்சிகள், மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. அதில் இலங்கை தமிழர்களின் மனித உரிமை மீறல், அவர்களுக்கு மறுவாழ்வு, அரசியல் அதிகாரம், வாழ்வுரிமை குறித்த விவாதங்கள் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்க, அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., ஒருவர் அழைக்கப்பட்டார். அவர் லண்டன் செல்ல கட்சித்தலைமை அனுமதிக்கவில்லை என, கூறப்படுகிறது. ம.தி. மு.க., சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ, லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளார். கோர்ட் உத்தரவு மூலம், வெளிநாடு செல்ல பாஸ்போட்டும் தயாராக வாங்கியிருந்தார். ஆனால், அம்மாநாட்டில் தி.மு.க., வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாலும், ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பதாலும் வைகோ மாநாட்டிற்கு செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
லண்டன் மாநாட்டில், தி.மு.க., வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், லண்டன் செல்லவில்லை என்றும், அவருக்கு பதிலாக பிரதிநிதிகள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர், தொல்.திருமாவளவன் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளார். அவர், எப்போது பயணிக்கிறார் என்பது குறித்த ஆலோசனை நடந்து வருகிறது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:இலங்கை தமிழர்கள் நலனுக்காக, நிறைவேற்றப்பட்ட, டெசோ மாநாட்டின் தீர்மானங்கள், நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபையில் ஒப்படைக்கப்படுகிறது.மனித உரிமை மீறல் குறித்து, 150 பக்கங்கள் கொண்ட மனுக்கள் மற்றும் டெசோ மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் பேச்சுகள் அடங்கிய ஆடியோ சிடிக்கள், இலங்கை தமிழர்களின் துயரச்சம்பவங்கள் குறித்த புகைப்படங்கள் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் நடந்த இறுதி கட்டபோரின்‌போது, பதவியிலிருந்த தி.மு.க., அவர்களை காப்பாற்ற எதுவும் செயியவில்லை என்ற குற்றச்சாட்டு உலகத் தமிழர் மத்தியில் தொடர்கிறது. ராஜபக்ஷேவைவை விட, தி.மு.க.,வை குற்றவாளியாக முன் நிறுத்துவதில், பல்வேறு தமிழ் அமைப்புகளும் தீவிரமாயி இருந்து வருகின்றன.இந்நிலையில், லண்டன் தமிழர்கள் மத்தியில்,பேசுவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் மீதுள்ள கோபத்தைபோக்க, தி.மு.க. முயற்சி எடுத்து வருகிறது. தி.மு.க.விற்கு கிடைத்த இந்த வாய்ப்பு, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் மத்தியில், செல்வாக்கு பெற்றிருந்த, ம.தி.மு.க.,- பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

27 அக்டோபர் 2012

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கெதிராக கடும் யோசனை!

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக கடும் யோசனை ஒன்று முன்வைக்கப்படும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நேற்று தகவல் வெளியாகியுள்ளது.
தன்னிச்சையான சித்ரவதை முகாம்கள், கொலைகள் தொடர்பாக ஆராய்ந்து பார்க்கும் விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸிடம் இன்னர் சிட்டி பிரஸ் எழுப்பிய கேள்வியின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது, 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறியுள்ள ஹென்ஸ், இதற்காக விடியோ காட்சிகளை பயன்படுத்த எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில், நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத் தொடரில், தமது தரப்பு கருத்துக்களை வெளியிட பிரதிநிதி ஒருவருக்கு, குறைந்தளவான நேரமே வழங்கப்படும். இதனால், அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பாக அதிக கவனத்தை செலுத்த தாம் எண்ணியிருப்பதாகவும் ஹென்ஸ் கூறியுள்ளார்.
கடந்த ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், கடந்தகால விடயங்கள் தொடர்பாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் வழிமுறை திட்டம் ஒன்றின் அடிப்படையில் செயற்படுமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா கேள்வி!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் நடைமுறை தொடர்பிலான இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கேள்வி எழுப்பியிருப்பதாக நம்பகரமாக அறிய முடிகின்றது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியிருந்த போது நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதாக இலங்கை உறுதிமொழி வழங்கியிருந்ததன் பின்னணியில்இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அமுலாக்கம் நடைமுறைக்கு வந்திருந்தால் என்னென்ன விடயங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றியும் இன்னும் எஞ்சியுள்ளவற்றை நடைமுறைப்படுத்த தேவைப்படும் காலம் என்பன குறித்தும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கையிடம் பேசியிருப்பதாக உயர்மட்ட அரச வட்டாரங்கள் கூறின.
அமெரிக்காவின் கோரிக்கைக்கமைய இலங்கை ஒரு விரிவான அறிக்கையைத் தயார் செய்து வருவதாகவும், வெகு விரைவில் அந்த அறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் கையளிக்கப்படுமென்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

26 அக்டோபர் 2012

இளையராசாவின் கனடா வருகை அவரது முகத்திரையை விலக்கவும் அவரது மறுபக்கத்தை மக்கள் பார்க்கவும் உதவியுள்ளது! - நக்கீரன் சாடல்

News Serviceபேராசிரியர் சுப. வீரபாண்டியனுக்கு புலம்பெயர் தமிழ்மக்களிடையே ஓரளவு நல்ல பெயர் இருக்கிறது. நல்ல தமிழ் உணர்வாளர். பகுத்தறிவாளர். ஆனால் அவர் கருணாநிதி சொல்வதற்கு எல்லாம் கோயில் மாடுபோல தலையை எப்போது ஆட்டத்தொடங்கினாரோ அன்று தொடக்கம் அரசியல்வாதி சுப. வீரபாண்டியனை யாரும் கணக்கில் எடுப்பதில்லை. கருணாநிதி வி.புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு சார்பாக இசைவு கொடுத்தவர்.
ஒருமுறை அல்ல பலமுறை. வன்முறை எனக்குப் பிடிக்காது வி.புலிகளுக்குக் கொடுத்த ஆதரவை எப்போதோ (திமுக) விலக்கிக் கொண்டு விட்டோம் என்று சட்ட சபையிலும் அதற்கு வெளியிலும் சொல்லித் திரிந்தவர். தேசியத் தலைவரின் 80 அகவைத் தாயார் மருத்துவத்துக்கு வந்த போது விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியதற்கு உடைந்தையாக இருந்தவர். மீண்டும் வருவதற்கு ஏகப்பட்ட நிபந்தனைகளை அடுக்கியவர். அவர்தான் இன்று வீரபாண்டியனாரது அரசியல் குரு, தலைவர் எல்லாமே!
போகட்டும். இப்போது இளையராசாவுக்கு பேராசிரியர் பல்லக்குத் தூக்க வேண்டிய அவசியம் என்ன? அவரை யார் தமிழ்த் துரோகிகள் என்கிறார்கள். நொவம்பர் மாதம் வேண்டாம் நிகழ்ச்சியை ஒக்தோபரில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது டிசெம்பரில் வைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சீமான் போன்றோர் கேட்கிறார்கள். நொவெம்பர் மாதம் முழுதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தை புலம்பெயர் தமிழர்கள் இயன்றளவு தவிர்த்தே வருகின்றனர். குறிப்பாக மாவீரர் வாரத்திலும், கட்டாயமாக நொவெம்பர் 25,26,27 மூன்று நாளிலும் தவிர்த்துக் கொள்கிறார்கள்.
எனது வாதம் நொவெம்பர் மாதத்தில் மட்டுமல்ல எந்த மாதத்திலும் இளையராசாவின் இசை நிகழ்ச்சி இடம்பெறக்கூடாது என்பதுதான். எமது சொந்தங்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லபட்டபோது உரோம் எரிந்து கொண்டிருக்கும் போது பிடில்வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னன் போல முள்ளிவாய்க்கால் எரிந்து கொண்டிருந்த போது இளையராசா ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார்.
திரையுலகக் கலைஞர்கள் நடத்திய போராட்டங்களில் ஒன்றிலேனும் அவர் பங்கு கொள்ளாதவர். அய்ந்து மொழிகள், 950 படங்கள், 4,000 பாடல்களுக்கு இசையமைத்த இளையராசா ஒரு எழுச்சிப் பாடலுக்கு இசையமைக்க வில்லை. சாதியை ஒழித்து தமிழ் சமூகத்தில் பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டிய பெரியார் பெயரில் எடுக்கப்பட்ட படத்துக்கு இசை அமைக்க மறுத்தவர்!
மாவீரர் நாள் என்பது அழுவதற்காக அன்று, மீண்டும் மீண்டும் எழுவதற்காக என்பதைப் புலிகளும், ஈழ மக்களும் நன்கறிவார்கள். �மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி' என்று மொழியின் பெயரிலும், அடுத்ததாக, வழிகாட்டும் தலைவரின் பெயரிலும், அதற்கடுத்து, விழிமூடித் துயில்கின்ற மாவீரர்கள் பெயரிலும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, மீண்டும் தங்களின் இன விடுதலைக்காகத் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் நாள்தான் மாவீரர் நாள். ஆண்டு முழுவதும் போராளிகளையும், பொதுமக்களையும் அந்த ஈழ மண் இழந்திருந்தாலும், இயக்கத்தின் முதல் பலி நடைபெற்ற நாளை ஓர் அடையாளமாக மட்டுமே புலிகள் இயக்கம் அறிவித்தது முற்றிலும் உண்மைதான். ஆனால் மாவீரர் நாளன்று தங்கள் பிள்ளைகளை விடுதலைத் தீக்கு ஆகுதி செய்த தாய் - தந்தையர்கள் அவர்களது கல்லறையில் வீழ்ந்து கதறி அழும் காட்சிகள்தான் இடம்பெற்றன. மாவீரர் காணொளியைப் பார்த்தவர்களுக்கு அந்த நெஞ்சைப் பிளக்கும் காட்சிகள் மனதில் ஆழமாக பதிந்துள்ளன.
"1988ஆம் ஆண்டு, 'ஈழ மக்களைக் கொல்லாதே, இந்திய இராணுவமே திரும்பி வா' என்ற கோரிக்கையை முன்வைத்து, �ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு' கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தியது. பல்வேறு துறைகளைச் சார்ந்த புகழ்பெற்ற 300 பேர் அவ்வறிக்கையில் கையொப்பமிட்டனர். நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், முரசொலி மாறன், சுரதா, வைரமுத்து, மு.மேத்தா, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஞாநி, பாலுமகேந்திரா, கலைப்புலி தாணு உள்ளிட்ட பலர் அன்று கையொப்பமிட்டனர். அந்த வரிசையில் ஒருவராய், இளையராசாவும் கையெழுத்திட்டிருந்தார் என்பதைப் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் ஈழ ஆதரவாளர்கள் அறிவார்களா?" என்று வீரபாண்டியனார் வாள் சுற்றுகிறார்!
ஆக 1988 ஆம் ஆண்டு பத்தோடு பதினொன்றாக இளையராசா கையெழுத்து இட்டுள்ளார் எனவே அவர் பெரிய தமிழ்த் தேசியவாதி என்று பேராசிரியர் அவருக்கு சான்றிதழ் வழங்குகிறார். இது பசித்த பண்டிதர் பழம் பஞ்சாங்கத்தைப் பார்த்த கதை போன்றது. பாவம் பேராசிரியர். அதற்கு மேல் இளையராசாவின் "தமிழ்த் தேசியக் கற்பை" எண்பிக்க அவரிடம் வேறு சான்று அல்லது சான்றுகள் எதுவும் இல்லை. எனது கேள்வி என்னவென்றால் அதற்குப் பின்னர் கடந்த கால்நூற்றாண்டு காலமாக இளையராசா என்ன செய்தார் என்பதுதான். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கூட அவரைப் பார்க்க முடியவில்லையே? மீளாத தூக்கத்தில் அல்லவா இளையராசா இருந்தார்?
"எப்போதும் ஈழவிடுதலை போன்ற நியாயமான கோரிக்கைகளை நோக்கி, வெவ்வேறு துறைகளிலும் உள்ள பலரையும் நாம் ஈர்க்க வேண்டும். அதுதான் அக்கோரிக்கைக்கு நாம் உண்மையாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். எல்லோரையும் அடித்துத் துரத்துவதும், துரோகிகளாகக் காட்ட முயல்வதும், நாம் முன்னெடுக்கும் கோரிக்கையின் வலிமையைக் குறைக்கும்" என்று பேராசிரியர் புதிய கீதா உபதேசம் செய்கிறார். அது சரியென்றால் நாங்கள் டக்லஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களையும் துரோகிகளாகக் காட்ட முயலக் கூடாது! அவர்களைத் துரத்தாது, ஓரங்கட்டாது சேர்த்துக் கொள்ள வேண்டும்!
பேராசிரியர் குறளைத் தலை கீழாகப் படித்தவர். பகையறிதல், உட்பகை பற்றி வள்ளுவர் இரண்டு அதிகாரமே எழுதியிருக்கிறார்.
முள்மரத்தை முதலிலேயே வெட்டி விடுவது சுலபம். வளர்ந்த பிறகு அதை வெட்டினால் அதனால் கைக்குத்தான் சேதம் ஏற்படும் என்கிறார்.
இளையராசா கனடாவுக்கு தமிழிசை வளர்க்க வரவில்லை. இரண்டு கோடி வாங்கிக் கொண்டுதான் வருகிறார். அதாவது இசையை பணம் பண்ணும் ஏதனமாக்கியுள்ளார். "கடல்கடந்து வாழும் உங்களைப் பார்க்க கடல் கடந்து" இளையராசா வருவது முழுக்க முழுக்க வணிக நோக்கோடுதான். அவரை அழைத்தவர்களும் அதே நோக்கோடு தான் வரவழைத்துள்ளார்கள். வன்னியில் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து அல்லல்பட்டு அழுது கண்ணீர்விடும் எமது சொந்தங்களின் வாழ்வில் ஒரு சின்ன ஒளிக் கீற்றையாவது ஏற்றி வைக்க அவர் வரவில்லை! இதனைப் பேராசிரியர் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.
"தாங்கள் மட்டுமே ஈழ ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள முயலும் சிலரின் மலிவான உத்திதான் இது. ஈழ ஆதரவு என்பது எவர் ஒருவருக்கும் �மொத்தக் குத்தகைக்கு' விடப்படவில்லை" என்கிறார் பேராசிரியர். செந்தமிழன் சீமான், இயக்குநர் செல்வமணி போன்றோரை மனதில் வைத்துத்தான் இந்தச் சொல்லம்பை பேராசிரியர் தொடுக்கிறார் என்பதில் எந்த அய்யமும் இல்லை. சீமான் போன்றோர் ஈழ ஆதரவாளர்கள் எனக் "காட்டிக் கொள்ள" வில்லை. அதனை எண்பித்துள்ளார்கள்.
தமிழினத் தலைவர் ஆட்சிக் கட்டிலில் கொலுவீற்றிருந்த காலத்திலேயே மூன்று முறை சிறைப்பிடிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வீழ்த்திக் காட்டியவர். மனம், வாக்குக் காயம் மூன்றினாலும் ஈழவிடுதலைக்குப் பாடுபடுகிறார். இன்று ஈழவிடுதலைத் தீ தமிழ்நாட்டில் கொளுந்து விட்டு எரிகிறதென்றால் அதற்கு சீமான், வைகோ போன்றவர்கள்தான் பேரளவு காரணம். பேராசிரியர்தான் தெசோ மாநாட்டில் ஈழம் என்ற சொல்லை காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டதன் பேரில் உச்சரிக்காது விட்டவர்!
முடிவாக மீண்டும் வள்ளுவர் சொன்னதை பேராசிரியருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
ஒத்தறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (குறள் 214)
இந்தக் குறளுக்கு "இலக்கணமாகவும் இலக்கியமாகவும்" விளங்குபவா இளையராசா. அவரது கனடா வருகை அவரது முகத்திரையை விலக்கவும் அவரது மறுபக்கத்தை மக்கள் பார்க்கவும் உதவியுள்ளது.

-நக்கீரன்-

போப்- ஆண்டவரின் கையை பிடித்து முத்தமிட்ட மேர்வின் சில்வா!

சமீபத்தில், இராணுவ அதிகாரி ஒருவரைத் தாக்கியதால் சிறையில் அடைக்கப்பட்ட மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, வத்திக்கான் சென்று போப் ஆண்டவரை சந்தித்துள்ளார். பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவும் சர்ச்சைக்குரிய அவரது மகனும் சமீபத்தில் இத்தாலி சென்றுள்ளனர். அங்கே அவர்கள் வத்திக்கான் சென்று போப் ஆண்டவரைச் சந்தித்துள்ளனர்.
இதேவேளை மாலக சில்வாவும் மேர்வின் சில்வாவும் போப் ஆண்டவரின் கைகளை முத்தமிட்டனராம். செய்த பாவங்களைக் கழுவ இவ்வாறு செய்தார்களோ என்னவோ தெரியவில்லை என்கிறார்கள்.
சமீபத்தில் இராணுவ அதிகாரி ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதால், மாலக சில்வா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இராணுவ அதிகாரியில் தான் பிழை உள்ளதாகக் கூறி மாலக சில்வாவை விடுவித்து, குறிப்பிட்ட அந்த அதிகாரியை பொலிசார் கைதுசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

25 அக்டோபர் 2012

ஈழத்தில் நடைபெறும் நில அபகரிப்புக்கு எதிராக தமிழக தலைவர்கள் எல்லோரும் பேசவேண்டும்!

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல்தான் ஒரு இனம் தனித்துவமாக வாழ நிலம் வேண்டும். நிலம் பறி போவது என்பது அனைத்து விடயங்களையும் விட அதி பயங்கரமானது. எனவே, இந்த விடயம் பற்றி தமிழகத்தில் அதிகமாக பேசப்பட வேண்டும் இதை வாசிக்கும் தமிழக நண்பர்களும், ஊடக நண்பர்களும் அதை செய்விக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றைச் செய்துள்ள மனோ கணேசன், தமிழகத்தின் உறவுகளுக்காக என எழுதியுள்ளவைகளை இங்கு தருகின்றோம்:
"இலங்கையில் இன்றுள்ள ஒன்பது மாகாணங்களை மூன்று மாகாணங்களாக மாற்றுவதற்கு இலங்கை அரசு போடும் சதி திட்டம் பற்றி நேற்று முதல் நாள் நான் இலங்கை தமிழ் ஊடகங்களில் தெரிவித்திருந்தேன். இது பற்றி இன்று, தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் பேசியுள்ளார்.
இதுபற்றி, நாம் தமிழர், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நெடுமாறன் அவர்களது இயக்கம் மற்றும் அதிமுக, திமுக, தமிழக காங்கிரஸ், பிஜெபி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகங்கள் என்று தமிழகம் முழுக்க பேச வேண்டும்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களின் எல்லைகளை மாற்றி, அங்குள்ள பகுதிகளை தனியே பிரித்து எடுத்து, அவற்றை பக்கத்தே இருக்கின்ற சிங்கள பெரும்பான்மை மாகாணங்களுடன் இணைத்து, தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் எந்த ஒரு மாகாணத்திலும் பெரும்பான்மையாக வாழ முடியாத திட்டத்தை இலங்கை அரசு போடுகிறது.
இது எப்படி என்றால், தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களை பிரித்து எடுத்து கர்நாடகாவுடன் சேர்த்துவிட்டால் எப்படி இருக்கும்?
அதேபோல், கோயம்புத்தூர், தேனீ, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை பிரித்து எடுத்து கேரளாவுடன் சேர்த்துவிட்டால் எப்படி இருக்கும்?
அதேபோல், வேலூர், திருவள்ளூர், சென்னை மாநகரம் உட்பட காஞ்சிபுரம் மாவட்டங்களை பிரித்து எடுத்து ஆந்திராவுடன் சேர்த்துவிட்டால் எப்படி இருக்கும்?
அதேபோல், மத்திய பிரதேசத்தில் இருந்தும், பீகாரில் இருந்தும் சுமார் பத்து லட்சம் பேரை கொண்டு வந்து படிப்படியாக, அரசாங்கமே திட்டமிட்டு, காணி-நிலம்-வீடு-நிதி வசதி-இராணுவ பாதுகாப்பு வழங்கி, திருச்சி, மதுரை மாவட்டங்களில் குடியேற்றினால் எப்படி இருக்கும்?
இதுதான் இப்போது இலங்கையின் தமிழர் நிலங்களில் நடக்கிறது.
இந்தியாவில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழகத்துக்கு உரிய சுமார் 16, 000 சதுர கிலோ மீட்டர் பரப்பு நிலம் அண்டை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதாக எங்கோ படித்த ஞாபகம். அவற்றை இப்போ தமிழக தமிழர்கள் திருப்பி கேட்க முடியுமா? ஏழுமலையான திருப்பதியை மீண்டும் ஆந்திராவிலிருந்து கேட்க முடியுமா? இதெல்லாம் முடிந்துபோன விடயங்கள்.
நான் மேலே தந்துள்ள விளக்கங்களின் மூலம், இலங்கையில் தமிழர் எதிர்நோக்கும் நில அபகரிப்பு அபாயத்தை தமிழக உடன் பிறப்புகள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்.
இந்த சதித்திட்டத்துக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச தலைமை தாங்குகிறார். அவருக்கு ஆளும் கூட்டணியின், சிங்கள் தீவிரவாத பங்காளி கட்சிகள் துணை இருக்கின்றன. இவை அனைத்துக்கும் மகிந்த ராஜபக்சவின் ஆசீர்வாதம் உண்டு.
இன்னொரு மேலதிக தகவல். இலங்கை அரசின் இந்த சதி திட்டம் பற்றி இந்திய நடுவண் அரசுக்கு தெரியும் என நான் நினைக்கிறேன். அவர்களும் தெரிந்தும், தெரியாதது போல் காட்டி கொள்கிறார்கள். என்ன........, தமிழர் நிலம் அபகரிப்பு நடந்து முடிந்துவிட்டால், அதன்பிறகு இலங்கை தமிழர்கள் சுற்றி வளைக்கப்பட்டிருப்போம். நம்மால், எதுவும் பேசவோ, கோரிக்கைகள் முன் வைக்கவோ முடியாது. அதனால், இலங்கை தமிழர் பிரச்சினை என்ற தொல்லையும் முடிந்துவிடும் இந்திய மத்திய அரசு நினைக்கின்றது போலும் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல்தான் ஒரு இனம் தனித்துவமாக வாழ நிலம் வேண்டும்.
இந்த நிலம் பறி போவது என்பது அனைத்து விடயங்களையும் விட அதி பயங்கரமானது. எனவே, இந்த விடயம் பற்றி தமிழகத்தில் அதிகமாக பேசப்பட வேண்டும் இதை வாசிக்கும் தமிழக நண்பர்களும், ஊடக நண்பர்களும் அதை செய்விக்க வேண்டும்.
இதுபற்றி, நாம் தமிழர், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நெடுமாறன் அவர்களது இயக்கம் மற்றும் அதிமுக, திமுக, தமிழக காங்கிரஸ், பிஜெபி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகங்கள் என்று தமிழகம் முழுக்க பேச வேண்டும்.

13தமிழீழத்தை கொடுத்து விடுமென கொதித்தெழும் பெளத்தபிக்கு!

வடமாகாண சபை அமைந்தால் தனி நாட்டுப் பிரகடனம் உறுதி; -கூட்டமைப்பின் திட்டம் அதுவே - மேத்தானந்த தேரர்வடமாகாணசபை அமைந்தால் தனி ஈழத்துக்கான நகர்வுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் முன்னெடுக்குமென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
எனவே, பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அரசு உடனடியாக அடியோடு இல்லாதொழிக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எல்லாவெல மேத்தானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இது விடயத்தில் அரசு இனியும் காலம் கடத்து மானால், அன்று வரதராஜப் பெருமாள் தனி ஈழப் பிரகடனத்தை அறிவித்தது போல் கூட்டமைப்பும் தனி நாட்டுக்கான பிரகடனத்தை முன்வைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ஆவது அரசமைப்புத் திருத்தம் இல்லாதொழிக்கப்படவேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் முன்வைத்துள்ள கருத்துக்கு அரச தரப்பில் ஆதரவு வலுத்துவரும் நிலையிலேயே அரசின் பங்காளியான எல்லாவல மேதானந்த தேரரும் கோட்டாவின் கூற்றுக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பாதுகாப்புச் செயலாளரின் கூற்றை வன்மையாகக் கண்டித்திருந்தாலும், அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட அரச தரப்பின் முக்கிய புள்ளிகள் அதனை வரவேற்றுள்ளனர்.
இதனால் இந்த '13' விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், 13ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட எல்லாவல மேதானந்த தேரர் மேலும் கூறியவை வருமாறு:
13ஆவது அரசமைப்புத் திருத்தம் நாட்டின் அபிவிருத்திக்கும், நிர்வாகத்துக்கும் தடங்கலாக உள்ளது. எனவே, அரசு அதை உடனடியாக அரசமைப்பிலிருந்து நீக்கவேண்டும்.
மறுபுறத்தில், தனிநாட்டுக்கு வழிகோலும் வகையில் குறித்த திருத்தம் அமைந்துள்ளது. அதை உடன் நீக்காவிட்டால் நாடு கூறுகளாகப் பிளவுபடும் அபாயநிலையும் உள்ளது.
ஏனெனில், 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் பொலிஸ், காணி அதிகாரங்கள் உள்ளிட்ட தனிநாட்டுக்கான விடயங்கள் உள்ளன. சிலவேளை, வடமாகாண சபை அமைந்தால் இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி ஈழத்துக்கான பிரகடனத்தை முன்வைக்கலாம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது.
ஏலவே, 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் விடயத்தில் அரசு அசமந்தமாக இருந்தால் அன்று வரதராஜபெருமாள் செய்ததை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை நிச்சயம் செய்யும். இதனால், இந்த அபாயநிலைக்கு 13ஐ நீக்குவதே ஒரே தீர்வாக அமையும் என்றார் அந்த சிங்கள இனவாத பெளத்தபிக்கு.

24 அக்டோபர் 2012

ஈழத் தமிழர் இரத்தவெள்ளத்தை மறைக்க, இளையராஜாவின் இன்னிசை மழை!

கனடாவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இளையராஜாவின் இன்னிசை நிகழ்வு ! மாவீரர் மாதத்தில் தான் நடத்தப்படவேண்டுமா ? என்று ஈழத் தமிழர்கள் கேள்விகேட்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனை அடுத்து உணர்வாளர் சீமான் அவர்கள், இந் நிகழ்வை புறக்கணியுங்கள் என்று அறிவித்தல் விட்டார். ஆனால் இதனையே அரசியலாக்கி சில அதிமேதாவிகள், இதனை ஏன் புறக்கணிக்கவேண்டும் ? உண்மையில் இது மாவீரர் மாதத்தில் நடக்கவில்லை என்கிறார்கள் ! இது என்ன வேடிக்கை என்று நினைக்கவேண்டாம். விடுதலைப் புலிகள் நவம்பர் மாதத்தை கார்த்திகை என்றும், டிசம்பர் மாதத்தை மார்கழி என்றும் அழைக்கிறார்களாம். ஆனால் தமிழ் நாட்டில் உள்ளவர்கள், நவம்பர் 15ம் திகதிக்கு பின்னர் தான் கார்த்திகை என்று அழைக்கிறார்களாம், என்று இதற்கு புது விளக்கம் வேறு சொல்லப்படுகிறது.
எனவே தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு அது கார்த்திகை மாதம்(நவம்பர் மாதம்) இல்லை என்கிறார்கள். அதனால் இளையராஜா அவர்கள் தாராளமாகப் பாடலாம் என்கிறார்கள் சிலர். தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள், அதில் உள்ள சில முக்கிய பிரமுகர்கள் தமக்குள் இருக்கும் காழ்ப்புணர்வுகளை ஈழத் தமிழர் விடையத்திலும் வெளிப்படுத்துவது பெரும் வேதனைக்குரிய விடையமாக இருக்கிறது. அதாவது சீமான் ஒரு விடையம் தொடர்பாக ஒரு அறிவித்தலை வெளியிட்டால், அவரைப் பிடிக்காத பிறிதொரு தலைவர், அது ஈழப் பிரச்சனை என்று கூடப்பாராமல், அதனை எதிர்த்து அறிக்கை விடுவார். இந்தச் சாக்கடை அரசியலை, தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, தற்போது புலம்பெயர் நாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்கிறார்கள் சில அரசியல்வாதிகள். நவம்பரில் இளையராஜா ஏன் இன்னிசை மழைபொழியக்கூடாது என்று ஒரு பட்டிமன்றம் வைக்கும் இவர்களுக்கு சில தகவல்களைக் கூற ஈழத் தமிழன் என்ற முறையில் நான் கடமைப்பட்டுள்ளேன்.
தேசிய தலைவரது பிறந்த நாள், நவம்பர் 26ம் திகதி தமிழீழத்தில் கொண்டாடப்படுகிறது. அதனைக் கொண்டாடிவிட்டு மறுநாள் மாவீரர் தின நாளை துக்கநாளா அனுஷ்டிப்பது இல்லையா ? என்று கேட்கிறார்களே ! எப்போது ஐயா தேசிய தலைவரது பிறந்த நாள் வெகு விமர்சையாக நடந்துள்ளது ? வட கிழக்கில் உள்ள மக்களும் போராளிகளும் தமக்கு பிடித்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்பை வழங்குவார்கள். அது தான் அவரது பிறந்தநாள் அடையாளம். இது ஈழத்தில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். மாவீரர் நாளுக்கு முதல் வாரமே ஈழத்தில் உள்ள தெருவெங்கும் சோக கீதங்கள் இசைக்கப்பட்டு, மாவீரரின் குடும்பங்கள் கெளரவிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக இம் மாதத்தில் ஈழத்தில் பெரிய நிகழ்வுகள் நடத்தபடுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வந்துள்ளது.
இப்படி இருக்கையில், நவம்பர் 3ம் திகதி தானே நாம் இன்னிசை நிகழ்வை நடத்துகிறோம் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள். சரி இம் முறை ஓம் நடத்துங்கள் என்று விட்டுவிட்டால், அடுத்த வருடம் அதை நவம்பர் 10ம் திகதியாக மாற்றி பின்னர், அதனை நவம்பர் 20 ஆக்கி அதற்கு பின்னர் நவம்பர் 27 ஆகவும் மாற்மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ? அப்போது எங்கே போய் முறையிடுவது. சிங்களவன் மோடையன் என்று சொல்லிச் சொல்லியே, தமிழர்கள் புத்தி இழந்ததால் தான் இன்று இவ்வளவு பின்னடைவையும் நாம் எதிர்கொண்டு நிற்கிறோம். புலம் பெயர் நாடுகளில், கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில், தமிழர்கள் மிகவும் பலமாக உள்ளார்கள். இவர்களின் தேசிய அடையாளங்கள் என்ன என்று கேட்டால் அது மாவீரர் தினம் தான். அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் தினமும் அடங்குகிறது. இவ்விரு நிகழ்வுகளையும் உடைத்தால் போதும், சிங்களம் 100% வீத வெற்றியை அடைந்துவிடும். இந்த ஏக்கத்தில் தான் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதனை ஏன் இவர்கள், இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை ?
ஒரு வருடத்தில், இருக்கும் 12 மாதங்களில், நவம்பர் மாதம் மட்டும் தான் கிடைத்ததா இவர்களுக்கு ? வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல தமிழர்கள் நெஞ்சில் மெல்ல மெல்ல நஞ்சைக் கலக்க முயல்வது யார் ? இன்னிசை நிகழ்வுகள் என்று பாடகர்களை இலங்கைக்கு அழைத்தது யார் ? பின்னர் அவர்கள் ஏன் பாடாமல் ஓடிவந்தார்கள் ? இதை எல்லாம் நாம் நினைத்துப் பார்க்கவேண்டாமா ? சரி எல்லாம் போகட்டும்.. யார் இந்த இளையராஜா ? நல்ல ஒரு இசையமைப்பாளர் அவ்வளவுதான் ! ... ஈழத்துச் சோகங்களை சுமந்துவரும் ஒரு பாடலுக்கு மெட்டுப்போட்டாரா ? இல்லை ஈழத் தமிழர்கள் இன்னலுற்றவேளை தமிழ் நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தி நிதிசேகரித்தாரா ? இல்லை கோடிக்கணக்கில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் கொஞ்சத்தை எடுத்து மண்டபம் முகாமில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு கொடுத்தாரா ? கேட்டால் நான் இசையமைப்பாளர், அரசியலில் ஈடுபடுவது இல்லை என்று நழுவி விழுவார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் குழிரிலும் மழையில் உறையும் காலநிலையிலும், வேலைசெய்து உழைத்த பணத்தை பிடுங்க இசை நிகழ்ச்சிகளை நடத்தமட்டும் வரிந்துகட்டிக்கொண்டு முன் நிற்கிறார்களே ! இது எந்த வகையில் நியாயம் ?.
அது சரி இவ்வளவு பிரச்சனை ஓடுகிறதே, ஏற்பாட்டாளர்களோ இல்லை இளையராஜாவோ எனது இசைநிகழ்வில் சேரும் பணத்தில் ஒரு சிறிய தொகையை நான் ஈழத் தமிழ் அகதிகளுக்கு கொடுக்கிறேன் என்று இப்போதாவது ஒரு வார்த்தையை விட்டார்களா ? அதுவும் இல்லையே ! அதாவது ஈழத் தமிழரின் உழைப்பை சுரண்டவேணும், ஆனால் உனக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் என்னைக் கேட்க்காதே நான், அதுக்கு உதவமாட்டேன் என்று சொவதைப் போல உள்ளது இவர்கள் நடவடிக்கை ! இந்தியக் கலைஞர்களை ஈழத் தமிழர்கள் மதிக்கிறார்கள். ஏன் ஒரு படி மேலேபோய் அவர்களால் எங்களுக்கு ஏதாவது விடிவு கிடைக்காதா என்று நினைத்து ஏங்குகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மட்டும்தானா ஈழத் தமிழர்களுக்கு உதவவேண்டும் ? சினிமா துறையில் உள்ளவர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தொழிலதிபர்கள், எவரும் உதவக்கூடாதா ? அப்படி என்ன சட்டமா போட்டுள்ளார்கள் ? ஈழத் தமிழர்கள் இந்தியக் கலைஞர்களை மதிப்பதுபோல , எங்கள் உணர்வுகளையும் நீங்கள் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
நான் ஒரு கவிஞன், நான் கவிதை மட்டும் தான் எழுதுவேன் என்று சொல்லிவிட்டு மகாகவி பாரதி இருந்துவிட்டான ஏன்ன ? காலத்தின் தேவை கருதி, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்க்க தனது கவிப் புலமையை அவன் பயன்படுத்தவில்லையா ? எனக்கு அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிச் சென்றுவிட்டானா ? தன்னாலான உதவியை, இந்திய விடுதலைக்கு அவன் செய்திருக்கிறான். இதுகூடவா புரியவில்லை ? இன்று ஈழத் தமிழர்கள் எனது நண்பர்கள் என்று பேட்டி கொடுக்கும் இளையராஜா அவர்கள், நேற்று எங்கே இருந்தார் ? 2009ம் ஆண்டு எங்கே இருந்தார் ? நிலவிலா இல்லை செவ்வாய் கிரகத்திலா ?
கனடாவில் வாழும் மானமுள்ள எந்தத் தமிழனும் இந் நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டான். இதனையும் மீறி மாவீரர் மாதத்தில் தான், நாம் இன் நிகழ்வை வைப்போம் என்று அவர்கள் அடம்பிடித்தால், இவர்கள் எந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக வேலைசெய்கிறார்கள் என்பதனை ஈழத் தமிழர்கள் அறிந்துகொள்வார்கள். இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது எமக்கு புரியாத புதிரா என்ன ?

அதிர்வுக்காக :
வல்லிபுரத்தான்.
நன்றி:அதிர்வு 

23 அக்டோபர் 2012

கேபி தங்கி இருக்கும் வீட்டருகே மக்கள் நடமாடத் தடை!

சிறிலங்கா அரசினால் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் கிளிநொச்சி வீட்டினைப் பார்வையிடுவதற்கும் அந்தப் பிரதேசத்தில் நடமாடுவதற்கும் தற்போது சிறிலங்கா அரசினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசின் கைக்கூலியான கே.பி, தற்போது தமிழ்ச்செல்வனின் வீட்டில் குடியேறியுள்ளமை காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீடு அமைந்துள்ள காணியில் கே.பியின் தொண்டர் நிறுவன அமைப்பு ஒன்றுக்கான கட்டட நிர்மாணப் பணிகளுக்கு சிறிலங்கா அரசு அனுமதி வழங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள்தெரிவிக்கின்றன.

சிறீலங்காவின் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் மன்னிப்புச்சபை அறிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த மாநாட்டில் நவம்பர் 1-ம் நாள் சிறீலங்கா நிலவரம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் சிறீலங்கா தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை  விரிவானதோர் ஆய்வு அறிக்கை தயாரித்திருக்கிறது.அதை ஐ.நாவிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
சிறீலங்கா அரசின் தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை  அமைப்பினால் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
சிறீலங்காவின் மனித உரிமை நிலவரம் பற்றிய விரிவான ஆய்வு 2008ஆம் ஆண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசுத் தரப்புக்கும் இடையில் போர் நடைபெற்றுவந்துள்ளது. அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் மனித உரிமை நிலவரத்தை மேம்படுத்துவது குறித்து பல்வேறு வாக்குறுதிகளை சிறீலங்கா அளித்தது .
போர் முடிந்து மூன்றரை ஆண்டுகளாகி விட்ட நிலையில் சிறீலங்கா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கடும் விமர்சனங்களையும் சர்வதேச மன்னிப்புச்சபை  முன்வைக்கிறது.
சிறீலங்காவில் கடந்த 30 ஆண்டுகளாக இருந்த நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டாலும் தீவிரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் நீடிக்கவே செய்கின்றன.
எந்தவித காரணத்தையும் கூறாமல் பொதுப் பாதுகாப்பு என்ற பெயரில் கைது செய்யப்படுவது சிறீலங்காவில் தொடர்கிறது. ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்களாக சந்தேகிக்கப்படுவோர் அவர்களது குடும்பத்தினர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசை விமர்சிப்பவர்கள் குறிப்பாக பத்திரிகையாளர்கள் இவ்வாறு காரணம் எதுவும் கூறாமல் கைது செய்யப்படுகின்றனர்.
காவல்துறை தவிர அரசுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் படையினரும் மனித உரிமைகளை மீறி கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். எந்தவித வழக்கு விசாரணையும் இன்றி பல நாட்கள் சிறையில் அடைக்கப்படும் இவர்களில் சிலர் கொல்லப்படுவதும் உண்டு.
காணாமல் போனோர் பற்றிய வழக்குகளை விசாரிப்பதற்கு சிறீலங்கா அரசு ஒப்புக் கொண்டிருந்தபோதும் அரசை விமர்சிப்போர் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல கைதிகளை மனிதத் தன்மையற்ற முறையில் கொடுமைப்படுத்துவது மிக மோசமாக நடத்துவது ஆகியவை தொடரவே செய்கின்றன. ஆயுதம் தாங்கிய குழுக்கள் கொலைகளில் ஈடுபடுவது போலீஸ் நிலைய மரணங்களும் தொடர்கின்றன. மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் இல்லை தண்டிக்கப்படுவதும் இல்லை.
சிறீலங்கா எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளையும் சர்வதேச மன்னிப்புச்சபை  பரிந்துரைத்திருக்கிறது.

� முக்கியமாக தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் நெருக்கடி நிலை காலத்திலும் தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழும் கைதானோரை விடுதலை செய்ய வேண்டும்.

� தேசிய மனித உரிமை ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும்.

� சாட்சிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும்.

� மனித உரிமை மீறல்கள் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தில் அளிக்கப்பட்ட எழுத்து பூர்வமான விசாரணைகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.

� எல்எல்ஆர்சி விசாரணையின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டோருக்கு எந்த வகையிலும் மன்னிப்பு அளிக்கக்கூடாது.

� ஆட்கள் காணாமல் போவது தொடரும் ஆட்கடத்தல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி காரணமானோரைத் தண்டிக்க வேண்டும்.

� மரண தண்டனையை உடனடியாக ஒழித்து அதனை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும்.

� சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் நடந்த அனைத்துக் கொலைகளையும் விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

சிறீலங்காவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இந்திய அரசை வலியுறுத்தும் வகையிலான பிரசாரத்தில் சர்வதேச மன்னிப்புச்சபை  ஈடுபட்டுள்ளது.
இதன்படி 09248074010 என்ற தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தப் பிரசாரத்தில் பங்கேற்போரது ஆதரவு இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என சர்வதேச மன்னிப்புச்சபை  கருதுகிறது.மிஸ்டு கால் கொடுத்தோரது எண்ணிக்கை இந்திய அரசிடமும் ஐ.நா.விடமும் அளிக்கப்படும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை  தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை சபையில் நவம்பர் 1ம் நாள் சிறீலங்காவின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க சர்வதேச நாடுகள் எடுக்கும் முயற்சிக்கு இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இதற்கென இந்திய அரசுக்கு பொதுமக்கள் அழுத்தம் கொடுப்பதற்கும் இது உதவும் என சர்வதேச மன்னிப்புச்சபை  தனது களஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

22 அக்டோபர் 2012

வீரமறவன் வீரப்பனின் எட்டாம் ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு!

Photo0081-600x450மலைவாழ் மக்களின் நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்த வீரப்பன் மறைந்து கடந்த 18 ஆம் திகதியுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
வீரப்பனை எதிர்மறையாக பலர் உணர்ந்தாலும், வீரப்பன் வாழ்ந்த காட்டிற்கு அருகே இருக்கும் கிராம மக்கள் தங்கள் காவல் தெய்வமாக வீரப்பனை பார்த்தார்கள்.
பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அதை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து வாழ்வு நடத்திய ஏழைகளின் பங்களான் எனப்படும் இராபின் ஊட்டின் சாயலில் வீரப்பனின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன என்பதனை உலகறியும்.
நயவஞ்சகமாக மோரில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட வீரப்பனை தமிழக பொலிஸார் தாங்கள் சுட்டுக் கொன்றதாக நாடகமாடியதும் அனைவரும் அறிந்ததே.
வீரப்பன் வேட்டை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மலைவாழ் பெண்களின் கற்புகளை தமிழக பொலிஸாரும், வனத்துறையினரும், அதிரடிப்படையினரும் சூறையாடினார்கள்.
இன்னும் அந்தப் பெண்களுக்கு எந்த விடிவும் கிட்டவில்லை.
இந்த நிலையில் மலைவாழ் மக்களின் காவல் தெய்வமான வீரப்பன் மறைந்த எட்டாவது ஆண்டு தினத்தை அவரது சமாதியில் கன்னட தமிழ் சங்கம், மலைவாழ் மக்கள் நல்வாழ்வு சங்கம், தனி தமிழர் சேனை போன்ற தமிழர் அமைப்புக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுட்டித்தனர்.
இந்த நிகழ்வில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் கலந்து கொண்டார்.

கிளிநொச்சி வர்த்தகரின் 50 இலட்சம் பெறுமதியான பொருட்களை கையாடிய பொலிஸ்!

கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், தன்னிடமிருந்து சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களை மோசடி செய்தார் எனக் கூறி, கிளிநொச்சியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வாகன உதிரிப்பாக விற்பனை நிலையம் ஒன்றை இ.ஜெயசிங்கம் என்பவர் நடத்திவருகிறார். கடந்த ஓகஸ்ட் மாதம் சகோதரி ஒருவரின் மரணச் சடங்குக்காக அவர் கொழும்பு சென்றுள்ளார். அப்போது சந்தேகத்தின் பேரில் குறித்த வர்த்தகர் ஜாஎல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவர் அவ்வாறு விளக்கமறியலில் இருந்த சமயத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த இருவருடன் குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த குறித்த பொலிஸ் அதிகாரி வர்த்தகரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
“உனது கணவர் எங்களிடம் வாங்கிய கடனை தராமல் ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். எனவே கடன் பெறுமதிக்குரிய பொருள்களைத் தரவேண்டும்”. என்று வர்த்தகரின் மனைவியிடம் கூறியதுடன், அவரைக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.
பின்னர் வர்த்தகரின் மனைவியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்து, குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த சுமார் ஐம்பது லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களை எடுத்துச் சென்றுள்ளார்.
இம்மாத முற்பகுதியில் குறித்த வர்த்தகர் விடுதலையானார். அதன் பின்னர் அவருக்கு இந்த மோசடி குறித்து தெரியவந்தது. இது பற்றி அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றபோது பொலிஸார் அவரை அச்சுறுத்தியதுடன் முறைப்பாட்டை ஏற்கவும் மறுத்துவிட்டனர்.
அதன் பின்னர் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர் தனக்குச் சொந்தமான ஐம்பது லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களை மோசடி செய்துள்ளனர் எனத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட வர்த்தகர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

21 அக்டோபர் 2012

வரலாற்றுத் தவறிழைத்தது யார்? பிரபாகரனா? சொல்ஹய்மா? - தாயகத்தில் இருந்து வீரமணி.

‘அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்’ இது தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்று. இந்த வசனத்தின் தீர்க்க தரிசனத்தையும் யதார்த்தத்தையும் தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துகொண்டிருக்கின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் எது செய்தாலும், எதைச் சொன்னாலும் அதன் பின்னால் மிகப் பெரும் அர்த்தம் இருக்கும். அந்த அர்த்தத்தை எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ள முடியாது. காலம் சென்ற பின்னரே சிலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். தலைவர் கூறியது போல அமெரிக்காவின் அன்பு முகத்தை நோர்வேயின் சிறீலங்காவிற்கான சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்கவேண்டுமென்ற ஒரே நோக்கத்துடனேயே நோர்வே தமிழர் தாயகத்திற்கு வந்து அமைதி நாடகமாடியது என்ற உண்மையை தற்போது நோர்வே தூதுவரே அம்பலப்படுத்தியிருக்கிறார். அண்மையில் பி.பி.சி சர்வதேச ஊடகத்திற்கு ஒரு பேட்டி வழங்கிய எரிக் சொல்ஹெய்ம், போரின் இறுதியில் வன்னியில் இடம்பெற்ற மனிதப் பேரவலத்தைத் தடுப்பதற்கு சர்வதேசத்திடம் திட்டமொன்று இருந்ததாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்குச் சம்மதிக்கவில்லையென்றும் தெரிவித் திருக்கிறார். இந்தப் பேட்டியை சொல்ஹெய்ம் வழங்கியதன் முக்கிய காரணம் கடந்த காலங்களை ஞாபகப்படுத்துவதற்காகவோ கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை மக்களுக்குத் தெரியப்படுத்து
வதற்காகவோ அல்ல. மாறாக தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்களை குழப்புவதற்காகவே இந்தப் பேட்டி திட்டமிட்டு தயார்படுத்தப்பட்டிருக்கிறது.
யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களாகின்றன. இந்தக் காலத்தில் சொல்ஹெய்ம் பல ஊடகங்களுக்கு பேட்டியளித்திருக்கிறார். ஆனால், மேற்படி காரணத்தை அவர் எங்கேயும் சொல்லியதில்லை. தற்போது அவர் ஏன் கூறுகிறார் என்றால் போரின் அழிவுக்கு புலிகள் தான் காரணமென்று கூறவேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கிறது. யாரை வைத்து இதனைச் சொன்னால் தமிழ் மக்களிடமும் சர்வதேசத்திடமும் இந்தக் கருத்து எடுபடும் என்றால் எரிக் சொல்ஹெய்ம் தான் அதற்குப் பொருத்தமானவர் என்று கருதிய அமெரிக்கா அவரைக் கொண்டு தற்போது புலிகளை மீண்டுமொரு தடவை குற்றஞ்சாட்டியிருக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்ற ஒரு விடுதலை அமைப்பை உலகில் எந்த நாட்டிலுமே எவரும் கண்டுகொள்ள முடியாது. விடுதலைப் புலிகளைப் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு போராட்ட அமைப்பு இனிமேல் உலகில் வேறெங்கும் தோற்றம் பெறமுடியாது. விடுதலைப் புலிகளுக்கு நிகர் புலிகள் தான். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனியே ஒரு ஆயுதம் தாங்கிய அமைப்பு அல்ல. ஆயுதம் தாங்கிய அமைப்பாக மட்டும் இருந்திருந்தால் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டவுடன் இந்த உலகிலிருந்தே புலிகள் துடைத்தெறியப்பட்டிருப்பார்கள்.
மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஜனநாயக வழியிலான செயற்பாடுகள் இன்றுவரை தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடனேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்றது என்பதற்கு தற்போதைய செயற்பாடுகளே சான்றாக இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென்று சில நாடுகள் தீர்மானமெடுத்தன என்றும் அவை அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே நடைபெற்றன என்றும் தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். ஆக, அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே வன்னியில் தமிழ் மக்கள் அழித்தொழிகப்பட்டனர் என்ற உண்மையைத் தமிழ் மக்கள் படிப்படியாக உணரத் தொடங்கிய அதேநேரம் நோர்வேயின் சமாதான வேடம் இன அழிப்பு நாடகத்திற்கான ஒரு பாத்திரமேற்றல் என்பதும் தற்போது படிப்படியாக அம்பலமாகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு முயன்ற முதலாவது சக்தி அமெரிக்கா. ஆனால் தானே நேரடியாக அதனைச் செயற்படுத்தாமல் மறைமுகமாக நின்று நோர்வேயின் அனுசரணையுடன் அதனைச் செயற்படுத்த எண்ணியது. தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரச படைகளுக்கு சம பலத்துடன் இருந்தபோது சிறீலங்கா படைகளால் அவர்களை ஆயுத ரீதியாக அழிக்க முடியாது என்பது அமெரிக்காவிற்கும் நோர்வேக்கும் நன்றாகவே தெரிந்தது. அதற்காகவே சமாதானப் பேச்சுவார்த்தை என்ற நாடகம் நோர்வேயால் அரங்கேற்றப்பட்டது. இந்தச் சமாதான காலத்திற்குள் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத முகவராக இருந்த கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் என்ற அடிவருடி விலைக்கு வாங்கப்பட்டார்.
தமிழீழ தேசியத் தலைவருக்கு நல்லவர் போன்று நடித்த கே.பி, பணத்தைக் கண்டதும் குணம் மாறினார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அழிவிற்கு அவரும் ஒரு பங்காளியாக மாறினார். பி.பி.சி ஊடகத்திற்கு எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய பேட்டியில் விடுதலைப் புலிகள் இறுதிவரை போராட எடுத்த முடிவை வரலாற்றுத் தவறு என்று வர்ணித்திருக்கிறார். உண்மையான, நேர்மையான ஒரு இராஜதந்திரியாக அவர் இருந்தால் யார் இழைத்தது வரலாற்றுத் தவறு என்று அவர் தனது மனச்சாட்சியைத் தொட்டுக் கேட்கவேண்டும். இக் கட்டுரையாளராகிய நானும் ஒரு தமிழ் மகன். மானமுள்ள தமிழ் மகன். அன்றிலிருந்து இன்றுவரை தாயகத்திலேயே வாழ்பவன்.
எரிக் சொல்ஹெய்ம் சமாதானத் துர்துவராக தாயகத்திற்கு வந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். சொல்ஹெய்ம் வருகின்ற ஒவ்வொரு தடவையும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த மகிழ்ச்சியைச் சொற்களாலோ வார்த்தைகளாலோ வடிக்க முடியாது. தமிழீழ தேசியத் தலைவர் அவர்களும் தமிழ்ச்செல்வன் அவர்களும் கைலாகு கொடுத்து சொல்ஹெய்மை வரவேற்கும் புகைப்படங்களை பார்த்த மக்கள் அடைந்த அளவற்ற சந்தோச அலைகள் இன்றும் என் மனக் கண் முன்னே வருகின்றன. எங்களைக் காக்க வந்த தேவ தூதுவர் என்றே சொல்ஹெய்மை தமிழ் மக்கள் நம்பி நின்றனர்.
ஆனால், இவ்வாறு நம்பி நின்ற மக்கள் இறுதியில் கொத்துக் குண்டுகளால் கொல்லப்பட்டபோதும், எரிகுண்டு
களால் உடல் கருகிய போதும், உணவின்றி பட்டினியால் இறந்த போதும் சிங்கள இராணுவத்தால் குரூரமாகப் பாலி
யல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டபோதும் சொல்ஹெய்ம் என்ற சமாதானத் தூதுவர் வாய் திறக்காமல் அந்த அழிவை பார்த்து இரசித்துக்கொண்டிருந்தார். எல்லாம் முடிந்த பின்னர் இப்போது அவர் புலிகளின் வரலாற்றுத் தவறைப் பற்றிக் கதையளக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு போராட்ட அமைப்பு. இதனைத் தலைமையேற்று நடத்தியவர் தான் தலைவர் பிரபாகரன். தமிழ் மக்களின் விடிவிற்காக தாங்கள் வரித்துக்கொண்ட இலட்சியத்திற்காக இறுதிவரை போராட புலிகள் எடுத்த முடிவு தவறு என்று சொல்ஹெய்ம் கூறுவாராயின் தான் செய்ததை சரி என்று நிரூபிக்கிறாரா? தன்னை நம்பி நின்ற மக்களை ஏமாற்றி, மக்கள் இறுதியில் செத்து மடிந்த போது சமாதானத் தூதுவர் என்ற வேடத்துடன் அதனைப் பார்த்துக்கொண்டிருந்த சொல்ஹெய்ம் இழைத்தது வரலாற்றுத்தவறா? தமது மக்களின் விடுதலைக்காக இறுதிவரை போராடுவோம் என்ற இலட்சியத்துடன் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இளைத்தது வரலாற்றுத் தவறா?
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச பிரதிநிதிகள் முன்பாக புலிகள் அனைவரும் சரணடைய வேண்டும் பின்னர் அவர்கள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தவிர ஏனையோர் விடுவிக்கப்படுவார்கள் என்ற திட்டமொன்று சர்வதேசத்திடம் இருந்தது. அதை ஏற்றுக்கொள்ள புலிகள் மறுத்துவிட்டார்கள் என்று சொல்ஹெய்ம் புலிகளைக் குற்றஞ்சாட்டுவது நகைப்புக்கிடமானது.
இவ்வாறான ஒரு திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் முன்வைக்கப்பட்டதோ என்னவோ எங்களுக்குத் தெரியாது. ஏனெனில் புலிகள் தரப்பில் இது தொடர்பில் கருத்துக்கூறக்கூடிய எவரும் தற்போது இல்லை. இறுதிக்கட்ட உண்மைகளைத் தலைவரின் வாயால் அறிவதற்கு நாம் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும். ஆகையால் சொல்ஹெய்ம் கூறுவதன்படி நாம் நோக்கினால், புலிகள் ஒரு போராட்ட அமைப்பு. தாங்கள் வரித்துக்கொண்ட இலட்சியத்திற்காக அவர்கள் இறுதிவரை போராட எடுத்த முடிவு எப்படி வரலாற்றுத் தவறாக அமைய முடியும். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஒரு புலி வீரர் இருக்கும் வரை நாம் போராடுவோம் என்ற இலட்சியத்துடனேயே தலைவரும் போராளிகளும் போராட்டத்தை முன்னெடுத்தனர். யுத்தத்தின் இறுதியில் அவர்கள் சரணடைய மறுத்தமை எப்படி வரலாற்றுத் தவறாக அமைய முடியும்?
மாறாக சொல்ஹெய்ம் செய்ததே மாபெரும் வரலாற்றுத் தவறு. இந்த தூற்றாண்டில் மனித குலத்தால் ஏற்றுக்
கொள்ள முடியாத மாபெரும் வரலாற்றுத் துரோகம். ஏனெனில், யாரையும் நம்பாத தமிழீழ தேசியத் தலைவர் நோர்
வேயின் சமாதான அனுசரணையை ஏற்றுக்கொண்டார். புலிகள் போர்ப் பிரியர்கள். சிறீலங்காவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் விரும்புகிறார்களில்லை. அவர்களே யுத்தத்ததை முன்னெடுத்து அழிவுகளுக்கு காரணமாக இருக்கிறார்கள் என்ற சிறீலங்கா அரசின் பொய்ப் பரப்புரையை முறியடித்து நாங்களும் சமாதானத்தை விரும்புகிறோம் என்பதை வெளிக்காட்டுவதற்காகவே தலைவர் நோர்வேயின் மத்தியஸ்தத்திற்கு இணங்கினார்.
நோர்வே அமெரிக்காவின் கைக்கூலியாக செயற்படுகின்றது என்பதை தலைவர் பிரபாகரன் அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார். அதை அவர் வெளிப்படையாகவே கூறியுமிருக்கிறார். ஆனாலும் அவர் நோர்வேயின் மத்தியஸ்தத்தை வரவேற்றார். சமாதான காலத்தில் ஒரு தடவை வன்னிக்குச் சென்ற தமிழீழ உணர்வாளர் தொல்.திருமாவளவன் தமிழீழ தேசியத் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடும் போது நோர்வே தொடர்பில் என்ன நினைக்கிறீர்கள் என்று தலைவரிடம் கேட்டார். நறுக்கென்று பதிலளித்த தலைவர், அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல் என்று கூறியிருந்தார். அது எத்தகைய உண்மை என்பதை நாம் காலம் கடந்துதான் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
சிங்களப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர்களில் படுதோல்வியடைகின்ற சந்தர்ப்
பங்களிலெல்லாம் நவீன ஆயுதங்களை வாரிவழங்கி சிங்களப் படைக்கு பலம் சேர்ப்பது இஸ்ரேல். குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியிலிருந்து கொடிகாமம், சாவகச்சேரி ஊடாக அரியாலை, செம்மணி வரை முன்னேறியபோது அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க இஸ்ரேலுக்கு ஓடினார்.
அங்கு விசேட பேச்சுவார்த்தைகளை நடத்தியபின் பெருந்தொகையான நவீன பல்குழல் ஆயுதங்களை வாங்கிவந்தார். இந்த ஆயுதங்களால் தென்மராட்சியையே சிங்களப் படைகள் அன்று அழித்திருந்தன. தமிழ் மக்களை அழிப்பதற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும் இஸ்ரேலூடாக கோர முகத்துடன் ஆயுதங்களை அள்ளி வழங்கிய அமெரிக்கா, சமாதானப் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் அன்பு முகத்தோடு வந்து தமிழர் போராட்டத்தை அழிப்பதற்கு நோர்வேயை அனுப்பியிருக்கிறது என்ற சாரப்படவே தேசியத் தலைவர் அன்று திருமாவளவனுக்கு அந்தப் பதிலைக் கூறினார்.
சுமாதானம் என்ற போர்வையில் தமிழீழத்துக்குள் நுழைந்த நோர்வேத் தூதுவர் இறுதி யுத்தத்தில் தனது பணியைச் செவ்வனே ஆற்றவில்லை. நம்பி நின்ற தமிழ் மக்களுக்கு எரிக் சொல்ஹெய்மும் நோர்வேயும் செய்தது மாபெரும் வரலாற்றுத் தவறு. நோர்வேயை நம்பி சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் சென்ற பலமான ஒரு விடுதலை அமைப்பின் கட்டுமானங்கள் கண்முன்னாலேயே சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் சிங்களப் படைகளால் துவம்சம் செய்யப்பட்டபோது நோர்வேத் தூதுவர் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. நம்பி நின்ற மக்கள் கண்முன்னாலேயே அழிக்கப்பட்ட போதும் சிங்களப் படைகளால் கொன்று குவிக்கப்பட்ட போதும் அதனைத் தடுத்து நிறுத்த அனுசரணையாளர் என்ற போர்வையிலிருந்த நோர்வே நடவடிக்கை எடுக்கவில்லை.
இத்தனை வரலாற்றுத் தவறுகளையும் தங்களிடம் வைத்துக்கொண்டு புலிகளைக் குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லையென்பதை நோர்வேயும் எரிக் சொல்ஹெய்ம் அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களை நோக்கி உங்கள் கைகளை நீட்டுவதற்கு முன் உங்கள் கைகள் சுத்தமானவையா என்பதை முதலில் பார்க்க வேண்டும். இவ்விடயத்தில் தமிழ் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வல்லரசுகள் வளமான நாடுகள் என்பதற்காக அவர்கள் சொல்கின்ற எல்லாவற்றையும் செவிமடுக்க வேண்டுமென்ற தேவை தமிழ் மக்களுக்கு இல்லை. தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.
சிங்கள இனவெறியர்களைக் கருவியாகக் கொண்டு தமிழ் மக்களைக் கொன்றழித்ததுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்துள்ள அமெரிக்காவும் இந்தியாவும் இன்று மனிதத்தை நேசிக்கும் ஐரோப்பிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டிலிருந்தும் சிறீலங்காவை மீட்டெடுப்பதற்கு துடியாய்த் துடிக்கின்றன. அடுத்துவரும் வாரங்களில் ஐ.நா சபையின் மனித உரிமை மாநாட்டில் சிறீலங்கா மீது கொண்டுவரப்படவுள்ள குற்றச்சாட்டின் தன்மையை வலுவிழக்கச் செய்வதற்காகவே எரிக் சொல்ஹெய்ம் இந்த நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எனவே, எது நடந்ததோ அதுபற்றி அரட்டையடிப்பதற்கு தற்போது எங்களுக்கு நேரமில்லை. உலகில் நீதி நியாயத்தை நேசிக்கின்ற நாடுகள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக தற்போது தீவிரமாகப் பரிசீலிக்கிறார்கள். எனவே, இதுவரை விடுதலைப் பாதையில் உறுதியாக நின்ற நாங்கள் இனிமேல் சோரம் போகக்கூடாது. எவர் எதையும் சொல்லலாம். தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையும் செயலும் நேரிய பாதையிலேயே சென்றன. தற்போதும் நேரிய பாதையிலேயே செல்கின்றன. எமது தலைவரின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை வென்றெடுப்போம். அதுவரை நாம் அனைவரும் சோர்ந்துவிடக்கூடாது. நாம் வெல்வோம். எமது இலட்சியம் வெல்லும்.

நன்றி : ஈழமுரசு

கூட்டமைப்பின் தலைவர்கள் கொழும்பில் கூட்டம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளடங்கியுள்ள கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் இதற்காக கொழும்புக்கு வருமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு அனுப்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு புதுடில்லி செல்வதற்கு முன்னதாக, அதில் அங்கம் வகிக்கும் ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள், தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல்கட்சியாகப் பதிவு செய்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுக்கு, கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடி விரைவாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
அதற்கு, இந்தியப் பயணத்தை முடித்து திரும்பியதும் இதுபற்றிக் கலந்துரையாடுவதாக இரா.சம்பந்தன் பதிலளித்திருந்தார். இந்தியப் பயணத்துக்கான குழுவைத் தெரிவு செய்வதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் குழப்பங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. புதுடில்லிக்கு தமிழரசுக் கட்சியின் சார்பில் நான்கு உறுப்பினர்கள் சென்றிருந்தனர். ஏனைய கட்சிகளின் சார்பில் மூன்று பேர் இடம்பெற்றிருந்தனர். புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி ஆகியோர் இதில் இடம்பெறவில்லை.
புதுடில்லிக் கலந்துரையாடல்களின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவும் குழப்பநிலையை அறிந்துள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல அதிகாரிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு, இது தேனீர்கோப்பைக்குள் நடக்கும் சூறாவளி மட்டுமே என்று இரா.சம்பந்தன் பதிலளித்துள்ளார்.
புதுடில்லி பயணத்தை முடித்து திரும்பியதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டத்தை கடந்த வாரம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், எல்லா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்து கொள்வதற்கு வசதியாகவே வரும் செவ்வாய்க்கிழமைக்கு பிற்போடப்பட்டது.
செவ்வாய்க்கிழமை கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது, தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்துக்குப் பதிலாக பொதுவான சின்னம் ஒன்றைத் தெரிவு செய்வது குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 அக்டோபர் 2012

சிங்களப்படைகளின் பாதுகாப்புக்கு தமிழ் போராளிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் என்ற போர்வையில் சமுகப் பாதுகாப்பிற்கென நியமிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை படையினர் தமது முகாம்களுக்கு பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம், கைவேலி, போன்ற கிராமங்களிலிருந்து 250 முன்னாள் பெண் போராளிகளும் , 100 முன்னாள் ஆண் போராளிகளும் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் ஆக நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு 6மாதங்கள், 10ஆயிரம் ரூபா சம்பளத்துடன், கிராம மட்டத்தில் இடம்பெறும் சமூக, கலாச்சார பிறழ்வுகளை தடுப்பதற்கும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்குமான உரிமை வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களுக்கு இதுவரை அவ்வாறான உரிமைகள் எவையும் வழங்கப்படாத நிலையில் தற்போது கைவேலியிலுள்ள காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின், பாரிய படைமுகாமிற்கு முன்பாக காவல் கடமை வழங்கப்பட்டிருக்கின்றது.
காலையில் 8.30 மணிக்கு கடமைக்குச் செல்லும் இந்த பாதுகாப்பு ஊழியர்கள் மாலை 5மணிக்கே வீடு திரும்ப முடியும்.மேலும் இவர்களுக்கான வரவுப்பதிவுகளை படையினரே மேற்கொள்வதோடு, பணிக்கு வராவிட்டால் கடுமையான கேள்விகளும், தண்டனைகளும் கூட வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் இலங்கை குறித்த கொள்கை மாறாது!

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் இலங்கை குறித்தான அமெரிக்காவின் கொள்கைகளில் எவ்வித மாற்றங்களும் நிகழாது'' என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மிட்ரோம்னி வெற்றி பெற்று ஆட்சிமாற்றம் நிகழ்ந்தால் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுமா?
குறிப்பாக, இலங்கை போன்ற நாடுகள் குறித்தான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் நெகிழ்வுத் தன்மை ஏற்படுமா என்றும் ஊடகமொன்று கேள்விகளை எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும்போதே, பாரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாது. கடந்த காலங்களை எடுத்துப்பார்த்தால் நிர்வாகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
எனவே, மிட்டோம்னி ஆட்சிக்கு வந்தாலும், இலங்கை குறித்தான அமெரிக்காவின் கொள்கை அப்படியேதான் இருக்கும். யார் ஆட்சிக்கு வந்தாலும் சிறந்ததொரு இராஜதந்திரியாக நான் செயற்படுவேன் என்று குறிப்பிட்டார் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்கர்களின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்.

19 அக்டோபர் 2012

வடக்கிலிருந்து படைகளை அகற்ற முடியாதென்கிறார் மகிந்த ராஜபக்ஷ!

சர்வதேச நீதிமன்றத்தின் முன் படையினரை நிறுத்துவதற்கு வடக்கு,கிழக்கிலிருந்து படையினரை அகற்றுமாறு கோஷமெழுப்பும் தரப்பு முயற்சிக்கின்றது.வடக்கிலிருந்து அரசு படைகளை விலக்கிக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் சர்வதேசத்தின் மத்தியில் படையினருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.எது எப்படியிருந்தபோதிலும் மற்றைய வர்களின் தேவையின் நிமித்தம் எம்மால் நடவடிக்கை எடுக்கமுடியாது.
இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ காட்டமாகக் கருத்து வெளியிட்டுள்ளார். அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற படையினரின் பெற்றோருக்கான காப்புறுதிக் கொடுப்பனவு நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
நாட்டில் தீவிரவாதம் துடைத்தெறியப்பட்டு மூன்று வருடங்களுக்கும் மேலாகியுள்ளன என நான் நினைக்கின்றேன். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாலும் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் இருக்கின்ற அர்ப்பணிப்பைக் குறைத்து விடவில்லை. அதேபோன்று, இராணுவத்தினருக்கிருக்கின்ற சலுகைகளையும் நாம் கடுகளவேனும் குறைக்கவில்லை.
பல வருடங்களாக தேசிய பாதுகாப்புக்காக வரவு செலவுத் திட்டத்தினூடாக அதிக நிதி ஒதுக்கீடுகளைச் செய்கின்றோம். குறிப்பாக, 230 பில்லியன் ரூபாவை இராணுவ பராமரிப்பு, சம்பளம், சீருடை, எரிபொருள் ஆகியவற்றுக்காக ஒதுக்குகின்றோம். யுத்தம் முடிவடைந்துள்ளதால் அதற்கான செலவினங்கள் தற்போது மிஞ்சியுள்ளன என சிலர் கூறுகின்றனர். ஆனால், நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த அதேபோன்று செய்வதற்கு முன்வந்த தரப்பினரை என்றுமே பாதுகாக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இராணுவத்தினர் கிளிநொச்சியைக் கைப்பற்றும்போது அவர்களுக்கிருந்த ஆற்றலை நாட்டு மக்கள் அறிந்தனர். இதை இன்று சிலர் மறந்துவிட்டனர்; மறப்பதற்கு முற்படுகின்றனர். ஆனால், நாம் அப்படிச் செய்யமாட்டோம்.
அதேவேளை, படையினரின் பிள்ளைகளுக்குத் தனியான பாடசாலை, புலமைப்பரிசில், அவர்களுள் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொடுத்து படையினரின் குடும்பங்களை வலுப்படுத்துவதற்கு அபிவிருத்தியடையச் செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், படையினருக்காக வீடமைப்புத் திட்டங்களை பல மாவட்டங்களில் அமைத்துக் கொடுத்துள்ளோம்.
1983ஆம் ஆண்டிலிருந்து 2019 மே மாதம் 19 ஆம் திகதிவரை சேவையிலிருந்த படையினரின் பெற்றோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் கொடுப்பனவொன்று வழங்கப்படும். இதற்கான திட்டமொன்றும் உள்ளது.
அதுமட்டுமன்றி, படையினரை நட்சத்திரம், சுப்பர்ஸ்டார் என்ற நிலைமைக்கும் நாம் இன்று கொண்டுவந்துள்ளோம். துப்பாக்கி ஏந்தியுள்ள ஒரு தரப்புதான் படையினர் என்ற கருத்தே இதுவரையும் இருந்தது. எனினும், அவர்கள் பல்வேறு துறைகளிலும் தமக்குள்ள திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதால் அந்தக் கூற்று மாறியுள்ளது. படையினருக்கான இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஒரே நாடு இவ்வுலகில் இலங்கைதான்.
எனினும், இந்நிலைமையை சிலர் விரும்பவில்லை. படையினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு அனுப்புவதே அவர்களின் தேவையாக உள்ளது. அத்துடன், மனித உரிமைகளை மிலேச்சததனமாக மீறியவர்கள் என அவ நாமத்தை ஏற்படுத்துவதும் அவர்களின் தேவையாக உள்ளது.
சர்வதேச ஊடகங்களைப் பயன்படுத்திக்கொண்டு போலியான திரைப்படங்களைத் தயாரித்துப் படையினரை நிந்திக்கின்றனர். வடக்கு, கிழக்கிலிருந்து படையினரை அகற்றவேண்டும் எனக் கோஷமெழுப்புபவர்கள் இதைத்தான் செய்கின்றனர். வடக்கு, கிழக்கு பிரதேசம் எமதில்லையா? நாட்டைப் படையினர் பாதுகாப்பதன் காரணமாகவே நாம் படையினரை நாடு முழுவதும் நிறுத்தியுள்ளோம். வேறு தரப்பினரின் தேவைக்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுக்க இடமளிக்க முடியாது.இவ்வாறு மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேன்கூடு திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

தேன்கூடு  திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் செந்தமிழன் சீமான்,தமிழச்சி தங்கபாண்டியன்,அமீர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் ஆற்றிய உணர்ச்சிமிகு உரைத்தொகுப்பு.




18 அக்டோபர் 2012

இலங்கைக்கு எதிராக 40கோடியை புலிகள் செலவு செய்ததாக சிங்கள செய்தித்தாள் சொல்கிறது!

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் யோசனையை நிறைவேற்றி கொள்வதற்காக விடுதலைப்புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பு 40 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
கனடாவின் உள்ள புலிகளின் ஆதரவாளரான சட்டத்தரணி கெரி ஆனந்தசங்கரி உள்ளிட்ட 7 பேரும், பிரித்தானியாவில் செயற்படும் உலக தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் உட்பட 8 பேரும், பிரான்ஸில் உள்ள புலிகளின் சர்வதே வலைமைப்பின் இரண்டாம் நிலை தலைவரான வீ. கிருபாகரன், றொபர்ட் ஈவன்ஸ் தலைமையிலான 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே உள்ளிட்ட இருவரும், தமிழ் நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் குழுவொன்றும் ஜெனிவாவுக்கு வரவழைக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கான தங்குமிட விடுதி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடுன் பிரான்சில் இருந்து கடுதி தொடருந்தில் அழைத்து வரப்பட்ட 200 பேர் மற்றும் சுவிஸில் உள்ள 4 நகரங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 800 பேருக்காகவும் இந்த பணத்தை செலவிட்டுள்ளதாக திவயின கூறியுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை செய்த சுவிஸர்லாந்தில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த 11 பேர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் ஜெனிவாவில் உள்ள புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவரின் மின்னஞ்சல் மூலம் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.

17 அக்டோபர் 2012

தெற்கில் இருந்து வடக்குக்கு மனித நேய நடை மேற்கொள்ளும் கனேடிய பெண்!

தெற்கில் இருந்து வடக்குக்கு மனித நேய நடை மேற்கொள்ளும் கனேடிய பெண்!ஜெய்ப்பூர் செயற்கை கால்கள் உற்பத்தி நிறுவனத்தின் மனிதாபிமான செயல்பாடுகளுக்கு நிதி சேகரிக்கின்றமைக்காக கனேடிய பெண் ஒருவர் தெற்கே தெய்வேந்திர முனையில் இருந்து வடக்கே பேதுரு முனை வரைக்கும் மனித நேய நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.இவரின் பெயர் ஒலிவியா அகஸ்ரின்.மனித நேய தொண்டர்.கொழும்பில் வசித்து வருகின்றார்.இவர் கடந்த மாதம் 22 ஆம் திகதி இந்நடைப் பயணத்தை ஆரம்பித்தார். எதிர்வரும் 18 ஆம் திகதி பயணத்தை நிறைவு செய்ய உத்தேசித்து உள்ளார்.இவர் புளியங்குளம், மாங்குளம், முருகண்டி, பரந்தன், பளை, வரணி ஆகியவற்றை நடந்து கடந்து நேற்று முந்தினம்  யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.ஜெய்ப்பூர் நிறுவனத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய இவர் இப்பயணம் குறித்து விளங்கப்படுத்தி உள்ளார்.தெய்வேந்திர முனையில் இருந்து பேதுரு முனை வரைக்குமான தூரம் 800 கிலோ மீற்றர் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தபாயவின் அறிவிப்பு மிகவும் பயங்கரமானது!

News Service13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருப்பதானது மிகவும் பயங்கரமான பாரதூரமான அறிவிப்பாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் தேசியமொழிகள் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கான அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இல்லாதொழிக்கப்படவேண்டும் எனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டமும், 2002 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடும் ஒரே வகையானவை எனவும் அவர் அதில் கூறியுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் இந்தக் கூற்றுக்கு தமிழ்க் கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனினும், ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஆகிய பௌத்த மேலாதிக்க அமைப்புகள் அவரின் கூற்றை வரவேற்றுள்ளன.
இந்த நிலையில், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பாதுகாப்புச் செயலாளரின் கருத்து மிகவும் பயங்கரமான ஒரு அறிவிப்பாகும் என்பதை மட்டுமே என்னால் சொல்லமுடியும். இந்த ஒரு வார்த்தையில் அனைத்துப் பதில்களும் உள்ளன. இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

16 அக்டோபர் 2012

"மகிந்த அதிபரானதற்கு நானே காரணம்",சில்வா அதிரடி!

ஹெல்பிங் அம்பாந்தோட்டை வழக்கில் இருந்து உயர்நீதிமன்றம் விடுதலை செய்யாது போயிருந்தால், மகிந்த ராஜபக்சவினால், சிறிலங்கா அதிபராகியிருக்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
“சுனாமி நிவாரண நிதி முறைகேடு தொடர்பான குற்றசாட்டில் இருந்து எனது தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு, அவரை விடுவிக்காது போயிருந்தால், மகிந்த ராஜபக்சவினால் 2005 அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருக்கவோ, அதிகாரத்துக்கு வந்திருக்கவோ முடியாது.
மகிந்த ராஜபக்ச மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாப்பாக இருப்பார் என்று எதிர்பார்த்துத் தான் நாம் அதைச் செய்தோம். ஆனால், அது இன்று நடக்கவில்லை.
மகிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்குக் கொண்டு வந்தது நான் தான் என்ற குற்றச்சாட்டுகள் பல உள்ளன.
உயர்நீதிமன்றத்தின் முடிவினால் தான், அவரால் சிறிலங்கா அதிபராக முடிந்தது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
2004 டிசெம்பர் 26ம் நாள் சிறிலங்காவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து திரட்டப்பட்ட பெருமளவு நிவாரண நிதியை அப்போது சிறிலங்காவின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இட்டு கையாடியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை ஆதரிக்கக் கூடாது என தமிழக முதலமைச்சர் மன்மோகனுக்கு கடிதம்

ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படக் கூடாது என தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, இந்திய மத்திய அரசை, மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் ஒன்றை மீண்டும் எழுதியுள்ளார். அக் கடிதத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். என அவர் அக்கடிதத்தில்
அத்துடன், சர்வதேச நாடுகள் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரிடமிருந்து தனக்கு எந்தப் பதில்களும் வராத நிலையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக செயற்படப் போவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் தனக்கு கவலையளிப்பதாகவும், கடந்த சில நாட்களின் முன்பாக ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தான் எழுதிய கடிதத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாக தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் அப்பாவி ஈழத் தமிழர்களை ஈவ இரக்கமின்றி இலங்கை அரசு படுகொலை செய்துள்ளமையை சுட்டிக்காட்டியதுடன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் எனவும் இலங்கையுடனான பொருளாதார உறவையும் துண்டிக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமையையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் சிங்களவர்களுக்கு நிகராக தமிழர்களுக்கும் அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் நேரில் கேட்டுக் கொண்டதையும் நினைவுபடுத்தியுள்ள அவர்,
ஈழத்தமிழர்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதங்களின் விபரங்கள் அனைத்தையும் நினைவுபடுத்தியும் உள்ளார்.

15 அக்டோபர் 2012

போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் பிரேரணை முறியடிக்க இலங்கை தீவிர பிரயத்தனம்!

இலங்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள மேலுமொரு பிரேரணையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பில் தனிக்குழு அமைத்து, சுயமாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரேரணை ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மிச்சேல் கிரிமினால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.ஏற்கனவே இந்தப் பிரேரணை கடந்த 2011 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட போதும்,அதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவில்லை.
இந்த நிலையில் எதிர்வரும் ஜனவரிக்குள் இந்தப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து,நிறைவேற்றிக்கொள்ள அதன் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையின் பிரதிநிதிகள் இந்த பிரேரணையை சமர்ப்பிக்காதிருக்கும் பொருட்டு,அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுகளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஜாலிய விக்ரமசூரிய தலைமையில் உயர் மட்ட குழு ஒன்று இது தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தி வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த பிரேரணையைத் தயாரித்த நாடாளுமன்ற உறுப்பினர் மிச்சேல் கிரிம் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும், இலங்கை அரசு தயாராகி வருகிறது என வெளியுறவுகள் துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணிகள் அபகரிக்கப்படுவதால் எமது சமூகமே அழிந்து போகும் அபாயம் - மன்னார் ஆயர் கவலை!

article thumbnailஎமது பரம்பரைக் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்படுவது தனிநபர் பிரச்சினை அல்ல. இது பெரும் சமூகப் பிரச்சினையுமாகும். எமது சமூகமே இதனால் அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது. இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளார் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை.
உணவு, தன்னாதிக்கத்தை பாதுகாப்பதற்காகவும் மக்கள் உரிமையை உறுதிப்படுத்தும் நோக்குடன் காணி கொள்கைக்கு எதிரான தேசிய எதிர்ப்பு வாரம் மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மன்னார் ஞானோதயத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
மக்களின் தனித்துவம், சுதந்திரம் அனைத்தும் சூறையாடப்படுகின்றன. காணிகளைத் தாம் நினைத்தவாறு அபகரிப்பது மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
பரம்பரை பரம்பரையாக எமது மக்கள் ஆண்டு, அனுபவித்த காணிகளை அரசு அபகரித்து வருகிறது. இது எங்கள் சமூகத்தை கூண்டோடு அழிக்கும் செயல். இதே போலவே கல்வித்துறையிலும் மறைமுகமான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இங்கே நடைபெறுவது தனிநபர் பிரச்சினை என்றோ, ஒரு பகுதி மக்களின் பிரச்சினை என்றோ பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் பிரச்சினையாக உருமாறி வருகிறது.
வெறும் காணி மட்டும் தானே பறிபோனால் போகட்டும் என்பது வேறு. இதனால் எமது சமூகம், இனம் அழிந்து போகும் பேரபாயம் தோன்றி உள்ளது. இப்பகுதியில் பரம்பரையாக வாழ்ந்த மக்கள் மீளக்குடியமர்ந்து வாழ முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களது உரிமைகளை வேறுயாரோ அனுபவிக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மன்னார் முள்ளிக்குள மக்கள் அந்தப் பிரதேசத்தில் பரம்பரையாக வாழ்ந்தவர்கள் அந்தக் கிராமத்தின் பழைமை வாய்ந்த குடிமக்கள். ஆனால் அவர்கள் தற்போது வசதிகள் அற்ற காட்டுப் பிரதேசத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று ஆயர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

௭ரிக் சொல்ஹெய்ம் புதுடில்லிக்கு விஜயம்!

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் அமைச்சருமான ௭ரிக் சொல்ஹெய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று முன் தினம் நோர்வேயிலிருந்து புறப்பட்ட அவர் நேற்று புதுடில்லியை வந்தடைந்துள்ளார்.
இவர் இந்திய அதிகாரிகளுடன் இலங்கை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவாரென தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ௭ரிக் சொல்ஹெய்மும் அங்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெற்ற சமயம் சமாதானத் தூதுவராக கடமையாற்றிய ௭ரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவர்த்தைகளை நடத்திய பின்னர் புதுடில்லிக்கும் சென்று இந்திய அதிகாரிகளுக்கும் பேச்சுவார்த்தை தொடர்பில் விளக்கமளித்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

14 அக்டோபர் 2012

கண்ணகிமேல் கோபம் கொண்டு சிலையை அடித்து நொருக்கிய சிறுவன்!

அவுஸ்திரேலியா சென்ற தனது சகோதரர்களுக்கு ௭ன்ன நடந்தது ௭ன்பதை அறிய முடியாது தவித்த சிறுவன் ஒருவன் கண்ணகி அம்மன் ஆலயத்துக்குள் புகுந்து விக்கிரகங்களை அடித்து நொருக்கினான். இந்த சம்பவம் நிலாவெளிக்கருகிலுள்ள கோபால புர கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.
இது பற்றி தெரிய வருவதாவது. தனது சொந்த சகோதரர்கள் இருவர் படகில் அவுஸ்திரேலியா சென்று சுமார் 50 நாட்களுக்கு மேல் ஆகியும் ௭துவித தகவலும் கிடைக்காத நிலையில் கவலைப்பட்டுக் கொண்டிருந்த மேற்படி சிறுவனின் தாயார் தமது கிராமத்திலுள்ள கண்ணகி அம்மன் ஆலயத்தை நோக்கி ‘‘அம்மாவே நீயும் ஒரு கருணை காட்டுகிறாய் இல்லை’’ ௭ன வேண்டியதைக் கேட்டுக்கொண்டிருந்த இளைய மகனான 16 வயது சிறுவன் அன்று இரவு ஆலயத்துக்குள் நுழைந்து பிரதான விக்கிரமான கண்ணகி அம்மன் விக்கிரகத்தையும் ஊர்வல விக்கிரத்தையும் அடித்து உடைத்துள்ளான்.
இச்சம்பவத்தைக் கேள்வியுற்ற பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தமை க்கு அமைய மேற்படி சிறுவனும் அவனது பெற்றோரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரிக்கப்பட்டனர். சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் அவனது தந்தை மேற்படி விக்கிரகங்களை (சிலை) புனரமைத்து தருவதாக ஒப்புக் கொண்டார். இதனையடுத்து சிறுவன் விடுதலை செய்யப்பட்டான்.

இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் நம்பிக்கை!

News Serviceஇலங்கை தொடர்பில் இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் காலகட்டம் விரைவில் வரும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர், ஆர். சம்பந்தர் தலைமையில் டெல்லி சென்றுள்ளனர்.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்கள்.
அந்தக் குழுவில், இடம் பெற்றிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், அந்தப் பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா என்பது குறித்து பேட்டியளித்தார்.
"இலங்கை அரசாங்கம், குறிப்பாக இலங்கை ஜனாதிபதி, இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்பட பல தலைவர்களிடம், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அளித்த உறுதிமொழிகளை காப்பாற்றவில்லை என்பதை இந்தியா புரிந்து கொண்டிருக்கிறது.
அதனால், இலங்கை மீது ஓர் அதிருப்தி ஆரம்பமாகியிருப்பதைக் காண முடிகிறது. இலங்கை அரசை எவ்வளவு தூரம் நம்புவது என்ற கேள்விகள் இருக்கின்றன. அதனால், இலங்கை தொடர்பாக இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் காலம் விரைவில் வரும்" என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜும், இலங்கை ஜனாதிபதி அரசிடமும் தன்னிடமும் அளித்த உறுதிமொழியின்படி எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
இலங்கை அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை இந்தியா ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசு, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டே போகிறது என்று இந்தியாவும் கருதும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடுத்தகட்டமாக, அகிம்சைப் போராட்டத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், அப்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று இந்திய அரசிடம் தாங்கள் எடுத்துரைத்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
சீனாவின் ஆதிக்கம், குறிப்பாக வடமாகாணத்தில் ராணுவ முகாம்களை நவீனப்படுத்துவதிலும், ராணுவக் குடியிருப்புக்கள் கட்ட நிதியுதவி அளிப்பதிலும் சீனா அதிக முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. அது இலங்கைத் தமிழர் மக்களால் ஏற்க முடியாது. அது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இதுதொடர்பில் இந்தியா ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நிலவும் முரண்பாடுகள் குறித்துக் கவலை வெளியிட்ட இந்தியப் பிரதமர், அந்தக் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும், மிக விரைவில் அதுதொடர்பாக சரியான முடிவெடுக்கப்படும் என்று பிரதமரிடம் சம்பந்தர் அவர்கள் உறுதியளித்ததாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியாக ஒரு சரியான அமைப்பை முன்னெடு்த்துச் செல்ல ஒரு வலுவான கட்சி தேவை. எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பை அப்படிப்பட்ட வலுவான கட்சியாக மாற்ற சம்பந்தர் அவர்கள் நிச்சயம் பணியாற்றுவார் என்று நம்புவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

13 அக்டோபர் 2012

அரசுடன் ஒட்டியிருக்கும் சிறுபான்மை கட்சிகள் இரத்தின தேரரிடம் படிக்கவேண்டும்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர், தான் எதிர்வரும் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க போவதாக சொல்லியுள்ளார். தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் தருவதற்காக அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் அரசியல் நலன்களுக்கு விரோதமான திவிநேகும என்ற வாழ்வின் எழுச்சி சட்டமூலத்திற்கும், உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கும் சத்தமில்லாமல் ஆதரவாக வாக்களித்த அரசுக்கு ஆதரவு அளிக்கும் தமிழ் பேசும் அமைச்சர்களும், எம்.பி.க்களும் அத்துரலியே ரத்தின தேரரிடம் பாடம் படிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, திவிநேகும என்ற வாழ்வின் எழுச்சி சட்டமூலம், அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு எதிரானது. அது மாகாண சபைகளுக்கு பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசுக்கு மீளப்பெற்றுகொள்வது ஆகும். அதனாலேயே அதை மாகாணசபைகளுக்கு சமர்பித்து ஒப்புதல் பெறும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதுபோல், உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலம், தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை வெட்டி குறைத்து இந்நாட்டில் இரண்டு பெரும்பான்மை கட்சி அதிகாரத்தை நிலை நாட்டும் கபட நோக்கம் கொண்டதாகும்.
இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் அரசுக்கு ஆதரவு அளிக்கும் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அரசுடன் அணி சேர்ந்துள்ள அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சி எம்பீக்களும் கைகளை தூக்கி மசோதாவை, சட்டம் ஆக்கியுள்ளார்கள்.
இந்த சட்டமூலங்கள் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளுக்கு தெரியாமல் இல்லை. அப்படி சொன்னால் அது நியாயமான கருத்து அல்ல. அரசுடன் ஒட்டி இருக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கு இந்த இரண்டு சட்ட மூலங்கள் தொடர்பிலும் மாற்று கருத்துகளும், மனக்குழப்பங்களும் இருந்தன. எனினும், அவை தொடர்பில் எதிர்த்து வாக்களிக்கும் அல்லது அழுத்தம் தெரிவிக்கும் ஆளுமையை அரசு ஆதரவு சிறுபான்மை கட்சிகள் இழந்துள்ளன. எனவேதான், அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அரசு ஆதரவு சிறுபான்மை தமிழ் பேசும் கட்சிகள், தமது அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரரிடம் பாடம் படிக்க வேண்டும் என சொல்லுகிறேன்.