30 ஜூன் 2012

சிங்களப்படை போன்றே தமிழகப் போலிசும் செயற்படுகிறது!

மண்டபம் ஈழத் தமிழ் அகதிகள் முகாமிலுள்ள மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை மிரட்டி புணர்ச்சிக்கு அழைத்ததாக தமிழக போலீசார் மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தமிழ்மக்களை துன்புறுத்தும் சிங்கள ராணுவத்துக்கு இணையாக தமிழக காவல்துறையினர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களை துன்புறுத்துவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
செங்கல்பட்டு அகதிகள் போராட்டம்
அயல்நாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணையின்றி சிறையில் உள்ள தங்களை தமிழக அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் உள்ளவர்களில் 14 பேர் கடந்த 15 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் 9 பேரின் உடல் நிலை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பற்றிப் பேச காவல்துறை உயர் அதிகாரிகளோ அல்லது தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையினரோ அல்லது மாவட்ட நிர்வாகமோ முன்வரவில்லை. மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளவர்களில் ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் உருவாகி ஆபத்தான நிலையில் உள்ளார். மற்றொருவர் முதுகுத் தண்டில் ஏற்பட்ட பாதிப்பால் அடிக்கடி இழுப்பு ஏற்படுகிறது. இந்த இருவக்கு உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது, ஆனால் செய்யவில்லை.
செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு தொடர்ந்த வழக்குகளில் இருந்து அவர்கள் ஜாமீனில் விடுதலை பெற்றுள்ளனர். அவ்வாறு இருந்தும் அவர்களை அயல்நாட்டு சட்டத்தின் கீழ் காலவரையின்றி நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே தடுத்து வைத்துள்ளனர். சட்ட ரீதியாக தங்கள் மீதான வழக்குகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல் இப்படி நீண்ட காலமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்தும், தங்களை இதர முகாம்களில் வாழ்ந்து வரும் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்குமாறு கோரியும் இவர்கள் பல முறை பட்டிணிப் போராட்டம் நடத்தியுள்ளனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் போது எல்லாம், அரசுடன் பேசி விடுதலை செய்வோம் என ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் உறுதிமொழி அளிப்பார்கள். போராட்டம் முடிந்ததும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை தட்டிக் கழித்து வருகின்றனர். குடிநீர் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக எங்களை தடுத்து வைத்துள்ளீர்கள் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதற்கும், உரிய பதிலை மாவட்ட நிர்வாகம் தரவில்லை.
சிங்களவருக்கு இணையாக தமிழக கியூ பிரிவு போலீசார்
தமிழ்நாட்டின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள ஈழத்து சொந்தங்களை மிரட்டவே இந்த சிறப்பு முகாம்களை தமிழக காவல் துறையின் க்யூ பிரிவினர் பயன்படுத்தி வருகின்றனர். மண்டபம் முகாமிலுள்ள முன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை மிரட்டி, புணர்ச்சிக்கு அழைத்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி மாறிய பிறகும் க்யூ பிரிவின் அச்சுறுத்தலும், அராஜகமும் தடையின்றி தொடர்கிறது. வன்னி முள்வேலி முகாம்களில் சிங்கள படையினர் நம் சொந்தங்களை எப்படி எல்லாம் துன்புறுத்துகிறார்களோ அதற்கு சற்றும் குறைவின்றி, இங்கு க்யூ பிரிவு காவலர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கேயே இருந்து செத்திருக்கலாம் என்று நொந்துபோய் கூறும் அளவிற்கு க்யூ பிரிவினரின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.
ஈழத் தமிழர்கள் அரசியல் சம உரிமை பெறும் வரை போராடுவேன் என்று சட்டப் பேரவையிலேயே தமிழக முதல்வர் கூறினார். ஆனால், இங்குள்ள காவல் துறையினர் சிங்கள இராணுவத்தினருக்கு இணையாக அவர்களை துன்புறுத்துகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டவே இந்த உண்மைகளைக் கூறுகிறோம்.
அகதிகளாக வந்தவர்களை அயல்நாட்டு சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பது மனித உரிமை பறிப்பல்லவா? சிங்கள அரசின் இனப் படுகொலையில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள அகதிகளாக வந்தவர்களை உரிய மரியாதையுடன் பாதுகாப்புடன் நடத்துவது நமது அரசின் கடமையல்லவா ? இந்த நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்த திபெத்தியர்களுக்கும், பர்மா அகதிகளுக்கும் வழங்கப்படும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு மறுக்கப்படுவது ஏன்? எனவே, இந்த உண்மைகளை சீர்தூக்கிப் பார்த்து, சிறப்பு முகாம்களில் உள்ளோர் அனைவரையும் விடுவித்து, மற்ற முகாம்களில் அவர்கள் வாழ அனுமதிக்க வேண்டும் .
நம் சொந்தங்களின் நியாயமான கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால், சிறப்பு முகாம்களின் முன்னால் நாம் தமிழர் கட்சி மறியலில் ஈடுபடும் என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூர் ராயனூர் அகதி முகாமில் உள்ள ஒரு பெண்ணை வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்திய புகாரின் பேரில் 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேசிய இணையங்கள் முடக்கம் பின்னணியில் கூட்டமைப்பினரா?

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நெருக்கடிகள் மத்தியிலும் குரல் கொடுத்துவருகின்ற தமிழ்த் தேசிய இணையத்தளங்கள் இலங்கையில் தமி்ழ் மக்களால் பார்வையிடுவதற்கு முடியாத வகையில் தடை செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாய் திறக்காமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தினைத் தோற்றுவித்திருக்கிறது.
உண்மைக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்கின்றமையால், தமிழ் மக்களின் உரிமைகளைப் போன்றே தமிழ்த் தேசிய இணையத்தளங்களின் செயற்பாடுகளும் இலங்கையில் முடக்கப்பட்டிருக்கின்றன. இணையத்தளங்கள் முடக்கப்பட்டு நான்கு நாட்களைக் கடந்திருக்கின்ற நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் எந்தக் கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை. தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக சொல்லிக்கொள்கின்ற கூட்டமைப்பினர் புலத்திற்கும் நிலத்திற்குமான இணைப்புப் பாலங்களாக செயற்பட்டுவருகின்ற இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உட்பட்ட அரசின் முக்கிய தரப்பினருடன் தனிப்பட்ட சந்திப்புக்களை அடிக்கடி மேற்கொண்டுவருகின்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உட்பட்டவர்களின் பின்னணியில் இந்த விடயம் இடம்பெற்றிருக்கலாம் என்று பரவலாக சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் பிரத்தியேக இல்லத்தில் இருந்து இரவு 11மணியளவில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியே வந்ததாக சம்பவத்தினை நேரில் கண்ட ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் ஊடாக தகவல் வெளியாகியிருந்தது.
கூட்டமைப்பினரின் தமிழ்த் தேசிய விரோதப் போக்குகள் குறித்து தமிழ்த் தேசிய இணையத்தளங்கள் சுட்டிக்காட்டி வருகின்ற நிலையில் அவை குறித்த விபரங்களை குறித்த நபர்கள் அரசாங்கத்தின் அதி உயர் பீடத்தினரின் கவனத்தில் கொண்டுவந்திருக்கலாம் என்று கொழும்பில் மூத்த ஊடகர்கள் சிலர் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.

29 ஜூன் 2012

தமிழ் கைதி மீது மலம் ஊற்றி கொடுமை புரிகிறது சிங்களம்!

Vollbild anzeigenமனித மலங்களை வாளியுடன் ஊற்றி கொடுமை செய்யும் இலங்கைப் படைகளின் அதி உட்ச அராஜகம் தமிழ் அரசியல் கைதியின் வாக்குமூலம்:
வவுணியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் அவலம் தொடர்கிறது. நீதிமன்றங்களின் உத்தரவுகளை உதாசீனம் செய்து அடாவடித்தனம் புரியும் பாதுகாப்பு அமைச்சு ! அரசியல் கைதி சரவணபவன் எங்கே?அவரை எம் முன் நிறுத்தும் வரை எமது அகிம்சைப் போராட்டம் தொடரும் என்கின்றனர் கைதிகள் !
வவுனியா சிறைச்சாலையில் 31 அரசியல் கைதிகள் இருக்கின்றோம். பத்திரிகைகளில் வந்த செய்திகள் மக்களுக்கு காட்டும் விதத்தில் மிகபை;படுத்தப்படுத்தி வந்துள்ளது. சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. அது அகிம்சை ரீதியில்தான் நடந்திருக்கு. அரசியல் கைதிகள் இதுவரையில் அகிம்சை ரீதியில்தான் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எந்த விதக் காரணம் கொண்டும் நிர்வாகத்தின் செய்றபாடுக்ளை நிறுத்தவோ முடக்கவோ நாங்கள் போகவில்லை என சிறையில் இருந்து சிறைக் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் 25ம்திகதி மாலையளவில் சரவணபவன் என்ற சக அரசியல் கைதி ஒருவரை அனுராதபுரம் பகுதியிலுள்ள நீதிமன்றம் ஒன்றின் வழக்கின் பிரகாரம் அனுரபாதபுரம் சிறைச்சாலைக்கு இங்கிருந்து மாற்றினார்கள். இடம்மாற்றிய வேளை அவருக்கு அங்கிருந்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட கைதிகளுடன் சில முரண்பாடுக்ள ஏற்பட்டன. அதாவது நாங்கள் இங்கு எமது விடுதலை கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால் அது தொடர்பில் அவர்களுடன் கருத்து முரண்பாடு இருக்கின்றது. அதையும் அனுராதபுரம் காவற்துறை அத்தியட்சகருக்கெதிராக ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையும் பயன்படுத்தி சரவணபவனை தனது அலுவலகத்தில் வைத்து கிரிக்கட் விக்கட்டுக்களால் காவற்துறை அதிகாரி அடித்திருக்கின்றார்.
நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம்.
சிறைச்சாலைக்கு பொறுப்பானவருக்கு முன்பாக அவரது அடிவருடிகள் எனச் சொல்லப்படுகின்ற 02 கைதிகள் அவர்மீது மனித மலங்களை வீசியிருக்கின்றனர். ஒரு தடைவ அல்ல 3 , 4 தடவைகள் வீசியிருக்கினம். அறைக்குள் அடைத்து வைத்து விட்டு கதவு கம்பிக்களுக்குள்ளால் கிட்ட வரச்சொல்லிப் போட்டு வாளியால் அள்ளி ஊற்றியிருக்ப்ன்றார்கள். இதனை அந்த காவற்துறை அதிகாரி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்து விட்டுப் போயிருக்கின்றார். சரவணபவன் எவ்வாறு மண்றாடிக் கேட்டும் அவரை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. மறுநாள் காலையில் அவரைக் குளிக்கவும் விடாமல் சாப்பாடும் கொடுக்காமல் அறையில் வைத்திருக்கின்றார்கள்.
மறுநாள் காலையில் அவன் காலில் விழுந்து குழறியதை அடுத்து ஏனைய அதிகாரிகளின் உதவியுடன் காவற்துறை அதிகாரியுடன் அவரது அலுவலகத்தில் போய்க் கதைத்த பின்பும் உடைகளும் மாற்றப்படாமல் அதே உடையுடன் அவனை அடித்ததுடன் மீண்டும் சிறையில் போட்டு அடைத்திருக்கின்றார்கள். இப்ப இந்தக் கைதி எங்கிருக்கின்றார் என்ற தகவல்களே இல்லை. அவர் தனது நீதிமன்ற வழக்குகளுக்கு போனாரா அல்லது போகவில்லையா என்பது கூட தெரியவில்லை. எந்த அதிகாரிகளிமும் இது பற்றிக் கேடட்டால் அவர்கள் அதுபற்றிக் கதைக்க மறுக்கின்றார்கள் என சிறையில் இருந்து சிறைக் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் மண் மீட்பு போர் சர்வதேச மயப்படுத்தப்படவேண்டும்!

தமிழ் மக்களின் மண் மீட்புப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தமது சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழ் மக்களை வெளியேற்றி அக் காணிகளை இந்தியா, மற்றும் அமெரிக்க கம்பனிகளுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் பின்னணியில் இந்தியாவே உள்ளது. அதன் பலத்துடன் தான் இந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ் மக்களை அழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா இன்று அவர்கள் வாழ்ந்த சொந்தக் காணிகளையும் பறிக்கின்றது. வடபகுதியில் சிங்கள மக்களையும் குடியேற்றுவோம் என்ற “மாயையை" தென்பகுதியில் அரசாங்கம் அரங்கேற்றுகின்றது என்று சுட்டிக்காட்டிய விக்கிரமபாகு,
ஆனால் இதில் உண்மையில்லை. இந்திய, அமெரிக்க கம்பனிகளுக்கு காணிகளை விற்றுவிட்டு எஞ்சிய காணிகளில் இராணுவத்தினரைக் குடியேற்றும் திட்டமே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உலகின் இரண்டாவது பலஸ்தீனமாக இலங்கையின் வடபகுதி உருவாகி வருகிறது. இதற்கு இஸ்ரேலின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படுகிறது.அதற்காகவே இலங்கையில் இஸ்ரேலிய தூதரகமும் இரகசியமாக இயங்கி வருகிறது.
எனவே அரசாங்கத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காகவே நாம் அனைவரும் ஒன்றினைந்து இணைந்து போராடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

28 ஜூன் 2012

இலங்கையில் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் முடிந்தபாடில்லை!

இலங்கையில் ஊடக வியலாளர்களை அரச புலனாய்வுப் படையினர் பின்தொடர்ந்து செல்லும் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இதேவேளை, சில தமிழ் செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் புதன்கிழமை (27) முக்கிய ஐந்து ஊடக அமைப்புகள் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களை அரச புலனாய்வுப் பிரிவினர் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளான ஞானசிறி கொத்திகொட, லசந்த ருகுனுகே மற்றும் லங்காதீப பத்திரிகையின் செய்தியாளர் சுஜித் மங்கள ஆகியோருக்கே இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி உட்பட உயர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் கூறினார்கள்.
ஜனாதிபதியுடன் ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் செய்தி ஆசிரியர்களும் மாதாந்தம் நடத்துகின்ற விசேட சந்திப்புகளின்போதும் இதுபற்றிய முறைப்பாடுகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் செயலாளர் அ.நிக்ஸன் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
இணையதளங்களை தடை செய்வது பற்றிய குறிப்பான சட்டவிதிகளோ அல்லது ஏற்பாடுகளோ இலங்கை அரசிடம் தெளிவாக இல்லை என்ற நிலையில், எந்த அளவுகோல்களின்படி இணையதளங்கள் முடக்கப்படுகின்றன என்ற கேள்விகள் உள்ளதாகவும் நிக்ஸன் தெரிவித்தார்.
மறுக்கிறார் அமைச்சர்
இதேவேளை, இலங்கை ஊடக அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்படாத இணையதளங்களை தடை செய்வதற்கு தமக்கு அதிகாரம் இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பொன்றின்படி, இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் இணையதளங்கள் பதிவு செய்யப்படவேண்டியது கட்டாயம் என்பது சட்டம் என்றும் அமைச்சர் தெரித்தார்.
இதேவேளை, ஊடகவியலாளர்கள் அரச புலனாய்வு பிரிவினரால் பின்தொடரப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களையும் ஊடகத்துறை அமைச்சர் மறுத்தார்.

(பி.பி.சி. தமிழோசை)

27 ஜூன் 2012

வட,கிழக்கில் விகாரைகள் அமைப்பது இனவாதச்செயல்"பிக்குகள் முன்னணி கண்டிக்கிறது!

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனச்சுட்டிக் காட்டியுள்ள தேசிய பிக்குகள் முன்னணி, யுத்தம் முடி வடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.
தெற்கிலுள்ள விகாரைகளைப் புனரமைப்பதற்கு, பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காத அரசு, வடக்கு, கிழக்கில் விகாரைகளை அமைத்து அதீத மதப்பற்றை வெளிப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது எனவும் அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் போர் முடிவடைந்த கையோடு அரசு திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவதுடன், புதிதாக விகாரைகளையும் அமைத்து வருகின்றது. பௌத்தர்கள் இல்லாத பிரதேசங்களிலும் விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்று தமிழ் அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், வடக்கு,கிழக்கில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட்டு வரும் விவகாரம் தொடர்பில் தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ தேரரிடம் "சுடர் ஒளி' வினவியது.
இதன்போது அவர் கூறியவை வருமாறு:
யுத்தம் முடிவடைந்ததையடுத்து, தமிழ் மக்களுக்கு அவர்களின் நிலங்களை அரசு மீளப் பெற்றுக்கொடுத்திருக்கவேண்டும்; வயல் நிலங்களை கையளித்திருக்கவேண்டும்; மீளக்குடியமர்த்தல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், அரசு அவ்வாறு செய்யவில்லை. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழ்மக்கள் இன்னும் முகாம்களிலேயே முடங்கியிருக்கின்றனர். அவர்க்ள இருண்ட யுகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை.
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அரசு நாட்டில் புதுவிதமான பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றது. நீங்கள் சொன்னதுபோல பௌத்தர்கள் இல்லாத, தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு பிரதேசத்தில் விகாரைகளை அமைப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும்.
தெற்கில் நிறையவே விகாரைகள் உள்ளன. பிக்குகள் இன்மையால் அவை பராமரிக்கப்படாமல் உள்ளன. எனவே, உள்ளவற்றைப் பாதுகாப்பதற்கும், புனரமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்ததாக எமக்குத் தெரியவில்லை.
மாறாக, வடக்கு, கிழக்கில் புதிதாக விகாரைகளை அமைப்பதோ அல்லது புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதோ மதப்பற்று அல்ல. முதலில் இருப்பவற்றைப் பாதுகாக்க பராமரிக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்றார்.

மகிந்தவை எதிர்க்கட்சி தலைவராக்கியது தவறாகி விட்டது என்கிறார் சந்திரிகா!

மகிந்தவை எதிர்க்கட்சி தலைவராக நியமித்தமை தான் செய்த தவறு என்கிறார் சந்திரிகாதனது ஆட்சிக் காலத்தில் மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததே தான் செய்த மிகப் பெரிய தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது, அங்கு அவரைச் சந்தித்த தற்போதைய மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் மேற்கண்டவாறு சந்திரிகா தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சியின்போது மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியது எனது மிகப் பெரிய தவறு என்றும், அவர் தற்போது சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்க தான் செய்த தவறே காரணம் எனவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
மகிந்த ராஜபக்rவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியமையை அன்று நான் செய்த சிறந்த விடயமாக நினைத்தேன். அப்போதைய அரசு மக்களுக்கு இடையூறுகளைச் செய்தது.
ஆயிரத்து 600 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இதன் காரணமாக நான் அன்று குறித்த முடிவை எடுத்தேன்.
ரணிலுடன் இணைந்து செயற்பட எவ்வளவு முயற்சிகள் செய்தபோதிலும் அது கைகூடவில்லை.
நான் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டேன். விரும்பியவர்களுக்கு ஆலோசனை வழங்குவேன் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித் சேனாரத்ன 2004ம் ஆண்டு ஐதேக ஆட்சியை கலைத்ததே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா செய்த பெரிய தவறு என்று தெரிவித்தார்.

26 ஜூன் 2012

ஐக்கியம் என்றால் பெருன்பான்மை இனத்தின் கீழ் அடங்கி வாழ்வதல்ல"மனோ கணேசன்

எமது நிலத்தை தந்து அந்த நிலத்தில் எம்மை வாழ விடுங்கள் என அரசாங்கத்திற்கு மிகவும் நாகரிகமான முறையில் தமிழ் மக்கள் சொல்லியிருக்கின்றனர். இதனைப் புரிந்துகொண்டு எம் மக்களின் காணிகளிலிருந்து படையினரை விலக்கி, மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று திருமுறிகண்டியில் நடைபெற்ற, காணி அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இந்த நிலம் எமக்குச் சொந்தம். எமது கடல் எமக்குச் சொந்தம். இராணுவமே எமது பகுதியிலிருந்து வெளியேறு என்ற செய்தியை சிங்கள அரசங்கத்திற்கு எடுத்துச் செல்லொயிருக்கின்றது இன்றைய இந்தப் போராட்டம். இந்தக் கடலையும் எமது நிலத்தினையும் எமக்கு தந்து விடுங்கள் என்று தமிழ் மக்கள் நாகரரீகமான முறையில் அரசாங்கத்திற்கு முறையில் சொல்லி இருக்கின்றார்கள்.
பிரிவுபடாத இலங்கைக்குள் தீர்வினை பெற்றுக் கொள்ள தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சொல்லி இருகின்றனர். இதனை ஆட்சியிலுள்ள அரசாங்கம் சரியாக புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும்.
ஐக்கியம் என்றால் பெருன்பான்மை இனத்தின் கீழ் அடங்கி வாழ்வதல்ல. ஐக்கியம் என்பதன் முதல் நிபந்தனையானது நில உரிமை, மண்ணுரிமையில் தங்கியிருக்கின்றது. தங்களுடைய நிலங்களை இழந்துவிட்டு எந்தவொரு இனமும் சுய மரியாதையுடனும் சுய உரிமையுடனும் வாழ மாட்டார்கள். என்பதை தமிழ் மக்கள் இன்று அரசாங்கத்திற்கு சொல்லி இருக்கின்றார்கள். என்றார்.
அத்துடன், இன்று முறிகண்டியில் நடைபெற்ற போராட்டமானது வடக்கு கிழக்கு எங்கும் விஸ்தரிக்க வேண்டும். பின்பு மலையகப் பகுதிகளிலும் செல்ல வேண்டும். எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் மனோகணேசன்.

‘பிரபாகரன் வீரகாவியம் – எழுச்சியும் வீழ்ச்சியும்"நூல் வெளியீடு!

‘பிரபாகரன் வீரகாவியம் – எழுச்சியும் வீழ்ச்சியும்‘ ஆங்கில நூல் சென்னையில் வெளியீடுதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் வரலாற்றை விபரிக்கும் புதிய ஆங்கில நூல் ஒன்று சென்னையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
‘The Prabhakaran Saga – The Rise and Fall of an Eelam Warrior’ ( பிரபாகரன் வீரகாவியம் – ஒரு ஈழப் போர்வீரனின் எழுச்சியும் வீழ்ச்சியும்) என்ற தலைப்பிலான இந்த நூலை சென்னையில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் வரலாற்றாசிரியரான எஸ்.முத்தையா வெளியிட, முதற்பிரதியை ஊடகவியலாளர் மாலன் பெற்றுக்கொண்டார்.
இந்த நூலை மூத்த ஊடகவியலாளர் எஸ்.முராரி எழுதியுள்ளார்.
ஆயுதப்போராட்டத்தின் ஊடாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை வே.பிரபாகரன் எவ்வாறு கட்டியெழுப்பினார் என்பது உள்ளிட்ட பல விடயங்களை அவர் இந்த நூலில் விபரித்துள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வரலாற்றாசிரியர் எஸ்.முத்தையா, சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் பொருளதார நிலையில் முன்னேற்றத்தை எட்டுவதன் மூலம் அங்கு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
அதேவேளை தமிழர் பிரச்சினைக்கு பொருளாதார நிலையை விட, அரசியல் தீர்வு முக்கியமானது என்று என்று சென்னை பல்கலைக்கழக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய கற்கைகள் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பேராசிரியர் வி.சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடும் சிறிலங்கா அரசுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிகழ்வில் உரையாற்றிய கல்வியாளர்கள் மற்றும் ஊடகவிலாளர்கள், இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வுக்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நூலின் ஆசிரியர் எஸ்.முராரி, தாம் ஒரு ஊடகவியலாளராக சிறிலங்காவுக்கு மேற்கொண்ட எண்ணற்ற பயணங்களே இந்த நூலை எழுதக் காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூல் 392 பக்கங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

25 ஜூன் 2012

மன்னார் ஆயருடன் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு!


mannar ayarமன்னாரில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் இடைவெளியைக் குறைத்து இரண்டு சமூகங்களுக்குமிடையில் புரிந்துணர்வையும் நட்புறவையும் வலுப்படுத்தும் ஆரம்ப கட்ட முயற்சியாக சனிக்கிழமை மன்னார் ஆயர் வண இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கும் மன்னார் முஸ்லிம் சமய சமூகத் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற  இச்சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மன்னார் சர்வமதப் பேரவை மேற்கொண்டிருந்தது.
இச்சந்திப்புத் தொடர்பாக மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவர் அருட் திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவிக்கையில்;
இச்சந்திப்பு சுமுகமானதாகவும் சினேகபூர்வமானதாகவும் அமைந்ததோடு பரஸ்பரம் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் மன  ஆதங்கங்களை வெளிப்படுத்தவும் சிறந்த களமாக அமைந்திருந்தது.
மன்னாரில் உள்ள அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த பெரும்பாலான மக்கள், மன்னாரில் இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை குறித்து மிகுந்த வேதனை கொண்டுள்ளனர்.
இம்முறுகல் நிலையை மேலும் வளரவிடாமல் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரைச் சந்திக்க வைத்து பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வழி செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தனர்.
அதுமட்டுமல்ல, மன்னாருக்கு வெளியே உள்ள நல்மனம் கொண்ட பல தரப்பினரும் இந்த நிலைமை தொடர்பாக தங்கள் அக்கறையை வெளிப்படுத்தி வந்தனர்.  எனவே தான் மக்களின் இந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு மன்னாரில் இன மத நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையாக இச்சந்திப்பை மன்னார் சர்வமதப் பேரவை ஏற்பாடு செய்தது.
மீள்குடியேற்றம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் சட்டம், ஒழுங்கு விதிகளுக்கு முரணாக நடந்த பாரபட்சங்களை மன்னார் ஆயர் எடுத்து விளக்கினார்.
அதேபோன்று முஸ்லிம் சமய, சமூகத் தலைவர்களும் தாம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய சில பிரச்சினைகள் தொடர்பாகவும் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர்.
இது முதல் கட்ட சந்திப்பாக அமைந்தது. எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். அடுத்த கட்டச் சந்திப்பில் அமைச்சர் றிசாட் பதியுதீனையும் அழைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் விக்ரர் சோசை, மன்னார் இந்துக் குருமார் பேரவையின் தலைவர் மனோகர ஐங்கர சர்மா, செயலாளர் ம.தர்மகுமாரசர்மா, பொறியியலாளர் ச.இராமகிருஷ்ணன் ஆகியோரும் உடனிருந்தனர்.
இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் மன்னார் கிளைத் தலைவரும் மன்னார் சர்வமதப் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான மௌலவி எஸ்.ஏ.அஸீம் மன்னார் முஸ்லிம் சமய, சமூகத் தலைவர்களின் குழுவுக்கு தலைமை வகித்தார்.

24 ஜூன் 2012

ஐ.நா . மனித உரிமைகள் சபையை இலங்கை மதிப்பதில்லை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை இலங்கை அரசு மதிப்ப தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலங்கையில் நடை பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பும் ஐ.நா. மனித உரிமைச் சபைக்கு இலங்கை அரசு உரிய பதில்களை வழங்குவதில்லை என ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் சபையின் 20 ஆவது கூட்டத் தொடரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சபையின் சிறப்பு அறிக்கையாளர் குழுவே இந்தக் குற்றச்சாட்டை இலங்கை மீது சுமத்தியிருக்கிறது. நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 20ஆவது கூட்டத் தொடரில், கருத்துச் சுதந்திரம், சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகள் தொடர்பிலான மூன்று வெவ்வேறு அறிக்கைகள், ஐ.நாவின் சிறப்பு வல்லுநர்கள் குழுவினால் சமர்ப்பிக் கப்பட்டிருந்தன.
இதில் பல்வேறு நாடுகளிலும் உள்ள மனித உரிமை விவகாரங்களில் இருக்கும் குறைபாடுகள் குறித்து சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. இலங்கையின் பல்வேறு மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் அந்த நாட்டிடம் ஐ.நா. மனித உரிமைகள் சபையினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என அந்த அறிக்கையில் ஐ.நா.சிறப்பு வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த விடயத்தில் இலங்கை அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் அந்தக் குழு கூறியுள்ளது. ஐ.நாவின் சிறப்பு வல்லுநர் குழுவினால் சமர்பிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம், சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகள் தொடர்பிலான ஆய்வறிக்கையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கபட்ட விடயங்கள் வருமாறு:
* சம்பவம் 1 (2011ஆம் ஆண்டு) யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் நாளன்று, அரசியல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் அமைதியான கவன ஈர்ப்பு நிகழ்வொன்றுக்கு செல்ல முயன்றபோது தடுத்து வைக்கப்பட்டதும், மிரட்டப்பட்டதுமாகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு.
* சம்பவம் 2 (2012 ஆம் ஆண்டு) அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்குச் சென்றோர் மீது மிகையான பலப் பிரயோகம்பாவிக்கப்பட்டு அமைதியாகக் கூடுதலுக்கும், கருத்து வெளியிடுதலுக்கும் தேவையற்ற தடை விதிக்கப்பட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு.
மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நா விசேடஅறிக்கை அதிகாரி, அறிக்கைக் காலத்தில் தன்னால் அனுப்பப்பட்ட இரு அறிக்கைகளுக்கும் இலங்கை அரசிடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தனது கடமையைச் சரியாக செய்வதற்குத் தனக்கு பதில் அளிப்பது அவசியமென்றும், இலங்கை அரசை இயன்றளவு விரைவில் பதிலளிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
யாராவது அமைதியான கூட்டங்களுக்கும், ஒன்று சேர்தலுக்குமான தமது சுதந்திரத்தை அமைதியான முறையில் நடைமுறைப்படுத்தும் போது அதை குற்றமயப்படுத்தாமலிருப்பதை அரசுகள் நிச்சயம் செய்து கொள்ளவேண்டியது அரசுகளின் கடமை என்பதை ஐ.நா. விசேட அறிக்கை அதிகாரி சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆயினும் அரசிடம் இருந்து இதுவரை அதற்குப் பதிலில்லை.
இலங்கை மக்கள் அமைதியான முறையில் கூடுதலுக்கும் ஒன்று சேர்தலுக்குமான மக்களின் உடல், உளரீதியான பாதுகாப்புத் தொடர்பாகத் தான் அக்கறை கொண்டிருப்பதாகவும் விசேட அறிக்கை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
கூடுதலுக்கும் ஒன்றிணைதலுக்குமான தமது சுதந்திரத்தை பாவிக்கும் மக்கள் மீது மீது மனித உரிமைகளை மீறி துன்புறுத்தல்களையோ அல்லது பயமுறுத்தல்களையோ செய்தவர்கள் குறித்து சுயாதீனமான, பூரணமான விசாரணை நடத்தப்படவேண்டும். அவற்றுக்குப் பொறுப்பானவர்களை அந்தப் பொறுப்பை ஏற்கவைக்க வேண்டும் எனவும் விசேட அறிக்கை அதிகாரி பரிந்துரைத்திருக்கிறார்.
இலங்கைக்குப் பயணம் செய்வதற்குகாகத் தான் 2011 செப்ரெம்பரில் இலங்கை அரசுக்கு அனுப்பி வைத்த கோரிக்கைக்கு அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்பதையும் விசேட அறிக்கை அதிகாரி ஞாபகமூட்டியுள்ளார்.
எனவே இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் சபையினால் கேட்கப்படும் கேள்விகளை இலங்கை அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
இதுவரை எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கை அரசு உடனடியாக பதில் வழங்க வேண்டும் என்று 20ஆவது அமர்வில் ஐ.நா. சிறப்பு வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

23 ஜூன் 2012

ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலை புதிய ஆதாரங்கள்!

தமிழீழத்தின் அறிவிப்பாளரும்,ஊடகவியலாளருமான இசைப்பிரியா கொல்லப்பட்டது தொடர்பான
பல புகைப்படங்கள் முன்னர் வெளியாகியிருந்தபோதும் அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது
தெரியாமலேயே இருந்து வந்தது.ஆனால் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புதிய பட ஆதாரங்களின்படி அவர்
தலையில் சுடப்பட்டே கொல்லப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.அவரை சுற்றி படையினர்
நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.கைகள் கட்டப்பட்ட நிலையில் அவரது ஆடைகளை களைந்து சித்திரவதை
செய்து,பின்னர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி தலையில் சுட்டு படுகொலை புரிந்துள்ளனர் சிங்களப்படைகள்.
முதுகிலும் பிறப்புறுப்பிலும் கடும் காயங்கள் இருப்பதும் இப்புகைப்படத்தில் தெளிவாக தெரிகின்றது.
இசைப்பிரியா கொல்லப்பட்ட புகைப்படங்கள் முன்னர் வெளியானபோதும் அவரை தமது படையினர் கொல்லவில்லை
எனவும் அவர் சண்டையின்போது இறந்திருக்கலாம் எனவும் கெகலிய ரம்புக்கெல தெரிவித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் புதிய ஆதாரத்தின்படி சிங்களப்படைகளே இசைப்பிரியாவின் கைகளை கட்டி
சித்திரவதை புரிந்து தலையில் சுட்டு படுகொலை செய்துள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.இதற்கு சிங்கள அரசு
என்ன சொல்லப்போகிறது?சர்வதேசம் இன்னும் பாராமுகமாகவே இருக்கப்போகிறதா?இல்லை குற்றவாளிகளை தண்டிக்க
நடவடிக்கை எடுக்குமா?ஊடகங்கள் இன்னும் மெளனம் காக்குமா?

காணி சுவீகரிப்பை எதிர்த்து முஸ்லீம் காங்கிரசும் கூட்டணியும் இணைந்து போராடவுள்ளனவாம்!

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் சாத்வீக வழியிலான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிரடியான தீர்மானமொன்றை எடுத்துள்ளது என மிகவும் நம்பகரமாகத் தெரிகின்றது.
வடக்கைப் போன்று தற்போது கிழக்கிலும் அரசு திட்டமிட்ட அடிப்படையில் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறானதொரு முடிவை எடுத்துள்ளது என அறியமுடிகின்றது.
கிழக்கில் எமது மக்களின் காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் அரசிடம் சுட்டிக்காட்டியும் உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாகவே போராடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என மு.காவின் முக்கிய பிரமுகரொருவர் நேற்றுமாலை "உதயனி'டம் தெரிவித்தார்.
இதுவிடயம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் விரைவில் முக்கிய பேச்சுகளில் ஈடுபடவுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்தக் கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் இரு கட்சிகளும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டங்களை வடக்கு கிழக்கில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடு திரும்பிய பின்னர் இரு கட்சிகளும் சந்தித்துப் பேசும் எனவும் அறியமுடிகின்றது.

22 ஜூன் 2012

எங்களது ஒரே ஒரு வாக்கை காங்கிரசை எதிர்க்க பயன்படுத்துவோம்"-வைகோ.

வைகோ.
தமிழகத்துக்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு துரோகம் செய்வதால் ஜனாதிபதி தேர்தலில் எங்களது ஒரே ஒரு வாக்கை காங்கிரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
திருப்பூர் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் செய்வதால் ஜனாதிபதி தேர்தலில் எங்களது ஒரே ஒரு வாக்கை காங்கிரசை எதிர்க்க பயன்படுத்துவோம் என்றார். மேலும் அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு இது மிக சோதனையான காலம். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை அண்டை மாநிலங்கள் அழித்து வருகின்றன. தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணையை உடைத்தே தீருவோம் என கேரள அரசு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது.
மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் பாசன உரிமையையும், குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கும் வகையில் பாம்பாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் `இடுக்கி பேக்கேஜ்' என்ற பெயரில் 7 தடுப்பணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது.
பவானி ஆற்றிலும் அட்டப்பாடி பகுதியில் அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் வறண்டு போகும்.
நமது மாநிலத்துக்கு 4 பக்கமும் கேடு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. உலகில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு செல்லும் ஆற்றில் அணை கட்ட யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் இங்கு ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் தண்ணீரை தடுக்க முயற்சிக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் மத்திய அரசின் பாராமுகப்போக்கு கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள், நச்சுக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுகிறார்கள். கேரளாவில் இருந்து 2 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. அந்த தண்ணீர் கேரளாவுக்கு தேவையில்லை. அதில் தான் உணவுப் பொருட்களை விளைவித்து கேரளாவுக்கு வழங்குகிறோம். வம்புக்கு அணை கட்ட போவதாக கூறுகிறார்கள்.
சோனியா காந்தி இயக்குகிற காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் இந்திய அரசு தான் போரை நடத்தியது. ஈழத் தமிழர்கள் அழிவுக்கு மத்திய அரசில் பங்கேற்றுள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் தான் பொறுப்பு.
இதே போக்கு நீடித்தால் இந்திய அரசின் ஒருமைப்பாடு என்பது காணல் நீராகிவிடும். `இடுக்கி பேக்கேஜ்' திட்டத்தை தடுக்க கோரி வருகிற 24ம் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்துகிறோம்.
தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் செய்வதால் ஜனாதிபதி தேர்தலில் எங்களது ஒரே ஒரு வாக்கை (எம்.பி.கணேசமூர்த்தி) காங்கிரசை எதிர்க்க பயன்படுத்துவோம் என்றார் வைகோ.

எல்லைப்படையினரின் விபரங்களை திரட்டுகிறது அரச புலனாய்வுத்துறை!

இறுதிப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட மக்கள் படையணியான எல்லைப் படையில் இருந்தவர்களை குறி வைத்து அவர்களின் விவரங்களை படைப் புலனாய்வாளர்கள் திரட்டத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக வவுனியா வடக்கிலுள்ள பல கிராமங்களில் படைப் புலனாய்வாளர்கள் இத்தகைய முன்னாள் எல்லைப் படையினரின் தகவல்களைத் திரட்டி வருவதால் மக்களிடையே அச்ச நிலை உருவாகியுள்ளது.இறுதிப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் எல்லைப் படை என்ற மக்கள் படையணியை உருவாக்கி இருந்தனர். ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல்களில் இருந்து மக்களை காத்தல் , காயப்பட்ட மக்களை மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லல், குண்டு வீச்சுகளில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு பொது இடங்களில் பதுங்கு குழிகளை அமைத்தல் என்பன போன்ற பணிகளில் இந்த எல்லைப் படையினர் ஈடுபட்டிருந்தனர். எல்லைப் படையினர் நேரடியாக போர்களில் ஈடுபட்டது கிடையாது. தற்போது உள்ள விழிப்புக்குழுக்களின் செயற்பாடுகளை ஒத்ததாகவே எல்லைப் படையினரின் நடவடிக்கைகளும் இருந்தன. அப்பாவி மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளில் இருந்து அவர்களாகவே மீள்வதற்காகவே இந்த எல்லைப் படை உருவாக்கப்பட்டிருந்தது. இவர்களில் அநேகருக்கு ஆயுதப் பயிற்சிகள் கூட வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் முன்னாள் எல்லைப் படையினரின் விவரங்களை படைத்தரப்பினர் துருவித் துருவி அறிந்து வருகின்றனர். வவுனியா வடக்கில் உள்ள பட்டிக் குடியிருப்பு, துவரங்குளம், கற்குளம், கீரிசுட்டான், பட்டறைப் பிரிந்த குளம், மருதோடை ஆகிய கிராமங்களில் படைப் புலனாய்வாளர்கள் இவ்வாறு எல்லைப் படையினரின் விவரங்களைத் திரட்டி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
போர் முடிவடைந்து, முன்னாள் போராளிகள் கூட புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்,மக்கள் நலன் சார் அமைப்பொன்றில் இருந்தமைக்காக எல்லைப் படையினரின் விவரங்களை ஏன் இப்போது புலனாய்வாளர்கள் திரட்டுகின்றார்கள்? என்பது புரியாமல் மக்கள் குழப்பத்திலும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியாவை வம்புக்கு இழுத்த மகிந்த ராஜபக்ச!

தமிழ்நாட்டு மீனவர்கள் வேண்டுமென்றே சிறிலங்கா கடற்பரப்புக்குள் வந்து, இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தையும், அரிய கடல் செல்வங்களையும் கொள்ளையிடுவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
பிறேசிலின் றியோடிஜெனிரோ நகரில் நடைபெறும் - றியோ பிளஸ் 20 எனப்படும் தொடர் வளர்ச்சிக்கான இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான ஐ.நா மாநாட்டில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் இந்தியாவின் பெயரையோ தமிழ்நாட்டின் பெயரையோ நேரடியாகக் கூறவில்லை.
ஆனாலும், "சிறிலங்காவுக்கு அருகில், வடக்கில் உள்ள அயல் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள்'' என்று அடையாளப்படுத்தியிருக்கிறார்.
அத்துடன் பிரச்சினைக்குரிய பகுதி பாக்கு நீரிணை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு செய்பவர்கள் மீது, அனைத்துலக கடல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் வகையிலும் சிறிலங்கா அதிபர் உரையாற்றியுள்ளார்.
சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிப்பதாக தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்தால், இந்தச் சட்டப்படி அவர்களைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குச் சிறையில் அடைக்க சிறிலங்கா முடிவு செய்துள்ளது என்பதையே மகிந்த ராஜபக்சவின் இந்த உரை எடுத்துக் காட்டுவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

21 ஜூன் 2012

பிரணாப்பின் வெற்றிக்கு ராமதாஸ் உத்தரவாதம்!

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியையும், சங்மாவையும், வெவ்வேறு கட்சிகள் ஆதரிக்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும், வேட்பாளரை ஆதரிக்க ஒவ்வொரு காரணம் உண்டு. இரண்டு வேட்பாளரையும் ஆதரிக்க முடியாது என கூறியுள்ள விஜயகாந்த், அதற்கும் ஒரு காரணம் சொல்லியிருக்கிறார்.
ஆனால், புதுமைக் கட்சியான பா.ம.க.-வுக்கு, வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத புதுமைக் காரணம் இருப்பதுதான், அவர்களது சிறப்பு.
“ஜனாதிபதித் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறோம்” என்று அறிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “போட்டியில் உள்ளவர்களிடையே பிரணாப் முகர்ஜிதான் வெற்றி பெறுவார் போலிருக்கிறது. எனவே அவரை ஆதரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ள கருத்து, பிரணாப்புக்கே தலை சுற்றலை ஏற்படுத்தியிருக்கும்!
235 எம்.எல்.ஏ.க்களையுடைய தமிழக சட்ட மன்றத்தில், கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயம் போல பா.ம.க., 3 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கிறது. இதனால் ஏழைக்கேற்ற எள்ளுறுண்டையாக அக் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
மாநிலத்தில் உள்ள 3 எம்.எல்.ஏ. பலத்தை வைத்து, அகில இந்திய அரசியலை தலைகீழாக புரட்டிப் போடவா முடியும்? எனவே, ஓடுகிற குதிரையில் பணம் கட்டும் முடிவை எடுத்திருக்கிறார் டாக்டர். இதிலென்ன வெட்கம் என்ற ரீதியில், அதற்காக ஆதரிக்கிறோம் எனவும் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சொல்லி விட்டார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
காடுவெட்டி குரு போன்ற அரசியல் அறிஞர்களை கொண்டுள்ள பா.ம.க., இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதில் ஆச்சரியப்பட பெரிதாக எதுவுமில்லை என்பது உண்மைதான். ஆனால், டாக்டரின் இந்த வார்த்தைகள், அடுத்துவரும் தேர்தல்களில் அவருக்கே எதிராக திரும்பாதா என்பதுதான் எமது கேள்வி!
அதாவது, ஜெயிக்கிற வேட்பாளருக்கு வாக்களிக்கிற டாக்டரின் அதே பாலிசியை, தமிழக வாக்காளரும் பின்பற்றினால், என்னாகும்?
ஜெயிக்க முடியாத பா.ம.க.-வுக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்களே!!

புகலிடம் கோரும் அகதிகளை திருப்பி அனுப்பாதீர்கள் என்கிறார் பான் கீ மூன்!


புகலிடம் கோரும் அகதிகளை எந்தவொரு நாடும் திருப்பி அனுப்பக் கூடாதென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக ஆபிரிக்க மேற்கு ஆசிய நாடுகளில் அகதிகளை திரும்ப அனுப்பும் பிரச்சினை அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலக அகதிகள் தினம் நேற்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் தான் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகள் தஞ்சமடைகின்றனர். எனவே அவர்களை வரவேற்க வேண்டும். உள் நாட்டில் பல்வேறு நிதிப் பிரச்சினைகள் இருந்தாலும் அகதிகளாக வருபவர்களை திரும்ப அனுப்பக்கூடாது. வேறு வழியில்லாத நிலையில் தான் அவர்கள் நம்மை நாடி வருகின்றனர். எனவே அவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 43 இலட்சம் பேர் தங்கள் நாடுகளில் இருந்து வெளியேறி பிறநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
அகதிகளில் 5 இல் 4 பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஐ.நா. வின் அகதிகள் மறுவாழ்வு பிரிவு தெரிவித்துள்ளது. அகதிகளுக்கான போதியசட்டங்கள் இல்லாத நிலையில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை, திபெத் அகதிகள் இந்தியாவில் உள்ளனர். இது தவிர வேறு பலநாடுகளில் இருந்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆனால் 1940 ஆம் ஆண்டுகளில் உள்ள அகதிகள் சட்டத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்யமுடியாது.அகதிகள் இந்தியாவில் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.ஆனால் அவர்கள் பாதுகாப்பாக வசிக்க போதிய வசதிகள் செய்து தரப்படுவது இல்லை.எனவே அகதிகளை நிர்வகிக்க சரியான சட்ட நடைமுறைகளை இந்தியா கொண்டுவர வேண்டும் என்று தெற்காசிய மனிதஉரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

புலிகள் தயாரித்த பல்குழல் எறிகணை!

புலிகள் தயாரித்த பல்குழல் எறிகணை: ஆச்சரியத்தில் இராணுவம் !விடுதலைப் புலிகள் தயாரித்த பல்குழல் எறிகணை செலுத்தி ஒன்றை இராணுவம் மீட்டுள்ளதாக அறியப்படுகிறது. முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் இது மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் 6 எறிகணைகளைச் செலுத்தக்கூடிய பல்குழல் எறிகணைகளை புலிகள் உள்ளூரில் தயாரித்துள்ளனர்.
இதனைக் கண்டு இராணுவத்தினர் வியப்படைந்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது.
இறுதி யுத்தத்தில் அவை பாவிக்கப்படவில்லை என்றும், இதனைப் புலிகள் ஏன் பாவிக்கவில்லை என்று தமக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூரில் கிடைக்கும், மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி, இவ்வகையான கனரக ஆயுதங்களை புலிகள் மிக நுணுக்கமாகத் தயாரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள இராணுவத்தினர், புலிகளின் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை ஒன்றையும் கண்டுபிடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

20 ஜூன் 2012

பெண்களுக்கு படையினரால் பாலியல் அச்சுறுத்தல்!

இலங்கையில் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படுவதில்லை என்றும் வடக்கு கிழக்கு பெண் களுக்கு எதிராக மோசமான அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன என்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் சாசன அமைப்பு (ECCHR) குற்றம் சுமத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது;
குறிப்பாக வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் பெண்கள் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறி அடிக்கடி நடத்தும் உடல் சோதனைகளின் போது பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கின்றன.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பிலான ஐ.நா.வின் சாசனம் இலங்கையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இது குறித்தும்,வடக்கு,கிழக்குப் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் ஐ.நா. அமைப்பு தீவிர கவனம் செலுத்த வேண்டும். அங்கு நேரடியாக அல்லது மறைமுகமாகப் பெண்களைத் துன்புறுத்தக்கூடிய சகல சட்டங்களும் நீக்கப்பட வேண்டும். போரின்போது கைது செய்யப்பட்ட பெண்களின் தற்போதைய நிலை குறித்து அக்கறை கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. எனவே அந்தப் பிரகடனத்தை மீறும் வகையில் செயற்படக்கூடாது என்று ஐரோப்பிய மனித உரிமைகள் சாசன அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டுடன் முடிவடைந்த போரின்போது, கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்த பெரும் பாலான தமிழ்ப் பெண் போராளிகள், இலங்கை இராணுவத் தினரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது இறந்த பெண் சடலங்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டிருக்கக்கூடும் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தும் வீடியோப் பதிவுகளும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

19 ஜூன் 2012

ஐ.நா.கூட்டத்தொடரில் சிறிலங்கா விவகாரத்தில் அமைதிகாத்தார் நவநீதம்பிள்ளை!


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20வது கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான நேற்று தொடக்கவுரை நிகழ்த்திய ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளையோ அல்லது வேறு எந்த அதிகாரிகளோ சிறிலங்கா தொடர்பாக எதுவும் குறிப்பிடாதது குறித்து சிறிலங்கா அரசாங்கம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம,
“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் முதலாவது நாள் அமர்வில் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்தும், போருக்குப் பிந்திய நிலைமையின் முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தும் சுருக்கமான விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் மனிசா குணசேகர தலைமையிலான குழுவினர் பிந்திய நிலைமைகள் குறித்து விளக்கமளித்துள்ளனர்.
இது ஒரு சுருக்கமான அமர்வு. வெறும் அரை மணிநேரம் மட்டுமே இந்த அமர்வுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
வடக்கு மாகாணத்தில் படைகளைக் குறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஒரு விபரமான அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
இந்தப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த நிலைமைகளை கணித்துக் கொள்வதற்கு இந்த அறிக்கை பேரவைக்கு உதவியாக இருக்கும்.
அதேவேளை, நேற்றைய அமர்வின் போது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளையோ அல்லது வேறு எந்த அதிகாரிகளோ தமது உரைகளின் போது சிறிலங்கா தொடர்பாக எதையும் குறிப்பிடவில்லை.
இது மிகவும் நல்லது. ஆனால் இது முதல் நாள் மட்டும் தான். பேரவைக்கூட்டம் வரும் ஜுலை 6ம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் நவிபிள்ளை தனது உரையில் எதையும் குறிப்பிடவில்லை.
அதேவேளை இந்தப் பரிந்துரைகளில் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்குக் கடமைப்பட்டுள்ளதாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என்று ஒரு போதும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கோ அல்லது வேறு எவருக்குமோ சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி கொடுக்கவில்லை“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தடைக்கு மத்தியிலும் மக்கள் வலி.வடக்கில் ஆர்ப்பாட்டம்!

அரசின் திட்டமிட்ட நில அபகரிப்பினை எதிர்த்தும் மக்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்யக் கோரியும் வலி. வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காவற்றுறையினரால் தடுக்கப்பட்ட போதிலும் இறுதியில் குறிப்பிட்ட அளவு மக்கள் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் சென்று மகஜர் கையளித்தனர்.
வலி. வடக்குப் பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இருநூற்றைம்பது பேர் வரையான மக்கள் கலந்து கொண்டனர்.
தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொண்ட பினனர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கச் சென்ற மக்களைத் தடுத்த காவற்றுறையினர் ஆலய வாசலில் மறித்து மேலும் செல்லவிடாது தடுத்தனர்.
இதனையடுத்து, ஆப்பாட்டக்காரர்களுக்கும் காவற்றுறையினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது. அதனையடுத்து, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும் காங்கேசன்துறை காவற்றுறை அத்தியட்சகரும் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் அடிப்படையில் குறிப்பிட்ட சிலருடன் சென்று மகஜர் கையளிக்க அனுமதிக்கப்பட்டது.
இதனையடுத்து உதவிப் பிரதேச செயலாளர் கே.பிரபாகரமூர்த்தியிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. அத்துடன் மகஜரின் ஒரு பிரதி மாவை சேனாதிராசாவிடமும் கையளிக்கப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்மைபபு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினாகளான சிவாஜிலிங்கம், கஜேந்திரன், மற்றும் சீ.வி.கே சிவஞானம் என்.வித்தியாதரன், பிரதேச சபைகளின் தலைவாகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட வலி. வடக்குப் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

18 ஜூன் 2012

ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு!காசிஆனந்தன்

ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம் தொடரும். இந்திய விடுதலைப் போராட்டத்தை விட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம் என்று புத்தக வெளியீட்டு விழாவில் காசி ஆனந்தன் பேசினார்.
விழுப்புரத்தில் பேசிய அவர்:
இந்திய சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ் சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார். இந்திய விடுதலைப்போராட்டத்தைவிட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம்.
இந்திய போரில் சுமார் 30,000 பேர் இறந்து இருப்பார்கள். ஆனால் ஈழ மண்ணில் நடந்த போரில் மூன்று லட்சத்திற்கு மேல் இறந்துள்ளனர். அப்போது விமானத்தில் வந்து யாரும் குண்டுகள் போடவில்லை. இப்போது அப்படியில்லை, அதிகமாக தமிழர்கள் வாழ்ந்த பூமியில் அதிகமான அளவில் குண்டு போட்டு சாகடித்துள்ளனர்.
அந்த போரில் யாரும் விதவையாக்கப்படவில்லை. மாறாக இலங்கையில் 89,000 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 60,000 பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக்கப்பட்டுள்ளனர். அதே போல் காந்தியடிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை. ஆனால் இந்த இலங்கை விடுதலைப் போராட்டத்தில் திலீபன் போன்றவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள். இது மிகவும் உயர்ந்த விடுதலைப் போராட்டமாகும்.
அங்குள்ளவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாங்கள் அவர்களைவிட உறுதியாக இருக்கிறோம். ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம் தொடரும். வழக்கம்போல் உங்கள் தோள்கள், கைகள் தொடர்ந்து எங்களுக்கு கைகொடுங்கள் என்று காசி ஆனந்தன் பேசினார்.

17 ஜூன் 2012

புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் அநியாயம் நடக்குமா?

கடந்த 3 மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன தனது 18 வயது இளம் பெண்ணைத் தேடிக் களைத்த நிலையில் சேர்வடைந்த தந்தை ஊடகங்களுக்குத் தனது உள்ளக் குமுறலைத் தெரிவித்துள்ளார்.
அவர் வேதனையுடன் தெரிவித்த சில விடயங்கள் கீழ்வருமாறு,
எனது சொந்த இடம் வன்னி ஜெயபுரம். எனக்கு 4 பிள்ளைகள். மனைவியும் ஒரு மகளும் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் எனது வறுமை நிலை காரணமாக நிறுவனம் ஒன்றின் மூலம் எனது இரண்டாவது மகளான யோகேஸ்வரன் சர்மினியை தெல்லிப்பளை துர்கை அம்மன் கோவில் நடாத்திவரும் சிறுவர் இல்லத்தில் சேர்த்து படிப்பித்து வந்தேன்.
இறுதி யுத்தம் காரணமாக ஒரு வருடம் படிக்காததால் மருதனார்மடம் இராமநாதன் மகளீர் கல்லூரியில் க.பொ.த (சா.த)தில் கல்வி கற்று வந்தாள்.
கடந்த வருட இறுதியில் க.பொ.த. (சா.த) பரீட்சை எடுத்த பின் எனது வீட்டிற்கு வந்தாள். கடந்த 3ம் மாதம் க.பொ.த. பெறுபேறுகள் வந்த செய்தி அறிந்து எனது மகள் 18.03.2012 அன்று காலை ஜெயபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டாள்.
பரீட்சைப் பெறுபேறுகளை பார்ப்பதற்காகச் சென்ற மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. எனது மகளிடம் அவள் யாழ்ப்பாணம் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவளது மாமனார் கொடுத்த கைத் தொலைபேசி இருந்தது. இருந்தும் அத் தொலைபேசியில் பணம் இல்லாத காரணத்தால் அவள் அதனை உள்வரும் அழைப்புகளுக்கு பாவிப்பாள்.
எனது மகள் யாழ்ப்பாணம் போய் சேர்ந்து விட்டாளா என அறிவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசி செயல் இழந்து காணப்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் தொலைபேசி அழைப்பில் எனது மகள் அழுதவண்ணம் பதில் தந்தாள்.
‘நான் யாழ்ப்பாணம் வந்தபோது எனக்குத் தெரிந்த ஐயா என்னை தனது வாகனத்தில் ஏற்றி கொண்டு போய் விடுதியில் விடுவதாகக் கூறியபோது தான் அவருடன் ஏறியதாகவும் ஆனால் தற்போது என்னை அவரும் அவருடன் சேர்ந்தவர்களும் ஒரு இருட்டறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் தனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லை எனவும் அவர்கள் என்னை சித்திரவதை செய்து விட்டு சென்றுவிட்டார்கள், மீண்டும் வருவார்கள்’ எனவும் கதறி அழுதாள்.
நான் உடனடியாக அன்று மாலையே யாழ்ப்பாணம் வந்து இரவு 8 மணிக்கு யாழ் பஸ்நிலையத்தை அடைந்தேன். அங்கிருந்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டு இரவு 12 மணிக்கு வெளியே வந்தேன்.
அன்றிலிருந்து இன்று வரை பொலிசார் எத்தனையோ தடவைகள் என்னைக் கூப்பிட்டு மாறி மாறி விசாரித்தார்களே தவிர எந்தவித பிரயோசனமும் கிடைக்கவில்லை. மகளுக்குக் கைத்தொலைபேசியை வாங்கிக் கொடுத்த அவளது சாவகச்சேரி மாமனை மாத்திரம் அடித்து உதைத்துவிட்டு விட்டுள்ளார்கள். மூன்று மாதங்கள் கடந்த பின்னர்தான் நான் இதனை ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணி உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.
நான் இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தவன். அத்துடன் எனது ஒரு மகளையும் எனது மனைவியையும் இறுதி யுத்தத்தில் பறி கொடுத்தவன். இருந்தும் நான் தற்போது கவலைப்படுவது என்னவெனில் விடுதலைப் புலிகள் இல்லாது போய் விட்டார்களே என்றுதான்.
இவ்வாறு வன்னியில் விடுதலைப் புலிகள் ஆட்சி செய்த காலத்தில் பெண்கள் யாராவது கடத்தப்பட்டோ அல்லது காணாமல் போனாலே 24 மணித்தியாலத்திற்குள் அவர்கள் விசாரணை செய்து அனைத்தையும் கண்டு பிடித்துவிடுவார்கள்.
ஆனால் தற்போது மூன்று மாதங்களாகியும் எனது மகளைக் கண்டு பிடிக்க முடியாது பொலிசார் திணறுகின்றார்கள் . அத்துடன் உனது மகள் கலியாணம் கட்டி எங்காவது இருப்பாள் என்று சாதாரணமாக கூறுகின்றார்கள்.
இவ்வாறு மிகவும் விரக்தியுடனும் வேதனையுடனும் தெரிவித்தார் அந்தத் தந்தை.

காணி சுவீகரிப்பை ஆதாரத்துடன் நிரூபிக்கத்தயார் என கூட்டமைப்பு தெரிவிப்பு!

வடக்கில் அரசு திட்டமிட்டு அரங்கேற்றிவரும் நில ஆக்கிரமிப்புக்களைத் தகுந்த ஆதாரங்களுடன் அரசுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுக்கும் நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இப்போதும் தயாராகவே உள்ளது.
வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுவரும் காணிகளின் முழு விவரங்களும் எம்மிடம் உள்ளன. அவற்றை நாம் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவோம்.
இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா.
இராணுவம் தனியார் காணிகளைச் சுவீகரிக்கவில்லை எனவும் அவ்வாறு சுவீகரித்திருந்தால் அதனைத் தமிழ் அரசியல்வாதிகள் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டட்டும் எனவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய விடுத்த சவாலுக்கு நேற்றைய உரையில் பதிலடி கொடுத்தார் மாவை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் ஆட்சி நிர்வாகம் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் ஆரம்ப உரையாற்றுகையில் மாவை இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரக அதிகாரி வெ.மகாலிங்கம், தூதரகத்தின் இன்னொரு அதிகாரியான ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்ததாவது:
கைப்பற்றப்பட்ட நாடுபோல தமிழர் பகுதிகளை இராணுவ ஆட்சிக்குள்ளே அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசு இராணுவத்தின் தேவைக்கு ஏற்ப அரச மற்றும் தனியார் காணிகளை வகைதொகையின்றி ஆக்கிரமித்து வருகிறது.
எமது மக்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருப்பது தொடர்பாக 2003 இல் உயர் நீதிமன்றில் வழக்குத் தொடுத்திருந்தோம். 2006 இல் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆதார ரீதியாகத் தனியார் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதை நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம்.
வலி. வடக்கு உள்ளிட்ட வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்தும் இராணுவமும், பௌத்த குருமாரும், உயர் அதிகாரிகளும் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட காணிகளின் விவரமும் எம்மிடம் உள்ளன.
அதனை அரசுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் ஆதார ரீதியாகத் தெரியப்படுத்தவுள்ளோம். இதனை எல்லாம் அறியாமல் பாதுகாப்புச் செயலர் எமக்குச் சவால் விடுகிறார் என்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்ததாவது:
மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும்போது அரச அதிகாரிகள் அதற்குத் தடை போடமுடியாது. மக்கள் பிரதிநிதிகள் துணிவுடன் செயலாற்ற வேண்டும்.
நில ஆக்கிரமிப்புக்கு எதிராகத் துணிவுடன் குரல் கொடுத்துத் தடுத்து நிறுத்த வேண்டும். மாதகல் கிழக்கில் புலிகள் வைத்திருந்த தனியார் காணியையே கடற்படையினர் எடுத்துள்ளதாக அரசு கூறுகிறது. புலிகள் வைத்திருந்தபோது பயங்கரவாதிகள் மக்களின் காணிகளை அபகரித்துள்ளதாக அரசு கூறியது. தற்போது மக்களின் காணிகளை இராணுவம் அபகரித்துள்ளது. இப்போது இராணுவத்தையே பயங்கரவாதிகள் எனக் கூறவேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் உரை நிகழ்த்தினார்.

16 ஜூன் 2012

அல்,கொய்தா தாக்குதலும் புலிகளின் விமானங்களும் ஒரே விதமான அச்சுறுத்தலாம்!

“அமெரிக்காவில் அல்-காய்தாவால் நடத்தப்பட்ட செப்.11 விமானத் தாக்குதல்களும், இலங்கையில் விடுதலைப்புலிகள் உபயோகித்த விமானங்களும், ஒரே ரகத்திலான அச்சுறுத்தல்களே” இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்திய ராணுவத்தின் லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங்.
செப். 11 தாக்குதல், அல்-காய்தாவால் 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்டது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடட் ஏர்லைன்ஸ் வர்த்தக விமானங்களை கடத்தி இலக்குகள் மீது மோதி நடைபெற்ற தாக்குதல் அது.
விடுதலைப் புலிகளால் உபயோகிக்கப்பட்டவை, லைட்-ஏர்கிராஃப்ட் என அழைக்கப்படும் இரு இலகு ரக விமானங்கள். இவையும், வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கான விமானங்களே. அவற்றில் சில மாற்றங்கள் விடுதலைப் புலிகளால் செய்யப்பட்டு, குண்டுகளை காவிச் சென்று வீசும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருந்தன.
செப். 11 தாக்குதலின்பின், அமெரிக்கா அல்-காய்தா தலைவர் பின் லேடன் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. ஆப்கானிஸ் இருந்து தப்பி பாகிஸ்தானில் மறைந்திருந்த பின் லேடனை கடந்த வருடம் அதிரடித் தாக்குதல் ஒன்றில் கொன்ற பின்னரே ஓய்ந்தது. (ஆனால், அல்-காய்தா அச்சுறுத்தல் இன்னமும் ஓயவில்லை)
2008-ல் இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்களின்பின், இந்தியா இலங்கைக்கு விமானங்களை ட்ராக் செய்யும் ராடார்களை கொடுத்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் புரிய, இலங்கை அரசுக்கு பல நாடுகள் கை கொடுத்தன. யுத்தம் இலங்கை ராணுவத்துக்கு வெற்றியாக முடிந்து, விடுதலைப் புலிகளின் தலைவரும் அதில் கொல்லப்பட்டார்.
2001-ல் நடைபெற்ற செப்.11 தாக்குதலை உத்தரவிட்ட அல்-காய்தா தலைவர், அது நடந்து 10 ஆண்டுகளின்பின் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தத் துவங்கி 1 வருடத்திலேயே, தாக்குதல் செய்த விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. யுத்தமும் முடிந்து விட்டது.
இந்த இரு சம்பவங்களும், ஒரே ரகத்திலானவை என்று வர்ணித்திருக்கிறார் லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங்.
இந்திய ராணுவத்தில், விமானங்களை மானிட்டர் செய்வதற்கும், எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்குமாக சிறப்பு பிரிவு ஒன்று உண்டு. ராணுவ வட்டாரங்களில் AAD என்று சுருக்கமாக அறியப்பட்ட அந்த சிறப்பு பிரிவின் பெயர், Army Air Defence. இந்த AAD பிரிவின் டைரக்டர் ஜெனரல்தான், லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங்.
விமான ஏவுகணைப் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய லெப்டினென்ட் ஜெனரல் சிங், “அரசு அல்லாத அமைப்புகள் விமானங்களை கொண்டு தாக்குவதிலேயே, எமது கவனத்தை முக்கியமாக செலுத்துகிறோம். அவை சிவில் (பயணிகள்) விமானங்களாக இருக்கலாம், அல்லது ராணுவ விமானங்களாக இருக்கலாம்.
தவறானவர்களின் கைகளில் அந்த விமானங்கள் சென்றடைந்தால், அதை அச்சுறுத்தலாகவே நாம் பார்க்கிறோம். விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல்களை நடத்தியதை நாம் மிக சீரியசாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுத்த காரணம் அதுதான்” என்றவர், “புலிகளின் சிறிய விமானங்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல், அல்-காய்தாவின் செப்.11 தாக்குதலுக்கு எந்த விதத்திலும் குறைந்த அச்சுறுத்தல் அல்ல” என்றும் பேசினார்.
“இப்படியான தாக்குதல்கள் இந்திய வான் பரப்பிலும் நடக்கலாம் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம். அல்-காய்தா மற்றும் விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாத அமைப்பினரின் தாக்குதல்கள் இந்தியாமீது நடத்தப்பட்டால், அவற்றைத் தடுப்பதற்காக விமான எதிர்ப்பு உபகரணங்களை AAD டெவலப் செய்துள்ளது.
முழுமையான ஆட்டோமேட்டிக் கன்ட்ரோல் மற்றும் ரிப்போர்டிங் சிஸ்டம் ஒன்று எம்மால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லைக்குள் வெளி சக்திகள் உள்ளே நுழையக்கூடிய இடங்களில், இந்த சிஸ்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன. யுத்த காலத்தில்தான் இவை இயங்கும் என்றில்லை. சாதாரண காலங்களிலும், இரவு பகலாக இவை இயக்கப்படுகின்றன.
இந்த வான் பாதுகாப்பு சிஸ்டம், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு கல்லூரியால் (College of Air Defence) டெவலப் செய்யப்பட்டது. தற்போது விமானிகளற்ற உளவு விமானங்களை ட்ராக்-டவுன் செய்யும் சிஸ்டம் ஒன்று டெவலப்பிங் ஸ்டேஜில் உள்ளது” என்றும் விளக்கினார் லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கம் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தில், புலிகளின் விமானங்கள் தாக்கதலில் ஈடுபட்டபின் இந்தியா இலங்கை ராணவத்தின் கைகளை பலப்படுத்தியதன் காரணங்களில் இந்த வான் அச்சுறுத்தலும் ஒன்று” என்றும் தெரிவித்தார் அவர்.
(2009 யுத்தத்தின்போது, புரியாமலிருந்த சில விஷயங்கள் இப்போது புரிவது போல உள்ளனவா?)

தமிழின அழிப்பின் முக்கிய சூத்திரதாரி பிரணாப்பை தோற்கடிக்க சீமான் வேண்டுகோள்!

குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஈழத்தில் தமிழினம் அழித்தொழிக்கப்பட்ட சதியில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் என்பதை நாம் தமிழர் கட்சி நினைவூட்ட கடமைப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்த மக்களின் மீது சிறிலங்க இராணுவத்தினர் கனரக ஆயுதங்களையும், தடை செய்யப்பட்ட குண்டுகளையும் பொழிந்து ஒவ்வொரு நாளும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருந்தபோது, போரை நிறுத்த வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் வலிமையாக ஒலித்தது. அப்போது பிரதமரின் சிறப்புத் தூதராக இலங்கை சென்றார் பிரணாப் முகர்ஜி. இலங்கை பயணிப்பதற்கு முன்பாக சென்னை வந்து, அப்போது இராமசந்திரா மருத்துவமனையில் முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து பேசிவிட்டு கொழும்பு சென்றார்.
கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றதால் போரை நிறுத்துமாறு இந்தியாவின் சார்பாக பிரணாப் முகர்ஜி வலியுறுத்துவார் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்தனர். கொழும்புவில் இலங்கை அதிபர் ராஜபக்சவையும், அவருடைய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு டெல்லி திரும்பிய பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை தமிழர்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியதுபோல் இருந்தது. போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல், போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொண்டதாக தனது அறிக்கையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி, இலங்கை அரசு மேற்கொண்டு வரும் போரினால் தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழி பிறந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தது இந்திய அரசு ராஜபக்ச நடத்தும் போருக்கு ஆதரவாக நிற்கிறது என்பதை புலப்படுத்தியது. அதுவரை போரின் மூலம் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காது என்று கூறிவந்த இந்திய மத்திய அரசு, போரினால் தீர்விற்கான வழி பிறந்திருக்கிறது என்று கூறியது.
இதுமட்டுமல்ல, இலங்கை உள்நாட்டுப் போரினால் அப்பாவி மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பேசியபோது, போர் நடக்கும் பகுதியில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர் என்று எண்ணிக்கையை குறைத்துப் பேசியவர் பிரணாப் முகர்ஜி. உண்மையில் போர் நடந்த பகுதியில் அப்போது இருந்த மக்களின் எண்ணிக்கை 4 இலட்சம் பேர் ஆகும். பிரணாப் எண்ணிக்கையை குறைத்துக் கூறியதை அனைத்து உறுப்பினர்களும் கடுமையாக கண்டித்தனர். அப்போது பதிலளித்த பிரணாப், இலங்கை அரசு கொடுத்த புள்ளி விவரத்தையே தான் சொன்னதாக திமிருடன் பதில் கூறினார்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இலங்கை அரசு நடத்திய தமிழின அழிப்புப் போருக்கு பின்னால் நின்று செயல்பட்ட முக்கிய சூத்ரதாரிகளில் ஒருவரான பிரணாப் முகர்ஜியை இன்று குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இவருக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தால் அது இலங்கையில் இன அழித்தலுக்கு ஆளான நம் சொந்தங்களுக்குச் செய்யும் துரோகமாகும். எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் பிரணாப் முகர்ஜியை தோற்கடிக்கும் வகையில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.

15 ஜூன் 2012

புலம்பெயர் தமிழருக்கு அடிபணிவதா?சிந்திக்க வேண்டிய தருணம் என்கிறார் சிங்கள எம்.பி!

புலம்பெயர் தமிழரின் அச்சுறுத்தலுக்கு அடிபணிவதா? இல்லையா?“புலம்பெயர்ந்துள்ள தமிழர்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவதா இல்லையா என்று சிந்திக்கவேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதுகெலும்புடன் செயற்பட்டு வருகிறார். நாமும் அப்படித்தான் செயற்படுகிறோம். நாம் எதற்குப் பயப்படவேண்டும்?”
இவ்வாறு குறிப்பிட்டார் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
“புலம்பெயர் புலிகள் கொடுத்துவரும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவதா இல்லையா என்ற கேள்வி எம்முன் எழுந்துள்ளது. அதனை உடனடியாகத் தீர்மானிக்கவேண்டிய வேளை வந்துவிட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் சென்றபோது புலம்பெயர் புலிகள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் நீதியான ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவில்லை.
ஜனாதிபதிக்கும், இலங்கைக்கு எதிராகவும் நடத்தப்பட்ட இவ்வாறான எதிர்ப்புச் செயற்பாடுகள் எதிர்காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் வரலாம். இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் உள்ள பயங்கரமான நிலைமையை பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறையினர் நன்கு உணர்ந்துள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவரை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. மூன்று தசாப்த கால யுத்தத்தை நிறைவுசெய்துவிட்டு நாம் அடுத்தகட்ட செயற்பாடுகளுக்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில், நாங்கள் ஏன் பயப்படவேண்டும்? புலம்பெயர் புலிகளுக்குத் தலைவணங்குவதா, இல்லையா என்பதை நாம் தீர்மானிக்கவேண்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த முதுகெலும்போடு செயற்படுகின்றார். நாங்களும் அப்படியே செயற்படுகின்றோம். எவருக்கும் அச்சப்படப்போவதில்லை” – என்றும் குறிப்பிட்டார் சஜின் வாஸ் எம்.பி.

லண்டனில் நடைபெற்ற போராட்டத்தை பொலிசார் தடுக்கவில்லை-கெகலிய புலம்பல்!

மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக லண்டனில் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த, ஸ்கொட்லான்ட் யார்ட் புலனாய்வுப் பிரிவு தவறியதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்கொட்லான்ட் யார்ட் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக லண்டனில் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த, ஸ்கொட்லான்ட் யார்ட் புலனாய்வுப் பிரிவு தவறியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 6ம் திகதி லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை ஸ்கொட்லான்ட்யார்ட் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், ஓர் பார்வையாளரைப் போன்று செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓரளவு அதிகமான தமிழ் இளைஞர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் எதிராக நடைபெற்ற போராட்டத்தினை புலம்பெயர் தமிழர்கள் நீண்ட காலமாக திட்டமிட்டு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களை கட்டுப்படுத்தல், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல், புலனாய்வு நடவடிக்கை போன்றவற்றிற்கு ஸ்கொட்லான்ட்யார்ட் மிகவும் பிரசித்தி பெற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பின்னணியை உடைய புலனாய்வுப் பிரிவினரால் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களினால் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளமையை முன்கூட்டியே அறியக் கிடைக்காமை ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
துரதிஸ்டவசமாக ஸ்கொட்லான்ட்யார்ட் புலனாய்வுப் பிரிவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றை ஸ்கொட்லானட்யார்ட் புலான்யவுப் பிரிவினரால் கட்டுப்படுத்த முடியாமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதனால் குறித்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் சட்ட ரீதியான அதிகாரம் ஸ்கொட்லான்ட்யார்ட் புலனாய்வுப் பிரிவினருக்கு காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2000ம் ஆண்டு பிரித்தானிய பயங்கரவாத சட்டத்தின் 13ம் பிரிவின் அடிப்படையில் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மதிக்கும் பிரித்தானிய பிரஜைகளும் ஒட்டுமொத்த நாடும் புலி ஆதரவாளர்களினால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை பார்வையிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய வியாபார பேரவையில் ஜனாதிபதி ஆற்றவிருந்த உரையை பொதுநலவாய செயலகம் தன்னிச்சையாக ரத்து செய்தமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய உபசரிப்பு பாராட்டுக்குரியது என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

14 ஜூன் 2012

புலிகளின் ஆதரவாளர்களினால் மகிந்தவிற்கு ஆபத்து இருந்ததாம்!

புலி ஆதரவாளர்களினால் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் –லலித் வீரதுங்கதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவியதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவிற்கு விஜயம்செய்த போது இவ்வாறு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு பிரித்தானிய அரசாங்கம் மிகவும் உச்சளவிலானபாதுகாப்பை வழங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் புலி ஆதரவாளர்களினால் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் அந்நாட்டு அரசாங்கம் மிகக் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி இரண்டு புலிச்செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருந்த பாக் ஹில்டன் ஹோட்டலின்பின் நுழைவாயில் வழியாக ஜனாதிபதிக்கு தீங்கு ஏற்படுத்தும் நோக்கில் பிரவேசித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஜனாதிபதிப் பாதுகாப்புப் பிரிவின் தீவிரகண்காணிப்பினால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, பிரித்தானியகாவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானியாவின் அழைப்பினை நிராகரிப்பது பொருத்தமாக அமையாது என வீரதுங்க தெரிவித்துள்ளார்.

13 ஜூன் 2012

இலங்கை எவருக்கும் அடிபணியாதென்கிறார் சம்பிக்க!

இந்தியாவின் முட்டாள் தனத்திற்கும் அமெரிக்காவின் ஆணவத்திற்கும் இலங்கை ஒரு போதும் அடிபணியாது. வட மாகாண சபை தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கட்டளையிட வேண்டியதில்லை என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மேற்குலக நாடுகளில் புலிகள் சுதந்திரமாக செயற்படுகின்றனர். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் சென்ற போது அங்கு புலிகள் செயற்பட்ட விதமும் அதற்கு ஏற்றாற் போல் அந்த நாடுகளின் பாதுகாப்பு ஒழுங்குகளின் குறைகளும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அமெரிக்க அழுத்தம் கொடுப்பது மற்றும் இலங்கை மீதான வெளிநாடுகளின் தலையீடு குறித்து கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை அரசியல் தலைவர்கள் உத்தியோகப் பூர்வ விஜயங்களை மேற் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்றால் அங்கு புலிகளின் ஆதரவாளர்கள் கடுமையாக போராட்டங்களை நடத்துகின்றனர்.
இந்தியாவிற்கு விஜயம் செய்த அமைச்சர் ரெஜினோல்ட் குரேவுக்கு எதிராக தமிழ் நாட்டில் செயற்படும் பிரிவினைவாதிகள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இது இந்தியாவின் பொறுப்பற்ற தன்மையாகவும் முட்டாள் தனத்தையுமே வெளிப்படுத்துகின்றது. அதே போன்று லண்டனுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அழைப்பை ஏற்று வந்த இலங்கை ஜனாதிபதியின் கௌரவத்தை லண்டனிலுள்ள மேற்குலக நாடுகளினாலோ பாதுகாக்கப்பட முடியவில்லை. இந்த நாடுகள் ஏனைய நாடுகளின் மனிதாபிமான விடயங்கள் குறித்து பேசுகின்றமை வேடிக்கையாகவே உள்ளது.
இலங்கைக்கு வருகை தர உள்ள அமெரிக்க தூதுவர் மிசேல் கிஸன் மிகவும் மோசமான முறையில் உள்நாட்டு விடயங்கள் குறித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இதனை உடனடியாக கண்டிக்கின்றோம். ஏனெனில் இலங்கை ஒரு சுயாதீனமான சுதந்திர நாடாகும். இதனை தனது காலனித்துவ நாடாகவோ, அடிமை நாடாகவோ அமெரிக்கா பார்த்தால் அது அமெரிக்காவின் முட்டாள் தனமாகும்.
தனது ஆணவத்தை இலங்கை விவகாரங்களில் காட்ட முற்பட்டால் அதனை நாம் வேடிக்கை பார்க்கப்போவதில்லை. எனவே சர்¬¬வ¬¬தேச நாடுகள் இலங்கை விவகாரங்களில் அத்து மீறி தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு இலங்கைக்கு அமெரிக்கா கட்டளையிடுகின்றது என்றால் இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச நாடுகளில் தஞ்சமடைந்துள்ள புலிகளின் பின்னணியிலேயே இவ்வாறான தொரு வெளிப்பாடுகள் ஏற்படுகின்றது என்றார்.

தமிழ் மக்களின் பிரதிநிதி என்பதனால்தான் சிங்கக்கொடியை ஏற்றவில்லை!

தமிழ் மக்களின் வெளிப்பாடகவே நான் சிங்கக் கொடியினை ஏற்றவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சமூக அமைச்சின் நிகழ்வென்றில் வைத்து சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பேரேரா பல தடைவ வர்புறுத்தியும் தேசியக் கொடியான சிங்கக் கொடியினை ஏற்ற குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயக மூர்த்தி திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்திருந்நதார்.
இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பாக அப்பாத்துரை விநாயமூர்த்தி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்திலேயே மேற்படி விடையத்தினைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளாகவே என்னைத் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனடிப்படையில் தமிழ் மக்களின் கருத்துக்களையும் அவர்களுடைய மனநிலையினை வெளிப்படுத்துவதாகவே என்னுடையதும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய செயற்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும்.
இதன் காரணமாகவே தேசியக் கொடியான சிங்கக் கொடியின் கீழ் ஒன்றிணைய தமிழ் மக்கள் ஒரு போதும் விரும்பவில்லை. அவர்கள் தமது தனித்துவத்துவத்துடன் இருப்பதற்கே விரும்புகின்றார்கள். என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

12 ஜூன் 2012

ஜெனீவா கூட்டத்தொடருக்கு சிறீலங்காவின் உயர்மட்டக் குழு இல்லையாம்!

வரும் 18ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20வது கூட்டத்தொடருக்கான தயார்படுத்தல்களை ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மனிசா குணசேகரவே மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான நகர்வுகள் ஏதும் இந்தக் கூட்டத்தொடரில் இடம்பெற வாய்ப்பில்லை என்பதால், இவரே இம்முறை சிறிலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
அண்மைக்காலமாக சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடுமையான விவாதங்கள் இடம்பெற்று வந்ததால், சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமை விவகார ஆலோசகரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவே பங்கேற்று வந்தது.
ஆனால், இம்முறை மகிநத சமரசிங்கவோ, சட்டமாஅதிபர் திணைக்கள அதிகாரிகளோ ஜெனிவா செல்லமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
அதேவேளை ஜெனிவாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி தாமரா குணநாயகம் தன்னை இந்தக் கூட்டத்தொடருக்கான தயாரிப்புகளில் இருந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம,
“ஜெனிவாவுக்கான தூதுவர் பதவி முடிவடைவதுடன் தான் இராஜதந்திர சேவையில் இருந்து விலகுவதாக தாமரா குணநாயகம் அறிவித்துள்ளார்.
அவர் தனக்கு ஜுன் 10 தொடக்கம் ஜுன் 30 வரை விடுமுறை கோரியிருந்தார். அந்த விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 18ம் நாள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குகின்றது என்பதைத் தெரிந்து கொண்டே, அவர் விடுமுறை கோரியிருந்தார்.
எனவே அவரது விடுமுறைக்கு அனுமதி அளித்து விட்டோம்.“ என்று கூறியுள்ளார்.
அதேவேளை, இந்தக் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக அரசசார்பற்ற நிறுவனங்களின் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஜெனிவா கூட்டத்தொடரை உன்னிப்பாக கவனிக்கவுள்ளது.

11 ஜூன் 2012

சிங்கக் கொடியை சுருட்டிப்போடுங்கள்"மகிந்தருக்கு பொலிசார் போட்ட ஆணை!

கடந்த வாரம் மகிந்தர் லண்டன் வந்தவேளை, அவருக்கு கொடுக்கப்பட்ட கறுப்பு நிற ரேஞ்-ரோவர் வாகனத்தில் இலங்கையின் தேசிய கொடியை ஏற்றவேண்டாம் என்று பிரித்தானியப் பொலிசார் கூறியுள்ளனர். மகிந்தரை விமானநிலையத்தில் ஏற்றுவதற்காகச் சென்ற வாகனத்திற்கும் இதே நிலை தான் தோன்றியுள்ளது. மகிந்தரின் வாகனத்தில் இலங்கைக் கொடியை ஏற்றவேண்டாம் என ஸ்காட்லன் யாட் உளவுப்பிரிவினரே தெரிவித்ததாக அவர்களின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. பிரித்தானிய மாகா ராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள சுமார் 54 நாடுகளின் தலைவர்கள் லண்டன் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களில், அந்தந்த நாட்டுக்குரிய தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.
ஆனால் மகிந்தருக்கு வழங்கப்பட்ட கறுப்பு நிற ரேஞ்-ரோவர் வாகனத்தில் பறக்கவிடப்பட்டிருந்த இலங்கையின் தேசிய கொடியை சுருட்டிக் கட்டி விடுமாறும், அதனைப் பறக்கவிடவேண்டாம் என்றும் ஸ்காட்லன் யாட் பொலிசார் கூறியுள்ளனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே தாம் இதனைத் தெரிவித்ததாக பொலிசார் கூறியுள்ளனர். இதனை அடுத்து மகிந்தரின் வாகனத்தில் உள்ள இலங்கையின் தேசியகொடி சுருட்டி கட்டப்பட்டதாம். அவர் லண்டன் வீதிகளில் செல்லும்போது எல்லாம் அக்கொடியைப் பறக்கவிட பொலிசார் அனுமதிக்கவில்லை. ஆனால் லண்டன் வந்த மற்றைய நாட்டுத் தலைவர்கள்(54 நாடுகள்) சர்வசாதாரணமாக தமது நாட்டுக் கொடிகள் பறக்க, வாகனங்களில் சென்றுள்ளனர்.

10 ஜூன் 2012

நெஞ்சை பதறவைக்கும் சிங்கள காடைகளின் இன அழிப்பு குற்றம்!


நெஞ்சைப் பதற வைக்கும் இராணுவத்தின் புதிய  போர்க் குற்றம்! – (வீடியோ இணைப்பு)இறுதி யுத்தம் என்ற பெயரில் இருண்டது வன்னிப் பெருநிலப்பரப்பு. அந்த வன்னியில் நடந்தது என்ன என்பது கொஞ்சம் கொஞ்சமாக ஆதாரங்களுடன் வெளிவர, தமிழினத்துக்கு இலங்கை அரச படையால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் நெஞ்சை பதற வைத்துள்ளன.

அந்த வகையில் அண்மையில் சில போர்க் குற்ற ஆதாரப் புகைப்படங்கள் வெளிவந்த அதேநேரம், தற்போது புதிய புதிய காணொளிகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அங்கு அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலை தமிழினத்தை மட்டுமல்ல தற்போது சர்வதேசத்தையே அதிர வைத்துள்ளது எனலாம்.
அந்தளவுக்கு தமிழினம் மீது இலங்கைப் படைகளால் மனித இனம் செய்ய முடியாத ஒரு ஈனச் செயல்களை செய்து முடித்துள்ளது.
எது எவ்வாறாயினும் நடந்து முடிந்த அத்தனை துன்ப துயரங்களுக்கும் நீதி கேட்டு நிற்கும் தமிழினத்துக்கு சர்வதேசமே நீதி வழங்க வேண்டும் என்பது கட்டாயமான தீர்ப்பாகும்.

09 ஜூன் 2012

மகிந்தவை பாதுகாக்க கில்டனில் தங்கியிருந்த சிங்களக் குடும்பங்கள்!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவில் தங்கியிருந்த ஹில்டன் விடுதியின் 50 அறைகள் அவரது பாதுகாப்புக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறைகளில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் லண்டனில் உள்ள குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மகிந்த ராஜபக்ச லண்டனில் தங்கியிருந்த காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் குடும்பத்தினர் இந்த அறைகளில் குடும்பத்தோடு குடியேறியிருந்தனர்.
இவர்கள் அனைவரையும் கடந்த 6ம் நாள் காலையில் குடும்பத்தோடு ஹில்டன் விடுதிக்கு வெளியே, சிறிலங்கா தேசியக்கொடிகளை ஏந்தியவாறு நிற்குமாறு, சிறிலங்கா அதிபரின் பிரித்தானியப் பயணத்துக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த அவரது வெளிவிவகார ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன கேட்டிருந்தார்.
விடுதிக்கு வெளியே சிறிலங்கா கொடிகளுடன் நின்ற அவர்களிடம் நடந்து சென்று உரையாடி, ஊடகங்களுக்கு ஒரு சாகசம் காண்பிக்க முயன்றார் மகிந்த ராஜபக்ச.
அவர் லண்டனில் ஒரு நாள் தங்குவதற்கு செலவிட்ட பணம், 2012ம் ஆண்டுக்கு லண்டனில் உள்ள தூதரகம் மற்றும் அதன் பணியாளர்களுக்காக ஒதுக்கிய பணத்தை விட அதிகம் என்று லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஹில்டன் விடுதியில் மட்டுமன்றி, அதனைச் சுற்றியுள்ள பல்வேறு விடுதிகளிலும் சிறிலங்கா அதிபரின் பரிவாரங்கள் தங்குவதற்காக 35 அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.