01 ஆகஸ்ட் 2012

பிளேக் குழு அவசர பயணமாக இலங்கை வரவுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று அடுத்த மாத முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிளேக் குழுவினரின் இந்த அவசரப் பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. றொபேட் ஓ பிளேக்குடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் இந்த உயர்மட்டக் குழுவில் உள்ளடங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட்ட பலருடன் இந்தக் குழுவினர் சந்திப்புக்களை மேற்கொண்டு முக்கிய பேச்சுகளை நடத்துவர் எனத் தெரிகிறது.
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையிலும், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையிலும் அமெரிக்காவின் இந்த உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு வருகை தருகின்றமை குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இந்தக் குழுவினர் வடக்குக்கும் பயணம் மேற்கொண்டு அங்கும் நிலைமைகளைப் பார்வையிடவுள்ளதுடன் மீளக்குடியமர்ந்த மக்களின் நிலையையும் நேரில் கண்டிறிவர் எனத் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக