24 ஆகஸ்ட் 2012

ஈழ யுத்தத்துக்கு நெடுமாறன் அனுப்பிய கடற்படையை நான் தடுத்தேனா?

“இலங்கையில் யுத்தம் நடந்தபோது, அதை தடுக்க கருணாநிதி எதுவும் செய்யவில்லை” என்று பொருள்பட நெடுமாறன் தெரிவித்த கருத்துக்கு, அறிக்கையில் பதில் கொடுத்திருக்கிறார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. “நெடுமாறன் ஏன் கைபிசைகிறார்? அவர் அனுப்பிய கடற்படை போருக்கு போவதற்குமுன் யுத்தம் முடிந்து விட்டது என்றா?” என்பது அவரது கேள்வி.
“நெடுமாறன் ஆரம்ப காலத்திலிருந்தே இலங்கையில் சிங்கள ராணுவத்துடன் போர் நடந்த போது, நான் வாய்மூடிக் கொண்டிருந்தேன் என்று குற்றஞ்சாட்டி, நக்கலும் நையாண்டியுமாக கூறி வருகிறார். இலங்கையிலே தமிழர்கள் மீது ராஜபக்ஷே போர் தொடுத்து விட்டார் என்றதும், இவர் என்ன செய்தாராம்?
நெடுமாறன் தன்னுடைய கப்பல் படையை கொழும்பு நோக்கி அனுப்பியதைப் போலவும், அந்தப் படை இலங்கைப் போய்ச் சேருவதற்குள் நான் தடுத்து நிறுத்தி விட்டது போலம், அதற்குள் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எல்லாம் நடந்து முடிந்து விட்டதைப் போலவும் பாவம்… நெடுமாறன் கைபிசைந்து கொண்டு, நம்மையும் தாறுமாறாகவும், தரக் குறைவாகவும் தாக்குகிறார்“என்று தமது அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
ஒரு நாட்டில் மத்திய அரசு என்ற ஒன்று இருக்கும்போது, இதுபோன்ற பிரச்னைகளில் ஒரு மாநில அரசு என்னதான் செய்ய முடியும் என்பதை, அரசியல் அதிகார வரம்புகளைப் பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள் உணர முடியும். ஏதோ எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எரிச்சலைக் கொட்டித் தீர்ப்பவர்களுக்கு புரியாது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் மோதல் நடந்தபோது, நெடுமாறன் கூற்றுப்படி நானாவது வாய் திறக்காமல் சும்மாயிருந்தேன் என்பது உண்மையாகவே இருக்கட்டும்; ஆனால் தமிழக சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீர்மானமே கொண்டு வந்து நிறைவேற்றினாரே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா..!
நெடுமாறனுக்கு அது நினைவிலே இருக்கிறதா?
அதுமாத்திரமல்ல; இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்று இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட நேரத்தில், “போர் என்றால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்” என்று சொன்னாரே ஜெயலலிதா..!
அதாவது நெடுமாறனுக்கு ஞாபகம் இருக்கிறதா?
நடந்தது என்ன என்பதை, உள்ளமென ஒன்று இருப்போர் அறிவர். உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு பள்ளம் இருப்போருக்கு அது தெரிவதற்கு நியாயமில்லை” என்று தமது அறிக்கையில் காரசாரமாக குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.
ஈழ யுத்தத்துக்கு கடற்படை அனுப்பிய கிண்டலுக்கு, நெடுமாறன் தரப்பில் இருந்து பதில் வரும் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக