26 ஆகஸ்ட் 2012

அரசாங்கத்தின் கனவுகளை கிழக்குத் தேர்தல் பேரிடியாக்கும்; சுரேஷ்

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வை முன்வைத்தே அரசாங்கம் கிழக்கு மாகாண சபையை கலைத்து தேர்தலை சந்திக்கின்றது.என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்தின் அந்த எண்ணத்திற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்துக்கு முன்னரே கிழக்கு மாகாண சபையைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்தி கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அரசின் பக்கமே இருக்கின்றனர் என்பதை எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வில் காட்டுவதற்கான காய் நகர்த்தலில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பேரிடியாக இருக்கும்.அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் தமிழ் மக்களால் மிக மோசமாகத் தோற்கடிக்கப்படும். எனக் குறிப்பிட்டார்.
இதை உணர்ந்து தமிழ் மக்கள் வாக்களிக்க உறுதி பூண்டுள்ளனர்.கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களில் 85 சதவீதமானோர் வாக்களித்தால் கிழக்கு மாகாணத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும்.எனவே எந்த அச்சுறுத்தல்கள் வந்தாலும் அதற்கு முகம் கொடுத்து தமிழ் மக்கள் தவறாது வாக்களிக்க வேண்டுமெனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக