10 ஆகஸ்ட் 2012

பொருளாதார அபிவிருத்தியில் மட்டுமே நிலையான சமாதானத்தை எட்ட முடியாது.

newsபொருளாதார அபிவிருத்தியின் மூலம் மட்டும் நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவது அவசியமானது என சிறிலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபிசொன் அறிவுறுத்தியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அவர், எவ்வாறெனினும் இன்னும் பல விடயங்களில் வடக்கு கிழக்கு மக்களுக்கு சேவையாற்றப்பட வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் சிலர் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாது உள்ளனர் எனவும், பெரும்பாலான இடம்பெயர் மக்களுக்கு உரிய இருப்பிட வசதிகள் எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும் யுத்த வலய மக்களில் பலர் இன்னமும் பிரச்சினைகளையே எதிர்நோக்கி வருவதுடன் பெண்களும், ஊனமுற்றவர்களும் பாரியளவு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக கிறிஸ்ரின் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அபிவிருத்தி மிகவும் அவசியமானது, எனினும், அபிவிருத்தியினால் மட்டும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் தமக்கு உடன்பாடில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை மிகவும் காத்திரமான அறிக்கையாகவே உள்ளது எனவும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் காத்திரமான முறையில் அமுல்படுத்துவதன் மூலம் நிரந்தர சமாதானத்தை நோக்கி பயணிக்க முடியும் என்பதே பிரான்ஸின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணை செய்தல் ஆகியன தொடர்பில் சரியான பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரை அறிக்கை தமிழ் சிங்கள மொழிகளில் பிரசுரமாக உள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரான்ஸில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் வெளிவிவகாரக் கொள்கைளில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும், சிறிலங்காவுடனான உறவுகளில் மாற்றம் இருக்காது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக