16 ஆகஸ்ட் 2012

கிழக்கு மாகாணசபையில் ஐதேகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி - இரா.சம்பந்தன்

கிழக்கு மாகாணசபையில் ஐதேகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
திருகோணமலையில் தமிழ் அமைப்புகளின் பிரநிதிநிதிகளுடன், நடத்திய கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கிழக்கு மாகாணசபையில் 35 ஆசனங்கள் உள்ளன. நாம் பெரும்பான்மையைப் பெறவேண்டுமானால், 17 ஆசனங்களை வெல்ல வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களையும், திருகோணமலையில் 4 ஆசனங்களையும், அம்பாறையில் 2 ஆசனங்களையும் கைப்பற்ற முடியும் என்று நாம் நம்புகிறோம்.
இந்த 11 ஆசனங்களுடன் மேலும் இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைக்கும். அதன்மூலம் எமக்கு 13 ஆசனங்கள் கிடைக்கும்.
ஐதேக 7 ஆசனங்களில் வெற்றிபெறுமேயானால், நாம் 20 ஆசனங்களைப் பெறமுடியும்.
இதன்மூலம் கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மை பலம் கொண்ட- ஐதேக – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்த ஆட்சியை நிறுவலாம்.
ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெறமுடியும் என்று நாம் நம்பவில்லை.
அவை சிறிலங்கா அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளன.
எனவே, நாம் 20 ஆசனங்களைக் கைப்பற்றினால், இலகுவாக முதல்வர் பதவியைப் பெறமுடியும்.
அதன் மூலம் எமது பலத்தை உலகிற்குக் காட்ட முடியும்.
எமக்குள்ள மக்கள் ஆணையை உலகிற்கு நிரூபிக்க இது நல்லதொரு சந்தர்ப்பம்.
அதற்கு உங்களின் வாக்குகளை எமக்கு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக