08 ஆகஸ்ட் 2012

லண்டனில் பறக்கும் புலிக்கொடியால் கடுப்படைந்துள்ள சிறீலங்கா!

லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரச்சாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கு பிரித்தானியா இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் அதிருப்தியடைந்திருப்பதாகத் தெரிகின்றது.
லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதிக்குள் இங்கிலாந்தில் வசிக்கும் எந்தவொரு நபரும் அரசியல் கருத்துக்களை வேறெந்த நாடுகளினதும் பிரச்சினைகளை முன்னிறுத்திச் செயற்பட அனுமதிக்கப்படமாட்டார்கள் என பிரித்தானியா முன்னர் அறிவித்திருந்தது.
இருந்தபோதிலும் விடுதலைப் பலிகளின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் ஒலிம்பிக் கிராமம் ஒன்றுக்கு அருகில் ஸ்ட்ராட்போர்ட் என்ற இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தனர். அத்துடன் பிரித்தானிய தேசியக்கொடிக்கு அருகில் புலிக்கொடியை ஏற்றியிருந்த எதிர்ப்பாளர்கள் ஒலிம்பிக் நிகழ்வில் இலங்கை வீரர்கள் பங்குகொள்வதைத் தடை செய்ய வேண்டும் எனவும் போர்க் குற்றங்களை விசாரிப்பதுடன் லண்டனில் அகதிகளாக இருப்பவர்களை திருப்பியனுப்பக் கூடாது எனவும் கோரிக்கையை முன்வைத்தார்கள்.
இந்த நிலையில் புலி ஆதரவாளர்களின் இவ்வாறான சுதந்திரமான செயற்பாடுகளுக்கு பிரித்தானிய அரசு அனுமதி வழங்குவது தொடர்பில் கடும் அதிருப்தியடைந்திருக்கும் இலங்கை அரசு,இது தொடர்பில் தமது ஆட்சேபனையை இராஜதந்திர ரீதியில் வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தெரிகின்றது. இலங்கை அரசின் இந்த அதிருப்தியை வெளிவிவகார அமைச்சு கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்திடம் வெளிப்படுத்தும் என அறியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக