23 ஆகஸ்ட் 2012

மஹிந்தவிற்கு பதவி வழங்கும் போது மூவரே ஆதரித்தனர் - சந்திரிகா!

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் 59 பேரில் மூன்று பேர் மட்டுமே இணக்கத்தை வெளியிட்டிருந்தார்கள்.
இவ்வாறு அதிரடிக்கருத்தை வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க.
இணையத்தளமொன்றுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் பிரகாரம் கூடுதல்பட்ச அதிகாரங்கள் இருந்தாலும் அந்த அதிகாரங்களை மஹிந்த ராஜபக்ஷ எனக்கு வழங்கவில்லை.
அந்த அதிகாரங்களுக்காக நான் சண்டையிடவுமில்லை. பிரபல்யமாகத் திகழும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற ஒரு கட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அவரது குடும்பத்தினரோ அழித்து விட இடமளிக்கமுடியாது. அவர்கள் இப்போது அதைச் செய்துகொண்டிருந்தாலும் கட்சியால் மீள எழும்ப முடியும் என்றே நான் நினைக்கிறேன்.
2005ஆம் ஆண்டு எமது கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத் தேடியபோது சிரேஷ்ட உறுப்பினர்கள் 61 பேரில் நானும் மஹிந்தவும் தவிர, மிகுதி 59 பேரில் மூன்று பேர் மட்டுமே அவருக்கு வேட்பாளர் பதவியைக் கொடுக்கலாமென்று கூறினர். மற்றவர்கள் அனைவரும் வேண்டாமென்றே கூறினர். இதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.
குறைந்தபட்சம் எமது சகோதரர் அநுர கூட இந்தப் பதவியைக் கேட்கவில்லை. எனது சகோதரியுடன் என்னை சந்திக்க வந்த அநுர, இந்த தலைமைப்பதவி தமக்கு வேண்டாமென்றும், இதனை மஹிந்தவுக்கே வழங்குமாறும் என்னிடம் கூறினார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக