02 ஆகஸ்ட் 2012

இலங்கையின் பாதுகாப்பு கருத்தரங்கை புறக்கணிக்க பெரும்பாலான நாடுகள் தீர்மானம்?

இலங்கை இராணுவம் நடத்தவுள்ள பாதுகாப்புக் கருத்தரங்கிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதில் பங்கேற்பதாக 29 நாடுகளே உறுதி செய்துள்ளன. பெரும்பாலான நாடுகள் இதனைப் புறக்கணிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது.
"இறுதியான அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி" என்ற தொனிப்பொருளில் இராணுவம் நடத்தவுள்ள பாதுகாப்புக் கருத்தரங்கு எதிர்வரும் 8 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கருதரங்கில் பங்கேற்கும்படி, இலங்கை இராணுவம் 63 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பியிருந்தது. இந்த அழைப்பை ஏற்றுள்ளதாக இதுவரை 29 நாடுகளே உறுதி செய்துள்ளன.
இந்தநாடுகளின் சார்பில் சேர்ந்த 49 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்பதாக உறுதி செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். பங்களாதேஸ், பிறேசில், புரூணி, சீனா, ஈரான், கென்யா, மலேசியா மாலைதீவு, நேபாளம், நெதர்லாந்து நைஜீரியா, பாகிஸ்தான், சவூதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, பிரித்தானியா, அமெரிக்கா, வியட்னாம், செனகல், அவுஸ்ரேலியா, கானா, இந்தோனேசியா, ரஸ்யா, சூடான். துருக்கி, உக்ரேன், நமீபியா, சாம்பியா, இந்தியா ஆகிய நாடுகளே தமது பங்கேற்பை உறுதிசெய்துள்ளன.
அதேவேளை, கொழும்பிலுள்ள அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா, கானா, இந்தோனேசியா, ரஸ்யா, சூடான், துருக்கி,உக்ரேன், நமீபியா, சாம்பியா போன்ற நாடுகள் இந்தியாவில் உள்ள தமது பாதுகாப்பு ஆலோசகர்களை அனுப்பவுள்ளன. ஜப்பானும், ரஸ்யாவும் கொழும்பிலுள்ள தமது பாதுகாப்பு ஆலோசகர்களை அனுப்பவுள்னன.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தக் கருத்தரங்கு ஆரம்பமாக இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், இலங்ழைக இராணுவத்தினால் அழைக்கப்பட்ட பெரும்பாலான நாடுகளிடம் இருந்து இன்னமும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இதில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக