10 ஆகஸ்ட் 2012

கருணாநிதி செய்த துரோகத்தை நினைத்து கொந்தளித்த போராளி!

முள்ளிவாய்க்காலில்  கருணாநிதி செய்த துரோகத்தை நினைத்து கொந்தளித்த முன்னாள் போராளி!காலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் ‘டெசோ’ அமைப்பை. அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு.
அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?
முள்ளிவாய்க்காலில் கடைசி வரை இருந்த போராளி ஒருவர் ஆனந்தவிகடன் இதழுக்கு வழங்கிய தகவலில் இருந்து,
சேசுராஜ், முன்னாள் போராளி.
ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக் கிடந்தேன்.
அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளும் 500 வரையான காயப்பட்ட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் எங்கும் வியாபித்து இருந்தது. ஷெல் அடி காதைப் பிளந்தது. மருத்துவமனையில் சரியான மருந்துகள், மருத்துவ ஆளணி இல்லாமல் மருத்துவர்கள் திணறிக்கொண்டு இருந்தனர்.
அன்றைய பொழுதில் கடைசி நம்பிக்கையாக கருணாநிதியை நம்பிக்கொண்டு இருந்தனர் எங்களில் பலர். அந்த அவல நிலையிலும் வானொலிப் பெட்டியின் முன் குந்தி இருந்தனர்.
கருணாநிதி அறிவித்ததாக ‘போர் நிறுத்தப்பட்ட அறிவிப்பு’ வானொலியில் வந்த கணத்தில் மக்கள் அதனை முழுவதும் நம்பினார்கள். எங்கும் சந்தோஷ மயம்.
அனைத்தையும் இழந்துவிட்ட அந்த நிலையில் அவர்கட்கு கருணாநிதி மீட்பராகத் தெரிந்தார். தேவதூதராகத் தென்பட்டார். ஆனால், நடந்தது எல்லாம் நாடகம் என்பதை ஜந்து நிமிடங்களுக்குள் நான் உணர்ந்துகொண்டேன். அன்றுதான் வழமையைவிட ஷெல் அடி அதிகமாக இருந்தது. நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.
நான் தலைவர் பிரபாகரனிடம் பற்றுக்கொண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டவன். தமிழீழம் என்பதுதான் எமது ஒற்றை நம்பிக்கையாக இருந்தது.
அந்த நம்பிக்கை பொய்த்துப் போனதுகூட எனக்கு வலிக்கவில்லை. உடம்பில் தெம்பு இருந்தவரை நான் போராடினேன் என்கிற ஆத்ம திருப்தி இருக்கிறது எனக்கு.
ஆனால், நாங்கள் நம்பிய ஒருவரால் ஏமாற்றப்பட்டோம் என்பதை இன்று வரை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக