27 ஆகஸ்ட் 2012

சீன உதவியில் இராணுவக் குடியிருப்புகள் – அமெரிக்கா, இந்தியாவிடம் முறையிடப் போகிறது கூட்டமைப்பு!

சிறிலங்காவின் வடக்கு,கிழக்குப் பகுதிகளில் சீனாவின் உதவியுடன் இராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படுகின்ற போதிலும், இதுகுறித்து இந்தியா உள்ளிட்ட அனைத்துலக சமூகம் கரிசனை கொள்ளாதிருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
வடக்கு,கிழக்குப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இராணுவ குடும்பங்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கு சீனா 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்,
“சீனாவின் உதவியுடன் இராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படுவது பற்றிய நம்பகமான செய்திகள் எமக்குக் கிடைத்துள்ளன.
பல இடங்களில் சீன உதயுடனான இராணுவக் குடியிருப்புகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டன.
திருமுறிகண்டிப் பகுதியில் சீனா வழங்கிய உடனடியாக அமைக்கக் கூடிய வீடுகள் பல சிறிலங்கா இராணுவத்தினருக்காக அமைக்கப்பட்டுள்ளன.
முள்ளிக்குளம் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான குடியிருப்புக்களில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா கடற்படையினருக்கு தளம் அமைக்கப்பட்டு, அவர்களுக்கான குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் கவனத்தில் எடுக்காதது கவலையளிக்கிறது.
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளில் சிறிலங்கா படையினர் நிலையாகத் தளம் அமைத்து தங்கியிருப்பதை ஏற்க முடியாது.
சிங்கள மக்களுக்கு சீனா உதவி செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை.
தமிழர் பிரதேசங்களில் நிரந்தர இராணுவ குடியிருப்புக்களை அமைப்பதே கண்டனத்துக்குரியது.
சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா வழங்க முன்வந்துள்ள நிதியுதவி குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இதுபற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.” என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக