17 ஆகஸ்ட் 2012

ஜெனிவா அழுத்தங்களில் சிறிலங்காவைத் தப்பிக்க விடக்கூடாது – இரா.சம்பந்தன்

ஜெனிவா தீர்மான அழுத்தங்களில் இருந்து தப்பிக்க சிறிலங்கா அரசாங்கம் கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப் பயன்படுத்தப் பார்க்கிறது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, ஆனந்தபுரியில் நேற்றுமாலை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கிழக்கு மாகாணசபைக்கான இந்தத் தேர்தல் கடவுளால் எமக்குத் தரப்பட்ட சந்தர்ப்பம்.
நீதியும், நியாயமும் வெற்றி பெற வேண்டும் என்பது கடவுளின் விருப்பம்.
இதனை சரியாக எதிர்கொள்ள வேண்டியது எம் அனைவரினதும் கடமை.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, அந்த ஐனநாயகத் தீர்ப்பைத் தவறாகப் பயன்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது.
தந்தை செல்வாவின் வழியில் - கண்ணியமான, நிதானமான வழியில் சென்று கொண்டிருக்கும் நாம், அதன் மூலம் நீடித்து நிலைக்கத்தக்க நிரந்தரத் தீர்வைப்பெற முனைகிறோம்.
சிறிலங்கா அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துரையில், அதிகபட்ச அதிகாரத்துடன் கூடிய அரசியல்தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றே கூறியுள்ளது.
ஆனால் அதிகபட்ச அதிகாரப்பகிர்வை தமிழர்களுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் எழுந்துள்ள அனைத்துலக அழுத்தங்களில் இருந்து விடுபட, கிழக்கு மாகாணசபையில் வெற்றி பெறவேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர்கள் இப்போது பகிரங்கமாகவே கூறுகின்றனர்.
இதனை நாம் அனுமதிக்க முடியுமா? அனைத்துலக சமூகத்திடம் உள்ள தமிழர்களுக்கு சார்பான சிந்தனையை இந்தத் தேர்தல் மூலம் நாம் பலப்படுத்தப் போகின்றோமா? அல்லது பலவீனப்படுத்தப் போகின்றோமா?
திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களை நாம் கைப்பற்ற வேண்டும்.
இதனை நாம் சாதித்தால், கிழக்கு மாகாணசபையின் அதிகாரத்தை எம்மால் கைப்பற்ற முடியும்.
அதன் மூலம் அனைத்துலக சமூகத்துக்கு நாம் தெளிவான ஒரு செய்தியை சொல்ல முடியும்.
ஐனநாயக ரீதியான முடிவைத் தவிர, பலம் வாய்ந்த முடிவு வேறு ஏதும் இல்லை.
மாகாணசபை முறைமை முழுமையானது அல்ல. ஆனால் அர்த்தபூர்வமான அதிகாரங்களைக் கொண்டதாக அதனைக் கட்டியெழுப்ப வேண்டும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக