31 ஜனவரி 2013

ருசாங்கன் ஊடகவியலாளர் என்ற போர்வையில் இருக்கும் இராணுவ புலனாய்வாளர்; சிறிதரன் தகவல்

ஊடகவியலாளர் என்ற போர்வையில் இராணுவப் புலனாய்வாளராக செயற்படுபவர்தான் சிகரம் ஊடகத்தின் இயக்குநர் ருசாங்கன் என சிறிதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இன்று தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த 12ஆம் திகதி ரி.ஐ.டி கிளிநொச்சியில் உள்ள எனது அலுவலகத்தினை சோதனை செய்யும் போது அரசாங்கத்திற்கு சார்பான ஊடகங்கள் அழைக்கப்பட்டிருந்தன. ஆனால் சுயாதீனமாக செயற்படும் பத்திரிகை மற்றும் இணைய ஊடகங்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை.
இதிலிருந்து விளங்கிக் கொள்ள முடியும் சோதனை நடவடிக்கை என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டது.
இதில் அரசாங்கத்திற்கு ஒத்து ஊதக்கூடிய தினமுரசு, டான், வசந்தம் மற்றும் சிகரம் ஆகிய ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கொண்டு வந்ததை வைத்துவிட்டு தாங்களே தேடி எடுத்துவிட்டோம் என்று தமது ஊடகங்களுக்கு காட்டிக் கொண்டமை கேவலமான விடயம்.
அதிலும் தான் ஊடகவியலாளர் என்ற போர்வையில் இராணுவத்திற்கு புலனாய்வு வேலை செய்பவர்தான் ருசாங்கன் என்பவர். இவர் சம்பவத்திற்கு முன்னர் ஒரு போதும் எனது அலுவலகத்திற்கே வந்திரா நபர். அன்றைய தருணம் ஏன் வந்தார்.இவரால் தான் மற்றைய கொழும்பு ஊடகங்களுக்கும் உடனடியாக சம்பவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டிற்கு அவரும் உடந்தையானவர் என்று உறுதிப்படுத்த முடிகின்றது. இவர் ஒரு ஊடகவியலாளர் அல்லர்.முழுமையான இராணுவப்புலனாய்வாளர் என்பது எனது அலுவலக சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.
இதேவேளை ஏற்கனவே ருசாங்கன் செய்தி சேகரிக்கச் சென்றமை தொடர்பில் விமர்சனங்கள் வெளியிடப்பட்ட போது தினமுரசு பத்திரிகையில் ருசாங்கன் ஒரு கட்டுரை ஒன்றினை எழுதி இருந்தார்.
எனினும் சம்பவம் அவருக்கு தெரியாது என்றும் தமிழ்மிரரில் செய்தியைப்பார்த்ததும் உடனே அந்த இடத்திற்கு சென்றதாகவும் கூறியிருந்தார். அத்துடன் தற்செயலாக தான் அங்கு போன சமயம் சம்பவத்தை கேள்வியுற்று சிறிதரனின் அலுவலகத்திற்கு சென்றிருந்ததாகவும் மாறுபாடான தகவல்களைக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அவர் சோதனை ஆரம்பிக்கப்பட்டு சில மணித்தியாலயங்களில் வந்திருந்தார் என ஆதார பூர்வமான தகவல்கள் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியுள்ள புது ஆதாரங்கள்!

சரணடைந்த புலிகள் பலரது கண்களையும் கைகளையும் கட்டி, அவர்கள் மண்டையில் சுடும் இலங்கை இராணுவத்தின் கோரக் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு உலகையே அதிரவைத்தது பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி. த கில்லிங் பீஃல்ட் (கொலைக் களங்கள்) என்று பின்னர் அது வெளியிட்ட ஆவணப்படத்தில் தேசிய தலைவரது கடைசி மகன் பாலச்சந்திரன் குறித்த ஆதார வீடியோவும் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது சனல் 4 தொலைக்காட்சியிடம் புது ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக, தகவல்கள் கசிந்துள்ளது. சிக்கியுள்ள வீடியோவில் எவ்வகையான காட்சிகள் இருக்கிறது என்பதனை இதுவரை உறுதிசெய்ய முடியவில்லை.
இருப்பினும் தற்போது சனல் 4 புதிதாக ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது என்றும், அதில் இலங்கை அரசின் போர் குற்றம் இல்லையெனில் இன அழிப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கியுள்ளதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது. இக் காட்சிகள் புதிதான ஆதாரங்கள் என்றும், இதுவரை வெளியிடப்படாத ஒன்றாக உள்ளதாகவும், விடையம் அறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். இக் காட்சிகள் அடங்கிய ஆவணப்படமானது மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும், இது வெளியாகும் தருணத்தில் மீண்டும் உலகை உலுக்கும் பல காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.
வரும் மார்ச் மாதம், ஜெனீவாவில் நடக்கவிருக்கும் மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பிரேரணை ஒன்றைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வெறும் பிரேரணையாக மட்டும் அமையாது, அமெரிக்கா முன்மொழியும் சில விடையங்களை இலங்கை அரசானது நிச்சயம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் ஒன்றாக அமையவிருக்கிறது என்று சிலர் எதிர்வு கூறியுள்ளார்கள். இதற்கு வலுச் சேர்க்கும் வகையில், அதிர்ச்சிதரும் ஆதாரங்கள் அடங்கிய வீடியோவையே சனல் 4 வெளியிடவுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பல உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக மாறும் நிலை தோன்றலாம் !
நன்றி:அதிர்வு 

30 ஜனவரி 2013

சிதம்பரத்தை புகழ்ந்ததால் கமலுக்கு வந்த சோதனை?

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த பொறுப்புக்கு வரப் போவதாக சொல்கிறார்கள். அவர் அந்த உயரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் கூட. அவர் விரைவில் அப்பொறுப்புக்கு வர வேண்டும்... - நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் சென்னையில் பேசிய பேச்சு இது.. இதுதான் விஸ்வரூபம் விவகாரத்தில் கமலுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நிலையை மேற்கொண்டதற்கான காரணம் என்று பரவலாக கருத்து பரவியுள்ளது. அரசுத் தரப்பிலான கடுமையான நிலைக்கு கமல்ஹாசனின் இந்தப் பேச்சுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. அப்படி என்ன பேசினார் கமல்... நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்த 'ப.சிதம்பரம் ஒரு பார்வை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 29ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்டு கமல் பேசுகையில், உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். மனிதன் புகழுக்கு மேலே தான் செல்ல வேண்டுமே தவிர, கீழே இறங்கி வரக்கூடாது. எனக்கு அரசியல் தெரியாது என்பதால் தான், அரசியல் கடந்து பலரின் ரசிகராக உள்ளேன். நிதியமைச்சரை பற்றி இந்த புத்தக தொகுப்பில் 70 பேரின் கட்டுரைகள் உள்ளது. ஆனால் அவர் இன்னும் அதிகம் செய்ய வேண்டும், சாதனை படைக்க வேண்டும், அதற்காக விழாக்கள் எடுக்க வேண்டும், அதில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம். நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் (பிரதமர் பதவி) வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல். அடுத்துப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, 'சிதம்பரம் 1984ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக் காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்! என்றார். இதன்மூலம் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று அதிமுக தரப்பில் சொல்லி வருவதற்கு மறைமுகமாக ஒரு கொட்டு வைத்தார் கருணாநிதி. கமலின் இந்தப் பேச்சும், அடுத்து அதை ஒட்டி கருணாநிதி வைத்த 'கொட்டும்' அதிமுக தரப்பை மிகவும் கடுப்பாக்கியதாக சொல்கிறார்கள்.

வவுனியாவில் தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தை தடுக்க நினைத்த றிசாத் பதியுதீன் தரப்பிற்கு தோல்வி!

சிவசக்தி ஆனந்தன்
வவுனியாவில் இந்திய அரசின் ஆதரவுடனான வீடமைப்புத் திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்து வவுனியா மாவட்ட மீளக்குடியர்ந்தோர் நலன்பேணும் அமைப்பினால் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக காவல்துறையினர் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை இன்று மீண்டும் ஆரம்பித்த வவுனியா மாவட்ட நீதிமன்றம் அதற்கான அனுமதி வழங்கி உள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழர்கள் நடத்தும் போராட்டத்திற்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஆதரவான முஸ்லீம் தரப்பினரும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். அவர்களையும் நீதிபதி இன்று அழைத்திருந்தார். இன்று காலை 8.30மணியளவில் நீதிமன்றில் இரு தரப்புப் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கேட்ட நீதிபதி தமிழர் தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கினார்.
வவுனியா மாவட்ட மீளக்குடியர்ந்தோர் நலன்பேணும் அமைப்புடன் வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தார். முஸ்லீம்களின் போராட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்துமாறும் நீதிபதி தெரிவித்துள்ளார். இதன்படி தமிழர் தரப்பினரது கவனயீர்ப்புப் போராட்டமும் மகஜர் கையளிப்பும் இன்று வவுனியா நகரில் நடைபெறுகின்றது.

சிறீலங்காவில் எப்பகுதியிலும் படைகளை நிறுத்தும் உரிமை எமக்குண்டு-ஹத்துருசிங்க

தனது படைகளை எங்கு வேண்டுமானாலும் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு முழு உரிமையும் உள்ளது என்ற கருத்தை அமெரிக்க உயர்மட்டக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர்கள் விக்ரம்சிங், ஜேம்ஸ் மூர், ஜேன் சிம்மர்சன் ஆகியோர், யாழ். படைகளின் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவை சந்தித்துப் பேசியிருந்தனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க,
“சிறிலங்கா படையினர் எந்தவகையிலும் குடியியல் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை.
தெற்கில் உள்ளதைப் போன்றே வடக்கிலும் வழமையான நடைமுறைகளின் படியே குடியியல் நிர்வாகம் இடம்பெறுகிறது.
கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்துடன் கலந்துரையாடிய பின்னர், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை கூடிய விரைவில் குறைப்பதற்கு இராணுவம் திட்டமிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் எங்கெங்கு படையினரை நிறுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை இறைமையுள்ள நாடு என்ற வகையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது என்பதையும், அதபற்றி எவரும் கவலைப்படக் கூடாது என்பதையும் அமெரிக்க குழுவினர் ஏற்றுக் கொண்டனர்.
யாழ். குடாநாட்டில், 2008இல் 40 ஆயிரம் சிறிலங்காப் படையினர் நிலைகொண்டிருந்தனர். 2009 டிசம்பரில் இது 27,200 ஆக குறைக்கப்பட்டது.
இந்த எண்ணிக்கை தற்போது மேலும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது 13,100 படையினரே யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

29 ஜனவரி 2013

யாழ். அசம்பாவிதங்களின் பின்னணி படையினரா? துணைப்படையினரா?

யாழ்.மாவட்டத்தில் கடந்த சிலமாதங்களாக இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னணியில் உள்ளவர்கள் படையினரா? துணைப் படையினரா? இவ்வாறு கேள்வியெழுப்பினார் யாழ். வந்த ஆஸ்திரேலிய எதிர்க் கட்சியின் பிரதித் தலைவர் ஜீலிபிஷப்.
யாழ்.மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த ஆஸ்திரேலியக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடினர்.
ஆஸ்திரேலியாக் குழுவில் எதிர்க்கட்சியின் பிரதித்தலைவர் , ஆஸ்திரேலிய எல்லைப்
பாதுகாப்புப் பேச்சாளர் மைக்கல் கீன்,லிபிரல் கட்சியின் பேச்சாளர் பிஷப் ஆகியோர் அடங்கியிருந்தனர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பிரதேசசபைகளின் தலைவர்கள்,மாநகரசபை முன்னாள் ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆஸ்திரேலியாவுக்கு அதிகளவான தமிழ் மக்கள் இங்கிருந்து தஞ்சக் கோரிக்கையுடன் வருகின்றனர். அவர்கள் அருகிலுள்ள இந்தியாவுக்குச் செல்லாமல் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு ஏன் ஆஸ்திரேலியாவுக்கு வருகின்றனர்? என ஆஸ்திரேலியக் குழுவினர் இதன்போது கேள்வி எழுப்பினர்.
உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை:
இதற்கு பதில்அளித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைத் தலைவர்கள் தமிழ் மக்கள் இங்கு வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை இல்லை. அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.
படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்களின் மிரட்டல்களினால் அவர்களால் இங்கு வாழ முடியாத நிலைமை காணப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவளித்தோர் மற்றும் எமது கட்சிக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ) ஆதரவுஅளிப்போரை அச்சுறுத்தும் வகையிலேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசை விமர்சித்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் காரணமின்றிக்கைது செய்யப்படுகின்றனர் .கடந்த இரண்டு மாதங்களில் 46 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி நகரசபையில் உறுப்பினரொருவர் சபையின் கூட்டத்தொடரில் இராணுவ அத்து மீறல் தொடர்பில் எடுத்துரைத்தமைக்காக அவர் இராணுவத்தால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் தினத்தன்று விளக்கேற்றியமைக்காக ஆண்,பெண் விடுதிகளுக்குள் படையினர் அத்துமீறிப் புகுந்து அராஜகத்ததில் ஈடுபட்டனர். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
நிம்மதியாக வாழ முடியாது:
இதனால் தமிழ் மக்கள் போர் முடிந்த பின்னர் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை காணப்படுகின்றது. அதனாலேயே இந்தியாவை விட பாதுகாப்பான நாடு என்று ஆஸ்திரேலியாவை அவர்கள் கருதுவதால் அங்கு வருகின்றனர் என்று பதில்அளித்தார்.
இதன் பின்பு கேள்வி எழுப்பிய ஆஸ்திரேலியக்குழுவினர், இதற்காக எவ்வளவு பணத்தைச் செலவு செய்கின்றனர்? அதனை அவர்கள் அவ்வாறு மீளச் செலுத்துகின்றனர் எனக் கேள்வி எழுப்பினர்.
பத்து இலட்சம் ரூபாவரை ஆஸ்திரேலியப் பயணத்துக்காக செலவு செய்கின்றனர். முதலில் ஒரு இலட்சம் ரூபா பணத்தைக் கட்டி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு தரையிறங்கிய பின்னர் இங்குள்ள உறவினர்கள் மிகுதிப் பணத்தைச் செலுத்துகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பதிலளித்தனர்.
ஆஸ்திரேலிய அரசு தமிழர்கள் அங்கு வருவதை தடை செய்தால் தப்பித்துச் செல்லும் மக்கள் என்ன செய்வார்கள் என்று ஆஸ்திரேலியக் குழுவினர் கேள்வியெழுப்பினர்.
இன்னொரு நாட்டுக்கு நிச்சயமாக அவர்கள் தப்பித்துச் செல்வார்கள் என்று பிரதேச சபைத்தலைவர்கள் கூறினார்கள்
சரி,இங்கு கடந்த ஆறுமாதகாலமாகப் பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்றன என்று சொல்கின்றீர்கள்.இவற்றைச் செய்வது படையினரா அல்லது துணைப்படையினரா என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி பிரதித் தலைவர் கேள்வியெழுப்பினார்.
யார் செய்கின்றார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் அரசை விமர்சிப்பவர்கள், அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர் .
இதேவேளை நேற்றுக்காலை மல்லாகத்தில் உள்ள கோணபுலம் நலன்புரி நிலையத்திற்கு ஆஸ்திரேலியக் குழுவினர் சென்றனர். அவர்களுடன் வலி.வடக்குப் பிரதேச சபைத்தலைவர் சோ. சுகிர்தனும் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கியிருந்தார்.

கருணாநிதியை சினம்கொள்ள வைத்த அழகிரியின் சுவரொட்டி!

சென்னை நகர் முழுவதும் மு.க.அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவாளர் ஒருவர் ஒட்டியிருந்த போஸ்டரைக் கண்டு திமுக தலைவர் கருணாநிதி கடும் கோபம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஜி.வெங்கட் என்கிற ஜி.வி.ரமணா (இருவரும் திமுகவினர் அல்ல) வரும் 30-ந் தேதி அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி சென்னை நகர் முழுவதும் குறிப்பாக கருணாநிதியின் வீடு உள்ள கோபாலபுரம் பகுதியில் ஒருசுவர் கூட விடாமல் 3 வித போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் அழகிரியின் படம் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது. திமுகவினர் எப்போதும் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படத்தை சேர்த்து அச்சிடுவதே வழக்கம். இப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில். சுவரொட்டி வாசகங்கள்: கண்ணகி சிலம்பும், மனோகரன் விலங்கும் வீழ்ந்ததா வீழ்த்தியதா.? அதுக்கும் மேல.. அதுக்கும் மேல... அதுக்கும் மேலே.. அண்ணன் உசுருலே. இங்கே பரமசிவனும் இல்லை. நாங்கள் கருடனும் இல்லை. நடப்பது ராம நாடகமே என கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்று கருணாநிதி அறிவித்துவிட்ட நிலையில் அழகிரியின் சார்பாக கருணாநிதியை கடுப்பேற்றும் வகையில்தான் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதைப் பார்த்த கருணாநிதியும் அனைத்து போஸ்டர்களையும் எப்படியாவது கிழித்து எறியுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

28 ஜனவரி 2013

இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தீர்மானம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா புதிய தீர்மானமொன்றை நிறைவேற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமர்வுகளின் போது இலங்கைக்கு கடுமையான நெருக்கடி ஏற்படக் கூடிய வகையிலான தீர்மானங்களை அமெரிக்கா நிறைவேற்ற முயற்சிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகள் மீதான தடை நீடிப்புக்கு விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடர்பில் 4 வாரத்தில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பு செய்து மத்திய அரசு கடந்த 14.5.2012 அன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம் விசாரித்தது. அதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பு செய்தது தவறு என வாதிட்டார். இருப்பினும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பு செய்தது சரியே என கடந்த 7.11.2012 அன்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழ்நாட்டை பிரித்து தமிழ் ஈழம் அமைக்க வேண்டும் என்பது விடுதலைப்புலிகளின் நோக்கம் அல்ல. உலகில் வாழும் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் தனிநாடு வேண்டும் என்பதும் அவர்களின் நோக்கமல்ல.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் ஈழ தமிழர்களுக்கு தனிஈழம் அமைய வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். ஆனால் இதை மத்திய அரசு தவறாக எண்ணி விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பு செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும்.
இது குறித்த தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையொட்டி வைகோ நீதிமன்றில் நேரில் ஆஜராகி வாதாடினார். அப்போது, ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு செய்தது சரியே என்று கூறிய தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து இந்த நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தேன். அதில் வாதம் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 2012-ல் தடை நீட்டிப்பு செய்ததை எதிர்த்தும் மனு தாக்கல் செய்துள்ளேன்.
இந்த தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் 4 வாரத்தில் விளக்கம் அளிக்கு மாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இடையில் புகுந்த காங்கிரஸ் கட்சி கரை வேட்டி அணிந்திருந்த முதியவர் ஒருவர் குறுக்கிட்டார். வைகோ பொய் சொல்லாதே.... பொய் சொல்லாதே என பலத்த குரலில் கோஷமிட்டார். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
ம.தி.மு.க.வினர் அந்த முதியவரை அடிக்க பாய்ந்தனர். உடனே அங்கிருந்த சட்டத்தரணிகள் அவர்களை தடுத்து முதியவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து வைகோ தனது பேட்டியை முடித்து கொண்டு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது அந்த முதியவரை கட்சியினர் யாரும் தாக்க கூடாது என அறிவுறுத்தினார்.

27 ஜனவரி 2013

கொமன்வெல்த் மாநாட்டு வாய்ப்பு பறிபோவதைத் தடுக்கும் அவசர முயற்சிகளில் சிறிலங்கா!

கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பு சிறிலங்காவிடம் இருந்து பறிக்கப்படலாம் என்று எழுந்த அச்சத்தை அடுத்து, அதனைத் தடுத்து நிறுத்தும் அவசர முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்த்தன, அவசர அவசரமாக, கடந்தவாரம் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு முன்னதாக, சிறிலங்கா விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று கனடா அழுத்தம் கொடுத்து வருகிறது.
கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் நடத்தக் கூடாது என்று கனடா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த வாய்ப்பு பறிபோய் விடுமோ என்று சிறிலங்கா அரசாங்கம் கலக்கமடைந்துள்ளது.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன கடந்தவாரம் அவசரமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர்அதிகாரி மஜிந்த ஜெயசிங்கவுடன் இணைந்து அவர், கடந்த வியாழக்கிழமை கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மாவை சந்தித்து நீண்டநேரம் உரையாடினார்.
எனினும், கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவில் சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டால், கொமன்வெல்த் செயலரால் சிறிலங்காவை காப்பாற்ற முடியாது என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அமைச்சரவை நடவடிக்கைக் குழுவில், அவுஸ்ரேலியா, பங்களாதேஸ், கனடா, ஜமைக்கா, சியராலியோன், தன்சானியா, ரினிட்டாட் அன் டுபாகோ, வனாட்டு, மாலைதீவு ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
அதேவேளை பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட்டையும் சஜின் வாஸ் குணவர்த்தன சந்தித்துப் பேசியுள்ளார்.
மேலும் லண்டனில் உள்ள பார்க் விடுதியில் கடந்த புதன்கிழமை மாலை சுமார் 15 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து விருந்து கொடுத்த சஜின் வாஸ் குணவர்த்தன, அவர்களை சிறிலங்காவுக்கு ஆதரவு அளிக்கும்படி கோரியுள்ளார்.
இதற்கிடையே, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா அடுத்த மாதம் 10ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெலத் தலைவர்களின் உச்சி மாநாடு தொடர்பாக கலந்துரையாடுவதற்கான வழக்கமான பயணமே இது என்று சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொழும்பு வரும் கமலேஸ் சர்மா சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என்றும அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல்களின் போது. கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் நடத்தும் முடிவுக்கு எதிரான கனடா தலைமையிலான நாடுகளின் முயற்சி குறித்து கலந்துரையாட சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா விவகாரம் குறித்து ஆராய உடனடியாக கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் அவசர கூட்டத்தைக் கூட்டுமாறு கொமன்வெல்த் அமைப்பிடம் கனடா கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழுக்காக போராடிய ஒரே தலைவர் பிரபாகரன்தான் - சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:
தமிழ் படித்தால் மட்டுமே வேலை, தமிழில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்ற நிலை மிக விரைவில் வரும். நாங்கள் தமிழுக்காக போராடுவது அழிவின் விழிம்பில் இருக்கும் தமிழை காக்கவே தவிர, மற்ற மொழிகளை அழிப்பதற்காக அல்ல, தமிழ் இனத்தில் பிறந்து தமிழுக்காக போராடிய ஒரே தலைவர் பிரபாகரன்தான்.
தமிழை வளர்க்கவும், தமிழ் இனத்தை அழியாமல் காக்கவும் வேறு ஒரு தலைவர் தமிழ் இனத்தில் இருந்தது இல்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு தமிழ் மொழியை பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு தேவை எல்லாம் தமிழர்களை ஆள வேண்டும் என்பதே.
தாய்மொழியாக இருந்த தமிழ், பாடமொழியாகி தற்போது விருப்ப பாடமொழியாக இருப்பது மிகவும் வருத்தப்பட கூடிய விஷயமாகும். எந்த மொழியில் பேசுகிறீர்களோ அதை முழுமையாக பேசுங்கள். பேசும் மொழியில் மற்ற மொழிகளை இணைத்து அந்த மொழிகளை களங்கப்படுத்தாதீர்கள்.
தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் பதவி மோகத்திற்காக மத்தியில் உள்ள கட்சிகளுடன் எப்போது கூட்டணி வைத்தார்களோ அப்போது இருந்தே தமிழ் மொழி அழிய தொடங்கிவிட்டது. எனவே தமிழையும், தமிழ் இனத்தையும் வாழ வைப்பதற்காக இளைய தலைமுறையினர் வரவிருக்கும் வரலாற்று புரட்சிக்கு தயாராக இருக்க வேண்டும்.
இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தனி தெலுங்கானா அமைத்து கொண்டதை போல நாங்களும் தனி தமிழ்நாடு அமைத்து கொள்கிறோம்.
இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் கற்றால்தான் வேலை என்ற நிலை வரும். தமிழ்மொழி தமிழர்களுக்கு தாய்ப்பால் போன்றது.
மற்ற மொழிகளை கற்று கொள்ளுங்கள் ஆனால் தாய்மொழி தமிழை தாய்ப்பால் போல பருகுங்கள் அப்போதுதான் அடுத்த தலைமுறையில் தமிழ்மொழி வளரும். இவ்வாறு அவர் கூறினார்.

26 ஜனவரி 2013

தமிழர்கள் காணாமல் போனது உண்மையே",வாசுதேவ நாணயக்கார

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே இதனை யாரும் மறுக்க இயலாது என ஆளும் கட்சி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட போரின் போது படையினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமற்போகவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ள நிலையிலேயே வாசுதேவ நாணயக்கார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணாமல் போனவர்களின் உறவுகள் சாட்சியமளித்துள்ளனர். இதனை இராணுவத் தரப்பினர் மறுக்கின்றமை முழுப்பூசினிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற செயலாகும் எனவே வன்னியில் காணாமல் போன தமிழ்மக்களின் நிலை கண்டறியப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஸ்தாபிக்கப்பட்டு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.
ஏனென்றால் உள்நாட்டு யுத்தமும் அதன் பின்னரான செயற்பாடுகளும் முக்கியமானவை அத்துடன் அவ்வறிக்கையில் மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு வழிமுறைகளை நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறிப்பாக காணாமல் போனவர்களின் விபரங்கள், உறவினர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பதிவாகியுள்ளது.
இதில் யார் கூட்டிச் சென்றது? எப்போது சம்பவம் இடம்பெற்றது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இதனை பொய் எனக் கூறக்கூடாது. நியாயமான சாட்சியங்களின் அடிப்படையில் உண்மைகளை அரசாங்கம் கண்டறிய வேண்டும்.
இல்லையென்றால் மீண்டும் பிரச்சினைகள் மேலோங்கி நாட்டின் நற்பெயருக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

25 ஜனவரி 2013

சிறிலங்கா மீது அடுத்தடுத்து சைபர் தாக்குதல் – ஒவ்வொன்றாக முடங்கும் அரச இணையங்கள்!

சிறிலங்கா அரசின் பாதுகாப்பு, பொருளாதார முக்கியத்துவம்மிக்க இணையத்தளங்களை முடக்கும் போர் தீவிரமடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக சிறிலங்கா அரச இணையத்தளங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மறைமுகப்போரின் ஒரு கட்டமாக, சிறிலங்கா முதலீட்டுச் சபையின் இணையத்தளம் இன்று முடக்கப்பட்டுள்ளது.
டவி ஜோன்ஸ் என்ற ஊடுருவல்காரரால், சிறிலங்கா அரசின் இணையத்தளங்களை முடக்கும் போர் நடத்தப்பட்டு வருகிறது.
சிறிலங்கா முதலீட்டுச்சபையின் இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 2000 இற்கும் அதிகமான முதலீட்டாளர்கள் விபரம் மற்றும் ஏனைய முக்கிய ஆவணங்கள், உள்ளிட்ட அனைத்துமே ஊடுருவல்காரரால், இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் முதலீடு செய்ய விரும்பும் எவரும் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறும், ஏனென்றால் தானே தற்போது முதலீட்டுத் தரவுகளை கையாள்வதாகவும் இணையத்தளத்தை முடங்கியவர் அதில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் டவி ஜோன்ஸ் எனப்படும் இணைய ஊடுருவல்காரரால், தாமரைத் தடாகம் அரங்கின் இணையமும் முடங்கப்பட்டுள்ளது.
அதேவேளை,கடந்த செவ்வாய்க்கிழமை டவி ஜோன்ஸ் இணைய ஊடுருவல்காரரால் சிறிலங்கா துறைமுக அதிகாரசபை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ரூபவாஹினி தொலைக்காட்சி உள்ளிட்ட இரண்டு அரச தொலைக்காட்சிகளினதும் இணையத்தளங்களும் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சிறிலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையத்தின் இணையத்தளம் ஊடுருவல்காரரால் முடக்கப்பட்டது தெரிந்ததே.
அதன் பின்னர் அடுத்தடுத்து சிறிலங்கா அரசின் முக்கிய இணையத்தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் சைபர் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தபாயவின் அடாவடிக் கருத்துக்கு மனோ பதிலடி!

காணாமல் போனவர்கள் என்று யாருமில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ சொல்லுவதை எந்த ஒரு அடிப்படையிலும் ஏற்றுகொள்ள முடியாது. உலகறிந்த இந்த மகா உண்மையை இவர் ஒன்றுமில்லை என சொல்லுவது காணாமல் போன தமது உறவுகளை தேடி திரியும் அப்பாவி குடும்ப உறவுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
குரலற்ற இந்த அப்பாவி மக்களுக்கு குரலாக நாம் அன்றும் இருந்தோம்; இன்றும் இருக்கிறோம்; என்றும் இருப்போம் என்பதை இந்த அரசாங்கத்துக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் அமைப்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, காணமல் போனோர் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் கருத்து கூறிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது.
யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் வன்னியில் வாழ்ந்த சனத்தொகை எவ்வளவு என்பது கூட இந்த அரசாங்கத்துக்கு ஒருபோதும் தெரிந்து இருக்கவில்லை. இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் வன்னியின் சனத்தொகை 70,000 மாத்திரமே என்று இவர்கள் சொன்னார்கள். ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்த போது இவர்களது இடம்பெயர் முகாம்களுக்கே 300,000 லட்சம் மக்கள் வந்து சேர்ந்தார்கள்.
ஆகவே இவர்களது கணக்குபடியே ஏறக்குறைய 230,000 மக்கள் மேலதிகமாக இருந்துள்ளார்கள். ஆனால், உண்மையில் வன்னியின் சனத்தொகை ஏறக்குறைய 450,000 என்பது புள்ளிவிபரப்பட்டியல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இது யுத்தத்தின் போது வன்னியில் இருந்த ஆடு, மாடு, கட்டாக்காலி நாய்களின் தொகைகள் அல்ல. மாந்தர்களின் கணக்கைத்தான் நாம் சொல்கிறோம். எனவே சனத்தொகை கணக்கு தெரியாத அரசாங்கம் கணக்கு போட்டு பார்த்த்கொள்ள வேண்டும்.
கணக்கு தெரியாத அரசாங்கம் இன்று புதிய கணக்கு காட்டுகிறது. யுத்தத்தின் போது எவரும் காணாமல் போகவில்லை என இன்று புதுக்கதை பேசுகிறது. இதை நாம் ஏற்று கொள்ளமாட்டோம். உலகமும் ஏற்று கொள்ளாது.
வன்னி யுத்தத்தில் இருந்து தப்பி வந்த அனைத்து மக்களும் இந்திய ராணுவ மருத்துவ பிரிவு நடத்திய மருத்துவமனைகளுக்கும், சர்வதேச செஞ்சிலுவை சங்க மருத்துவமனைகளுக்கும் சென்று அவற்றின் மூலமாகவே அரசாங்கம் நடத்திய முகாம்களுக்கு வந்து சேர்ந்தார்கள் என பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார். இது உண்மை அல்ல. ஒரு பகுதியினர் மாத்திரமே இப்படி வந்தார்கள். ஒரு பகுதியினர் நேரடியாக அரச படைகளால் கைது செய்யப்பட்டார்கள் அல்லது படையினரிடம் சரணடைந்தார்கள்.
இன்று நாம் இலங்கையில் உள்ள இந்திய தூதரிடமும், கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும் இதுபற்றி கேள்வி எழுப்புகிறோம். யுத்தத்தில் இருந்து தப்பி வந்து முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களும் தங்கள் அமைப்புகள் மூலமாகவே வந்து சேர்ந்தார்கள் என்பதை இந்திய இராணுவ மருத்துவ பிரிவும், சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் உறுதி செய்ய முடியுமா? இதுபற்றி மக்கள் கண்காணிப்பு குழுவின் சார்பாக நான் எழுத்துமூலம் இவர்களிடம் பதில் கோரியுள்ளேன்.
இறுதி யுத்ததிற்கு முன்னரே தலைநகர் பகுதியில் மாத்திரம் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டார்கள். கடத்தப்பட்டோர் தொடர்பாக முழு விபர பட்டியலை நான் அப்போது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் இலங்கை பிரதமரிடம் கையளித்தேன்.
அப்போது கூட இந்த அரசாங்கம் அதை மறுத்து நம்ப முடியாத கதைகளை பேசி என்னை அச்சுறுத்தியது. எனவே கணக்கு தெரியாத அரசாங்கத்திடம் கணக்கு கேட்டு பயனில்லை என்பதால் தான் நமது பிரச்சினைகளை நாம் சர்வதேசத்துக்கு கொண்டு சென்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

24 ஜனவரி 2013

ஜனநாயகம் தோற்றபின் அமைதிகாக்க முடியாது!

newsதிருச்சபையும், ஏனைய மத அமைப்புகள் மற்றும் குடியியல் சமூகமும், மீண்டும் மீண்டும் எச்சரித்திருந்த போதிலும், நிறைவேற்று அதிகாரமும்,நாடாளுமன்றமும் அரசியலமைப்பை அலட்சியம் செய்த பின்னர், இலங்கையில் ஜனநாயகம் தோன்றுவதற்கு இனிமேல் வாய்ப்பில்லை. இவ்வாறு எச்சரித்துள்ளார் அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதிவண. திலோராஜ் கனகசபை.
கடந்த சிலநாட்களில் சிறிலங்காவில் ஜனநாயகம் முற்றாகவே அழிந்து போய்விட்டதாக, பேராயர் கடும் சொற்களில் தமது அதிமேற்றிராணியாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
இலங்கையில் நடைபொறும் அராஜகங்களைப் பார்த்து கிறிஸ்தவ திருச்சபை என்ற வகையில்,அமைதியாக இருக்கமுடியாது.
அமைதியாக இருப்பது எமது கடவுளை அவமதிப்பதும், கடவுளின் மக்களுக்குச் செய்யும் துரோகமுமாகும்.
எனவே, இறுதியான முடிவை எடுப்பதற்கு திருச்சபை எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை,வரும் பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர நாளன்று வெள்ளை ஆடைய அணிந்து பிரார்த்தனைகளில் பங்கேற்குமாறும் அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடாத்த வேண்டாம் -கனடா !

இலங்கையில் பொது நலவாய மாநாடு நடைபெறாத பட்சத்தில் அதனை நடத்தத் தயாராக இருப்பதாக ஏற்கனவே மொரிஷியஸ் பொதுநலவாய தலைமைச் செயலகத்துக்கு அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் கனேடிய அரசால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொது நலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை கொழும்பில் நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழு (Commonwealth ministerial action group) அவசர கூட்டமொன்றை நடத்த முடிவுசெய்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு இந்தவருடம் நவம்பர் 15 முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுமென முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், கனடாவின் இந்தத் திடீர் நடவடிக்கையால் மேற்படி கூட்டத்தை லண்டனில் கூட்டி இறுதி முடிவை எடுக்க பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு தீர்மானித்துள்ளது.
CMAG எனப்படும் மேற்படி குழுவிடம் இலங்கை தொடர்பில் காட்டமான முறைப்பாட்டை முன்வைத்திருக்கும் கனடா, இலங்கையில் ஜனநாயகமற்ற ஒரு சூழ்நிலை நிலவுவதால் அதனை வேறொரு அங்கத்துவ நாட்டில் நடத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுள்ளது.
இலங்கையில் இம்மாநாடு நடைபெறுமானால் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் மாநாட்டைப் புறக்கணிக்கும் அபாயம் இருப்பதையும் கனடா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பின்னணியில், லண்டனில் கூடவுள்ள பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு இலங்கை தொடர்பான விசாரணைகளை நடத்தினால் அதற்கு சில கால அவகாசம் எடுக்கும் சூழ்நிலை ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் விசாரணைகள் நடைபெறும் காலப்பகுதியில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் வாக்களிப்பதற்கான தகைமையை இலங்கை தற்காலிகமாக இழக்கவேண்டிய சூழ்நிலை உருவாகக் கூடும்.
இந்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு மாநாட்டை இலங்கையில் நடத்தாதிருக்க பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தீர்மானத்தை எடுக்கும் வாய்ப்பே அதிகமென விடயமறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும், இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள செயலர் கமலேஷ் சர்மா, இலங்கையின் நிலைவரங்களைப் பார்வையிட்டு பேச்சுகளை நடத்தி இறுதியான முடிவுக்கு வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறாத பட்சத்தில் அதனை நடத்தத் தயாராக இருப்பதாக ஏற்கனவே மொரிஷியஸ் பொதுநலவாய தலைமைச் செயலகத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மட்டக்குழு:
பொதுநலவாய நாடுகளின் அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழுவில் கனடா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜமெய்க்கா, சியராலியோன், தான்சானியா, ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோ, வனூட்டு, மாலைதீவு ஆகிய நாடுகள் அங்கம்வகிக்கின்றன.
பொதுநலவாய அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு முரணாக செயற்படும் நாடுகளை அமைப்பின் அங்கத்துவத்திலிருந்து நீக்குவதற்கு மேற்படி அமைச்சர் மட்ட நடவடிக்கைக் குழுவுக்கு அதிகாரம் உண்டு.
1995ஆம் ஆண்டு நியூஸிலாந்து ஒக்லண்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் மேற்படி அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

18 ஜனவரி 2013

பிரபாகரன் இருந்தால் இப்படி செய்வாயா?சிகரெட் புகைத்த சிறுவனை எச்சரித்த சிப்பாய்!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் சிறிலங்காவிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் எவ்.எம் அலைவரிசை மூலமாக அம்பலப்படுத்தியுள்ளார்.
இச் சம்பவமானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூரியன் எவ்.எம் அலைவரிசையில் தைப்பொங்கல் தினமாகிய திங்கட்கிழமை நிகழ்ச்சியொன்று ஒலிபரப்பாகியது. “தமிழ் மக்களின் கலாசாரம் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகின்றதா” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வாசகர்கள் தொலைபேசியூடாக கருத்துக்களைக் கூற அந்தக் கருத்துக்கள் நேரடியாகவே ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன. இந்த நிலையில் வவுனியாவிலிருந்து தொடர்புகொண்ட பெண்ணொருவர் தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாடுகள் திட்டமிட்ட வகையில் சீரழிக்கப்படுகிறது என்று கூறினார். தமிழ் மக்களில் அக்கறையுடைய நிர்வாகம் ஒன்று இல்லாமையாலேயே கலாசார சீரழிவுகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் கூறினார்.
பின்னர் வன்னியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டினார். பாடசாலை செல்லும் வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவன் மாமரம் ஒன்றுக்கு அருகில் ஒழிந்து நின்று சிகரெட் புகைத்த போது அவ்வழியால் சென்ற சிறிலங்கா இராணுவத்தினன் ஒருவன் அங்கே வந்து அந்த இளைஞனை அடித்துள்ளார். அடிக்கும்போது “இந்த வயதில் சிகரெட் புகைக்கிறாயோ? பிரபாகரன் இல்லாத குணத்தைக் காட்டுகிறாயா? பிரபாகரன் இருந்தால் இன்று இப்பிடிச் செய்வாயா?” என்று கேட்டு அடித்துள்ளார்.அதாவது பிரபாகரன் இருந்தால் வன்னி உட்பட தமிழர் தாயகத்திலுள்ள யாருமே சீரழிவுக்கு உள்ளாகமாட்டான் என்பதை ஒரு சிங்கள இராணுவ வீரனே அறிந்து வைத்திருக்கின்றார். அந்தளவுக்கு தலைவரின் ஆட்சியில் கலாசார சீரழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இன்று அவை கட்டுக்கடங்காமல் செல்கின்றன என்றும் அந்தப் பெண் வானொலி அலைவரிசையில் கருத்து தெரிவித்தார்.
இதைக் கேட்ட வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் செய்வதறியாது திகைத்து வாயடைத்து நின்றனர். குறித்த பெண்ணின் உரையாடலை வானொலிகளில் கேட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்கள் அவரின் வீரத்தை மனதுக்குள் மெச்சினர்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை பிரித்தானியா பகிஷ்கரிக்கக் கூடும்?

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை பிரித்தானிய பகிஷ்கரிக்கக் கூடுமென அந்நாட்டு பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. லண்டன் டைம்ஸ் என்ற பத்திரிகை இந்த ஊகத்தை வெளியிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இவ்வாறு, அமர்வுகளை பிரித்தானிய பகிஷ்கரிக்கக் கூடுமென குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் ஏனைய பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இவ்வாறு அமர்வுகளை பகிஷ்கரிக்கக் கூடுமென தெரிவித்துள்ளது.
மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்படாவிட்டால் அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என கனடா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், பொதுநலவாய நாடுகள் அமர்வுகளில் பங்கேற்பது குறித்து பிரித்தானிய அரசாங்கமோ அல்லது பிரதமரோ உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்புக்களையும் இதுவரையில் விடுக்கவில்லை.

17 ஜனவரி 2013

அவுஸ்திரேலியாவில் தடுப்பில் உள்ள தமிழ் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்!

அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சனி என்ற இலங்கை தமிழ்ப்பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். விலாவூட் தடுப்பு முகாமில் அவர் கடந்த பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இலங்கையில் இருந்தபோது போரில் விடுதலைப்புலிகளின் வாகன சாரதியாக இருந்த தமது கணவனை பறிகொடுத்த அவர் இரண்டு பிள்ளைகளுடன் 2010 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு அரசியல் அடைக்கலம் பெற்றார்.
இந்தநிலையில் அவர் சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து கணேஸ் என்பவரை மறுமணம் செய்த சிறிது காலத்தில், அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, ரஞ்சனி என்ற இந்தப்பெண், தடுத்து வைக்கப்படடிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் குழந்தை ஒன்றை தடுப்பு முகாமில் பிரசவித்துள்ளார்.
எனினும் ரஞ்சனியையும் அவர் பெற்றெடுத்த குழந்தையையும் பார்வையிட அவரது கணவர் கணேஸிற்கு பார்வையாளர் அனுமதிநேரத்தை காட்டிலும் வேறு நேரங்களில் அனுமதி வழங்கப்படாது என்று தெரியவருகிறது.
அத்துடன் மனைவியுடனும் குழந்தையுடனும் இரவுப்பொழுதை கழிக்கவும் அவருக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சனியின் புதிய குழந்தைக்கு பார்த்தீபன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய பிரஜையான பார்த்தீபனை தாயிடம் இருந்து வீட்டுக்கு எடுத்துச்செல்லப்போவதில்லை என்று ரஞ்சனியின் குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.
அதேநேரம் மனித உரிமை அமைப்புக்கள் ரஞ்சனியின் தடுத்து வைப்பு மனிதாபிமானமற்ற செயல் என்று குற்றம் சுமத்தியுள்ளன.

தமிழர் பேரவையுடன் மங்கள சமரவீர பேச்சுவார்த்தை?

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, பிரித்தானிய தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மங்கள சமரவீரவை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரி;த்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட ரீதியான சந்திப்பே நடைபெற்றதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.எமது சமூகத்திற்கு வெளியேயான சமூகத்தினருடன் உறவுகளைப் பேணாமல் எமது அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த சந்திப்பு உத்தியோகப் பற்றற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச தலையீட்டுடன் மட்டுமே அனைவரினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியத் தீர்வுத் திட்டமொன்றை தற்போதைய அல்லது எதிர்கால இலங்கை அரசாங்கத்தினால் வழங்க முடியுமு; எனஅ வர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று தீர்வுத் திட்டங்களை எட்டுவதில் எவ்வித தவறும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

16 ஜனவரி 2013

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தக் கூடிய ஆற்றல் ரணிலுக்கு இல்லை!

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தக் கூடிய ஆற்றல் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது என ஜே.வி.பியின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்திய போதிலும் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை வழிநடத்தக் கூடிய ஆற்றல் ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடையாது.
அத்துடன் தனித் தனியான போராட்டங்களின் மூலம் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார் குறிப்பாக பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே ரணில் விக்ரமசிங்கவும் கொண்டிருந்தார் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் ரணிலின் நடவடிக்கைகள் குறித்து கட்சி உறுப்பினர்களே அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டங்களை நடாத்துவதனைப் போன்று ரணில் நடித்து வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து உரிமைகளும் மிருகத்தனமாக கட்டுப்படுத்தப்படுகிறது!

நாட்டின் அனைத்து உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பன மிருகத்தனமான  முறையில் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையின் அரசியல் நிலமை மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கின்றது. குறிப்பாக தற்போது அரசாங்கத்தின் உயர் தலைவர்கள் போதைப்பொருள் கடத்துபவர்களுக்கும்,
குற்றவாளிகளுக்கும் பின்புலமாக செயற்படுவதுடன், அவர்களை தட்டிக் கொடுக்கின்றனர் இதனால் இலங்கையில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய இலங்கையின் சூழ்நிலை குறித்து அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் இதிலிருந்து இலங்கையை மீட்பதற்கு எந்த சூத்திரமும் தம்மிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பன மிருகத்தனமான முறையில் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வில்  கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

15 ஜனவரி 2013

ஷிராணி இருக்கிறாரா என உயர்நீதிமன்ற வளாக வாசலில் தேடும் படையினர்!

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அமைந்திருக்கும் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகதிரிக்கப்பட்டுள்ளதுடன் உயர்நீதிமன்றத்தின் பிரதான வாயில்கள் இரண்டும் இழுத்து மூடப்பட்டுள்ளன. அங்கு வரும் வாகனங்களில் யார் வருகிறார்கள் என இனம்கண்டு கொண்டபின்னர்தான் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா வாகனத்தில் வருகிறாரா என மிக உன்னிப்பாக படையினர் அவதானிக்கின்றனர். நீதியரசர்களை இனங்கண்டுக்கொண்டதன் பின்னரே பாதுகாப்பு தரப்பினர் அவர்களை உயர்நீதிமன்றத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கின்றனர்.
வாகனத்தில் இருக்கின்ற நீதியரசருக்கு பொலிஸார் மரியாதை செலுத்துவதுடன் அந்த வாகனத்திற்குள் வேறுயாராவது இருக்கின்றனரா? என்பது தொடர்பிலும் கேட்டறிந்து கொள்கின்றனர். இதேவேளை, சட்டத்தரணிகள் பயணிக்கும் எந்தவொரு வாகனமும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. எனினும், அதில் பயணிப்போர் தொடர்பில் கடமையில் இருக்கும் பொலிஸார் கேட்டறிந்து கொள்கின்றனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வதற்கு ஊடகங்களைச்சேர்ந்த புகைப்படபிடிப்பாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் செல்வதற்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது. அலரிமாளிகையிலிருந்து வந்த உத்தரவுக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடமையில் இருக்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கழிவு எண்ணெய் தாக்குதல்! யாழில் போராட்டம் கைவிடப்பட்டது!

jaffசம உரிமை இயக்கத்தினரால் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இடம்பெற்ற கையேழுத்து போராட்டத்தில் கழிவு எண்ணெய் வீசப்பட்டதை அடுத்து போராட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளது.வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்த கோரியும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும், கடத்தல் மற்றும் கைதுகளை நிறுத்த கோரியும் சம உரிமை இயக்கத்தினரால் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
இதனால் இந்த போராட்டத்தை இடை நடுவில் சம உரிமை இயக்கத்தினர் முடித்துக் கொள்வதாக அங்கு கூடியிருந்த மக்களுக்கு அறிவித்தனர்.

மொஹான் பீரிஸ் சத்தியப் பிரமாணம்!

புதிய பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹான் பீரிஸ் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இலங்கையின் 44வது பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரி மாளிகையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

14 ஜனவரி 2013

நான் யாருக்கும் அடிபணிய போவதில்லை!

கடந்த வாரம் எனது முகப்புத்தக பதிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு புலம்பெயர் மக்கள் உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தையே முன்வைத்தேன். என் மூலமோ, கட்சி மூலமோ உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறவில்லை.
உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலமே உதவிகளை மேற்கொள்ள சொன்னேன். இதனை சில இணையதளங்கள் "தமிழ் தேசியம் கூறிக் கொண்டு தாயகத்தையும் புலத்தையும் ஏமாற்றும் சிங்களக் கைக்கூலிகளிடம் அவதானம் " என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை பதிவேற்றியுள்ளது.
இதில் என்னை பற்றி தவறாகவும், யதார்த்தத்தத்தில் நினைக்க முடியாத, உண்மைக்கு புறம்பாகவும் வெளியிட்டுள்ளனர். இதற்கெல்லாம் அடியெடுத்துக் கொடுத்த, இந்த உண்மைக்கு புறம்பான தகவல்களை 14.10.2012 அன்று அச்சேற்றிய பத்திரிகைக்கும், கட்டுரையின் எழுதிய அந்த பத்திரிக்கை ஆசிரியரிடம் ஒரு கேள்வி கேட்பேன், "அதில் நான் செய்ததாக கூறப்படும் துரோகங்கள்,தவறுகள்,சலுகைகள் என்பன நிரூபிக்க படவேண்டும்" என்று அப்போது அவர்களிடம் மௌனம் ஒன்று தான் வரும்.
என் அரசியல் எதிர்காலத்தினை விரும்பாத சிலரின் தூண்டுதலிலே இச் செயற்பாடுகள் நடப்பதும் எனக்கு தெரியும், அவர்களுக்கும் ஒன்று சொல்லி விடுகின்றேன். என் மீது இன்றும் நம்பிக்கை வைத்திருக்கும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் சிதறடிக்க மாட்டேன். ஏனெனில் அவர்கள் தற்போது வட கிழக்கில் தமிழ் அரசியல் உறுப்பினர் இல்லாத மாவட்டமாக இருந்து பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். அம்பாறை மாவட்ட தமிழர்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும் நான் யாருக்கும் அடிபணிய போவதில்லை. அடி பணிபவன் தமிழனுமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஷிராணி பதவி விலகமாட்டார்!

மகிந்த ராஜபக்ஸ 
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, தனது பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்ற போதும், அப்பதவியிலிருந்து விலகுவதற்குத் தயாரில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ஷிராணி பண்டாரநாயக்காவே தற்போதும் பிரதம நீதியரசர் என்ற வகையில் அவர் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்ட ரீதியாக பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தன் மீதான குற்றப் பிரேரணை மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என சர்வதேசரீதியாக கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் பதவி விலகலை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் ஷிராணி பண்டாரநாயக்க நீதியரசர் குழுத் தலைவராக வழக்கு விசாரணைகளின் போது சமூகமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் 15 மற்றும் 17ஆம் திகதிகளில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளில் சமூகமளிக்கவுள்ளதாக அறிய வருகிறது.

13 ஜனவரி 2013

அம்பாறையில் தமிழர் பகுதிகளில் புதிய முகாம்களை நிறுவும் சிறிலங்கா இராணுவம்!

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் ஆகிய தமிழ் பிரதேசசெயலர் பிரிவுகளில் சிறிலங்கா இராணுவத்தின் மூன்று புதிய முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
இது அங்கு வசிக்கும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மூன்று புதிய சிறிலங்கா இராணுவ முகாம்களில் இரண்டு கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
அவற்றில் ஒன்று ஆலையடிவேம்பில் இராமகிருஸ்ண வீதியிலும், இன்னொன்று நாவிதன்வெளி வேலடி வளவு என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியிலும் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் காணியின் உரிமையாளர்கள் பிரித்தானியாவில் தற்சமயம் வசித்து வருகின்றனர்.
அதேவேளை, இதற்கு 20 தினங்களுக்கு முன்னர், திருக்கோயில் பிரதேச செயலகம் முன்னர் இயங்கி வந்த பழைய கட்டடம் ஒன்றில், இன்னொரு புதிய சிறிலங்கா இராணுவ முகாம் திறக்கப்பட்டது.
அதற்கு அருகில் கள்ளித்தீவு என்னுமிடத்தில் நிரந்தர சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்று இருக்கும் நிலையில் இந்தப் புதிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், கிழக்கில் குடியியல் நிர்வாகத்தை இராணுவ மயப்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக இந்தப் புதிய முகாம்கள் அமைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் அப்பிரதேச மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

சர்வதேச நீதிமன்றை நாடப்போவதாக சட்டவாளர்கள் தெரிவிப்பு!

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டமையை ஆட்சேபித்து சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லப் போவதாக சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர். சட்டத்தரணிகள் கூட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சட்டத்தரணி நுவன் போபகேயின் தகவல்படி, இதற்காக தாம் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் உதவியை எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சட்டத்தரணிகளின் கூட்டு நேற்று பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை சந்தித்தனர். இதேவேளை அடுத்த பிரதம நீதியரசராக யார் நியமிக்கப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று சட்டத்தரணிகளின் கூட்டு தெரிவித்துள்ளது.

12 ஜனவரி 2013

அரசின் திட்டமிட்ட சதி!-சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரனர் எஸ். ஸ்ரீதரனின் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்திலிருந்து இன்று (12) வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரனர் எஸ். ஸ்ரீதரனிடம்  தொடர்பு கொண்டு கேட்ட போது,
இச்சம்பவத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேலன் என்று அழைக்கப்படும் வேலமா லிகிதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரான கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த வசந்தன் நேற்று (11) கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்டையிலேயே லிகிதன் கைது செய்யப்பட்டதாகவும் அலுவலகத்திலிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் வசந்தன் என்பவர் கடந்த ஆறு மாதமாக கட்சியுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை எனவும் கடந்த வாரமே அவர் மீண்டும் கட்சியுடன் இணைந்து கொண்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரனர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தனது அலுவலகத்திற்கான பாதுகாப்பு கடந்த டிசம்பர் மாதம் மூன்றாம் திகதியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து சபாநாயகர், பொலிஸ்மா அதிபர், வடமாகாண பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே இது அரசினது திட்டமிட்ட சதி என தான் சந்தேகிப்பதாக ஸ்ரீதரன் மேலும் குறிப்பிட்டார் என அத தெரண குறிப்பிட்டுள்ளது.

"முடிந்தால் புதிய பிரதம நீதியரசரை நியமியுங்கள்"அரசுக்கு அசாத்சாலி சவால்

newsபிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் அரசாங்கம் வெற்றிபெறலாம். ஆனால் புதிய பிரதம நீதியரசரை நியமிக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றோம் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க இதுவரை பதவி விலகாமல் இருக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
மேலும் குற்றப் பிரேரணையில் கையொப்பம் இட்ட அனைத்து ஆளும் கட்சி எம்.பி.க்களையும் நாங்கள் நீதிமன்றத்துக்கு அழைப்போம்.
அரசாங்கம் புதிய நீதியரசர் ஒருவரை நியமிக்க முற்பட்டால் 500 பேரின் மரணத்துக்கு மத்தியிலேயே புதிய பிரதம நீதியரசரை நியமிக்க வேண்டியேற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அமெரிக்கா விசனம்!

நம்பிக்கையில்லா தீர்மானம் அதிகாரம் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றின் உத்தரவினை மீறி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. ஜனநாயக நிறுவனங்களுக்கு இடையிலான அதிகாரப் பொறிமுறைமை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்கா
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளதுடன்
அஹிம்சை வழியில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு பூரண பாதுகாப்பை அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. நல்லாட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

11 ஜனவரி 2013

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அநாமதேய கடிதங்கள்!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர்.
தங்களது வீட்டு முகவரிகள் இந்த அநாமதேய நபர்களுக்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது குறித்தும் இவ்வாறு கிடைத்துள்ள முகவரியால் எதிர்காலத்திலும் தாங்கள் அச்சறுத்தப்படலாம் என மாணவர்களும் பெற்றோர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மாணவர்களின் முகவரியினை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு இந்தக் குழு செயற்ப்பட்டுள்ளது இதனை வைத்துப் பார்க்கும் போது அரசியல் செல்வாக்குடைய குழு ஒன்றினாலே இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்படிருக்கலாம் என மாணவ்ர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது வீட்டு முகவரிகள் எவ்வாறு கிடைந்தன? அவ்வாறு அவர்களுக்கு வழங்கியது யார் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக் கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளை குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் சார்ந்த விடயங்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு மூன்று சட்டத்தரணிகள் போட்டி!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட மூன்று சட்டத்தரணிகள் முன்வந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உபுல் ஜயசூரிய, ஆர்.ஆர்.எஸ்.தங்கராஜா மற்றும் திரந்த வலலியத்த ஆகிய மூவரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக தற்போது விஜேதாஸ ராஜபக்ஷ செயற்பட்டு வருகிறார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இவரது பதவிகாலம் முடிகிறது. அதன்பின் இரண்டாம் தடவை போட்டியிடப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
இதனால் புதியவர்கள் போட்டியிட முன்வந்துள்ளனர். இவர்களுக்கான தேர்தல் பெப்ரவரி 20ம் திகதி இடம்பெறவுள்ளது.

10 ஜனவரி 2013

குற்றவியல் பிரேரணை விவாதம் ஆரம்பம்!

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் சற்றுமுன் ஆரம்பமாகியது.
குற்றவியல் பிரேரணை சட்டத்துக்கு முரணானது என்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தன.
எனினும் தெரிவுக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்துக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அனுமதியளித்தார்.
இதனையடுத்து கடும் ஆட்சேபத்தை வெளியிட்ட ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள், சட்டத்துக்கு முரணான குற்றப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை எனக் கூறி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

வடக்கில் தமிழர்களுக்கு கருத்துச் சுதந்திரம் மறுப்பு-யாழ்.ஆயர்

newsவடக்கில் சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலையே இப்போதும் காணப்படுகிறது. மக்களை ஒன்று திரட்டிக் கூட்டங்களைக் கூட நடத்த முடியாது.
வடக்கில் தமிழ் மக்களின் பேச்சுச் சுதந்திரத்துக்குத் தொடர்ந்தும் முட்டுக் கட்டைகள் ஏற்படுத் தப்படுகின்றன. அவர்கள் சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்த அஞ்சுகின்றனர்.
இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவரிடம் சுட்டிக் காட்டினார் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை.
இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபின் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
நேற்று முற்பகல் 10.30 மணியளவில் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் அவர் சந்தித்துக் கலந் துரையாடினார்.
கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே யாழ்.ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சந்திப்புக் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
பிரான்ஸ் தூதுவரின் யாழ். வருகையின் நோக்கம் இங்குள்ள களநிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதே. போரின் பின்னர் 3 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் மக்களின் மனோநிலை என்ன? மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? வாழ்வாதாரச் செயற்பாடுகள் என்பன தொடர்பிலேயே பிரான்ஸ் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
தமிழ் மக்கள் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னமும் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. தீர்வை வழங்குவதற்குரிய நட வடிக்கைகள் எதனையும் இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை.
வடமாகாண சபைக்கான தேர்தல் இன்னமும் நடத்தப் படாமல் உள்ளது. அரசு அதை இழுத்தடித்துக் கொண்டு செல்கின்றது.
மேலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பொறுத்த வரையில், விவசாயிகள் தமது விளை பொருள்களை சந்தைப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மீன்பிடித்துறையைப் பொறுத்தவரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பில் இருநாட்டு அரசுகளுக்கும் பலமுறை தெரியப்படுத்தியும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எமது கடல்வளம் தொடர்ந்து அழிவடைந்து கொண்டே செல்கிறது.
இங்கு தொழிற்சாலைகள் இல்லாமையால் தொழில் முயற்சிகள் குறைவாகவே உள்ளன.
இரு இனங்களையும் ஒன்றிணைக்கும் செயற்பாடுகளைச் செய்யலாம்தானே? என்று பிரான்ஸ் தூதுவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்.
இங்கு சுதந்திரமான அரசியல் செயற்பாடுகள் மேற்கொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது. மக்களை ஒன்றுதிரட்டிக் கூட்டங்கள் நடத்துவதற்குக் கூட அனுமதி யில்லை. மக்களின் பேச்சுச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சுதந்திரத்துக்கு இங்கு பலமுட்டுக் கட்டைகள் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்று தூதுவரிடம் தெரிவித்தேன் என்றார்.

சிரானிக்கெதிரான குற்றப் பிரேரணை குறித்து அமெரிக்கா கவலை!

News Serviceஇலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப் பிரேரணை மற்றும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா தமது கவலையை வெளியிட்டுள்ளது. அத்துடன், நீதித்துறை மீதான நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அழுத்தம் பற்றி தீவிரமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. என்று இராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார்.
அதேவேளை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து கவலையடைவதாக இதற்கு முன்னரும் தாம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ரிசானா நபீக் குறித்து தகவல் வெளியிட அமெரிக்கா மறுத்துள்ளது.
ஏனெனில், ரிசானா நபீக் குறித்து தாம் அறிந்திருக்கவில்லை எனவும் அதுபற்றி ஆராய்ந்து கருத்து வெளியிடப்படும் எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

09 ஜனவரி 2013

கவலையுடன் காணப்பட்ட தமிழ் இராணுவப் பெண்கள்!

 இராணுவத்தின் மகளிர் படையணியில் அண்மையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் பெண்கள், நேற்றைய தினம்(08) கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கே இராணுவத் தளபதியின் பாரியாரை அவர்கள் சந்தித்துள்ளார்கள். அங்கே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இராணுவத் தளபதியின் மனைவி கலந்துகொண்டதோடு, அவர்களுக்கு விருந்தும் பரிமாறப்பட்டது. இருப்பினும் பல பெண்களின் முகத்தில் சோகத்தையே காணக்கூடியதாக இருந்ததாக, விடையம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களில் பல தமிழ்ப் பெண்கள் நோய்வாய்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர்கள் கட்டாயமாக கொழும்பு செல்லவேண்டும் என கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் மேலும் அறியப்படுகிறது. பல பெண்கள் கைகளில் மருந்து மாத்திரையோடு, இருந்ததாகவும் பின்னர் உணவருந்தச் சென்றதாகவும் மேலும் அறியப்படுகிறது.

புகலிடக் கோரிக்கையாளர்களை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

51 புகலிடக் கோரிக்கையாளாகளை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படகு மூலம் அவுஸதிரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனீ மாவட்டத்தின் க்யூ பிரிவு காவல்துறையினர் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உளவுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் புகலிடக் கோரிக்கையாளர்களில் 28 ஆண்களும், 10 பெண்களும் 13 சிறுவர் சிறுமியரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

08 ஜனவரி 2013

அவசர இடமாற்றத்தால் ஆசிரியர்கள் மத்தியில் பதற்றம்!

அவசர அவசரமான ஆசிரியர் இடமாற்றத்தை கைவிட்டு ஆசிரியர் இடமாற்ற சபையை கூட்டுமாறு கல்வி தொழிற்சங்கவியலாளர்களின் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நிறுவன சட்ட தொகுப்பை மீறி தன்னிச்சையான ஆசியர் இடமாற்றம் இடம்பெற்று வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு ஏதாவது தீர்வு வழங்காவிட்டால் எதிர்காலத்தில் அது விருத்தியடைக் கூடும் எனவும் அச்சங்கம் கோரியுள்ளது.
தற்போதைய நிலையில் அவசர ஆசிரியர் இடமாற்றத்தை கைவிட்டு முறையான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்´டும் என அதிகாரிகளிடம் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்

இலங்கையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு இலங்கை அரசு அழைப்பாணை விடுத்துள்ள பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்விமிபதில் வடிவிலான அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பிரபல வழக்கறிஞரும், ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரனுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டத்திற்குப் புறம்பாக தீவிரவாதிகளை ஆதரிப்பதாகச்சொல்லி, அதற்கு விளக்கமளிக்க வேண்டுமென்று இலங்கை அரசு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராகும்படி தகவல் வந்துள்ளதாம். இதில் இருந்து இலங்கை அரசு எப்படியெல்லாம் தமிழர்களை குறி பார்த்து குறுக்கு வழியில் பழி வாங்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த நிலைமைகளையெல்லாம் போக்கிடத்தான் தி.மு.க. சார்பில் டெசோ மாநாடு நடத்தி, உலக நாடுகளின் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அதன் தீர்மானங்களை மத்திய அரசுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் நேரடியாகவே வழங்கியிருக்கிறோம்.
இப்போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டுமென்று வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

07 ஜனவரி 2013

கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை தொடர்பிலான விவாதம்
நடாத்துவது குறித்து இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சியின் தலைவர்கள் இந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பிரதி சபாநயாகர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 11ம் திகதி மாலை 6.30 அளவில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்hளார்.
இதன் அடிப்படையில் பிரதம நீதியரசர் இந்த வார இறுதியில் பதவியிலிருந்து நீக்கப்படக் கூடிய சாத்தியங்கள் வெகுவாக காணப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழு விவாதத்தின் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அது தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம நீதியரசர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதம நீதியரசரை பதவி விலக்கினால் நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பிலான மக்களின் நம்பிக்கையில் பலவீனமடையும் எனவும் ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு சில வெளிநாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

அறிக்கையை இரத்துச் செய்யுமாறு உத்தரவு!

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை இரத்துச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சட்டவலுவற்றது என உயர்நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

06 ஜனவரி 2013

இந்திய நாட்டின் பிரதமராகக்கூடிய தகுதி வாய்ந்தவர் வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மிகவும் திறமையானவர். இந்திய நாட்டின் பிரதமர் ஆக கூடிய தகுதி வாய்ந்தவர் வைகோ. அப்படி ஒரு வாய்ப்பு உருவாகுமானால், என்னுடைய ஓட்டு வைகோவுக்குத்தான் என முன்னாள் சட்ட அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான ராம்ஜேத்மலானி தெரிவித்துள்ளார்.
’’ஈழத்தில் இனக்கொலை... இதயத்தில் இரத்தம்...’’ என்ற தலைப்பில் வைகோ தயாரித்த ஒளிப்படக் குறுவட்டு மற்றும் புத்தகம், இந்தி மற்றும் ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டு டெல்லியில் வெளியிடபட்டது. அது தற்போது மராத்தி மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா நேற்று மும்பை செம்பூரில் உள்ள பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி அரங்கில் நடைபெற்றது.
புத்தகம் மற்றும் ஒளிப்பட குறுவட்டை, மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினருமான ராம்ஜேத்மலானி வெளியிட்டு உரையாற்றினார்,
ஈழதமிழர்களுக்காக வைகோ தொடர்ந்து போராடி வருகின்றார். அவர் ஒரு தனிமனித ராணுவம். இங்கே உணர்ச்சிகரமாக அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை கேட்டேன். அந்த அளவுக்கு உணர்ச்சிகரமாக என்னால் பேச முடியாது. யாராலும் பேச முடியாது. தாம் எடுத்து கொண்ட கருத்தை ஆணித்தரமாக உறுதியாக எடுத்துரைப்பதில் வைகோவிற்கு நிகர் வைகோதான்.
2011ம் ஆண்டு வைகோ என்னிடம் வந்தார். ஒரு பிரச்சினையில் உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றார். என்ன பிரச்சனை? என்றேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளவர்களை பற்றி அவர் கூறினார். எனக்கு அது ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை. ஏன் என்றால் அவர்கள் குற்றவாளிகளே அல்ல. அவர்கள் மீதான குற்ற பத்திரிக்கை நான் படித்த அளவில் இதை நான் அறிந்து கொண்டேன். எனவேதான் தடை ஆணை பெற முடிந்தது.
மராத்தி மொழியில் தயாரித்து வெளியிட்டு இருக்கின்ற இந்த புத்தகம் இலங்கை தமிழர்கள் பட்ட இன்னல்களை அவர்கள் அனுபவித்த வேதனைகளை முழுமையாக எடுத்துரைகின்றது.
இந்தியாவின் அணைத்து மாநில மக்களுக்கும் இந்த கருத்துக்கள் சென்று சேரவேண்டும் என்பதற்காக வைகோ இந்த முயற்ச்சிகளை மேற்கொண்டு உள்ளார். மராத்தி மொழியில் இதை வாசிக்கின்றவர்களுக்கு, இலங்கையில் நடந்த கொடூரங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். ஈழதமிழர்களுக்காக வைகோ மேற்கொண்டுள்ள முயற்ச்சிகளை நான் பாராட்டுகின்றேன்.
நான் வைகோவை நேசிக்கிறேன். வைகோ உங்களை நேசிக்கிறார், அதனால் நானும் உங்களை நேசிக்கிறேன். தமிழர்களுடைய பண்பாடு, பழக்க வழக்கங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். வைகோவை நல்ல நண்பராக ஏற்று கொண்டு இருக்கின்றேன். அவர் மிகவும் திறமையானவர் இந்திய நாட்டின் பிரதமர் ஆக கூடிய தகுதி வாய்ந்தவர் வைகோ. அப்படி ஒரு வாய்ப்பு உருவாகுமானால், என்னுடைய ஓட்டு வைகோவுக்குத்தான் என்று கூறி தன் உரையை நிறவுசெய்தார் ராம்ஜேத்மலானி.

அரச சார்பற்ற நிறுவனங்கள் - அமெரிக்கா – புலம் பெயர் புலிகள் இணைந்து சதி என்கிறது இலங்கை

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை, ஜெனிவா மனித உரிமை பேரவையின் மாநாட்டில் சமர்பிக்க இலங்கையில் உள்ள மூன்று அரசசார்பற்ற நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் 2012 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் புலம்பெயர் புலிகளுடன் இணைந்து, இலங்கைக்கு எதிராக செயற்பட்ட நிறுவனங்கள் என்பது தெரியவந்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் சம்பந்தமான அறிக்கையை இந்த நிறுவனங்கள் ஏற்கனவே, ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளன. ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் இரண்டு பேர் இது தொடர்பாக இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெனிவா மனித உரிமை பேரவையின் மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் மார்ச் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

03 ஜனவரி 2013

கொழும்பு திரும்புமாறு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு கோத்தா உத்தரவு!

சிறிலங்காவின் தலைமை நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, மக்கள் எழுச்சி கொள்ளச் சாத்தியம் இருப்பதால், அதை அடக்குவதற்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ‘லங்கா நியூஸ்வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான பிரதித்தூதுவராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவினால், இம்மாதம் 4ம் நாள் தொடக்கம் 20ம் நாள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தனக்கு மிகவும் நம்பிக்கையான அதிகாரி என்ற வகையில், இந்தப் பணியை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் ஒப்படைக்க பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கொழும்புக்கு பயணமாவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
2010 அதிபர் தேர்தலுக்குப் பின்னர், சினமன்கிரான்ட் விடுதியில் சரத் பொன்சேகாவை தடுத்து வைத்திருந்த போது, ராஜபக்ச அரசாங்கத்துக்காக எல்லாவிதமான அழுக்குப் பணிகளையும் ஆற்றியவர் இவர்.
வரும் 8ம் நாள் அதே பணி மீண்டும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் ‘லங்கா நியூஸ்வெப்‘ செய்தி வெளியிட்டுள்ளது.

பல்கலை மாணவர் கைது கவலையளிக்கின்றது!

யாழ்.பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் மாணவர்களது கைதானது கவலையளிப்பதாக யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஓ. எல். ஆர் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற 2012ஆம் ஆண்டிற்கான கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வில் ஆசியுரையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவும் கலந்துகொண்டார். இங்கு யாழ். ஆயர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதனையடுத்து தற்போது கல்வி சார் சகல செயற்பாடுகளையும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளமை மாணவர்களின் கல்வியினை மேலும் பாதிப்பதாக அமையும். இந்த நிலைமை மேலும் நீடிக்காமல் சம்பந்தப்பட்ட சகலரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” – என்றார்.

பிரதம நீதியரசரை தண்டிக்கும் சட்ட அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இல்லை!

பிரதம நீதியரசரை குற்றவாளி என அறிவித்து அவரை தண்டிக்கும் சட்ட ஆணை, அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை சட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு சட்ட அதிகாரம் கொண்டதல்ல என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ள வியாக்கியானத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் தாக்கல் செய்த ரீட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபதிகளான ஸ்ரீஸ்கந்தராஜா, அனில் குணரத்ன, டபிள்யு.சலாம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது உயர் நீதிமன்றின் வியாக்கியானம் வெளியிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டு விசாரிக்கப்படுகின்றமை நீதிபதியின் உரிமை மற்றும் நீதிமன்ற கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை சட்ட அதிகாரம் உள்ள நிறுவனமே விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற வியாக்கியானத்தில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக்குழு அரசியல் அமைப்பின் 107 (1) சரத்தின் கீழும் 78 (ஏ) என்ற பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழும் அமைக்கப்பட்ட ஒன்று என்பதால் அதற்கு நீதிமன்ற அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்ற வியாக்கியானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர் நீதிமன்ற தீர்ப்பொன்றின் மூலம் பாராளுமன்ற தெரிவுக்குழு இரத்து செய்யப்படும் என்ற அடிப்படையிலேயே பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

02 ஜனவரி 2013

ஈழப்போர் படுகொலை ஆவணம் அனைத்து மொழிகளிலும் வெளியீடு - வைகோ

ஈழப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பான நிகழ்வு தொகுப்பை அனைத்து மொழியிலும் வெளியிட்டு வருகிறோம்.
வருகிற 5ஆம் திகதி மராத்தி மொழியில் வெளியிடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதில் ராம்ஜெத்மலானி கலந்து கொள்கிறார். அடுத்து பஞ்சாபி, காஷ்மீரி மொழியிலும் வெளியிடுகிறோம்.
தமிழகத்தை இப்போது மிகவும் அச்சுறுத்திக் கொண்டு இருப்பது மது. டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, ஸ்ரீவைகுண்டத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது.
இவை அனைத்திற்கும் மதுதான் காரணம். எனவே பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும். இதற்காக ம.தி.மு.க. போராடி வருகிறது.
நான் நடத்திய நடைபயணத்தில் மதுவுக்கு எதிராக மக்கள் குறிப்பாக பெண்கள் குமுறிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது. எனவே பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.