28 ஜனவரி 2013

புலிகள் மீதான தடை நீடிப்புக்கு விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடர்பில் 4 வாரத்தில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பு செய்து மத்திய அரசு கடந்த 14.5.2012 அன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம் விசாரித்தது. அதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பு செய்தது தவறு என வாதிட்டார். இருப்பினும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பு செய்தது சரியே என கடந்த 7.11.2012 அன்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழ்நாட்டை பிரித்து தமிழ் ஈழம் அமைக்க வேண்டும் என்பது விடுதலைப்புலிகளின் நோக்கம் அல்ல. உலகில் வாழும் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் தனிநாடு வேண்டும் என்பதும் அவர்களின் நோக்கமல்ல.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் ஈழ தமிழர்களுக்கு தனிஈழம் அமைய வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். ஆனால் இதை மத்திய அரசு தவறாக எண்ணி விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பு செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும்.
இது குறித்த தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையொட்டி வைகோ நீதிமன்றில் நேரில் ஆஜராகி வாதாடினார். அப்போது, ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு செய்தது சரியே என்று கூறிய தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து இந்த நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தேன். அதில் வாதம் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 2012-ல் தடை நீட்டிப்பு செய்ததை எதிர்த்தும் மனு தாக்கல் செய்துள்ளேன்.
இந்த தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் 4 வாரத்தில் விளக்கம் அளிக்கு மாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இடையில் புகுந்த காங்கிரஸ் கட்சி கரை வேட்டி அணிந்திருந்த முதியவர் ஒருவர் குறுக்கிட்டார். வைகோ பொய் சொல்லாதே.... பொய் சொல்லாதே என பலத்த குரலில் கோஷமிட்டார். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
ம.தி.மு.க.வினர் அந்த முதியவரை அடிக்க பாய்ந்தனர். உடனே அங்கிருந்த சட்டத்தரணிகள் அவர்களை தடுத்து முதியவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து வைகோ தனது பேட்டியை முடித்து கொண்டு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது அந்த முதியவரை கட்சியினர் யாரும் தாக்க கூடாது என அறிவுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக