30 ஜனவரி 2013

சிறீலங்காவில் எப்பகுதியிலும் படைகளை நிறுத்தும் உரிமை எமக்குண்டு-ஹத்துருசிங்க

தனது படைகளை எங்கு வேண்டுமானாலும் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு முழு உரிமையும் உள்ளது என்ற கருத்தை அமெரிக்க உயர்மட்டக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர்கள் விக்ரம்சிங், ஜேம்ஸ் மூர், ஜேன் சிம்மர்சன் ஆகியோர், யாழ். படைகளின் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவை சந்தித்துப் பேசியிருந்தனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க,
“சிறிலங்கா படையினர் எந்தவகையிலும் குடியியல் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை.
தெற்கில் உள்ளதைப் போன்றே வடக்கிலும் வழமையான நடைமுறைகளின் படியே குடியியல் நிர்வாகம் இடம்பெறுகிறது.
கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்துடன் கலந்துரையாடிய பின்னர், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை கூடிய விரைவில் குறைப்பதற்கு இராணுவம் திட்டமிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் எங்கெங்கு படையினரை நிறுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை இறைமையுள்ள நாடு என்ற வகையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது என்பதையும், அதபற்றி எவரும் கவலைப்படக் கூடாது என்பதையும் அமெரிக்க குழுவினர் ஏற்றுக் கொண்டனர்.
யாழ். குடாநாட்டில், 2008இல் 40 ஆயிரம் சிறிலங்காப் படையினர் நிலைகொண்டிருந்தனர். 2009 டிசம்பரில் இது 27,200 ஆக குறைக்கப்பட்டது.
இந்த எண்ணிக்கை தற்போது மேலும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது 13,100 படையினரே யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக