13 ஜனவரி 2013

அம்பாறையில் தமிழர் பகுதிகளில் புதிய முகாம்களை நிறுவும் சிறிலங்கா இராணுவம்!

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் ஆகிய தமிழ் பிரதேசசெயலர் பிரிவுகளில் சிறிலங்கா இராணுவத்தின் மூன்று புதிய முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
இது அங்கு வசிக்கும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மூன்று புதிய சிறிலங்கா இராணுவ முகாம்களில் இரண்டு கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
அவற்றில் ஒன்று ஆலையடிவேம்பில் இராமகிருஸ்ண வீதியிலும், இன்னொன்று நாவிதன்வெளி வேலடி வளவு என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியிலும் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் காணியின் உரிமையாளர்கள் பிரித்தானியாவில் தற்சமயம் வசித்து வருகின்றனர்.
அதேவேளை, இதற்கு 20 தினங்களுக்கு முன்னர், திருக்கோயில் பிரதேச செயலகம் முன்னர் இயங்கி வந்த பழைய கட்டடம் ஒன்றில், இன்னொரு புதிய சிறிலங்கா இராணுவ முகாம் திறக்கப்பட்டது.
அதற்கு அருகில் கள்ளித்தீவு என்னுமிடத்தில் நிரந்தர சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்று இருக்கும் நிலையில் இந்தப் புதிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், கிழக்கில் குடியியல் நிர்வாகத்தை இராணுவ மயப்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக இந்தப் புதிய முகாம்கள் அமைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் அப்பிரதேச மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக