10 ஜனவரி 2013

வடக்கில் தமிழர்களுக்கு கருத்துச் சுதந்திரம் மறுப்பு-யாழ்.ஆயர்

newsவடக்கில் சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலையே இப்போதும் காணப்படுகிறது. மக்களை ஒன்று திரட்டிக் கூட்டங்களைக் கூட நடத்த முடியாது.
வடக்கில் தமிழ் மக்களின் பேச்சுச் சுதந்திரத்துக்குத் தொடர்ந்தும் முட்டுக் கட்டைகள் ஏற்படுத் தப்படுகின்றன. அவர்கள் சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்த அஞ்சுகின்றனர்.
இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவரிடம் சுட்டிக் காட்டினார் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை.
இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபின் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
நேற்று முற்பகல் 10.30 மணியளவில் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் அவர் சந்தித்துக் கலந் துரையாடினார்.
கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே யாழ்.ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சந்திப்புக் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
பிரான்ஸ் தூதுவரின் யாழ். வருகையின் நோக்கம் இங்குள்ள களநிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதே. போரின் பின்னர் 3 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் மக்களின் மனோநிலை என்ன? மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? வாழ்வாதாரச் செயற்பாடுகள் என்பன தொடர்பிலேயே பிரான்ஸ் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
தமிழ் மக்கள் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னமும் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. தீர்வை வழங்குவதற்குரிய நட வடிக்கைகள் எதனையும் இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை.
வடமாகாண சபைக்கான தேர்தல் இன்னமும் நடத்தப் படாமல் உள்ளது. அரசு அதை இழுத்தடித்துக் கொண்டு செல்கின்றது.
மேலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பொறுத்த வரையில், விவசாயிகள் தமது விளை பொருள்களை சந்தைப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மீன்பிடித்துறையைப் பொறுத்தவரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பில் இருநாட்டு அரசுகளுக்கும் பலமுறை தெரியப்படுத்தியும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எமது கடல்வளம் தொடர்ந்து அழிவடைந்து கொண்டே செல்கிறது.
இங்கு தொழிற்சாலைகள் இல்லாமையால் தொழில் முயற்சிகள் குறைவாகவே உள்ளன.
இரு இனங்களையும் ஒன்றிணைக்கும் செயற்பாடுகளைச் செய்யலாம்தானே? என்று பிரான்ஸ் தூதுவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்.
இங்கு சுதந்திரமான அரசியல் செயற்பாடுகள் மேற்கொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது. மக்களை ஒன்றுதிரட்டிக் கூட்டங்கள் நடத்துவதற்குக் கூட அனுமதி யில்லை. மக்களின் பேச்சுச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சுதந்திரத்துக்கு இங்கு பலமுட்டுக் கட்டைகள் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்று தூதுவரிடம் தெரிவித்தேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக