29 ஜனவரி 2013

யாழ். அசம்பாவிதங்களின் பின்னணி படையினரா? துணைப்படையினரா?

யாழ்.மாவட்டத்தில் கடந்த சிலமாதங்களாக இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னணியில் உள்ளவர்கள் படையினரா? துணைப் படையினரா? இவ்வாறு கேள்வியெழுப்பினார் யாழ். வந்த ஆஸ்திரேலிய எதிர்க் கட்சியின் பிரதித் தலைவர் ஜீலிபிஷப்.
யாழ்.மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த ஆஸ்திரேலியக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடினர்.
ஆஸ்திரேலியாக் குழுவில் எதிர்க்கட்சியின் பிரதித்தலைவர் , ஆஸ்திரேலிய எல்லைப்
பாதுகாப்புப் பேச்சாளர் மைக்கல் கீன்,லிபிரல் கட்சியின் பேச்சாளர் பிஷப் ஆகியோர் அடங்கியிருந்தனர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பிரதேசசபைகளின் தலைவர்கள்,மாநகரசபை முன்னாள் ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆஸ்திரேலியாவுக்கு அதிகளவான தமிழ் மக்கள் இங்கிருந்து தஞ்சக் கோரிக்கையுடன் வருகின்றனர். அவர்கள் அருகிலுள்ள இந்தியாவுக்குச் செல்லாமல் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு ஏன் ஆஸ்திரேலியாவுக்கு வருகின்றனர்? என ஆஸ்திரேலியக் குழுவினர் இதன்போது கேள்வி எழுப்பினர்.
உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை:
இதற்கு பதில்அளித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைத் தலைவர்கள் தமிழ் மக்கள் இங்கு வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை இல்லை. அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.
படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்களின் மிரட்டல்களினால் அவர்களால் இங்கு வாழ முடியாத நிலைமை காணப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவளித்தோர் மற்றும் எமது கட்சிக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ) ஆதரவுஅளிப்போரை அச்சுறுத்தும் வகையிலேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசை விமர்சித்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் காரணமின்றிக்கைது செய்யப்படுகின்றனர் .கடந்த இரண்டு மாதங்களில் 46 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி நகரசபையில் உறுப்பினரொருவர் சபையின் கூட்டத்தொடரில் இராணுவ அத்து மீறல் தொடர்பில் எடுத்துரைத்தமைக்காக அவர் இராணுவத்தால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் தினத்தன்று விளக்கேற்றியமைக்காக ஆண்,பெண் விடுதிகளுக்குள் படையினர் அத்துமீறிப் புகுந்து அராஜகத்ததில் ஈடுபட்டனர். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
நிம்மதியாக வாழ முடியாது:
இதனால் தமிழ் மக்கள் போர் முடிந்த பின்னர் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை காணப்படுகின்றது. அதனாலேயே இந்தியாவை விட பாதுகாப்பான நாடு என்று ஆஸ்திரேலியாவை அவர்கள் கருதுவதால் அங்கு வருகின்றனர் என்று பதில்அளித்தார்.
இதன் பின்பு கேள்வி எழுப்பிய ஆஸ்திரேலியக்குழுவினர், இதற்காக எவ்வளவு பணத்தைச் செலவு செய்கின்றனர்? அதனை அவர்கள் அவ்வாறு மீளச் செலுத்துகின்றனர் எனக் கேள்வி எழுப்பினர்.
பத்து இலட்சம் ரூபாவரை ஆஸ்திரேலியப் பயணத்துக்காக செலவு செய்கின்றனர். முதலில் ஒரு இலட்சம் ரூபா பணத்தைக் கட்டி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு தரையிறங்கிய பின்னர் இங்குள்ள உறவினர்கள் மிகுதிப் பணத்தைச் செலுத்துகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பதிலளித்தனர்.
ஆஸ்திரேலிய அரசு தமிழர்கள் அங்கு வருவதை தடை செய்தால் தப்பித்துச் செல்லும் மக்கள் என்ன செய்வார்கள் என்று ஆஸ்திரேலியக் குழுவினர் கேள்வியெழுப்பினர்.
இன்னொரு நாட்டுக்கு நிச்சயமாக அவர்கள் தப்பித்துச் செல்வார்கள் என்று பிரதேச சபைத்தலைவர்கள் கூறினார்கள்
சரி,இங்கு கடந்த ஆறுமாதகாலமாகப் பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்றன என்று சொல்கின்றீர்கள்.இவற்றைச் செய்வது படையினரா அல்லது துணைப்படையினரா என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி பிரதித் தலைவர் கேள்வியெழுப்பினார்.
யார் செய்கின்றார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் அரசை விமர்சிப்பவர்கள், அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர் .
இதேவேளை நேற்றுக்காலை மல்லாகத்தில் உள்ள கோணபுலம் நலன்புரி நிலையத்திற்கு ஆஸ்திரேலியக் குழுவினர் சென்றனர். அவர்களுடன் வலி.வடக்குப் பிரதேச சபைத்தலைவர் சோ. சுகிர்தனும் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக