25 ஜனவரி 2013

கோத்தபாயவின் அடாவடிக் கருத்துக்கு மனோ பதிலடி!

காணாமல் போனவர்கள் என்று யாருமில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ சொல்லுவதை எந்த ஒரு அடிப்படையிலும் ஏற்றுகொள்ள முடியாது. உலகறிந்த இந்த மகா உண்மையை இவர் ஒன்றுமில்லை என சொல்லுவது காணாமல் போன தமது உறவுகளை தேடி திரியும் அப்பாவி குடும்ப உறவுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
குரலற்ற இந்த அப்பாவி மக்களுக்கு குரலாக நாம் அன்றும் இருந்தோம்; இன்றும் இருக்கிறோம்; என்றும் இருப்போம் என்பதை இந்த அரசாங்கத்துக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் அமைப்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, காணமல் போனோர் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் கருத்து கூறிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது.
யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் வன்னியில் வாழ்ந்த சனத்தொகை எவ்வளவு என்பது கூட இந்த அரசாங்கத்துக்கு ஒருபோதும் தெரிந்து இருக்கவில்லை. இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் வன்னியின் சனத்தொகை 70,000 மாத்திரமே என்று இவர்கள் சொன்னார்கள். ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்த போது இவர்களது இடம்பெயர் முகாம்களுக்கே 300,000 லட்சம் மக்கள் வந்து சேர்ந்தார்கள்.
ஆகவே இவர்களது கணக்குபடியே ஏறக்குறைய 230,000 மக்கள் மேலதிகமாக இருந்துள்ளார்கள். ஆனால், உண்மையில் வன்னியின் சனத்தொகை ஏறக்குறைய 450,000 என்பது புள்ளிவிபரப்பட்டியல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இது யுத்தத்தின் போது வன்னியில் இருந்த ஆடு, மாடு, கட்டாக்காலி நாய்களின் தொகைகள் அல்ல. மாந்தர்களின் கணக்கைத்தான் நாம் சொல்கிறோம். எனவே சனத்தொகை கணக்கு தெரியாத அரசாங்கம் கணக்கு போட்டு பார்த்த்கொள்ள வேண்டும்.
கணக்கு தெரியாத அரசாங்கம் இன்று புதிய கணக்கு காட்டுகிறது. யுத்தத்தின் போது எவரும் காணாமல் போகவில்லை என இன்று புதுக்கதை பேசுகிறது. இதை நாம் ஏற்று கொள்ளமாட்டோம். உலகமும் ஏற்று கொள்ளாது.
வன்னி யுத்தத்தில் இருந்து தப்பி வந்த அனைத்து மக்களும் இந்திய ராணுவ மருத்துவ பிரிவு நடத்திய மருத்துவமனைகளுக்கும், சர்வதேச செஞ்சிலுவை சங்க மருத்துவமனைகளுக்கும் சென்று அவற்றின் மூலமாகவே அரசாங்கம் நடத்திய முகாம்களுக்கு வந்து சேர்ந்தார்கள் என பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார். இது உண்மை அல்ல. ஒரு பகுதியினர் மாத்திரமே இப்படி வந்தார்கள். ஒரு பகுதியினர் நேரடியாக அரச படைகளால் கைது செய்யப்பட்டார்கள் அல்லது படையினரிடம் சரணடைந்தார்கள்.
இன்று நாம் இலங்கையில் உள்ள இந்திய தூதரிடமும், கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும் இதுபற்றி கேள்வி எழுப்புகிறோம். யுத்தத்தில் இருந்து தப்பி வந்து முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களும் தங்கள் அமைப்புகள் மூலமாகவே வந்து சேர்ந்தார்கள் என்பதை இந்திய இராணுவ மருத்துவ பிரிவும், சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் உறுதி செய்ய முடியுமா? இதுபற்றி மக்கள் கண்காணிப்பு குழுவின் சார்பாக நான் எழுத்துமூலம் இவர்களிடம் பதில் கோரியுள்ளேன்.
இறுதி யுத்ததிற்கு முன்னரே தலைநகர் பகுதியில் மாத்திரம் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டார்கள். கடத்தப்பட்டோர் தொடர்பாக முழு விபர பட்டியலை நான் அப்போது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் இலங்கை பிரதமரிடம் கையளித்தேன்.
அப்போது கூட இந்த அரசாங்கம் அதை மறுத்து நம்ப முடியாத கதைகளை பேசி என்னை அச்சுறுத்தியது. எனவே கணக்கு தெரியாத அரசாங்கத்திடம் கணக்கு கேட்டு பயனில்லை என்பதால் தான் நமது பிரச்சினைகளை நாம் சர்வதேசத்துக்கு கொண்டு சென்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக