30 ஜனவரி 2013

வவுனியாவில் தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தை தடுக்க நினைத்த றிசாத் பதியுதீன் தரப்பிற்கு தோல்வி!

சிவசக்தி ஆனந்தன்
வவுனியாவில் இந்திய அரசின் ஆதரவுடனான வீடமைப்புத் திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்து வவுனியா மாவட்ட மீளக்குடியர்ந்தோர் நலன்பேணும் அமைப்பினால் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக காவல்துறையினர் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை இன்று மீண்டும் ஆரம்பித்த வவுனியா மாவட்ட நீதிமன்றம் அதற்கான அனுமதி வழங்கி உள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழர்கள் நடத்தும் போராட்டத்திற்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஆதரவான முஸ்லீம் தரப்பினரும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். அவர்களையும் நீதிபதி இன்று அழைத்திருந்தார். இன்று காலை 8.30மணியளவில் நீதிமன்றில் இரு தரப்புப் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கேட்ட நீதிபதி தமிழர் தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கினார்.
வவுனியா மாவட்ட மீளக்குடியர்ந்தோர் நலன்பேணும் அமைப்புடன் வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தார். முஸ்லீம்களின் போராட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்துமாறும் நீதிபதி தெரிவித்துள்ளார். இதன்படி தமிழர் தரப்பினரது கவனயீர்ப்புப் போராட்டமும் மகஜர் கையளிப்பும் இன்று வவுனியா நகரில் நடைபெறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக