07 ஜனவரி 2013

கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை தொடர்பிலான விவாதம்
நடாத்துவது குறித்து இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சியின் தலைவர்கள் இந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பிரதி சபாநயாகர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 11ம் திகதி மாலை 6.30 அளவில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்hளார்.
இதன் அடிப்படையில் பிரதம நீதியரசர் இந்த வார இறுதியில் பதவியிலிருந்து நீக்கப்படக் கூடிய சாத்தியங்கள் வெகுவாக காணப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழு விவாதத்தின் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அது தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம நீதியரசர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதம நீதியரசரை பதவி விலக்கினால் நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பிலான மக்களின் நம்பிக்கையில் பலவீனமடையும் எனவும் ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு சில வெளிநாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக