09 ஜனவரி 2012

இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆபிரிக்க நாடுகள் எடுக்கக்கூடும்?

எதிர்வரும் மார்ச் மாதம் சுவிஸ் நாட்டுத் தலைநகர் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆபிரிக்க நாடுகள் எடுக்கும் என்று நம்பப்படுவதாக இங்கு டர்பனில் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்கும் அவை ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசு மீதான போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து, ஜெனிவா கூட்டத் தொடரில் மேற்கு நாடுகளால் இலங்கக்கு எதிரான பிரேரணை ஒன்று கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு பிரேரணை கொண்டு வரப்பட்டால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை ஆபிரிக்க நாடுகள் எடுக்கும் என்ற நம்பிக்கையே இங்கு நிலவுகின்றது.
ஆபிரிக்க காங்கிரஸின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தென்னாபிரிக்கா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர் இங்கு ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய பின்னர், இந்த நம்பிக்கையை டர்பனில் இராஜதந்திர வட்டாரங்கள் வெளியிட்டன.
கூட்டமைப்பினருக்கும் ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பில், இலங்கை அரசுடனான பேச்சுக்களின் முன்னேற்றம் குறித்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கி உள்ளனர்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்த போராட்டம், தமிழ் மக்கள் கொண்டுள்ள அரசியல் நிலை, தற்போதைய கள நிலவரம் போன்ற பல தரப்பட்ட விடயங்கள் குறித்தும் ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் கூட்டமைப்பு கலந்துரையாடியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை குறித்தும் விரிவாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அழைப்பை நிராகரித்தது இலங்கை இதேவேளை, தென்னாபிரிக்காவை ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
இலங்கை அரசுக்கு சமமாக உலகத் தமிழர் பேரவைக்கும் அதிகாரபூர்வ இடம் ஒதுக்கப்பட்டதாலேயே, இந்த நிகழ்வைப் புறக்கணித்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இல்லையேல், வெளிவகார அமைச்சர் ஜி.எஸ் பீரிஸ் இந்த நிகழ்வில் பங்கேற்றிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

08 ஜனவரி 2012

நூற்றாண்டு விழாவில் உலகத் தமிழர் பேரவை பங்கேற்பதால் அழைப்பை நிராகரித்தது ஸ்ரீலங்கா!

தென்னாபிரிக்காவை ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பிரி்த்தானியாவை தளமாக கொண்ட உலகத் தமிழர் பேரவை இந்த விழாவில் பங்கேற்பதாலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளது.
டர்பனில் இன்று நடைபெறு்ம் ஆபிரிக்கத் தேசிய காரங்கிரசின் நூற்றாண்டு விழாவில் 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
சிறிலங்கா அரசுக்கு சமமாக உலகத் தமிழர் பேரவைக்கு அதிகாரபூர்வ இடம் ஒதுக்கப்பட்டதாலேயே, இந்த நிகழ்வைப் புறக்கணித்ததாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இல்லையேல், சிறிலங்கா வெளிவகார அமைச்சர் ஜி.எஸ் பீரிஸ் இந்த நிகழ்வில் பங்கேற்றிருப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்கு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா.எஸ்.ஜே.இம்மானுவெல் தலைமையிலான குழுவொன்று தற்போது தென்னாபிரிக்கா சென்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்கச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலகத் தமிழர் பேரவையும் தனியாக சந்தித்துப் பேசவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக ஜே.வி.பியின் கிளர்ச்சிக்குழு பிரான்சில் போராட்டம்.

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்றுள்ள கிளர்ச்சிக் குழுவினர் பிரான்ஸில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமே அண்மையில் பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமும் ஆகும். யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் கடத்தல், காணாமல் போக்குதல் போன்ற சம்பவங்களுக்கு எதிராக இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை அண்மையில் நடத்தியிருந்தனர். வர்ண டீப்த ராஜபக்ஷ என்பவர் தலைமையில் செயற்படும் இந்தக் குழுவினர் இலங்கை அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களைத் தமிழிலும் வெளியிட்டு பிரான்ஸின் பல இடங்களிலும் விநியோகித்தும் வருகின்றனர்.

07 ஜனவரி 2012

பிரித்தானியாவிலும் தேசியத் தலைவரின் படத்துடன் அஞ்சல் தலை!

அண்மைக் காலமாக வெளிநாடுகளில் தமிழீழ தேசியத் தலைவர் உட்பட தமிழீழ தேசிய சின்னங்களும் முத்திரைகளில் பொறித்து வெளியிடப்பட்டு வருகின்றது.
அதைப்போலவே பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் படம் பிரித்தானியக் கொடியோடு சேர்த்து வெளியிட்டதில் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் [www.rste.org]ஆகிய நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். இதைப்போன்ற முத்திரைகளை பிரித்தனியாவைச் சேர்ந்த எவரும் வெளியிடலாம் என்றபோதும். படங்கள் சிறந்த ஆய்வுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும்.
அப்படி அனுமதிக்காவிடின் கட்டிய பணத்தை திரும்பத்தருவார்கள் என்பது சட்டம். ஆகவே தேசியத் தலைவரின் படம் அடங்கிய முத்திரைக்கு ரோயல் மெயில் ஒப்புதல் அளித்தே வெயிளிட்டுள்ளது.
இந்த முத்திரை முதலாம் தர [first class stamp]முத்திரையாகும், இதை உலக நாடுகள் முளுவதுக்கும் அனுப்பப்படும் கடிதங்களில் ஒட்டி அனுப்பலாம்.
ஆனால் சாதாரன முதல் தர முத்திரையை விட இந்த முத்திரை சற்று விலை அதிகம். முத்திரை தேவைப்படின் எமது info@rste.org மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.

ஊடகவியலாளரை பொலிசாரிடம் மாட்டிவிட்டார் இமெல்டா!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஓருவர் நேற்று யாழ்.காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மூன்று மணி நேரம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் செய்த முறைப்பாட்டை அடுத்தே காவற்துறையினர் குறித்த ஊடகவியலாளரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றதுடன் அங்கு தடுத்து வைத்து மூன்று மணி நேரம் விசாரணைக்கு உள்ளாக்கி உள்ளனர்.
குடாநாட்டிற்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை தனித்து சந்திக்க யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமாரிற்கு வடமாகாண ஆளுநர் சந்திரசிறி தடைவிதித்திருந்தார். அத்துடன் தனது மாளிகையில் தன்னுடன் இணைந்து பேச மட்டுமே அவர் அனுமதி அளித்துமிருந்தார்.
இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அரச அதிபரது இப்பாய்ச்சல் நடத்துள்ளது. முன்னதாக தொலைபேசி வழியாக ஊடகங்கள் சிலவற்றிற்கு தொடர்பு கொண்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தான் இனிமேல் ஊடகவியலாளர்களை எச்சந்தர்ப்பத்திலும் சந்திக்கப் போவதில்லையென கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து யாழ் ஆயர் இல்லத்தில் குழுவினருடன் இடம்பெற்ற பேச்சுக்களின் போதும் அவர் ஊடகவியலாளர்களுடன் பாய்ந்து விழுந்துள்ளார். இதன் பின்னரே அவர் முறைப்பாடொன்றினை யாழ்.காவல் நிலையத்தில் செய்ததாக நம்பப்படுகின்றது.
முன்னதாக யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய பணிப்பாளரது பாலியல் மற்றும் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியதான குற்றச்சாட்டின் பேரில் அவர் செய்த முறைப்பட்டையடுத்து மூன்று இணைய ஊடகவியலாளர்கள் விசாரணைகளை எதிர் கொண்டிருந்தனர். அவர்களுள் இக்குறித்த ஊடகவியலாளரும் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து அச்சுறுத்தும் வகையிலான இத்தகைய பழிவாங்கல் மோசமானதொரு சூழலையே ஏற்படுத்துமென யாழ்.மாவட்டத்தை சேர்ந்த ஊடக அமைப்புக்கள் அனைத்தும் எச்சரித்துள்ளன. பரபரப்பு செய்திகளுக்கென எம்மைப் பயன்படுத்திக் கொள்ளும் புலம்பெயர் ஊடக நண்பர்கள் நெருக்கடிகள் எழும் வேளையில் மௌனம் காப்பதாக யாழ் ஊடகவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அனைத்துலக விசாரணை பொறிமுறையை உருவாக்க நேரிடும்"அமெரிக்கா எச்சரிக்கை.

போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரத்தில் இலங்கை அரசு தனது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியும். இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று அவசியம் என்பதை அமெரிக்கா ஏற்கனவே தெரிவித்துவிட்டது.இவ்வாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனிதஉரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் மைக்கல் எச்.போஸ்னர் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் தலையிடக்கோரும் மனு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு இணையத்தளம் மூலம் அனுப்பப்பட்டது. வெள்ளை மாளிகையின் இணையத்தளம் மூலம் இந்தக் கோரிக்கை மனுவில் 5000இற்கும் அதிகமானோர் ஒப்பமிட்டிருந்தனர்.
இந்தக் கோரிக்கை மனுவுக்குப் பதிலளிக்கும் வகையில், மைக்கல் எச்.போஸ்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் அண்மைய மோதல்களின் போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டமீறல்களுக்குப் பொறுப்புக்கூறுதல் தொடர்பான உங்களின் கவலைகளுடன் அமெரிக்காவும் பங்கு கொள்கிறது.
அத்துடன் இலங்கையில் எல்லாக் குடிமக்களுக்குமான நியாயமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு, ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதிலும் உறுதியாக இருக்கிறது.
அமெரிக்க காங்கிரஸ் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இலங்கையில் அண்மைய மோதல்களின்போது இடம்பெற்ற, அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்து 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இரண்டு அறிக்கைகளைத் தயாரித்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பதை இந்த இரண்டு அறிக்கைகளிலும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். அத்தகைய மீறல்களுக்குத் தனிப்பட்ட பொறுப்புக் கூறுதல் நல்லிணக்கத்தின் முக்கியமானதொரு பகுதி என்று நாம் நம்புகிறோம்.
இதுதொடர்பான இலங்கையின் அர்த்தமுள்ள சொந்த முயற்சிகள் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த மோதல்களால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதில் முன்னேற்றத்தை அளிக்கும். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 2011 செப்ரெம்பர் கூட்டத் தொடரின்போது, இலங்கை தேசிய மற்றும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருந்தோம்.
போரின் போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்ட மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பக்கம்சாராத வகையில் இலங்கை துரிதமாகவும் நம்பகமாகவும் பதிலளிக்க வேண்டும் என்றும் வெளிப்படுத்தியிருந்தோம்.
காணாமற்போனவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினருக்கு வெளிப்படுத்துவதற்கும், மோதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்கவும் இலங்கை உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளோம்.
இந்த விவகாரங்களில் ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து இலங்கை ஆக்கபூர்வமான முறையில் பணியாற்ற முன்வர வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொள்வோம். இறுதியாக, இலங்கை அரசு இந்த நல்லிணக்க மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்கு அனைத்துலக கடப்பாடுகளுக்கு அமைய பதிலளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், பொறுப்புக் கூறுவதற்கு இலங்கை அரசை தொடர்ந்தும் நாம் வலியுறுத்துவோம்.
அதேவேளை, அனைத்துலக மனிதாபமான மற்றும் மனிதஉரிமைச் சட்டமீறல்களுக்கு பொறுப்புக் கூறுவதில் தமக்குள்ள அடிப்படைப் பொறுப்பை உள்ளக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஒரு அரசினால் தமது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் தான் அனைத்துலக பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்க முடியும். என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

06 ஜனவரி 2012

பாடசாலையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்டவர் பசில் ராஜபக்ஸ!

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான ஆலோசகர்கள் எவரும் இல்லை. சிறிலங்காவில் அவருக்கு நண்பர்களை விட எதிரிகள் தான் அதிகம். இவ்வாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய இரகசிய தகவல் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
2007 மே 15ம் நாளன்று கொழும்பில் இருந்த அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக்கினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த தகவல் குறிப்பை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
"பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான ஆலோசகர்கள் எவரும் இல்லை. சிறிலங்காவில் அவருக்கு நண்பர்களை விட எதிரிகள் தான் அதிகம்.
ஏனென்றால், ஆட்களை விலைக்கு வாங்கும் பழக்கத்தைக் கொண்டவர் அவர். மகாவலி அபிவிருத்தி அமைச்சில் பணியாற்றியபோது, எவ்வொரு திட்டத்திலும் தனக்கு 10 வீதம் தரகுப்பணம் கேட்பதால் பசில் ராஜபக்ச "திருவாளர் பத்து வீதம்" (Mr. Ten Percent) என்ற செல்லப்பெயரை சம்பாதித்துக் கொண்டார்.
பெரும்பாலான அரசியல் விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அதிபர் பசில் ராஜபக்சவுடன் தான் கலந்துரையாடுகிறார்.
2005 அதிபர் தேர்தலின் போது தமிழ் வாக்குகளை நசுக்குவதற்கு விடுதலைப் புலிகளுடன் உடன்பாடு செய்து கொண்டது மற்றும் 2007இல் அமைச்சரவை மாற்றம், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும்கட்சிக்குள் இழுத்துக் கொண்டது போன்றவற்றில் பசில் ராஜபக்ச செல்வாக்கு செலுத்தியுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட கல்வியறிவு மற்றும் துறைசார்ந்த அனுபவங்கள் ஏதும் இல்லாதபோதும் சிறிலங்கா அதிபருக்கு இவரே ஆலோசனைகளை வழங்குகிறார்.
மாத்தறையிலும் காலியிலும் பசில் ராஜபக்ச கல்வி கற்றுள்ளார். காலியில் கல்வி கற்றபோது அவர் பலமுறை பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அவரது பாடசாலை நண்பர்கள் கூறியுள்ளனர்.
1970ம் ஆண்டு பெலியத்தை தொகுதியில் மகிந்த ராஜபக்ச முதல் முறையாகப் போட்டியிட்ட போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த பசில் அவருக்கு ஆதரவாகப் பணியாற்றியிருந்தார்.
ஆனால் 1977இல் ஐதேகவில் இணைந்த பசில் தனது சகோதரருக்கு எதிராகவே வேலை செய்தார்.
மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்காக பணியாற்றிய போது அவர் திருவாளர் பத்து வீதம் என்ற செல்லப்பெயரை சம்பாதித்துக் கொண்டார்.
தற்போதுள்ள பதவியிலும் கூட அவர் குறிப்பிடத்தக்க ஊழல்களை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
1977இல் ஐதேகவில் இணைந்து பசில் பின்னர், சில ஆண்டுகளில் மீண்டும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டார். எனினும் 1990இல் மீண்டும் அவர் ஐதேகவுக்குத் தாவினார்.
மீளவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வரமுனைந்த போது, அவரை கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள சந்திரிகா குமாரதுங்க மறுத்து விட்டார்.
அதன்பின்னர் தான் பசில் அமெரிக்கா சென்றிருந்தார்.
2005 தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிட்ட போதே அவர் மீண்டும் சிறிலங்கா திரும்பினார்." என்று றொபேட் ஓ பிளேக் அனுப்பிய தகவல் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

05 ஜனவரி 2012

சிங்கள அரசை கலங்கடித்திருக்கும் தமிழீழ முத்திரை சுனாமி!

பாரிஸ் புறநகரான பந்தனில் நாதன், கஜன் என்ற இரு மாவீரர்களது துயிலும் தூபிகள், செவ்ரன் பூங்காவில் சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பில் பலியான தமிழர்கள் நினைவாக நாட்டப்பட்ட இரு மரங்கள், நா குர்நோவ் நகர சபை முன்றலில் நித்தியப் புன்னகை அழகன் பிரிகேடியர் சுப. தமிழ்ச் செல்வன் அவர்களது திருவுரு என பிரான்ஸ்வாழ் தமிழர்களது வரலாற்றுப் பதிவுகள் பிரசித்தமானது. அந்த வரிசையில், தேசியத் தலைவருக்கு மட்டுமல்லாமல், தேசியச் சின்னங்களுக்கும், தமிழீழத்திற்கும் முத்திரை வெளியிட்டு இன்னொரு சுனாமியைந் சிங்கள தேசம் நோக்கி அனுப்பி வைத்துள்ளார்கள்.
இன்றைய நாட்களில் சிங்கள ஆட்சியாளர்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளும் விடயமாக பிரான்சில் வெளியிடப்பட்டுள்ள முத்திரைகள் முக்கியம் பிடித்துள்ளது. சிங்களத்தின் அத்தனை ஊடகங்களிலும் இந்த முத்திரை வெளியீடு பற்றியே அலசல்கள் நடைபெறுகின்றன. பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலகாவைத் தொடர்புகொண்ட சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே வலம் இடமாக வாங்கித் தள்ளிவிட்டார். 360 முத்திரை மட்டுமே புலிகளால் வெளியிடப்பட்டது என்று சத்தியம் செய்து அவர் தப்பித்துக்கொண்டார்.
இலங்கைக்கான பிரஞ்சுத் தூதுவர் மிஷேல் லும்மோவைச் சந்தித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அங்கு துள்ளிக் குதித்துள்ளார். இத்தனை கூத்துக்களுக்குப் பின்னரும் பிரான்சில் தேசியத் தலைவர் அவர்களது படம், தமிழீழம், தமிழீழ அரச சின்னங்கள் என பத்துக்கும் மேலான வண்ண முத்திரைகள் பாரிஸ் நகரில் வேகமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பாரிஸ் லா சப்பலில் அந்த முத்திரைகளை வாங்குவதற்காகத் தமிழ் மக்கள் முண்டியடித்து வருகின்றனர்.
புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டுவந்த சிங்கள ஆட்சியாளர்கள், பிரான்சில் செயல்பட்டுவரும் தமது புலனாய்வாளர்களை வறுத்தெடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஆயிரக் கணக்கான தமிழ்ப் புலனாய்வாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டு, புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு காத்திருந்த சிங்கள ஆட்சியாளர்கள் அதிர்ச்சியில் அலறுகின்றார்கள். மாவீரர் தினத்தை இலக்கு வைக்க முடிந்த சிங்கள தேசத்தின் தமிழ்ப் புலனாய்வாளர்களால் புலம்பெயர் தமிழர்களது தமிழீழ தாகத்தை முறியடிக்க முடியவில்லை.
விடுதலைப் புலிகள் வீழ மாட்டார்கள். வீழ்ந்தாலும், வீழ்ந்தே கிடக்கமாட்டார்கள் என்பதை சிங்கள தேசம் காலம் கடந்தே கற்றுக்கொண்டுள்ளது. பிரான்சில் தமிழ்த் தேசிய தளத்தின் வீச்செல்லை சிங்களத்தின் தலைநகரை உலுக்கி எடுக்கின்றது. பிரான்சில் ஆரம்பமாகிய புலம்பெயர் தமிழர்களது 'ஓயாத அலை' ஒன்றுடன் சித்தம் கலங்கிப் போயிருக்கும் சிங்கள தேசத்தின்மீது இன்னுப் பல அலைகள் அடிக்கப்போகின்றது.
அமெரிக்காவில் திருகோணமலையில் சிறிலங்கா ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து கல்லூரி மாணவர்களில் ஒருவரின் படம் பொறித்த முத்திரை அவரது தந்தை மனோகரனால் வெளியிடப்பட்டுள்ளது. இது போல் உலக நாடுகளில் பலபகுதிகளில் இருந்தும் பல விதமான செயல்பாடுகள் நடைபெற இருக்கிறது. இவற்றை எல்லாம் சிறிலங்கா அரசு எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
அதிலிருந்து சிங்கள தேசமும், மகிந்த அரசும் தப்பிப் பிழைக்குமா? என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

கருணாவின் புது வருட ஆட்டம்.
















புதுவருடத்தை வரவேற்கும் வகையில் கொழும்பு, ரமாடா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வில் தமிழ்மக்களின் அழிவிற்கு காரணமான மீள்குடியேற்ற ஒட்டுக்குழு பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தனது பிரத்தியேக செயலாளருடன் நடனமாடுவதை படங்களில் காணலாம்.

ஸ்ரீலங்கா அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் நெடியவன்,உருத்திரகுமாரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான ருத்ரகுமார் மற்றும் விடுதலைப்புலிகளது அனைத்துலக செயற்பாட்டாளரான நெடியவன் ஆகியோர், 67 உள்நாட்டு சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து சிறிலங்கா அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என திவயின சிங்களப் பத்திரிகையின் இன்றைய கண்டுபிடிப்பு தெரிவித்துள்ளது.
அதுவும் இந்த வருடத்துக்குள்ளே சிறிலங்கா அரசை இவர்கள் கவிழ்த்து விடுவர் எனவும் அது கூறியுள்ளது.இந்தத் தகவலை சிறிலங்கா அரசுக்கு புலிகளுக்கு எதிரான தமிழத் தரப்பே தெரிவித்துள்ளது என்றும் கூறும் திவயின மேலும் தெரிவித்துள்ளதாவது:
நேற்று முன்தினம் தமிழகத்திலிருந்து ஒளிப்பரப்பாகும் விஜய் தொலைக்காட்சியில் உரையாற்றிய சோதிடர்கள் சிலர், 2012 ஆம் ஆண்டு தற்போதைய இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை இழக்கும் என தெரிவித்துள்ளனர். அத்துடன் ஈழ ஆதரவாளர்களின் பலம் அதிகரிக்கும் என கூறியுள்ளதாகவும் இதன் மூலம் இந்த திட்டம் உறுதியாகி விடும்.
விஜய் தொலைக்காட்சி, இதனை ஒளிப்பரப்புவதற்கு முன்னர், யாழ்ப்பாண குடாநாட்டில், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை ஒன்றிணைத்து, மீண்டும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உயிரூட்ட, புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டிருந்த ரகசியமான வேலைத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை இராணுவ புலனாய்வு பிரிவினர் கண்டறிந்திருந்தனர் எனவும் திவயின கூறியுள்ளது.

04 ஜனவரி 2012

ஒபாமாவே வந்தாலும் அதிகாரப்பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவே வந்தாலும் சிறிலங்காவில் அதிகாரப்பகிர்வை மேற்கொள்ள முடியாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே கலாநிதி குணதாச அமரசேகர இவ்வாறு கூறியுள்ளார்.
“ 13வது அரசியலமைப்புத் திருத்தத்தில் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை இல்லாதொழிக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறிலங்கா அரசுக்குள் இருப்பவர்களில் 60 வீதமானோர் சூழ்ச்சிக்காரர்களே. சிறிலங்கா அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்தில் பாரிய சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளது.
இதற்குப் பிரதான காரணம் உள்வீட்டுச் சதியே. அரசியல்தீர்வுக்கு அதிகாரப் பகிர்வை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
அரசியலமைப்பில் இருந்து 13வது திருத்தச் சட்டத்தையே நீக்க வேண்டும். நாட்டில் இனவாதம் உள்ளது என்பது போலியான மாயையாகும். எனவே தேவையற்ற விடயங்களை பேசுவதில் பயனில்லை.
இன்று நாட்டை பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல சக்திகள் செயற்படுகின்றன.
13வது திருத்தச் சட்டத்தை மையப்படுத்தி அனைத்துலக சமூகம் அழுத்தங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளன“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் குழு யாழ்,செல்கிறது.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் செல்கிறது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு தனக்கு அறிவித்துள்ளதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பாட்டொன் மற்றும் அவரது ஆராய்ச்சியாளர் கிருஷ்டக்கன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பர்.
இந்தக் குழு இன்று வடமாகாணத்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியை இன்று காலை வவுனியாவில் சந்திக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அடங்கிய குழு பின்னர் 4.30 மணிக்கு ஹெலி மூலம் யாழ். துரையப்பா விளையாட்டரங்கை சென்றடையவுள்ளது. ‘
இதன் பின்னர் மாலை 5 மணியளவில் இவர்கள் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதன்போது யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

03 ஜனவரி 2012

தேசியத் தலைவரின் அஞ்சல் தலைகளால் தயான் ஜெயதிலகவின் தலை உருளுமா?

பிரான்சில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் உருவப்படம் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலைகள் வெளியாகியிருப்பது சிறிலங்கா அரசைப் பெரிதும் குழப்பமடையச் செய்துள்ளது.
இந்த அஞ்சல் தலைகள் வெளியாவதைத் தடுக்க இராஜதந்திர ரீதியாக நடவடிக்கை எடுக்காதது குறித்து பாரிசில் உள்ள சிறிலங்கா தூதுவர் தயான் ஜெயதிலக மீது கொழும்பு கடும் சீற்றமடைந்துள்ளது.
இந்தநிலையில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பாரிசில் உள்ள சிறிலங்கா தூதுவர் தயான் ஜெயதிலக, விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் வெளியாகியுள்ள அஞ்சல் தலைகளுக்கு பிரெஞ்சு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
“இந்த அஞ்சல் தலைகளை பிரெஞ்சு அஞ்சல்துறை வெளியிடவில்லை. விடுதலைப் புலிகளே வெளியிட்டுள்ளனர்.
பிரெஞ்சு அஞ்சலகங்களில் இந்த அஞ்சல் தலைகள் கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும், பிரெஞ்சு குடிமக்கள் தனிபட்ட ரீதியில் அஞ்சல் தலைகளை வடிவமைத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோக்கிக் முடியும்.
பிரபாகரனின் படத்துடன் கூடிய அஞ்சல் தலைகள் இதன் அடிப்படையில் தான் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளை சந்தித்துப் பேச முயன்று வருகிறோம்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே பிரான்சில் நேற்று இந்த அஞ்சல் தலைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக மற்றொரு கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த அஞ்சல்தலைகள் ஒவ்வொன்றும் 60 யூரோ சதம் பெறுமதி கொண்டவை என்றும் அநத ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு இந்தியா முத்தம் கொடுக்குமே தவிர அழுத்தம் கொடுக்காது!

இந்தியாவின் உயர் காதலியான இலங்கைத் தீவுக்கு அந்த நாடு முத்தம் கொடுக்குமே தவிர ஒருபோதும் அழுத்தம் கொடுக்காது. இந்தியாவின் மௌனத்தில் பல கோடி ரூபா வருமானம் பதுங்கியுள்ளது. எனவே, மௌனத்தைக் கலைப்பதற்கு அது விரும்பாது. இவ்வாறு ஐக்கிய சோஷலிஸக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய மேலும் கூறியதாவது:
இந்திய அரசுக்கு ஏதாவது அழுத்தம் வரும்போதே அது இலங்கை விவகாரத்தில் தலையிடுவது போல் நாடகம் ஆடுகின்றது. இலங்கையின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. எனவே, இலங்கையை அது ஒருபோதும் பகைத்துக் கொள்ளாது. இலங்கையுடன் காதல் உறவைப் பேணும் இந்தியா, இலங்கையை உச்சக்கட்ட இடத்தில் வைத்தே பார்க்கும். இல்லையேல் இலங்கைக் குள் சீனா புகுந்துவிடும் என்ற பயம் பாரதத்திற்கு உள்ளது.
இந்திய அரசுக்கு ஜனாதிபதி மஹிந்த பல்வேறு உறுதிமொழிகளை அள்ளி வீசினார். ஆனால், உறுதிமொழிகள் யாவும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்திய அரசுக்கு மஹிந்த அரசு காட்டும் பூச்சாண்டி விளையாட்டைப் பார்த்துக்கொண்டு இந்தியா மௌன மாகத்தானே உள்ளது. இந்தியாவின் மௌனத்தில் பல அர்த்தங்கள் உள்ளன. வருமானம், சீன ஆதிக்கம் ஆகிய விடயங்கள் வாயைத் திறக்கவிடாமல் இந்தியாவை ஊமையாக்கிவிட்டன என்றார்.

02 ஜனவரி 2012

க.பொ.த.உயர்தரம் கூட படிக்காமல் சட்டவாளரானவர் மகிந்த ராஜபக்ஸ!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கபொத உயர்தர கல்வியைக் கூட கற்கவில்லை என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல் பரிமாற்றக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் 5வது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டபோது, கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ் ரீட் 2005 நவம்பர் 21ம் நாள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு இரகசியமான தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய அந்த தகவல் பறிமாற்றக் குறிப்பிலேயே, மகிந்த ராஜபக்ச கபொத உயர்தரம் கூட படிக்கவில்லை என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
கபொத உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்யாத மகிந்த ராஜபக்ச இப்போது ஒரு சட்டவாளர் என்று அமெரிக்கத் துதுவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனர்களில் ஒருவரான டி.ஏ.ராஜபக்சவின் எட்டுப் பிள்ளைகளில் மூன்றாவதாக, பேர்சி மகிந்த ராஜபக்ச 1945 நவம்பர் 18ம் நாள் வீரகெட்டியவில் பிறந்தார்.
காலி றிச்மன்ட் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு நாலந்தா மற்றும் தேஸ்டன் கல்லூரிகளிலும் கல்வி கற்ற போதும் அவர் கபொத உயர்தரக் கல்வியைப் பூர்த்தி செய்யவில்லை.
இருந்தபோதும் சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக நூலகத்தில் எழுதுனராக பணியாற்றிய அவர், 1970ம் ஆண்டு தனது தந்தையாரின் மறைவுக்குப் பின், அரசியலில் இறங்கி அவரது நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்கு குறைந்தபட்சக் கல்வித் தகைமை தேவையில்லை என்று அப்போதைய சட்ட அமைச்சர் கொண்டு வந்த நடைமுறையின் அடிப்படையில், மகிந்த ராஜபக்ச கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைந்து கொண்டார்.
1974இல் அவர் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றதாகவும் அமெரிக்கத் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மேல் உனக்கேன் இந்த கொலைவெறி?யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இசைப்புயல்.

கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர்.
அதன் புதிய வடிவமாக தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது.
கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ரலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும் பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமைத்த ‘தண்ணீர்’ குறும்படம் 2011ற்கான சிறந்த குறும்பட இசை விருதை வெண்றமை குறிப்பித்தக்கது.
இப்பாடல் காணொளியை ‘யாழ் மியூசிக்’ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் இசை நிறுவனம் தொடர்ந்தும் எம்மவர் படைப்புக்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் படைப்புக்களை தாயாரித்து வருகின்றது.

01 ஜனவரி 2012

புலிகள் ஆயுதப்போராட்டத்திற்கு தயாராவதாக புலனாய்வுப் பிரிவுக்கு தகவலாம்!

இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராவதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நலனுக்கான அமைப்பு ஒன்றைப் பதிவு செய்து அதன் மூலம் இன்னொரு ஆயுதப்போரை ஆரம்பிக்கப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா புலனாய்வு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முன்னர் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுகளில் இருந்த - புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை இதில் இணைத்துக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் போராளிகளை இவர்கள் அணுகியுள்ளனர். இந்த அமைப்பு வெளிநாடுகளில் உள்ள புலிகளின் மூன்று அமைப்புகளின் கீழ் இயங்கவுள்ளது.
இந்தநிலையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள விடுதலைப் புலிகளின் அனுதாபிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக முன்னர் போர் நடந்த பகுதிகளில் வாழும் இளையோருக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் ஆதரவுக் குழுவினரின் இந்த இரகசியத் திட்டம் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை வெளிநாடுகளில் உள்ள புலிகளின் அமைப்புகள் இடம்பெயர்ந்தோருக்கான அமைப்புகளுடன் தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி வருவது பற்றிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கொழும்பு வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

31 டிசம்பர் 2011

புலிகளின் முக்கியஸ்தர்கள் இரகசிய தடுப்பு முகாமில்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பலர் இன்றுவரை இரகசிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2009 மே 17, 18, 19 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகள் பொறுப்பாளர்கள் பலர் இரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் யோகி, எழிலன், புதுவை இரத்தினதுரை முதலானவர்கள் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான நகுலன் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொலநறுவை மின்னேரிய முகாமிலேயே இவர்களும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
பொலநறுவை மாவட்டம் மின்னேரியாப் பகுதியில் பாரிய பரப்பளவில் அமைந்துள்ள பிரதான முகாம் பகுதியில் இரு வேறு தனிப்பட்ட முகாம்களில் இவர்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தொடர்ச்சியான சித்திரவதைகள் விசாரணைகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு, அவர்களின் அசையும் அசையாச் சொத்துகள், அவற்றை பராமரிப்பவர்கள், அல்லது கையகப்படுத்தி வைத்திருப்பவர்கள், தொடர்ந்தும் செயற்பாட்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட விடயங்களை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கும், அவ்வப்போது புலம் பெயர் தமிழ்ர்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கும் இவர்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்கள் யாவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் நேரடிக் கட்டுப்பாட்டுள் அவருக்கு மிக நெருங்கிய புலனாய்வுப் பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது.
எனினும் இவை குறித்த ஆதாரபூர்வமான விடயங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவானதாகவே இருப்பதாக கூறும் குறித்த செய்தியாளர்,அவற்றை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் தொடர்வதாக தெரிவிக்கின்றார்.

30 டிசம்பர் 2011

தேசியத் தலைவரின் தபால் முத்திரை வெளியீட்டுக்கு சிங்களவர்கள் எதிர்ப்பாம்!

பிரான்ஸில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உருவப்படத்தைக் கொண்ட தபால் முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளமைக்கு சிங்கள அரசு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்கள் பிரான்ஸில் நான்கு தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளனர்.
ஈழ வரைபடம், விடுதலைப்புலிகளின் மலர், புலிக் கொடி மற்றும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உருவப்படத்தைக் கொண்ட நான்கு வகையான முத்திரைகள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விசேட தபால் முத்திரைகளுக்கு பிரான்ஸ் தபால் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், நேற்று முன்தினம் முதல் இந்த முத்திரைகள் பயன்பாட்டுக்கு விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முத்திரை வெளியீடு தொடர்பில் பிரான்ஸ் வாழ் சிங்களவர்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

லலித் வீரராஜுவை கடத்தியது அரசாங்கமே"சந்திரசேகரன்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான தோழர் லலித் வீரராஜூற்கு யாழில் ஆபத்து இருந்ததை மக்கள் விடுதலை முன்னணி முற்கூட்டியே உணர்ந்திருந்தது என்று தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் அரசின் அராஜகமே லலித் வீரராஜை கடத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் போராட்ட இயக்கம் காணாமல் போனவர்களை விடுவிக்க கோரி இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை நடத்தியது. அந்தப் போராட்டத்தை நடத்திவிட்டு ஊடக மாநாடு ஒன்றை நடத்த தயாராகிய பொழுது யாழ் அச்சுவேலிப் பகுதியில் வைத்து மக்கள் போராட்ட இயக்கத்திற்கு ஆதரவான யாழ்ப்பாணத்தை சேர்ந்த குகன் என்பவருடன் லலித் வீரராஜ என்பவரும் மர்ம நபர்களினால் கடத்தப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரனிடம் குளோபல் தமிழ் செய்தியாளர் உரையாடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரிவினைவாத குழுவினரே லலித் வீரராஜை ஆபத்திருந்த யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி அவர் கடத்தப்படும் நிலையை உருவாக்கியது என்றும் ஆர். சந்திரசேகரன் கிளர்ச்சிக் குழுவினர் மீது குற்றம் சாட்டினார்.
லலித் கடத்தப்பட்ட பின்னர் இதுவரையில் அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று குறிப்பிட்ட சந்திரசேகரன் இராணுவமும் காவல்துறையினரும் கட்டுப்பாட்டில் உள்ள சூழலில் இந்த அராஜகத்தை அரசே செய்திருக்கிறது என்றார். நாட்டில் சமாதானம் வந்து விட்டது என்றும் வடக்கில் எல்லாம் சரியாகிவிட்டது என்றும் சொல்லும் நிலையில் இந்தக் கடத்தல் அரசின் அராஜகத்தை வியப்போடு வெளிக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
லலித் ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியில் செயற்பட்டவர் என்று குறிப்பிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் அக்கால கட்டத்தில் அவர் பலமுறை அச்சுறுத்தப்பட்டார், கைது செய்யப்பட்டார், தாக்கப்பட்டார். இதனால் அவருக்கு யாழில் ஆபத்து இருந்ததை உணர்ந்த மக்கள் முன்னணி அவரை யாழில் கட்சிச் செயற்பாடுகளை தற்காலிகமாக தவிர்க்கும்படி கூறியிருந்தது என்றார்.
ஜே.வி.பியின் பிளவு காரணமாக லலித் விரராஜ் பிரிவினைவாத குழுவுடன்; இணைந்தாக குறிப்பிட்ட சந்திரசேகரன் அவருக்கு யாழில் ஆபத்து இருப்பதை தெரிந்தும் பிரிவினைவாதக் குழுவினர் தனியாக அனுப்பி அவரை அரசு கடத்தும் சூழலை ஏற்படுத்தி விட்டது என்று கிளர்ச்சிக் குழுவினர்மீது குற்றம் சாட்டினார்.
லலித் கடத்தப்பட்ட இந்த விடயத்தில் இது லலித்திற்கு மாத்திரம் நடந்த அவருக்கு மட்டுமான பிரச்சினை இல்லை எனத் தெரிவித்த சந்திரசேகரன் வடக்கில் யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட பிரச்சினை என்றும் கடத்தப்பட்ட 20க்கு மேற்பட்ட இளைஞர்களின் பிரச்சினை என்றும் குறிப்பிட்டார்.
லலித்திற்காக மாத்திரமின்றி கடத்தப்பட்ட ஒட்டுமொத்த இளைஞர்களுக்காகவும் மக்கள் விடுதலை முன்னணி உரிய நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

பூநகரியில் நடந்தது பொதுமகன் மீதான படையினரின் அராஜகமே!

பூநகரி சங்குப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இடைமறித்த இராணுவம் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிக்க முற்பட்டு மோட்டார் சைக்கிள் சாரதியைப் படுகொலை செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வீதியில் நின்றிருந்த இராணுவம், வீதியில் பயணித்த குறித்த நபரை இடைமறித்து மோட்டார் சைக்கிளைத் தருமாறு கேட்டிருக்கின்றது. இந் நிலையில் அவர் அதற்கு உடன்பட மறுத்திருக்கின்றார். சம்பத்தினை அடுத்து குறித்த நபர் மீது இராணுவம் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அருகில் இருந்த இராணுவத்தினரால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், குறித்த சிப்பாயை சுட்டுக்கொல்லுமாறு குறித்த அதிகாரி ஏனைய சிப்பாய்களுக்கு அறிவித்த நிலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய இராணுவச் சிப்பாயும் அருகில் இருந்த சிப்பாய்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக சரிதத்துக்கு கிடைத்த பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் சிப்பாயும் கொல்லப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்திற்கு வேறு காரணங்களைச் சாட்டுவதற்கு படைத்தரப்பு முற்படலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
படைத்தரப்பு வெளியிட்ட தகவலின்படி குறித்த நபர் இராணுவம் எனவும், அவர் தப்பியோட முயற்சித்த போதே மேற்படி சம்பவம் இடம் பெற்றதாக தெரிவித்துள்ளனர். இதில் ஒருவரே கொல்லப்பட்டதாகவும் மற்றையவர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
நன்றி:சரிதம்

29 டிசம்பர் 2011

பூநகரிப்பகுதியில் படைகளுக்கிடையில் மோதல் ஒரு அதிகாரி பலி!

கிளிநொச்சி மாவட்டத்தில் சங்குபிட்டி, பூநகரி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததோடு மற்றுமொரு அதிகாரி படுகாயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில்,18வது கெமுனு படை முகாமைச் சேர்ந்த படை சிப்பாய் ஒருவர் முகாமில் இருந்து தப்பியோடியதாகவும் அவரை சக இராணுவ வீரர்கள் துரத்திச் சென்று பிடித்து வந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டின்போது இராணுவ உப லெப்டினன் அதிகாரி ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததோடு, இராணுவ லெப்டினன் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த சிப்பாய் கைது செய்யப்பட்டு தற்சமயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

சிங்களவன் ரோலரில் மீன் பிடிக்கலாம் நாம் பிடிக்கக்கூடாதா?யாழில் தமிழ் மீனவர்கள் ஆவேசம்.

யாழ்,வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள் தங்களை றோலரில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இன்று நண்பகல் யாழ் பிராந்திய நீரியல் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்களவனுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா? நாங்கள் றோலரில் மீன்பிடிக்க கூடாது தென்பகுதி கடற்றொழிலாளர்கள் றோலரில் மீன்பிடிக்கலாம் என்கிறது உங்கட அரசாங்கம். எங்களை ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?என அலையலையாய் கொதித்து எழுந்தனர் வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள்.
எங்கட றோலர் கடல் உபகரணங்களை எங்களின் அனுமதியின்றி ஏன் பறிமுதல் செய்தீர்கள்? எனவும் கேட்டு மீனவர்கள் கொதித்து எழுந்துனர். இந்த மீனவ்ரகளின் பிரச்சனையை அரசியலாக்கி அதில் அரசியல் இலாபம் தேட சில அரசியல்வாதிகள் முற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கடல் தொழிலாளர்களில் அரசு கை வைக்குமானால் யாழ்.மாவட்ட செயலகத்தை முன்றுகையிட்டு தொடர் போராட்டங்களை நடத்துவோம் என கடற் றொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் துறை பணிப்பாளர் எஸ்.ரவீந்திரனிடம் ஒப்படைத்தனர்.

எம்மை நாமே ஆளும் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வை தவிர வேறெதையும் ஏற்கமாட்டோம்.

குருதி சிந்தும் நாள்கள் மீண்டும் வருவதைத் தமிழ் மக்களும், கூட்டமைப்பும் விரும்பவில்லை. ஆனால் சிங்கள அரசும், சிங்கள தலைவர்களும் அதனையே விரும்புகின்றனர் என்றே தெரிகிறது. மீளவும் தமிழ் மக்கள் அடக்கு முறைக்குள் உட்படுத்தி துன்புறுத்தவே சிங்கள அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்.
ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து, உரையாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு:
தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரம் உள்ளிட்ட தமிழ்த் தேசிய இனம் என்ற அடிப்படையில் எம்மை நாமே ஆளும் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
மக்களுக்கு விரோதமாக, அவர்களது அடிப்படை அரசியல் அபிலாசைகளுக்கு தேவைகளுக்கு முரணாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நடந்து கொள்ளாது. குழப்பங்கள், கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் ஒரு போதும் கூட்டமைப்பு அதன் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து மாறுபடப் போவதில்லை.
அரசாங்கத்துடன் பல தடவைகள் பேச்சு வார்த்தை நடத்தியும், விட்டுக்கொடுத்தும் எதுவித பயனும் ஏற்பட்டிருக்கவில்லை. எமது உரிமைகளை நாங்கள் தானே கேட்க வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும் இழுபட்டாலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தே ஆகவேண்டும்.
பேச்சுவார்த்தை மூலமாக எமக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் வெகுஜன போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். இதில் நாம் மிகத் தெளிவாகவுள்ளோம். எமது மக்களை மீண்டும் துன்பகரமான வாழ்க்கையைத் தொடர நாம் விரும்பவில்லை.
பேச்சு வார்த்தையின் போது தமது பொறுமையைச் சோதிக்கக் கூடாது என அரசு கூறுகிறது. எமது மக்களின் உரிமைகள், தீர்வுகள் பற்றி நாங்கள் தானே பேசவேண்டும். இதன்போது உள்நாட்டு ரீதியாக, வெளிநாட்டு ரீதியாக, இராஜதந்திர ரீதியாகச் சில தடங்கல்கள் வரலாம். அதுபற்றி நாம் மௌனம் காப்பதாக பொதுமக்களும் சில ஊடகங்களும் எண்ணலாம். எனினும் இத்தகைய மௌனிப்புகளைக் கொண்டு கூட்டமைப்பு தன் கொள்கைகளைக் கைவிட்டு விட்டதாக எண்ணக்கூடாது.
வடக்குகிழக்கு இணைப்பில்லாது வடமாகாண சபைத்தேர்தல் நடந்தால் அதில் கட்சி ரீதியாகப் போட்டியிடக் கூடாது. தேசியக்குழுவாகவோ அல்லது அமைப்பாகவோ போட்டியிடுவது பற்றி பரிசீலிக்க வேண்டும் எனச் "சிவில்' சமூகம் கேட்டுக் கொண்டுள்ளது.
2012 இல் இந்தத் தேர்தல் நடைபெறுமாக இருந்தால் சிவில் சமூகத்துடன், துறைசார் வல்லு நர்களுடன் கலந்துரையாடி என்ன அடிப்படையில் போட்டியிடுவது என்பது பற்றி பேசுவோம்.
தமிழ் மக்களுக்கு விரோதமான சக்திகளின் கைகளுக்கு வடக்கு மாகாணம் சென்றுவிடக் கூடாது என்பதில் ஒவ்வொரு தமிழனும் உறுதியாக இருக்க வேண்டும். எம்மை அழிப்பவர்கள், காட்டிக்கொடுப்பவர்கள், இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவருமே இறக்கவில்லை என்று சொன்னவர்கள், ஆட்சிக்கு வருவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. இதனைத் தடுப்பதற்காகவேனும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடத்தான் வேண்டும். இதுபற்றி சிவில் சமூகத்துடன் கலந்துரையாடப்படும்.
அரசுடன் பேசும் விடயங்களைச் சில தந்திரோபாயங்களுக்காக நாம் வெளியே சொல்லவில்லை. அரசு சிலவற்றைச் சொல்வதனால் சம்பிக்கரணவக்க உள்ளிட்ட பலர் அங்கு பிரச்சினைகளை உண்டுபண்ணுகின்றனர். இனவெறியையும் ஊட்டுவார்கள். ஆனாலும் அரசுடன் பேசிய எந்த விடயங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
சிறையிலுள்ள கைதிகளின் பெயர் விவரங்கள் உள்ளடங்ய பட்டியலை வெளியிடுவதாக அரசு கூறியது. அதேவேளை பெண்கள், குழந்தைகளை விடுதலை செய்கிறோம் என்றும் ஜனாதிபதி கூறினார். இது இரண்டுமே நடக்கவில்லை. மாறாக வெலிக்கடை, போகம்பரை, அநுராதபுர சிறைச்சாலைகளில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்தவர்கள் எனப் பலர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

28 டிசம்பர் 2011

எந்த நாட்டிற்காவது அரசியல் தீர்வில் நாட்டமிருந்தால் முதலில் புலம்பெயர் தமிழரை திருப்பி அனுப்பட்டும்"மகிந்த சொல்கிறார்.

மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது, அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான் சிங்கிற்கு அலரி மாளிகையில் வைத்து அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டில் இன்று வெளியாகியுள்ள இந்தச் செவ்வியின் முழு வடிவம் இது.
கேள்வி - சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் மேற்கு நாடுகளை எப்படி அணுகப் போகிறீர்கள்?
பதில் - மேற்கு நாடுகளில் எஞ்சியுள்ள புலிகள் தான், சிறிலங்காவுக்கு எதிராக அடிப்படையற்ற விவகாரங்கள் குறித்து, அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். மேற்கு நாடுகள் கஸ்மீர் தொடர்பாகவும் சிறிலங்கா தொடர்பாகவும் தமது நாடாளுமன்றங்களில் பேசுகின்றன. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், ஈராக்கிலும் தாம் என்ன செய்தன என்று மௌனம் காக்கின்றன.
சிறிலங்காவில் 1880 ஊவா கிளர்ச்சியின் பின்னர், 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் பிரித்தானியர்கள் கொன்றனர். மக்களைப் பட்டினி போடுவதற்காக அங்குள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தையும் அழித்தனர். நிலத்தைக் கைப்பற்றினர்.
இந்தியாவிலும் அதையே செய்தனர். அவர்கள் தான் இப்போது மனிதஉரிமைகள் பற்றிப் பேசுகின்றனர். மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது. அதற்கு நான் தயாராக இல்லை.
கேள்வி- நீங்கள் சீனாவை நோக்கிச் சாய்வதாக ஒரு உணர்வு இந்தியாவில் உள்ளது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பூகோள அரசியல் நிலையை அது காயப்படுத்தக் கூடும் அல்லவா?
என்னைப் பொறுத்தவரையில் இந்தியா தான் முதலாவது. மற்றெல்லோரும் இந்தியாவுக்குப் பின்னர் தான் வரமுடியும்.
நான் பதவிக்கு வந்தவுடன் இந்தியாவுக்குச் சென்று அதன் ஆதரவைப் பெற்றேன். அதற்குப் பிறகு, ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா பற்றி நான் கவலைப்படவில்லை.
உண்மையில், விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்பாக முக்கியமான தகவல்களை வழங்கி உதவியது அமெரிக்கா தான். அதன் மூலம் அவற்றைக் கடலில் வைத்து அழிப்பது சாத்தியமானது.
அதுபோல சீனாவும் உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற வந்துள்ளது. நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட சீனாவுக்கு நாம் வழங்கிய ஒவ்வொரு திட்டத்தையும் முதலில் இந்தியாவிடம் தான் வழங்கினோம்.
ஆனால் அங்கிருந்து பதில் வரவில்லை. கொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டம் குறித்தும் விளம்பரப்படுத்தினோம். சீனா மட்டுமே வந்தது.
கேள்வி - போர் முடிவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். ஆனாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழர்கள் சுயநிர்ணய உரிமையைக் கோருவதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழர்களின் கவலைகளுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறீர்கள்?
பதில் - அந்தத் தேர்தல்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறைமையின் அடிப்படையில் நடைபெற்றன. கணிசமானளவு வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் விழுந்துள்ளன. வடக்கு,கிழக்கிற்கு வெளியே தான் 54 வீதமான தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் ஒரு நிலையான அரசியல் தீர்வில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் அது பரந்துபட்டளவில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சிறப்பாக போருக்குப் பிந்திய சூழலில் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
கேள்வி - அதிகாரப்பகிர்வை எப்படி முன்வைக்கப் போகிறீர்கள்?
பதில் - அதிகாரப்பகிர்வுக்காக நாங்கள் ஏற்கனவே வடக்கு தவிர ஏனைய மாகாணங்களில் மாகாணசபைகளை நிறுவியுள்ளோம். வடக்கிலும் கூட அதனை அமைக்கவுள்ளோம்.
மாகாண நிர்வாகத்தை எப்படி வலுப்படுத்துவது, மேம்படுத்துவது என்றும் பெரும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை பகிர்ந்து கொள்வது குறித்தும் அவர்கள் கலந்துரையாட வேண்டும்.
கேள்வி - நீங்கள் முன்வைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனை பயனற்றது என்றும், அதுபோன்ற பல குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட போதும், அரசியல் பிரச்சினைகள் இன்னமும் உள்ளதாக பலரும் கூறுகின்றனரே?
பதில் - சிக்கலான எந்தப் பிரச்சினைக்கும் ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வு காண நாடாளுமன்றத் தெரிவுக்குழு நல்லதொரு அணுக்குமுறை.
துரதிஸ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளின் பெயரை முன்வைக்கவில்லை. அவர்கள் விடுதலைப் புலிகளின் அதே மனோபாவத்துடனேயே உள்ளனர். அவர்களின் கோரிக்கைகளான வடக்கு,கிழக்கு இணைப்பு, காவல்துறை மற்றும் காணி அதிகாரப்பகிர்வு என்பன நடைமுறைச் சாத்தியமற்றவை.
உங்களின் நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள், ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்துக்கு பயணம் செய்த போது மாயாவதி அவரைக் கைது செய்ய முனைந்தார்.
இவர்கள் என்னைக் கைது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? (தமிழர்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களாலேயே இயக்கப்படுகிறது. அவர்களுக்கு அமைதியோ அரசியல்தீர்வோ தேவையில்லை.
நியாயமான அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பது முக்கியமானது. ஆனால் அவர்கள் தமது பிரதிநிதிகளின் பெயர்களை பரிந்துரைக்கவில்லை.
இரா.சம்பந்தன் சிலருக்குப் பயப்படுகிறார் போலத் தோன்றுகிறது. இப்போது அவர்கள் அமெரிக்காவுக்குப் போய் முறையிடுகிறார்கள். இதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. பிரபாகரன் காலத்தில் செயற்பட்டது போன்றே செயற்படுகின்றனர்.
சிறிலங்காவில் அரசியல்தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று எந்தவொரு நாடாவது கவலைப்படுமானால், தமது நாடுகளில் தங்கியுள்ள புலம்பெயர் தமிழர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.
எம்மைக் குறை சொல்வது அர்த்தமற்றது. தமிழ்க் கட்சிகள் தான் அரசியல்தீர்வை தாமதப்படுத்துகின்றன.
கேள்வி - மோதல்கள் இடம்பெற்ற சூழலில் கூட வடக்கில் உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்றத் தேரதல்கள் நடத்தப்பட்டன. ஆனாலும் இப்போது அங்கு ஏன் மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தவில்லை?
பதில் - கூடிய விரைவில் அங்கு நிச்சயமாக தேர்தல் நடத்தப்படும். ஆனால் மாகாணசபைத் தேர்தலில் மக்கள் பங்கேற்க உண்மையான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
மோதல் சூழலில் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சுதந்திரமான முறையில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயக ரீதியில் மக்கள தமது கருத்தை வெளிப்படுத்துவதற்கு எதிராக விடுதலைப் புலிகள் செயற்பட்டனர்.
கேள்வி - வடக்கு இன்னமும் கூட அதிகளவில் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழர்கள் முறையிடுகிறார்கள். 3 இலட்சம் மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு இலட்சம் படையினர் நிலைகொண்டுள்ளனர். சனசமூக நிலைய கூட்டத்துக்கோ அல்லது பாடசாலை நிகழ்வுக்கோ கூட சிறிலங்கா இராணுவத்தின் அனுமதி தேவைப்படுகிறது. குடியியல் நிர்வாகத்தில் இருந்து இராணுவத்தை எப்போது நீக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில் - வடக்கில் 3இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். சனத்தொகைக்கேற்ப அங்கு படையினர் நிலைநிறுத்தப்படவில்லை. ஆனால் அந்தப் பிராந்த்தின் பாதுகாப்புக்கு அவர்கள் தேவைப்படுகின்றனர்.
சிறிலங்கா இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள அந்தப் பகுதி மூன்று பத்தாண்டுகளாக மோசசமான ஆயுதமோதல்கள் இடம்பெற்ற பிரதேசம். அங்கு சிறிலங்கா இராணுவம் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் முக்கியமான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
கேள்வி- இராணுவ முகாம்களை அமைப்பதற்காகவோ அல்லது சிங்கள வர்த்தகர்களுக்காகவோ தமது நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுவதாக தமிழர்கள் சந்தேகிக்கின்றனரே?
பதில் - இது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் கிளப்பி விடப்பட்டுள்ள புரளி. நாடெங்கும் ஆயுதப்படையினர் உள்ள்ளர், அவர்களின் அவர்களின் முகாம்கள் உள்ளன. சிறிலங்காவின் பிராந்திய எல்லைகளையும், இறைமையையும் பாதுகாக்க இது அவசியமானது.
விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் வசித்தனர். சிங்களவரோ, தமிழரோ முஸ்லிமோ அவர், யாராக இருந்தாலும் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அவர்களின் நிலத்தை கொடுக்க வேண்டும்.
வடக்கில் தமிழர்கள் வகித்து வரும் பெரும்பான்மையை சிறிலங்கா அரசின் எந்தவொரு செயற்பாடும் மாற்றியமைக்காது.

27 டிசம்பர் 2011

ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐ.நா.மனித உரிமை பேரவையில் தீர்மானம்?

ஜெனிவாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான- கடுந்தொனியிலான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் மேற்கு நாடுகள் இறங்கியிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடுமையான சொற்களில் அமைந்த இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்கு நாடுகள், இதுபற்றி முன்னணி ஆசிய நாடுகளுடன் இராஜதந்திர ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் மயக்க நிலை குறித்தும் மேற்கு நாடுகள் இராஜத்தந்திர ரீதியில் கலந்துரையாடியுள்ளன.
ஜெனிவாவில் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் அனைத்துலக அரசசார்பற்ற நிறுவனங்களும், மேற்கு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், 2012ம் ஆண்டு சிறிலங்காவுக்கு “தீயணைப்பு ஆண்டு“ ஆகவே அமையும் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

வீதியில் இறங்கிப் போராட மக்கள் தயாராகவேண்டும் என்கிறார் சிவசக்தி ஆனந்தன்.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது போனால் தமிழ் மக்கள் வீதியில் இறங்கி அறவழிப்போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தயாராக வேண்டும் என்று சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பறநட்டகல் மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு அவர் தென்னங்கன்றுகளை வழங்கினார். இந்த வைபவத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி தொடங்கி இம்மாதம்வரை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்பவைகளை வழங்கினால் தன்னால் தனது சொந்த கிராமத்திற்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவரது இக்கூற்று மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்த்தால் தனது சொந்தக் கிராமத்திற்குச் செல்ல முடியாது என்று சொல்லியிருப்பது எமக்குப் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினை என்பதை ஜனாதிபதி தன்னுடைய சுயநலத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கிறாரா, என்ற சந்தேகம் இதன் மூலம் எழுந்துள்ளது. இதுவரை இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசியல் தலைவர்களும் இனப்பிரச்சினையைச் சரியாக அணுகவில்லை. நான் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பேன் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த ஜனாதிபதியே இப்போது இவ்வாறு கூறியிருக்கின்றார். இதன் மூலம் தமிழ் மக்களுக்கும் இனப்பிரச்சி;னையைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்தும் அரசாங்கம் இரட்டைவேடம் பூண்டிருக்கின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது வெறும் தேர்தல் பிரச்சாரமா? பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கென்று சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொண்டு எமது மக்களை நிர்க்கதியாக்கி இன்று தனது சுயலாபத்திற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்பதைக் கொடுக்கமாட்டேன் என்று சொல்வது சரியானதா? இலங்கையின் ஜனாதிபதி என்றால், அது அம்பாந்தோட்டைக்கு மட்டும்தானா? யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஆள்நடமாட்டமே இல்லாதிருந்த கிளிநொச்சியில் இராணுவத்தினர் அளித்த சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்துகொண்டு வடக்கு-கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டத்திற்கும் நான்தான் ஜனாதிபதி என்று சொல்லியிருந்தார். இனப்பிரச்சினைக்குப் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைந்த பட்ச தீர்வையாவது முன்வைக்க முடியாது, அவ்வாறு செய்தால் தான் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாது என்று ஒரு நாட்டின் ஜனாதிபதி கூறுவது ஏன்?
சொர்க்கத்திற்குப் போவதற்கான ஒரு மந்திரத்தை அடியார் ஒருவாருக்கு அவரது குருநாதர் ஓதிவிட்டு இதை நீ மற்றவர்களுக்குச் சொன்னால் நீ நரகத்திற்குச் செல்வாய் என்று சொல்லியபோது அந்த அடியார், ‘கேட்பவர்கள் அனைவரும் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்றால் நான் ஒருவன் நரகத்திற்குப் போவதில் பெருமைப்படுகின்றேன்’ என்றாராம். ஆனால் இந்த நாட்டின் ஜனாதிபதி இந்த நாட்டில் சமபங்காளிகளாக விளங்கும் தமிழ் மக்களுக்கு அவர்களுக்கு உரித்தான உரிமைகளை வழங்கினால் தான் தனது சொந்த கிராமத்திற்குச் செல்லமுடியாது என்கிறார். தன்னலமற்ற சேவையைப் புரியவேண்டிய ஆட்சிப்பொறுப்பிலுள்ளவர் இப்படிச் சுயநலமாகச் சிந்திப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
அமைச்சர்களும், எதிர்க்கட்சியினரும் ஜனாதிபதியின் இக்கூற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமலிருப்பதானது அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் கிராமத்தை வலுப்படுத்துவதற்காகவே அவ்வாறு நடந்துகொள்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நாம் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த அரசாங்கத்துடன் பேசித்தான் ஆகவேண்டும். ஆனால் அரசாங்கம் எமக்கு உரித்தானவற்றை வழங்க மறுத்தால் நாம் கூனிக்குறுகி நிற்காமல் ஜனநாயக மரபின் அடிப்படையில் அறவழிப்போராட்டங்களை நடத்துவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் அனைத்து அறவழிப்போராட்டங்களிலும் மக்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும். அதன் மூலம் எமது ஒற்றுமையையும் எமது உரிமைப்போராட்டத்தில் உள்ள நியாயத்தையும் சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறுவோம். என்று கூறினார்.
இந்தக் கூட்டத்தில் வவுனியா பிரதேசசபையின் தவிசாளர் சிவலிங்கம், உறுப்பினர்கள் கதிர்காமு பரமேஸ்வரன், தர்மலிங்கம், பார்த்திபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பறநட்டகல் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தலைமைதாங்கினார்.

26 டிசம்பர் 2011

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறுவது பற்றிய முக்கியமான விவகாரங்கள் குறித்து சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளதாக - அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளில் ஒன்றான- “சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அனைத்துலக குழு“ (Minority Rights Group International) கண்டித்துள்ளது.
சிறிலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளதை வரவேற்றுள்ள இந்த அமைப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த முக்கியமான சில விவகாரங்களில் அளித்துள்ள பரிந்துரைகளையும் வரவேற்றுள்ளது.
மொழி, காணி உரிமைகள், மீள்குடியமர்வு, கட்டாயமாக காணாமற்போனவர்கள், பெண்களின் பாதுகாப்பு, முஸ்லிம்களின் இடம்பெயர்வு போன்ற விடயங்களில் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இந்த அமைப்பு வரவேற்றுள்ளது.
இந்த அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளை, ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
“போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவது பற்றி ஆணைக்குழு எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
சிறிலங்கா அரசு மற்றும் இராணுவத் தரப்பின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை பக்கச்சார்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மோசமான மனிதஉரிமை மீறல்கள் குறித்து, இந்த அறிக்கையில் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை.
போர் முடிவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் சிறிலங்காவில் ஆட்கள் கட்டாயமாகக் காணாமற்போகும் சம்பவங்களும், சித்திரவதைகள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் தொடர்கின்றன.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நீதியையும், பெறுப்புக் கூறுவதையும் உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசு தவறியுள்ளது.
இந்தச் சூழலில், அனைத்துலகத்தின் நடவடிக்கை மிகவும் முக்கியமானது.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து, அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு, ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்“ என்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அனைத்துலக குழு அழைப்பு விடுத்துள்ளது.

மன்மோகனுக்கு கருப்புக்கொடி!விஜயகாந்த் கைதாகி விடுதலை.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாக கூறி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பிலிருந்து ஊர்வலகமாக புறப்பட்ட தேமுதிகவினர் சின்னமலை வழியாக பிரதமர் தங்கியிருந்த ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்றனர்.
சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை ஏற்க மறுத்து ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயகாந்த் மற்றும் தேமுதிகவினர் திருமண மண்டபவங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் 12.45 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், கூடங்குளம், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைகள் குறித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல், தனியார் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் செல்வது தவறு. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க பிரதமர் வந்தாரா? அரசாங்கம் விழாவுக்கு வந்த மாதிரி வந்துவிட்டு, ப.சிதம்பரம் சொல்கிற 2 விழாவுக்கு போய் சேருகிறார் பிரதமர். மக்கள் செத்தாலும் பரவாயில்லை. பிரதமர் விழாவுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். 4 அடுக்கு பாதுகாப்பு என்று சொன்னார்கள். திருச்சியில் இருந்து காரில் போகிறார் என்றார்கள். எங்கே கருப்புக்கொடி காட்டுவார்களோ என்று உடனே விமானத்தில் போகிறார். இதுதான் மக்களுக்கு செய்கிற நல்ல காரியமா?
திமுக அதிமுக ஒன்றுபட்டு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு போராட தயாராக இருந்தால், தேமுதிகவும் போராட்டத்தில் இணையும். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தி அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தேமுதிக தயாராக உள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த், போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை.
பிரதமருக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்திய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும், தே.மு.தி.கவினர் மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஆயிரகணக்கானவர்கள் கைது செய்யபட்டனர். 10 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் கைதானார்கள்.

25 டிசம்பர் 2011

காணி,காவல்துறை அதிகாரம் இல்லாது அரசு எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்போகிறது?

பொலிஸ், காணி அதிகாரங்கள் வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு வழங்கமுடியாது எனக் கூறிக்கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக்கொண்டிருப்பதானது இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு முனையும் நடவடிக்கையென தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் தமிழ் மக்களுக்கு அரசு எவ்வாறு அரசியல் தீர்வை வழங்கப்போகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளதன் அடிப்படையே வடக்கு கிழக்குக்கு காணி,பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதாகும். ஆனால், அரசாங்கத்தில் உள்ள ஹெகலிய போன்ற அமைச்சர்கள் காணி,பொலிஸ் அதிகாரங்கள் வழங்க முடியாது என்கின்றனர். தற்போது அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கொண்டுவருவதற்கே இந்தப் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை நடத்துகின்றது.
நிலாவைக்காட்டி பிள்ளைக்கு சோறூட்டுவது போல தமிழ்த்தேசியக் கூட்மைப்பை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைத்து சர்வதேச நெருக்கடியில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இன்று தமிழ் மக்களுக்கு தீர்வுத்திட்டங்களை வழங்கி அவர்கள் தமது வாழ்க்கையை மேம்படுத்த உதவுமாறு சர்தேச சமூகம் இன்று இலங்கை அரசாங்கத்துக்கு பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது.
இந்த நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அரசாங்கம் அவசரஅவசரமாக அமைக்க முனைந்துள்ளதுடன் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை அச்சுறுத்தி உள்வாங்க முனைகின்றது. இதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அடிபணியாது. அந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவானது ஒரு’பீடா”க்கடை போன்றது அதன் மூலம் எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை.
இந்த நிலையில் காணி,பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். அத்துடன் பேச்சு வார்த்தைகள் தொடர்பில் அரசாங்க அமைச்சர்கள் கருத்துக்கள் வழங்குவதை நிறுத்தி ஆக்கபூர்வமான விடயங்கள் தொடர்பில் சிந்திக்கவேண்டும்.

பேச்சுக்களிலிருந்து விலகமாட்டோம் என சம்பந்தர் பி.பி.சி.க்கு தெரிவித்தார்.

சிவில் சமூகம் கூட்டமைப்பிற்கு விடுத்த வேண்டுகோள்கள் தொடர்பாக சம்பந்தன் நேற்று மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்களிற்கு அனுப்பி வைத்தது தொடர்பில் பிபிசி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் தொடர்பு கொண்டு கேட்டிருந்தது.
சிவில் சமூகத்தால் முன்வைக்கப்பட்ட சுயநிர்ணயம் தேசியம் தொடர்பாக கேட்டபோது, அவை வெறும் கோசங்கள் என்ற சாரப்பட பதிலளித்த சம்பந்தன், அரசாங்கம் காணி பொலிஸ் அதிகாரங்களை தரமாட்டாது என அறிவித்த நிலையில் பேச்சுக்கள் எவ்வாறு தொடரப்பட இருக்கின்றது என கேட்டபோது, பேச்சுவார்த்தையில் அரச தரப்புக் குழு அவ்வாறு ஒன்றும் சொல்லவில்லை எனவும் வெறும் அமைச்சர்கள் கூறுவதை பொருட்படுத்த தேவை இல்லை எனவும் தெரிவித்தார். அதேவேளை நாம் பேச்சுக்களிலிருந்து ஒருபோதும் விலகமாட்டோம் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு சம்பந்தன் தெரிவித்தாலும், மகிந்த ராஜபச்சே பத்திரிகையாளர் மாநாட்டில் பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

24 டிசம்பர் 2011

ஐ.நா இன்னும் ஏன் மெளனம் காக்கிறது?இன்னர் சிற்றி பிரஸ் விசனம்.

சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக ஐ.நா கூறியிருந்த போதும், கடந்த ஒரு வாரமாகியும் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் ஐ.நா மெளனமாக இருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறுவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்று விமர்சனம் செய்யும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இந்த அறிவிப்புத் தொடர்பாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா எந்தக் கருத்தையும் வெளியிடாதிருப்பது குறித்தும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு அவர், ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்யும் பணி நடப்பதாகவும், அதுகுறித்து மேலதிகமாக சொல்வதற்கு ஏதும் இருந்தால் தாம் பின்னர் கூறுவதாகவும் பதிலளித்துள்ளார்.
இதன்பின்னர், பான் கீ மூனின் அதிகாரிகள் பலரிடம் விசாரித்ததில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஆய்வு செய்யுமாறு ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்களம் மற்றும் மனிதஉரிமைகள் பிரிவு ஆகியனவற்றிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை மேசையிலிருந்து கூட்டமைப்பு உடன் வெளியேறவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு மேடையிலிருந்து உடன் வெளியேறித் தமிழ் மக்களின் உரிமைக்காகத் தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக வேண்டும். இடதுசாரிகள், கூட்டமைப்பின் எந்தவொரு முடிவுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவே உள்ளனர்.
உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர் அமைப்புகளை ஒன்றுதிரட்டும் நடவடிக்கையையும் கூட்டமைப்பு, உடன் ஆரம்பிக்க வேண்டும். என புதிய இடதுசாரி கட்சி வலியுறுத்தி உள்ளது. அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச்செயலாளரும் தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளில் நகரசபைகளுக்குக்கூட காவற்துறை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் உட்பட முக்கியமான அதிகாரங்களை வழங்குவதற்கு மஹிந்த அரசு மறுப்புத் தெரிவிக்கின்றது. ஜனாதிபதி நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவே அதிகாரப் பரவலை வலியுறுத்தியுள்ளது. நிலைமை அப்படியிருக்கையில், அரசு மழுப்பல் போக்கைக் கடைப்பிடிப்பது ஏன்?
13ஆவது அரசமைப்பில் திருத்தம் செய்யவுள்ளோம் என அரசு கூறுவது அபத்தமானது. இதனை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனவாதம் என்ற கொடூர அரக்கன் சிறுபான்மையினத்தவரின் உரிமைகளை விழுங்கி ஏப்பம் விடுகின்றான். பிரதான எதிர்க்கட்சியில் இனவாதப் போக்குடையவர்கள் இருப்பதும் மஹிந்த அரசுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. சக்திவாய்ந்த எதிர்க்கட்சி ஒன்று அவசியம். அதனைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும். இல்லையேல் நாடு படுபாதாளத்தை நோக்கிப் பயணிக்கும்.
அதைத் தரமாட்டோம்; இதைத் தரமாட்டோம் எனக் கூறிக்கொண்டு பேச்சைத் தொடர்பவர்களுடன் பேசுவதில் எந்தப் பயனுமில்லை. கூட்டமைப்பு, உடன் பேச்சு மேடையிலிருந்து வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறி தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
உள்நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்குத் தமிழர்களின் பிரச்சினையைத் தெளிவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பு பெரும் கூட்டங்களைத் தெற்கில் நடத்தவேண்டும். அதற்கு நாம் பூரண ஒத்துழைப்பையும் வழங்குவோம் என விக்ரமபாகு தெரிவித்துள்ளார்.

23 டிசம்பர் 2011

மகிந்தவுடன் விருந்துண்டு மகிழ்ந்தார் சம்பந்தன்!

வரவு செலவுத்திட்ட வாக்களிப்பு பாராளுமன்றத்தில் நிறைவு பெற்ற பின்னர் நேற்று முன்தினம் இரவு சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற சம்பிரதாய பூர்வ விருந்துபசாரத்தில் மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க உட்பட ஆளுங்கட்சி எதிர்ச்கட்சி உறுப்பினர்கள் பங்குபற்றி இருந்தனர். இவ் விருந்துபசாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கலந்து கொண்டு மகிந்தவுடன் உணவுண்டு மகிழ்ந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு முடிந்த பின்னர், சபாநாயகர் அவர்களால் விருந்துபசாரம் வழங்கப்படுவது வழமையாகும். இக் குறித்த சம்பிரதாய பூர்வ நிகழ்விற்கு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு வழங்கப்பட்டது. குறித்த நாளில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மகிந்த வடகிழக்கிலிருந்து இராணுவ முகாங்கள் எக்காரணங் கொண்டும் அகற்ற முடியாது எனவும், காணி அதிகாரங்களோ பொலிஸ் அதிகாரங்களோ வழங்கப்படமாட்டாது எனவும் மகிந்த தெரிவித்திருந்தார். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த இராப் போசனத்தில் கலந்து கொள்வது குறித்து சிந்திக்கவில்லை.
குறித்த இராப்போசனத்தில் கலந்து கொள்வதற்காக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சக உறுப்பினர்களைக் கேட்ட போது, பாராளுமன்றில் நடைபெற்ற சம்பவத்தினைச் சுட்டிக்காட்டி நிகழ்வில் கலந்துகொள்வது பொருத்தமற்ற விடயம் எனத் தெரிவித்திருக்கின்றனர். இது இவ்வாறு இருக்க கூட்டமைப்பின் சம்பந்தன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மகிந்தவுடன் உணவுண்டு மகிழ்ந்தள்ளார்.
தமிழ் மக்களோடும், பத்திரிகைகளோடும் உரையாடும் போது தான் ஒரு தேசியவாதியாகக் காட்டிக் கொள்ளும் சம்பந்தன், மறுபுறத்தில் அரசுடனும் மகிந்தவுடனும் கைகோர்த்துச் செயற்படுவது தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்.

தமிழ் மக்களுக்கான பிரித்தானியாவின் அனைத்து பாராளுமன்றக் குழு தலைவர் Lee Scott (லீ ஸ்கொட்) அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில், உயிர் இழந்தவர்களுக்கும்,இன்று வரை இலங்கையில் வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் தமிழ் மக்களும், நீதியைப் பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றவாவது பாராளுமன்ற அமர்விற்கு அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியிலேயே Lee Scott அவர்கள் இக்கூற்றினை தெரிவித்துள்ளார்.
போர்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களை சர்வதேச விசாரணை கூண்டில் முன் நிறுத்துவதற்கான முயற்சியில் தனது சகாக்களையும் அழைத்துளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவின் மிச்சம், மோடன் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh (ஷிபொன் மக்டோனா) அவர்கள் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியில் எதிர் வரும் ஐ.நாவின் மனித உரிமைகள் சபையில், துறைசார் தகமையுடன் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நாவின் மனித உரிமைக் கூட்டத் தொடரில் அனைவரும் ஓருங்கிணைநத்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஷிபொன் மக்டோனா அவர்கள் போர் குற்ற விசாரணை தொடர்பில் கிடைக்கபெறும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்த அனைவரும் பாடுபடவேண்டும் Siobhain McDonagh கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஒருங்கிணைந்த பணியில் ஈடுபட்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டில் தானும் இணைந்திருப்பதையும் குறிப்பிட்டுள்ள Siobhain McDonagh அவர்கள் அனைத்து புலம் பெயர்ந்த தமிழ் மக்களும், உண்மையாக ஒருங்கிணைந்து அழுத்தத்தை கொடுக்க வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தனது பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.

22 டிசம்பர் 2011

ஆறுமுகன்,கக்கீம் ஆகியோர் போல் கூட்டமைப்பும் தம்மை ஆதரிக்க வேண்டும் என்கிறார் பசில்.

விடுதலைப் புலிகளுடன் ஒப்பிடும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களை விட மோசமாக நடந்து கொள்கிறது என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களை நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற கட்டடத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே பசில் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் ஆசிரியர்களை சந்தித்தபோது, விடுதலைப் புலிகள் போன்றே கூட்டமைப்பு செயற்படுவதாக குற்றம்சாட்டியிருந்த நிலையில் பசில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“விடுதலைப் புலிகள் சிலவேளைகளில் விரும்பியோ, விரும்பாமலோ அல்லது வேறு ஏதேனும் நோக்கத்துடனோ போர் நடந்து கொண்டிருந்த போது கூட அரசாங்கத் தரப்புடன் வெளிநாடுகளில் பேச்சுக்களை நடத்த முன்வந்தனர்.
அவ்வப்போது போர்நிறுத்த உடன்பாடுகளைச் செய்து கொண்டு, திடீரெனப் போரை பிரகடனம் செய்யும் தந்திரங்களையும் கையாண்டது.
முன்னர், தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே என்ற ஆணவத்துடன் விடுதலைப் புலிகள் செயற்பட்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்பதை கடந்த காலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்ற போதிலும், தம்முடன் மட்டுமே பேச்சுக்களை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற தவறான மனப்போக்கில் செயற்படுகிறது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் நியமிக்கவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கு கொள்வது அவசியம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் மட்டும் பேசி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முடியாது.
தெரிவுக்குழுவில் உள்ள சகல கட்சிகளுடனும் பேசி அவற்றின் இணக்கப்பாட்டுடன் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமே, சமாதானத்தை நிலைத்திருக்கச் செய்ய முடியும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அத்துடன் அந்த விவகாரம் முடிந்து விடும்.
ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் சிறப்பு தெரிவுக்குழு ஒன்றின் மூலம் பரிசீலனைக்கு எடுத்து, அதில் கூறப்பட்டுள்ள யோசனைகள், பரிந்துரைகள் மற்றும் சட்ட நுணுக்கங்களை தெளிவாக ஆராய்ந்து, ஒவ்வொன்றுக்கும் அரசாங்கம் நியாயமான தீர்வை ஏற்படுத்துவதே புத்திசாலித்தனமான செயல் என்று நான் நினைக்கிறேன்.
ரவூப் ஹக்கீம், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தமது மக்களின் நலனுக்காக சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படுவது போன்று, அதே வழியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்.
ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவினர் வடக்கில் சட்டபூர்வமான அரசியல் செய்வதை அரசாங்கம் வரவேற்கிறது.
அதுபோன்று தெற்கிலுள்ள ஏனைய கட்சிகளும் வடக்கில் அரசியலில் ஈடுபடுவது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு உதவியாக அமையும்.
அதேவேளை, ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற குழுவினர் வடக்கில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு சதி வேலைகளில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காணி,காவல்துறை அதிகாரமற்ற தீர்வு தேவையில்லை"சுரேஷ் பிரேமச்சந்திரன்.

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் அரசு ஒரு தீர்வை முன்வைக்க விரும்புமானால் அப்படியானதொரு தீர்வு தமிழ் மக்களுக்குத் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை எனவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து ´அத தெரண தமிழிணையம்´ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வினவியது, இதற்கு பதிலளித்த கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,
காணி, பொலிஸ் அதிகாரங்கள் அற்று பேச்சுவார்த்தை நடத்துவதானால் அது பயனளிக்காது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண அரசு ஒன்றுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தேவைகளாகும்.
காணி அதிகாரம் இல்லாவிட்டால் மாகாணத்திற்குள் அபிவிருத்தி நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது. ஆடு, மாடுகளை வளர்க்க முடியாது. விவசாயம் செய்ய முடியாது. மக்களுக்கு காணி பகிர்ந்தளிக்க முடியாது. அதேபோன்று பொலிஸ் அதிகாரம் இல்லாவிட்டார் மாகாணத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.
எனவே இவைகள் இல்லாத ஒரு அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்கள் 13ம் திருத்தத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை அரசு வழங்க மறுத்தால் 13வது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளியுள்ளதாக அர்த்தம்.
இப்படியிருக்கையில் இனப்பிரச்சினை தீர்வுக்கு 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று ´13 + +´ என்ற தீர்வை முன்வைக்கவுள்ளதாக அரசாங்கம் உலக நாடுகளுக்கு கூறிவருவது எவ்வாறு? என சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

சர்வதேச விசாரணைக்கு பிரித்தானியாவை ஆதரவளிக்கும்படி கோரும் மின் விண்ணப்பம்.

ஏற்கனவே நீங்கள் செய்யவில்லை எனில், பின்வரும் இணைப்பில் அழுத்திமின் மனு மேலே கையெழுத்திடுங்கள்.. http://epetitions.direct.gov.uk/petitions/14586

அத்துடன் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த இணைப்பை முன்னோக்கி அனுப்ப முடியுமாயின் நாம் நன்றி உடையவர்களாக இருப்போம்.
உங்கள் தகவலுக்கு, மனுவில் கையெழுத்து இடுப்பவர் பிரித்தானிய குடிமகனாக அல்லது பிரித்தானியாவில் வாழ்பவராக இருக்க வேண்டும் . இந்த மனுவில் கையொப்பம் இட வயது எல்லை கிடையாது. நீங்கள் மின் மனு வலைத்தளத்தில் ஒரு மின் மனுவில் கையெழுத்திடும் போது உங்கள் கையொப்பங்கள் உண்மையானதா என சோதிக்க உங்கள் பெயர், முகவரி மற்றும் மின்னஞ்சல் அளிக்க வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் தளத்தில் வெளியிடவோ மின் மனு உருவாக்கிய நபர் பார்க்கவோ முடியாது. முக்கியமாக, நீங்கள் மனுவில் கையெழுத்திட்ட பின்பு அதை உறுதி செய்ய உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவிக்கப்படும்.
நீங்கள் இணைப்பை அழுத்தி உறுதி செய்யும் போதுஉங்கள் பெயர் மட்டுமே மனுவில் சேர்க்கப்படும்.

21 டிசம்பர் 2011

கூட்டமைப்பின் பின்னணியில் புலிகள்"தாம் பொறுமை காப்பதாக கூறுகிறார் மகிந்த.

அரசுடனான தீர்வுப் பேச்சுகளின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், விடுதலைப் புலிகளின் பாணியையே பின்பற்றுகின்றனர். தனித்தீர்மானம் எடுக்கமுடியாமல் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் சக்திகளால் அவர்கள் தடுமாறுகின்றனர். நாமும் பொறுமையாகப் பேசுகிறோம். எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.இவ்வாறு நேற்றுக் கருத்து வெளியிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்றுக்காலை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கருத்துகளை வெளியிட்டார் ஜனாதிபதி.
அப்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கூட்டமைப்பு இடம் பெறவேண்டும் என்பது முக்கியமானது. இதற்கு உறுப்பினர்களின் பெயரை அனுப்புமாறு நாம் தெளிவாகக் கூறியிருக்கிறோம். ஆனால், புலிகள் செய்ததைத்தான் கூட்டமைப்பும் செய்கிறது. பேச்சு மேசையில் அமர்வார்கள். பிறகு ஏதாவது நிபந்தனையை விதித்துவிட்டு வெளியேறுவார்கள். பிறகு வருவார்கள், பேசுவார்கள். நாமும் மிகப் பொறுமையாகப் பேசுகிறோம். எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.
தமிழ்க் கூட்டமைப்பினரின் மனநிலை மாறவேண்டும். போர்ச்சூழல் மனநிலையிலிருந்து அவர்கள் விலகவேண்டும். நான் பேச்சுக்கு செல்லாமைக்கும் இதுதான் காரணம். தீர்மானங்களை எடுக்கக்கூடிய ஒரு தரப்புடன்தான் நாம் தீர்மானங்களை எடுக்கலாம். ஆனால், கூட்டமைப்பினர் இப்படியான நிலையில் இல்லை. தனியாக ஒரு தீர்மானத்தை அவர்களால் எடுக்கமுடியாத நிலைமை இருக்கிறது. அவர்கள் வெளித்தீர்மானத்திற்கு உட்பட்டு செயற்படவேண்டிய நிலையில் இருக்கின்றனர். புலிகளின் அடிவருடிகளும் வெளிநாட்டுச் சக்திகளும் அவர்களின் பின்னணியில் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ஷ.

20 டிசம்பர் 2011

அனைத்துலக விசாரணைக்கு கூட்டமைப்பு கோரிக்கை,உலக ஊடகங்கள் முக்கியத்துவம்.

சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ள விவகாரம் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அறிக்கைக்கு அனைத்துலக செய்தி முகவர் நிறுவனங்களும், ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
அமெரிக்க, அவுஸ்ரேலிய, ஐரோப்பிய, இந்திய ஊடகங்கள் பலவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது குறித்த செய்திகளையும் ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளன.
அத்துடன் உலகின் முன்னணி செய்தி முகவர் நிறுவனங்களும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
இதனால் இந்த விவகாரம் அனைத்துலக கவனத்தை அதிகளவில் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களையும்,புலிகளையும் குற்றம் சுமத்தவே ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இறுதியில் புலிகளையும், தமிழர்தரப்பையும் குற்றம் சாட்டிக்கொண்டு முடிக்கப்படும் என நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டபோது தெரிவித்திருந்த கருத்துக்கள் இன்று உண்மையாகி இருப்பதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பாக கலந்துரையாடும் வகையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம், சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், காலத்தை இழுத்தடிப்பதற்குமாகவே நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தது. நல்லிணக்க ஆணைக்குழு யுத்தத்தின் பின்னரான மூன்று வருடங்களினை ஆய்வுசெய்து அதை மையமாக வைத்துக் கொண்டு இந்த நாட்டில் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையிலான இன முரண்பாட்டிற்குத் தீர்வு காண நினைக்கின்றது.
ஆனால் அது சாத்தியமல்ல. தமிழ் இனத்தின் மீதான இன அழிப்பு நடவடிக்கையினை காலத்திற்குக் காலம்வந்த சிங்கள அரசாங்கங்கள் ஆரம்பித்து விட்டன. எனவே பிரித்தானியர் இங்கிருந்து வெளியேறிய காலத்திருந்தான ஆய்வினை சர்வதேசம் செய்யவேண்டும்.இந்த நிலையில் யுத்தத்திலும், இன அழிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்த தரப்பான அரசாங்கம் உருவாக்கிய ஆணைக்குழுவொன்றை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதே நிலைப்பாட்டையே கூட்டமைப்பும் எடுக்கவேண்டும், கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணைகளையும், ஜ.நாவின் நிபுணர்குழு அறிக்கையினையும் வரவேற்பதாக கூறிக் கொண்டிருக்கின்றது.ஆனால் உண்மையினை கண்டறியவேண்டும் என்ற கருத்தையே அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கேநடந்த உண்மை கூட்டமைப்புக்குத் தெரியும், எனவே பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை கூட்டமைப்பு வலியுறுத்தவேண்டும்.கடந்த ஒரு வருடகாலமாக இந்த அறிக்கையினை எதிர்பார்த்திருந்து சர்வதேசம் இன்று ஏமாற்றப்பட்டிருக்கின்றது எனவே சர்வதேசம் இனியாவது ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு(மகிந்த ஆணைக்குழு)அறிக்கை தொடர்பில் கவலையடைகிறோம்"என அமெரிக்கா தெரிவிப்பு.

அண்மையில் வெளிடப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து அமெரிக்கா தனது கவலையை தெரிவித்துள்ளதோடு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு மீது முழுமையான விசாரணை ஒன்றுக்கும் வலியுறுத்தியுள்ளது.
அரச படைகள் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியபோது பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 பக்க அறிக்கை உறுதி செய்துள்ளதென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. ஊடக சுதந்திரம், மனித உரிமை மீறல் போன்ற விடயங்களில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிலையான பரிந்துரைகளை செய்துள்ளதாக அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் முழு அறிக்கையையும் படித்து வருகிறோம். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற உண்மையான மனித உரிமை மீறல் மற்றும் சம்பவங்கள் குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ள விதம் தொடர்பில் நாம் கவலையடைகிறோம்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பூரணமானது என கருதாமல் அறிக்கையில் கூற தவறப்பட்ட விடயங்கள் குறித்தும் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தாமே பதிலளிப்பது சிறந்தது என அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் கூறியுள்ளார்.