07 டிசம்பர் 2010

மகிந்தவிற்கு ஆதரவான போராட்டத்திற்கு மிரட்டி கூட்டிவரப்பட்ட மக்கள்!

பிரித்தானிய பயங்கரவாதத்தை ஒழிப்போம் அமெரிக்காவின் தான்தோன்றித்தனத்தை எதிர்ப்போம் என்ற கோசங்களுடன் புலம்பெயர் தமிழர்களை எதிர்த்தும் ஜனாதிபதியை ஆதரித்தும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.
காலை 10 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமான பேரணி பஸ்நிலையத்திற்கு வந்து அங்கிருந்து ஸ்ரான்லி வீதியூடாக மீளவும் பஸ் நிலையத்தை வந்தடைந்து அங்கு நிறைவடைந்தது. இதில் சுமார் 1000 வரையான மக்கள் கலந்துகொண்டனர்.
இதற்காக மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் படையினரால் பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டதுடன் சிவில் உடையணிந்த படையினர் மக்களுக்கான சுலோகங்களை ஏழுதிக்கொடுத்ததுடன் மக்களோடு மக்களாகவும் நின்றிருந்தனர்.
இதில் மக்களை விடவும் சிவில் உடையணிந்த படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் தான் அதிகமாக கலந்து கொண்டதனை காணமுடிந்தது. மேலும் யாழில் வந்து குடியேறியுள்ள சிங்கள மக்களும் கலந்து கொண்டு பிரித்தானியாவிற்கெதிராக சிங்கள மொழியில் கோசமிட்டனர்.
மேலும் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானவர்கள் சிங்கள மொழியில் ஜனாதிபதி யெயவேவா என கோசமிட்டனர். சில இடங்களில்தான் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமிழ் மக்கள் தமிழில் போராடுவோம் போராடுவோம் என கோசமிட்டனர்.
இவர்களில் பலர் புலனாய்வுப் பிரிவினரும் ஒரு சிலரே தமிழர்களாகவும் காணப்பட்டனர். அதே வேளை சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் மற்றும் அவரது தந்தை ஆகியோரும் கலந்துகொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தினால் போக்குவரத்து மோசமாக பாதிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை படம்பிடிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலர் புலனாய்வுப் பிரிவினரால் துருவித்துருவி விசாரிக்கப்பட்டதுடன் அவர்களது கமராக்களும் சோதனையிடப்பட்டது. காரணம் தங்களுடைய புகைப்படங்கள் ஏதும் உள்ளனவா என்று பார்ப்பதற்கு என கூறப்பட்டது.
இதே வேளை ஆர்ப்பாட்டத்தையடுத்த நகரில் பெருமளவில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தமையால் நகரில் பதற்றம் நிலவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக