29 டிசம்பர் 2010

இனியும் மவுனிகளாக இருக்க முடியாது!-ஜேசுதாஸ் அடிகளார்.

வாய்மூடி இனியும் நாங்கள் எல்லோரும் அமைதியாக இருப்போமானால் எங்களுடைய உயிர்கள் கூட மிஞ்சப்போவதில்லை என தெரிவித்தார் அருட்பணி யேசுதாஸ் அடிகளார். ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரதி கல்விப்பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்து முகமாக நடைபெற்ற அஞ்சலிக்கூட்டத்தில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்வாறான படுகொலைகள் தொடர்பில் நாங்கள் இனிமேலும் மௌனித்திருக்க முடியாது, எங்களிடம் மாணவர்கள் வளம் உண்டு. அவர்களை உரிய வகையில் வழிநடத்த வேண்டும். அடுத்துவரும் காலங்களில் இவ்வாறான படுகொலைகளை இடம் பெறாது இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அமரர் சிவலிங்கத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிரி இருந்திருக்கமுடியாது. அவர் எப்போதும் அமைதியான சுபாவம் கொண்டிருந்தார். தனது குழந்தைகள் தொடர்பில் கனவுகள் இருந்தன. அப்பாவியான அவரது படுகொலை தொடர்பில் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்..
யாழ் மாவட்டம் என்றும் இல்லாதவாறு மாகாண ரீதியிலும் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஏழை மாணவர்களது கல்வி தொடர்பில் இறுதிவரை அர்ப்பணிப்புடன் பணியாற்றியமை தொடர்பில் அமரர் சிவலிங்கம் எனக்கு முன் உதாரணமாக இருந்தார்
எனத் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று (28.12.10) அமரர் புகழ் உடல் அவரது வாசஸ்தலத்தில் வைக்கப்பட்ட வேளை கொட்டும் மழையைக்கூடப் பாராது நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்னர் பூதவுடல் மருதனாமடம் பிரதான வீதியூடாக வலிகாமம் வலயகல்வி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு வலயக் கல்வி பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் அஞ்சலியுரையாற்றியதுடன் மக்களாலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் இணுவில் காரைக்கால் மைதானத்தில பூதவுடல் தீயுடன் சங்கமமானது. அமரர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் முன்னாள் மாணவனும், தற்போதய உதவிக் கல்விப் பணிப்பாளருமான மணிமாறன் உரையாற்றுகையில் படுகொலை தொடர்பில் அனைத்து மட்டங்களிலும் ஒன்று திரண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக