17 டிசம்பர் 2010

சிங்கள ஆண்கள் வட இந்தியாவிற்கும்,சிங்கள பெண்கள் எங்களுடனும் வரவேண்டும்.

கம்பராமாயணம் மகாவம்சத்தை தழுவி எழுதப்பட்டது என்றும், திருவள்ளுவர் சிங்கள பௌத்தர் என்றும், கௌதம புத்தர் அம்பாந்தோட்டையில் பிறந்தார் என்றும், தமிழர்களுக்கு வேஷ்டியும், சேலையும் கட்டுவதற்கு கற்றுக்கொடுத்ததே தனது மூதாதையர் என்றும் ஜாதிக ஹெல உருமயவின் பாராளுமன்ற உறுப்பினர் மேதானந்த எல்லாவல தேரர்......
நாளை கருத்து தெரிவித்தாலும்கூட நான் ஆச்சரியப்படப்போவதில்லை. ஏனென்றால் இவரை எனக்கு மிக நன்றாக தெரியும். தன்னைத்தானே “வரலாற்று சக்கரவர்த்தி” என அழைத்துக்கொள்ளும் இந்த தேரருக்கு இன்றைய இனவாத யதார்த்தத்திற்கு ஏற்றவகையில் வரலாற்றை திரிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வின்போது மேதானந்த எல்லாவல தேரர் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது:
மேதானந்த தேரரின் கட்டுக்கதைகளுக்கும், மோசடி கருத்துகளுக்கும் பதில்கூறி நாம் எமது நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. பாராளுமன்றத்தில் நான் இருந்தபோது கடந்த வருடம் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.
தமிழர்களின் தாய்நாடு இந்தியா என்றும், முஸ்லிம்களின் தாயகம் பாகிஸ்தான் என்றும் மேதானந்த தேரர் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்தார். மேலும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுமானால் தமிழர்கள் இந்தியாவிற்கும், முஸ்லிம்கள் பாகிஸ்தானிற்கும் போய்விட வேண்டும் என்றும் இவர் கூறியிருந்தார்.
அவ்வேளையிலே தமிழர்கள் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படவேண்டும் என்றால், சிங்கள ஆண்கள் வடஇந்தியாவிற்கும், சிங்கள பெண்கள் எங்களுடன் தென்னிந்தியாவிற்கும் வரவேண்டியிருக்கும் என்றும், முஸ்லிம் மக்களை பாகிஸ்தானிற்கு அனுப்பிவிட்டு, முழு நாட்டையும் இத்தீவின் பூர்வீக குடிகளான வேடர்களிடம் ஒப்படைப்போம் என்று மேதானந்த தேரருக்கு நான் பதில் கூறியிருந்தேன்.
ஏனென்றால் சிங்கள வரலாற்று நூலான மகாவம்சத்திலே சிங்கள இனத்தை உருவாக்கிய விஜயன் வட இந்தியாவிலிருந்து வந்ததாகவும், பின்னர் அவருக்கும், அவரது எழுநூறு நண்பர்களுக்கும் தென்னிந்தியாவின் பாண்டிய நாட்டில் இருந்து அரசகுமாரியையும், பெண்களையும் கொண்டுவந்து மணம் செய்துகொண்டதாகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
எனவே ஜாதிக ஹெல உருமயவின் வரலாற்று சக்கரவத்தி மேதானந்த எல்லாவல தேரர் தமிழர்களின் வரலாற்றை திருத்தி எழுதுவதற்கு முன்னர் சிங்கள இனத்தின் முதல் வரலாற்று நூலான மகாவம்சத்தை திருத்தி எழுதவேண்டும் என கூறவிரும்புகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக