05 டிசம்பர் 2010

இசைப்பிரியா சித்திரவதை செய்யப்பட்டே கொல்லப்பட்டார்!

பெண் ஊடகவியலாளரான இசைப்பிரியா என அழைக்கப்பட்ட ஷோபா (27) போரின் இறுதிக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். போர் நடைபெற்ற இலங்கையின் வடபாகத்தில் அடையாளம் காணப்படா இடமொன்றில் வைத்து இவர் இலங்கை இராணுவத்தின் 53வது படைப்பிரிவினரால் சித்தரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் சனல் 4இல் ஒளிபரப்பப்பட்ட அதிர்ச்சிதரக் கூடிய காணொளிக்காட்சியில் சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவின் உடல் காண்பிக்கப்பட்டது.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு 2009 ஜுன் 21 இல் போரின் இறுதி நாளான 2009 மே18 போரில் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளி;ன் தலைவர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் விடுதலைப் புலிகளின் தொடர்பாடல் மற்றும் பிரச்சாரப் பிரிவைச் சேர்ந்த லெப்.கேர்ணல் இசைப்பிரியா 53வது படைப்பிரிவின் படையினரால் மோதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சனல் 4 வெளியிட்ட காணொளிக்காட்சியின்படி உறுதிப்படுத்தப்படுகிற உண்மை என்னவென்றால் அவர் மோதலில் கொலை செய்யப்படவில்லை கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்பது தான்.
2010 நவம்பர் 30ஆம் திகதி பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்தப் பயங்கரமான காணொளிக்காட்சியில் சீருடை அணிந்த இலங்கைப் படையினர் எவ்வித இடையூறுமின்றி முழுச் சுதந்திரத்தோடு திட்டமிட்ட படுகொலையில் ஈடுபடுவதையும் கண்கள் கட்டப்பட்டு கைகள் பின்னால் கட்டப்பட்ட டசின்கணக்கான ஆண்களினதும் பெண்களினதும் நிர்வாணச்சடலங்கள் பின்னணியில் கிடப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
அங்கிருந்த படையினர் சிங்களத்தில் பேசுதையும் குறிப்பாக நிர்வாணமாகக் கிடக்கும் பெண்களின் சடலங்கள் குறித்து பாலியல் கொச்சைப்படுத்தல்களில் ஈடுபடுவதையும் அக்காட்சிகள் தெளிவாக எடுத்துக்காட்டின.
நிர்வாணமாகக் காணப்படும் யுவதியின் சடலத்தை கமெரா அண்மிய காட்சியில் காட்டும் போது படையினர் பின்னணியில் மேற்கொள்ளும் சம்பாஷணை அந்த யுவதி மிகக்கிட்டிய தூரத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிக்கிறார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
இதேவேளை தமிழ்நெற் இணையத்தளம் வன்னியிலிருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்த தனது வன்னிச் செய்தியாளர் சனல் 4இல் காட்டப்பட்ட கைகள் பின்புறம் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காட்டப்பட்ட சடலத்தில் ஒன்று இசைப்பிரியா எனப்படும் ஷோபாவினுடையது என உறுதிப்படுத்தி உள்ளார்.
இசைப்பிரியா புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றியதோடு ஒளிச்சுவடு எனும் ஒளிநாடாவையும் தயாரித்து வந்தார்.
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் இருந்தவர்கள் ஊடாக எனக்குக் கிடைத்த தகவல் என்னவென்றால் ஷோபியா இறுதிவரை ஆயுதம் தரிக்காதவராக படையணியில் இணையாதவராக இருந்து வந்தார் என்பதே என தமிழ் நெற் இணையத்தளத்தின் வன்னி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.
அவருடைய தகவலின்படி ஷோபா தனது அகல் என்கிற ஆறுமாதப் பெண் குழந்தையையும் போரின் இறுதி நாட்களில பொது மக்கள் மீதான இலங்கை அரசின் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதலில்; இழந்திருக்கிறார்.
இலங்கைக்கு வெளியே வதியும் இசைப்பிரியாவின் சகோதரர்களும் சனல் 4இன் குறித்த காணொளியில் காணப்படுவது இசைப்பிரியா தான் என உறுதிப்படுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக