16 டிசம்பர் 2010

கோபம் பொத்துக்கொண்டு வருகிறதாம் இமெல்டாவுக்கு!

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் இணையங்களை நடத்தி வருகின்றவர்கள் அரசிற்கு விரோதமானவர்கள். அவர்கள் மக்களுக்கும் விரோதமானவர்கள். அவர்கள் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்கள். இணையங்களில் அவர்கள் பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் குற்றம் சாட்டியுள்ளார் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துரசிங்கவிற்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் குஸி வருது கிடைத்தைமை தொடர்பான கௌரவிப்பு நிகழ்வொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வீதியிலுள்ள பாதுகாவலன் மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அடையாளம் தெரியாத குழு ஒன்றே இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்விற்கு யாழ் ஆயர் அதி வணக்கத்திற்கு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, நல்லை ஆதீன குரு சோமசுந்தர குருக்கள் பரமாச்சாரியார், மற்றும் இந்து கிறிஸ்தவ முஸ்லிம் பெரியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கு கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றுகையிலேயே இமெல்டா சுகுமார் புலம்பெயர் இணைய ஊடகவிலாளர்களை போட்டுத் தாக்கத் தொடங்கினார். குறிப்பாக இணையங்களில் பொய்யான பிரச்சாரங்களே மேற்கொள்ளப்படுகின்றது. இது அந்த இணையங்களினது ஆசிரியர்கள் அல்லது ஊடகவிலாளர்களது இயலாமை மற்றும் அறியாமை கூடக் காரணமாக இருக்கலாம். உண்மையை பொய்யாக்கி எழுதுகிறார்கள்;. பொய்யை உண்மையாக்கி எழுதுகிறார்கள்.
குடாநாட்டில் வெளிவருகின்ற செய்திகளில் மேலால் உள்ளவற்றையும் கீழால் உள்ளவற்றையும் வெட்டி நடுவில் உள்ளவற்றை மட்டும் சிக்கலான வகையில் போட்டு வருகின்றார்கள்.
குடாநாட்டில் 21 ஆயிரத்துக்கும் அதிகமான கணவனை இழந்த பெண்கள் இருக்கின்றார்கள். இவர்கள் இயற்கையாகவோ அல்லது யுத்தத்தாலோ கணவன்மாரை இழந்திருக்கின்றார்கள். அவர்களைப் பற்றி சிந்திப்பவர்களாக கூட இந்த இணைய ஆசிரியர்களோ அல்லது இணைய ஊடகவிலாளர்களோ இல்லை. குடாநாட்டு மக்களுக்காக 60 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் தேவையாக இருக்கின்றது. இவை சேதமடைந்தோ அல்லது அழிந்தோ இருக்கின்றன. ஆனால் இவை தொடர்பில் எத்தனை பேர் சிந்திக்கின்றார்கள்.
ஆனால் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவோ எத்தனையோ வீடுகளைக் கட்டி வழங்கி வருகின்றார். இரவு பகலாக வடமராட்சி கிழக்கில் மக்கள் மீளக் குடியமரும் பகுதிகளில் வீடுகளை அமைக்கும் வேலைகளை படைத்தரப்பு மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக எனக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தவர் மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவே. நாட்டையும் மக்களையும் காக்கும் தலையாய கடமையில் அவர் நீடூழி வாழ வேண்டும் என இமெல்டா சுகுமார் தெரிவித்திருந்தார்.
அண்மைக் காலமாக லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்திருந்ததும் அந்தக் கருத்து தொடர்பில் புலம்பெயர் ஊடகங்கள் பெரும் விமர்சனங்களை தெரிவித்திருந்த நிலையிலேயே இன்று புலம்பெயர் ஊடகங்களினது ஊடக ஆசிரியர்களை அவர் போட்டுத் தாக்கினார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சுமார் 100 முதல் 200 வரையிலான பொதுமக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். எனினும் அழைத்து வரப்பட்ட பலரும் துயரம் தோய்ந்த முகங்களுடன் காணப்பட்டதாகவும் இது தொடர்பில் ஊடகவிலாளர்கள் அவர்களிடம் வினவிய போது காணாமல் போனவர்கள் அல்லது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஆசை வார்த்தை காட்டி அழைத்து வரப்படதாகவும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக கணவன் பிள்ளைகள் தொடர்பான தகவல்களை ராணுவத் தளபதியிடம் பெற்று வழங்கித் தருவதாக சிலர் தம்மிடம் கூறியதை அடுத்தே தாங்கள் அவரைச் சந்திக்கலாம் என வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். தமக்கு இவ்வாறான பாராட்டு விழா நடக்கப் போவது பற்ற எதுவுமே தெரியாதெனவும் சில பெண்கள் குறிப்பிட்டனர் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ள போதிலும் ஈபிடிபி அமைப்பின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ அல்லது முக்கியஸ்தர்களோ கலந்து கொள்ளவில்லை. ஈபிடிபியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான உதயன் மட்டும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். எனினும் கூட்டமைப்போ அல்லது வேறெந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பொது அமைப்புக்களின் முக்கியஸ்தாகளோ பிரசன்னமாகியிருக்கவில்லை.

1 கருத்து:

  1. 21 ஆயிரம் விதவைச் சகோதரிகளை விதவையாக்கியவர் யார்? 60 ஆயிரம் வீடுகளை உடைத்தும் சிதைத்தும் நாசமாக்கியவர்கள் யார்? சரி இவைகளுக்கெல்லாம் தீர்வை இந்த கொலைவெறி அரசும் அதன் கூலிப்படைத் தலைமையும் வழங்கும என்று நினைக்கின்றாரோ இந்த எலும்புப் பொறுக்கி அரச அதிபர். என்ன 21ஆயிரம் விதவைச் சகோதரிகளுக்கு சிங்கள கணவன்மரை தேடித்தர முயற்சிக்கிறாரோ இந்த அம்மணி? மேலும் மேலும தன் இனத்தின் மீதே குரோதம் வளர்க்கும இவர் இந்த சிங்கள காடையருடன் சேர்ந்து எதை சாதிக்கப் போகின்றார்? அம்மணி தமிழர் உங்கள் அனைவரையும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது புரியட்டும். தமிழருக்குச் சார்பான இணையங்களினாலே தான் தாயகத்தில் நடந்த அகோரங்கள் வெளிப்பட்டதையும் உங்கள் கருங்காலித் தனத்தை வெளிச்சம் போட்டுக காட்டப்படுவதையும் மறந்து விடாதீர்கள். உங்களைப் போன்றவர்களை தமிழீழ மக்கள் மறந்துவிடமாட்டார்கள். கூலிக்கு சன்மானம் கிட்டும்.

    பதிலளிநீக்கு