11 டிசம்பர் 2010

எங்கள் பிள்ளைகளை தந்துவிடு' இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு!

எங்கள் பிள்ளைகளை தந்துவிடு' இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு மனித உரிமைகள் தின ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் :சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை இரு வேறு ஆர்ப்பாட்டங்கள் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்றன.காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு,காணாமல் போனோரை கண்டறியும் குழு நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்குபற்றினர்.சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம்,சோசலிஷ கட்சி,பெண்கள் கண்காணிப்பகம்,சுதந்திரத்துக்கான அரங்கம்,இடதுசாரி விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளும் பங்குபற்றின.
"தந்துவிடு ஐயா தந்துவிடு,எங்கள் பிள்ளைகளை தந்துவிடு' "இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு, இனியும் எங்களை வாழ விடு' போன்ற கோஷங்களை எழுப்பியதுடன்,' அரசியல் கைதிகளை விடுதலை செய், இடம்பெயர்ந்தோரின் உரிமைகளை பேணுவோம், ரிசானாவின் உயிரைக் காப்பாற்றுவோம் என்ற வாசகமடங்கிய பதாகைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.
இதேவேளை ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. சுமார் ஒரு மணிநேரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களின் பெயர்களை வெளியிடு,மாணவர் மீதான அடக்கு முறையை உடனடியாக நிறுத்து, கொடூர பழிவாங்கலை நிறுத்தி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய், நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்து மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்து ஆகிய பதாகைகளை தாங்கியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களா விஜிதஹேரத்,சுனில் ஹந்துன்நெத்தி,அர்ஜுணா ரணதுங்க, ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன்,திருமதி அனோமா பொன்சேகா ஆகியோர் பங்குபற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக