தேசிய பாதுகாப்புத் தினத்தையொட்டி யாழ்நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாவில் சிங்களத்திலேயே தேசிய கீதம் பாடவேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நாளை ஞாயிறு காலை பிரதமர் டி.எம்.ஜயரட்ண தலைமையில் நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புத் தினத்திற்காக யாழ்நகரில் படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இந்த நிகழ்வுக்கு முன் குடாநாட்டைச் சேர்ந்த பாடசாலை மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெறவுள்ளது.
இதற்கான ஒத்திகை கடந்த இரு நாட்களாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
27 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்குபற்றும் இந்த அணிவகுப்பு மரியாதைக்காகத் தேசிய கீதத்தைச் சிங்களத்திலேயே பாடவேண்டுமென கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் குடாநாட்டு மாணவர்கள் இதனைத் தமிழிலேயே பாட முற்பட்டதால் பெரும் குழப்ப நிலையேற்பட்டுள்ளது.
யாழ்ப்பாண அரச அதிகாரிகளும் படைத்தரப்பும் சிங்களத்திலேயே தேசிய கீதத்தைப் பாடுமாறு வற்புறுத்தியதால் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே எதிர்ப்பு நிலை ஏற்பட்டது.
கடும் அழுத்தங்கள் மத்தியில் தங்களுக்குத் தெரியாத மொழியில் அவர்கள் இந்த ஒத்திகையில் தேசிய கீதத்தை பாடவேண்டிய நிர்ப்பந்தமேற்பட்டதாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளதுடன் இது குறித்து தங்கள் விசனத்தையும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் மகனான நாமல் ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மிகமிக இரகசியமான முறையில் சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவதற்கான பயிற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக