சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன, அனைத்துலக விசாரணைகள் அவசியம் என அமெரிக்காவின் செனட் சபையை சேர்ந்த 17 உறுப்பினர்கள் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டனுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவும், முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுமே காரணம் என அமெரிக்க தூதுவர் பற்றீசியா தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டதை தொடர்ந்து செனட் சபை உறுப்பினர்களின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க காங்கிரஸ் சபையின் 58 உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளின் தொடர்ச்சியாக இந்த கடிதம் அமைந்துள்ளது.
அவர்கள் தமது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதம் போர்க்குற்றம் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், ஒக்டோபர் மாதம் வெளிவிவகாரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலும் போரில் 300 இங்கு மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சிறீலங்காவில் அமைதி ஏற்பட வேண்டும்மெனில் இந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் அவசியம். சிறீலங்கா அரசு அமைத்த ஆணைக்குழுக்கள் எல்லாம் தோல்வியடைந்துள்ளன. உலகின் மிக முக்கிய மனித உரிமை அமைப்புக்களான மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை போன்றன உட்பட பல மனித உரிமை அமைப்புக்கள் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
சிறீலங்கா மக்களுக்கு இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி கிடைக்கவேண்டும். சிறீலங்காவில் அமைதியை ஏற்படுத்தாது, போரின் உருவாக்கத்தை தடுக்க முடியாது.
பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலகத்தின் சுயாதீன விசாரணைகளை ஆரம்பிப்பதே அமைதியை ஏற்படுத்துவதற்கான முதலாவது படி. அமெரிக்க அரச தலைவர் ஓபாமா தெரிவித்துள்ள கருத்தும் இதனை ஒத்ததே என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக