மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒலிபரப்பப்பட்ட காரணத்தால் சீற்றமடைந்துள்ள எதிரியானவன் எமது வானொலியை முடக்குவதற்கு திட்டமிட்டுள்ளான்.அதன்படி ‘புலிகளின் குரல் என்ற பெயரிலேயே புதிதாக ஒரு வானொலியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளான்.எதிரிகளின் புதிய தாக்குதல் குறித்து மக்களை விழிப்பாக இருக்குமாறு புலிகளின் குரல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து புலிகளின் குரல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
புலிகளின் குரல் மீதான எதிரிகளின் புதிய தாக்குதல் விழிப்பாக இருங்கள் மக்களே!
-------------------------------------------------------------------------------------அன்பான தமிழ் மக்களே!,
தாயகத்தில் தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு நிகழ்த்திய இனப்படுகொலையின் உச்சமான முள்ளிவாய்க்கால் படுகொலையை அடுத்து எமது தேசிய வானொலியான புலிகளின்குரல் தாயகத்தில் தனது ஒலிபரப்பை நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தபோதும் சில நாட்களுக்குள்ளேயே மீண்டும் புத்துயிர்பெற்று அது மீளவும் இயங்கத் தொடங்கியது.
அன்று தொடக்கம் இன்றுவரை பல்வேறு குழப்ப நிலைகள் கருத்து மோதல்கள் ஆகியவற்றிற்குள் சிக்காது நாம் எமது பணியினைச் செய்து வருகின்றோம்.
நிதிச் சிக்கல்கள் ஒருபுறம், இந்த வானொலியை நிறுத்தவென எதிரி எடுக்கும் நடவடிக்கைகள் ஒருபுறமென பல்வேறு நெருக்கடிக்குள்ளும் எமது தேசிய வானொலி தனது சேவையை வழங்கி வந்துகொண்டிருக்கின்றது.
தமிழீழத் தேசிய எழுச்சிநாளான மாவீரர் நாள் நிகழ்வுகளை வழமை போலவே புலிகளின் குரல் வானொலி நேரடியாக ஒலிபரப்பி வந்துள்ளது. அவ்வகையில் 2009 ஆம் ஆண்டுக்குரிய மாவீரர்நாள் நிகழ்வுகளையும் 2010 ஆம் ஆண்டுக்குரிய மாவீரர்நாள் நிகழ்வுகளை எமது வானொலி சிற்றலை வழியாக தாயகம் உட்பட ஆசிய நாடுகளிலும் சிறப்புற ஒலிபரப்பியிருந்தது.
மாவீரர் நாள் 2010 நிகழ்வுகள் உலகமெங்கும் புலிகளின் குரல் வழியாக ஒலிபரப்பப்பட்டதோடு தாயகத்திலும் எமது மக்கள் இவ்வொலிபரப்பைக் கேட்டு தமது மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டார்கள். எமது வானொலி ஒலிபரப்பானது எதிரிகளுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்த காரணத்தால் குறிப்பாக தாயகத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் ஒலிபரப்பப்பட்ட காரணத்தால் சீற்றமடைந்துள்ள எதிரியானவன் எமது வானொலியை முடக்குவதற்கான பல சதித்திட்டங்களை மேற்கொண்டான். இதுவரை அவற்றில் தோல்வியடைந்து வந்திருந்தாலும் இவ்வாறான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்ட வண்ணமேயுள்ளான்.
இந்நிலையில் புதிதாக ஒரு உத்தியைக் கையாண்டு எமது வானொலி மீதான தனது தாக்குதலைத் தொடுக்கத் திட்டமிட்டுள்ளான். அதன்படி ‘புலிகளின் குரல் என்ற பெயரிலேயே புதிதாக ஒரு வானொலியைத் தொடங்கி, அதை இயக்குவதாகத் திட்டமிட்டுள்ளான். இதன்மூலம் இரண்டு விடயங்களைச் சாதிக்க முடியுமென எதிரி நினைக்கின்றான்.
1. தமிழ் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதோடு அவர்களைப் போராட்டச் செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கச் செய்தல்.
2. புதிதாக தாம் நிறுவப்போகும் போலி வானொலியை உண்மையான ‘புலிகளின் குரல்’ வானொலி என நம்பும் மக்களுக்கு, தனது கருத்துக்களை ஊட்டி, எமது தாயக விடுதலைப் பயணத்தைப் படிப்படியாகக் குலைப்பது.
இவையிரண்டு நோக்கங்களுமே எமது மக்களை போராட்டப் பணிகளிலிருந்து ஒதுங்கியிருக்கச் செய்யும் விளைவையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
எனவே அன்பார்ந்த தமிழ் மக்களே,
புலிகளின் குரல் வானொலியின் செயற்பாட்டை முடக்குவது எதிரிக்குரிய முக்கிய பணியாகிப் போனதால் பல்வேறு சதித்திட்டங்களோடு எதிரி களமிறங்கியுள்ளதை அறிய முடிகின்றது. அதன் ஒருகட்டமே இந்த ‘புலிகளின் குரல்’ என்ற பெயரிலேயே புதிய போலி வானொலியைத் தொடங்கி நடத்துவது. இதுகுறித்த தெளிவை எமது மக்களுக்கு வழங்க வேண்டியதும் எச்சரிக்க வேண்டியதும் புலிகளின் குரல் நிர்வாகத்தின் கடமையாதலால் இந்த ஊடக அறிக்கையை நாம் வெளியிடுகின்றோம்.
எதிரியின் சூழ்ச்சித்திட்டத்துக்குப் பலியாகாமல், தொடர்ந்தும் எமது வானொலியோடு இணைந்திருக்கும்படி எமது மக்களை அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
புலிகளின் குரல் நிர்வாகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக