27 டிசம்பர் 2010

சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திட ஐ.நா.கோரிக்கை.

பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில், பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான 100 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் இலங்கையில் சட்டவிரோதமான காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து தகவல் வெளியிட முடியாது எனவும், அடுத்த மாதமளவில் அறிக்கை வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்களை கட்டுப்படுத்தும் சர்வதேச பிரகடனத்தில் 21 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் முதல் இந்த பிரகடனம் அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைதுகள், தடுத்து வைத்தல்கள், கடத்தல்கள் மற்றும் அதிகார தரப்பினரால் மேற்கொள்ளப்படும் உரிமை மீறல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் இந்த பிரகடனம் அமுல்படுத்தப்பட உள்ளது.
இந்த பிரகடனத்திற்கு இலங்கை முதலில் ஆதரவளித்த போதிலும், சில பிணக்குகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை கண்டு பிடித்தல், குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரகடனத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச ரீதியில் நியாயம் கிட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக