16 டிசம்பர் 2010

இவர்களை தாக்க புலிகள் திட்டமாம்!தமிழரை ஒடுக்க மீண்டுமொரு சதி திட்டம்.

பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய உளவுத் துறையிடம் இருந்து இதுதொடர்பான எச்சரிக்கை வந்துள்ளதை தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. ஆனால், அவர்கள் இந்தியாவில் ஒருங்கிணைய முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதி ஆகியோர் தமிழகத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.
மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கை குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் புதன்கிழமை கூறியதாவது:
உளவுத் துறையிடமிருந்து தமிழக போலீசுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்று வந்துள்ளது. அந்த தகவலில், பிரதமர் மன்மோகன்சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உள்பட நாட்டின் சில முக்கிய தலைவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு, அவர்களின் உயிருக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாகவும், விடுதலைப்புலிகள் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், எனவே அந்த அமைப்பின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளோடு, என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்று நான் ஆலோசனை நடத்தி உள்ளேன். உளவுத் துறை அனுப்பியுள்ள இந்த எச்சரிக்கை தகவல் பற்றி ரகசிய விசாரணை நடத்தும்படி தமிழக உளவுப்பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் இந்த எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மிரட்டல் பட்டியலில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் தமிழகம் வரும் போது, இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இனிமேல் செய்யப்படும். முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு செய்யப்படும் பாதுகாப்பு, அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு பலப்படுத்தப்படும்.
இவ்வாறு டி.ஜி.பி. லத்திகா சரண் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக