05 பிப்ரவரி 2013

படையில் தொடர்ந்து 5வருடம் இருந்தால் 10லட்சம் பெறுமதியான வீடாம்!

படையில் தொடர்ந்து ஜந்து வருடங்கள் இணைந்திருந்தால் சுமார் பத்து இலட்சம் பெறுமதியான வீடு ஒன்று கட்டி வழங்கப்படுமென புது அஸ்திரமொன்றை ஏவியுள்ளது இலங்கைப் படைத்தரப்பு. வன்னியில் படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கான பயிற்சிகள் தற்போது முடிவுற்றுள்ளன. இந்நிலையில் இவ்வளவு காலமும் அவர்களை ஒருமாதிரி இழுத்துப்பிடித்து வைத்திருந்த போதும் இனி அது சாத்தியமல்லை என்பதை படைத்தலைமை நன்கு புரிந்து கொண்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் தப்பி ஓடுவதை தடுக்கும் வகையில் இப்போது புதிய புதிய ஆசை வார்த்தைகள் அள்ளிவீசப்பட்டுவருகின்றது.
இந்த வகையில் வகையில் நேற்று வன்னி இராணுவ தலைமையகம் அமைந்துள்ள இரணைமடு குள படைத்தளத்தில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.படையில் இணைத்து கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளது பெற்றோர்கள் மற்றும் கிராம பெரியவர்கள் அழைக்கப்பட்டு இக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. அவ்வேளையில் படையில் தொடர்ந்து ஜந்து வருடங்கள் பணியாற்றினால் படைத்தலைமை பத்து இலட்சம் பெறுமதியான வீடொன்றை கட்டி வழங்கப்போவதாக அவர்களிடையே அறிவித்துள்ளது. இதற்கு ஏதுவாக தமது சம்மதக்கடிதங்களை தருமாறு பெற்றோர்கள் மற்றும் கிராம பெரியவர்களிடம் படை அதிகாரிகள் நிர்ப்பந்தித்துள்ளனர்.
படையினரால் ஏற்கனவே கணனி வேலை மற்றும் கிராமங்களில் தகவல்களை சேகரித்தலென ஆசை வார்த்தை காட்டப்பட்டே இவ்யுவதிகள் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர். எனினும் அவர்கள் அனைவருக்கும் பின்னர் இராணுவ பயிற்சிகள் வழங்கப்பட்டதையடுத்து சர்ச்சைகள் தோன்றியிருந்தன. இவற்றை அம்பலப்படுத்த முற்பட்ட சிலர் கைது மற்றும் விசாரணைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தன.
இந்நிலையில் மீண்டும் அலுவலகப்பணி மற்றும் கணனி வேலைகளென ஆசை வார்த்தைகளுடன் வீடமைப்பு பற்றிய தகவல்களும் கசியவிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக