13 பிப்ரவரி 2013

இலங்கைக்கு நிபந்தனை; பொதுநலவாய அமைப்பு அதிரடி நடவடிக்கை

பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடத்தப்பட வேண்டுமானால் இலங்கை அரசு முக்கியமான நிபந்தனைகள் சிலவற்றை நிறைவேற்ற வேண்டுமெனப் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலகம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
* முக்கிய துறைகளுக்கு சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல்
* பாதுகாப்பு அமைச்சிலிருந்து பொலிஸ் துறையை விலக்கல்
* நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறை
கொழும்பில் தங்கியுள்ள பொதுநலவாய நாடுகள் அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இந்த நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை அரசிடம் ஒப்படைத்திருப்பது அரசுக்கு கடும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அறியமுடிகின்றது.
மனித உரிமைகள், தேர்தல்கள், ஊடக சுதந்திரம் ஆகிய மூன்று துறைகளுக்கும் சுயாதீன ஆணைக்குழு நிறுவப்படவேண்டும், பொலிஸ் திணைக்களத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி சிவில் நிர்வாக சேவையாக மாற்றுதல், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் நடைமுறைப்படுத்தல் உட்பட்ட முக்கிய கோரிக்கைகளையே பொதுநலவாய அமையம் நிபந்தனைகளாக முன்வைத்துள்ளது.
பொதுநலவாய அமையத்தின் இந்த நிபந்தனைகளால் கடும் அதிர்ச்சியடைந்துள்ள இலங்கை இந்த நிபந்தனைகள் தொடர்பில் அவசர ஆலோசனைகளை உள்ளூர நடத்தி வருகிறது.
பொதுநலவாய நாடுகள் அமையத்தின் இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படமுடியாத ஒரு சூழ்நிலை இருப்பதால் அமையத்தின் மாநாடு இலங்கையில் நடக்கக்கூடிய வாய்ப்பு இல்லையென மூத்த இராஜதந்திரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இதேவேளை, பொதுநலவாய நாடுகள் அமையத்தின் மாநாடு ஏற்கனவே திட்டமிட்டபடி இலங்கையில் நடைபெறாத பட்சத்தில் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து அந்த அமைப்பிலிருந்து விலகிக்கொள்வது தொடர்பில் இலங்கை ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக