18 பிப்ரவரி 2013

வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட இடைக்கால தடை!

பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேரை பிப்ரவரி 20-ந் தேதி தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. 1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறு என்ற இடத்தில் வீரப்பன் கூட்டாளிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர் .இதில் 21 போலீசார் உயிரிழந்திருந்தனர். இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்டிருந்தாலும் கடைசியாக 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோர் ஜனாதிபதியிடம் கருணை மனுவும் அளித்திருந்தனர். அண்மையில் இந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தங்களது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் வரும் புதன்கிழமை (பிப்ரவரி 20) வரை வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவால் தூக்கை எதிர்நோக்கியிருக்கும் 4 வீரப்பன் கூட்டாளிகளுக்கும் சற்றே ஆறுதல் அடைந்திருக்கின்றனர். தூக்கு தேதி கோரி மனு இதனிடையே இன்று மைசூர் தடா நீதிமன்றத்தில் பெல்காம் சிறை அதிகாரி, 4 வீரப்பன் கூட்டாளிகளையும் தூக்கிலிடுவதற்கான தேதியை அறிவிக்கக் கோரி மனு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார். இம்மனு தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில்தான் உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவும் வெளியானது. இதனால் இனி உச்சநீதிமன்றத்தின் முடிவின் அடிப்படையில்தான் வீரப்பன் கூட்டாளிகளுக்கான தூக்கு தண்டனை அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக