19 பிப்ரவரி 2013

பாலச்சந்திரனைக் கொலை செய்ததன் சூத்திரதாரி யார்?

News Serviceதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக சிங்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் நேரடி ஆலோசனைக்கமைய 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக அன்று கடமையாற்றிய பிரிகேடியர் கமல் குணரத்னவின் பட்டாலியனே இந்தச் சிறுவனை சுட்டுக்கொன்றுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி அதிகாலை 7.30 அளவில் பாலச்சந்திரன் உள்ளிட்ட சிலர் நந்திக்கடல் களப்பில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். இன்னும் தெளிவாகக் கூறுவதாயின், இராணுவத்தின் 4வது விஜயபா படைப்பிரிவின் முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 08 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியே பாதுகாப்பு உறுப்பினர் இருவருடன் பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார்.
இதன்போது லெப்டினன் கேர்ணல் அலுவிகார அவரது 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமகே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமல் குணரத்னவிற்கு அறிவித்துள்ளார்.
கமல் குணரத்னவின் உத்தரவிற்கமைய பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினனர் நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்னவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கமல் குணரத்ன பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரிடம் பிரத்தியேகமாக விசாரணைகளை நடத்தியுள்ளார். இதன்போது தனது தந்தையிடமிருந்து பிரிந்து பாதுகாப்புத் தரப்பினருடன் வந்து இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
பாலச்சந்திரனிடம் பெறப்பட்டத் தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக பாதுகாப்புச் செயலாளருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்புச் செயலாளர் கருணாவிற்கு அறிவித்துள்ளார்.
இதன்போது பாலச்சந்திரன் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக வரக்கூடும் என்பதுடன் சிறு வயது என்பதால் நீதிமன்றத் தண்டனைகளிலிருந்தும் தப்பிவிடுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவு எனவும் பாதுகாப்புச் செயலாளருக்கு கருணா கூறியுள்ளார்.
இதற்கமைய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்ட கோத்தபாய ராஜபக்‌ஷ, மேஜர் ஜெனரலின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பிரித்தானியாவின் ''செனல் 4'' தொலைக்காட்சியும் பல தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில் இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். மற்றையவர் செய்த பாவத்திற்கு தான் தண்டனை பழி ஏற்க முடியாது என்பதனால் இந்தத் தகவல்களை வெளியிடுவதாகவும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக