14 பிப்ரவரி 2013

இரத்த வெறிக்கு ஏன் இராஜ மரியாதை?

பாவத்தைப் பண்ணிவிட்டு பரம்பொருளின் காலைக் கழுவினால் காப்பாற்றுவாரா? 'மாட்டார்� என்கிறது இந்து தர்மம்! மயான பூமியில் இருந்து இன்னும் ஓலக் குரல் நின்றபாடு இல்லை. கொக்கரிப்பு அதிகமாகக் கேட்கிறது. கடந்த 4-ம் தேதி இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, தன்னுடைய மனதில் கொஞ்சமும் ஈரம் இல்லை என்பதை மகிந்த ராஜபக்ச காட்டிவிட்டார். திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக் கடற்கரையில் நடந்த விழாவில் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய ராஜபக்ச, "இனத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரித்து ஓர் இனத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளிப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. நாட்டின் அனைத்துச் சமூகங்களும் சம உரிமையுடன் வாழ்வதே இதற்குத் தீர்வாகும்.
இனவேறுபாடுகளைப் போலவே மத வேறுபாடுகளும் நாட்டின் அழிவுக்கே வழிவகுக்கும்'' என்றெல்லாம் நீட்டி முழக்கியவர், "அன்று பாதையில் நடந்து செல்லும்போது மரண பயம் இருந்தது. இன்று அப்படி இல்லை. இங்கு இன, மத மோதல் இல்லை" என்றும் சொல்லியிருக்கிறார்.
'இலங்கையில் தமிழருக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது� என்பதைப் பட்டவர்த்தனமாக உடைத்துப் போட்டுள்ளார். இனம் பார்க்க வேண்டாம், மதம் பார்க்க வேண்டாம், சாதி பார்க்க வேண்டாம். ஆனால், மனிதன் என்று கூடப் பார்க்க வேண்டாமா?
2009-ம் ஆண்டு வரை போரை நடத்துவதற்கும், ஆயுதம் வைத்திருப்பதற்கும், குண்டுகள் போடுவதற்கும் ராஜபக்சவுக்குத் தன்னளவில் ஒரு காரணம் இருந்தது. 'இலங்கையைத் துண்டாட நினைக்கும் ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் துடைத்தெறிய வேண்டும்� என்பது அது.
அதற்குப் பிறகும்... அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு, சித்ரவதை, சிறைக் கொடுமைகள், காணாமல் போதல், கற்பழிப்புகள் குறைந்ததா? இல்லை.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்துக்குள் புகுந்த போலீஸ் 44 பேரைக் கைதுசெய்து, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து, கொழும்புக்குக் கொண்டு போய் அடைத்துவிட்டது.
தன்னுடைய கணவன் என்ன ஆனார் என்று தெரியாமல் தவித்த ஒரு பெண், அவர் சிறை வைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து, சென்று பார்த்துத் திரும்பி உள்ளார். 'வன்னியில் இருந்து நாங்க யாழ்ப்பாணத்தில் வந்து குடியிருக்கிறோமாம். இதுதான் நாங்க செய்த தப்பாம்� என்று கதறி உள்ளார்.
அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். எந்தச் சொத்தும் கிடையாது. கணவனின் அன்றாடக் கூலியில்தான் வயிற்றைக் கழுவிக்கொண்டு இருந்தார்கள். அத்தகைய கணவனும் இரண்டு மாதங்களாக இல்லை என்றால்... அந்தப் பெண், இரண்டு குழந்தைகளின் நிலைமை என்னாகும்?
போருக்கு முன்னால் புலிகளை மட்டும் பயங்கரவாதிகளாகச் சொன்னவர்கள், இன்று தமிழர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகக் காட்டி களை எடுக்கும் காரியத்தை மட்டுமே செய்கிறார்கள்.
இனம், மதம் பார்ப்பது இல்லை என்று ராஜபக்ச சொல்வதைக் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், தமிழர்கள் பெரும்பான்மை இருந்த இடங்களாகப் பார்த்து, அங்கு சிங்களக் குடியேற்றங்களைச் செய்வது திட்டமிட்ட காரியம்தானே. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தால் அல்லவா, தமிழர் தாயகம் என்று பேச முடியும் என்பதற்காகவே இவை செய்யப்படுகின்றன.
எங்களை விமர்சிப்பவர்கள் இலங்கைக்கு வந்து பார்க்கட்டும். மறுசீரமைப்பு வளர்ச்சிப் பணிகள்தான் அவதூறுப் பிரசாரங்களுக்கான பதில்'' என்று சொல்லி இருக்கிறார் ராஜபக்ச.
தமிழர்களின் பூர்வீக வாழிடங்களில் சிங்களர்களைக் குடியேற்றுவதும், இந்து ஆலயங்களைப் போல அனைத்துத் தமிழர் பகுதிகளிலும் புத்தவிகாரைகள் அமைப்பதும்தான் ராஜபக்சவின் மறுசீரமைப்பு.
அவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்புத் தெரிவிக்கும் இந்திய மத்திய அரசு, இரண்டு கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டும்.
ராஜீவ் காந்தியின் கனவு, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு. அந்தக் கோரிக்கையைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார் ராஜபக்ச.
மன்மோகன் சிங், இந்திய மக்களின் வரிப் பணத்தில் பல நூறு கோடியைக் கொடுத்து, தமிழ் மக்களுக்கு வீடு கட்டித் தரச் சொன்னார். அதில் எத்தனை வீடுகளைத் தமிழர்களுக்குக் கட்டிக் கொடுத்தார் ராஜபக்ச?
ராஜீவின் கனவும் மன்மோகன் கொடுத்த பணமும் சிதைக்கப்பட்ட ஒரு தேசத்தின் பிரதிநிதிக்கு நாம் ஏன் இராஜ மரியாதை தர வேண்டும்?
ஆனால், தனக்கு எதிராக உலகம் ஒன்று திரண்ட பயம், மகிந்தாவின் கண்களில் தெரிகிறது. கோயில் கோயிலாக அலைவதும் அதற்காகத்தான்.
எல்லாம் அறிந்த ஆண்டவன் இதனை அறிய மாட்டானா?

நன்றி - ஆனந்த விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக