15 பிப்ரவரி 2013

சர்வதேசத்துக்கு தமிழர் மீது அக்கறை இருக்குமானால் நேரடித் தலையீடு தேவை;கஜேந்திரகுமார்

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு உண்மையில் அக்கறை இருக்குமாயின், இலங்கை அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்டு தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதனை விடுத்து, ஜெனிவாவில் மாறிமாறி தீர்மானங்களைக் கொண்டு வந்து தமது வல்லாதிக்கப் போட்டிக்காக தமிழர் பிரச்சினையை ஒரு களமாகப் பயன்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
அமெரிக்கா கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் எந்தப் பயனையும் தரவில்லை.
தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தமிழர் தாயகத்தில் இருந்த நிலைமையை விட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிடப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கத் தீர்மானம் என்ன பயனை தமிழ் மக்களுக்கு தந்துவிட்டது என்ற கேள்வி எழுகிறது.
உலக நாடுகள் தமது வல்லரசுப் போட்டிக்காக தமிழர் நலனை கையாளுகின்றன. இதுவே தமிழர் பிரச்சினை.இன்று சர்வதேச மட்டத்தில் அது பேசுபொருளாகியுள்ளது. நாம் இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலைகள் உட்பட சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் சுயாதீனமானதும் நம்பகத்தன்மை கொண்டதுமான விசாரனை அவசியமானது.
சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு பொறுப்பானவர்கள் இலங்கையில் நேரடியாக களநிலையை அவதானிக்க வேண்டும். அப்படியான ஒரு விசாரணை நடத்தக்கூடிய அளவுக்கு இலங்கையின் அரசியல், பாதுகாப்பு நிலைமை இல்லை. காரணமற்ற கைதுகளும், தடுத்து வைப்புகளுமே மலிந்து காணப்படுகின்றன.
இலங்கையில் இன அழிப்பு நிறுத்தப்பட வேண்டுமாயின் அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்டு தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். சர்வதேசத்தின் கண்காணிப்பில் ஏற்படுத்தப்படும் இடைக்கால நிர்வாகமே தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு கிடைப்பதற்கு ஏற்றதாக அமையும்.
வெறுமனே இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதால் மாத்திரம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. இதனை நாம் வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கின்ற 49 நாடுகளுக்கும் கடிதம் அனுப்பவுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக