24 பிப்ரவரி 2013

சிறிலங்காவில் இந்தியாவின் ‘றோ’ உளவாளிகள்!

சுற்றுலா நுழைவு விசாவிலும் மற்றும் புடவை வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற போர்வையிலும் சிறிலங்காவுக்குள் நுழைந்துள்ள இந்திய உளவாளிகளைக் கைது செய்து நாடுகடத்தும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ வின் முகவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இவர்களை சுற்றிவளைத்துப் பிடித்து நாடுகடத்தும் நடவடிக்கைகளை சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
வடக்கு, கிழக்கில், புடவை வியாபாரிகள், விவசாயிகள் என்ற போர்வையில் திரியும் ‘றோ’ சந்தேகநபர்களை பிடிக்கும் இந்த நடவடிக்கைக்கு, சிறிலங்கா படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், இவர்கள் அதிகளவில் செயற்படுவதாகவும் சிறிலங்கா குடிவரவுத் திணைக்களம் கூறியுள்ளது.
ஏற்கனவே, சிறிலங்கா இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் பலர் உடனடியாக நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே. வடக்கு,கிழக்கில் அறுவடை வேலைகளுக்கு இந்தியத் தொழிலாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்கவுள்ளதாக, மற்றொரு கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
பெருமளவானோர் வெளிநாடுகளுக்கு தொழில் தேடிச்சென்றுள்ள நிலையில், சிறிலங்காவில் விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டே, இந்திய விவசாயத் தொழிலாளர்கள் 3 மாத கால நுழைவு விசாவுடன், இந்தப் பணிகளில் ஈடுபட அனுமதி அளிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அண்மையில் சிறிலங்கா குடிவரவுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் வடக்கு கிழக்கு பகுதிகளில், நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், இந்திய விவசாயத் தொழிலாளர்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னேற்பாடாக, வடக்கு, கிழக்கில் உள்ள பிரதேச செயலர்களிடம் இருந்து தேவைப்படும் தொழிலாளர்கள் பற்றிய விபரங்களை கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக