22 பிப்ரவரி 2013

மகிந்த மீது போர்க்குற்ற விசாரணை வேண்டுமென பஞ்சாப் அரசியல் கட்சி வலியுறுத்தல்

மஹிந்த ராஜபக்ஷ மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும்: பஞ்சாப் தீவிர அரசியல் கட்சி வலியுறுத்துஇந்தியாவின் பஞ்சாப் மாநில தீவிர அரசியல் கட்சியான டால் கல்சா (Dal Khalsa) இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை குறித்து சனல் 4 ஒளிப்படம் வெளியிட்டதை அடுத்து இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணை நடாத்த வேண்டும் என டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி தெரிவித்துள்ளார்.
சனல் 4 வெளியிட்ட 12 வயது சிறுவனின் கொலை ஒளிப்படம் இலங்கை மனித உரிமை மீறல் புரிந்துள்ளமைக்கு சான்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு தமிழ் மக்கள் பிரச்சினை அல்ல எனவும் மனிதாபிமான பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த மாதம் ஜெனீவாலில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அமெரிக்க பிரேரணைக்கு மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் இதுவிடயம் குறித்து இந்தியா அமைதிகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் மௌனம் புதிய ஒன்று அல்ல எனவும் பல தடவைகள் இந்தியா இரட்டை நிலைப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளதாகவும் டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது சிறுவர்கள், குழந்தைகள் என பாராது செயற்பட்டதுபோல் 1984களில் இந்தியா சீக்கியர்களுக்கு எதிராக செயற்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1984 தர்பார் சாஹிப் மோதலில் இந்திய அரசு படைகள் சீக்கிய போராளிகள் மற்றும் யாத்திரிகர்கள் சிறிய குழந்தைகள் ஆகியோரை பிரித்துப் பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகள போட்டிகளை தமிழ்நாட்டில் நடாத்த முடியாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதாகவும் அவர் ஒரு தைரியமான பெண் எனவும் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடயத்தில் தமிழக சட்ட சபையின் தீர்மானம் நிறைவேற்றி தனது தைரியத்தை உறுதிப்படுத்தியவர் எனவும் டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக