16 பிப்ரவரி 2013

எம்மைச் சுரண்டித் தின்னும் தம்பியா மார்ச் மாதத்துக்குள் நடையைக் கட்டு!

“ஹலால் மூலம் மக்களிடம் சுரண்டித் தின்னும் தம்பியா, மார்ச் மாதத்துக்குள் கடைகளைவிட்டு நீங்கள் வெளியேறாவிட்டால் உங்களுக்கு மரணம்தான்…” இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு குருநாகல், நாரம்மல பிரதேசத்திலுள்ள 50 முஸ்லிம் வர்த்தகர்களுக்கு பௌத்த அமைப்புகளின் ஒன்றியத்தால் துண்டுப் பிரசுரம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் நாரம்மல பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் மரணப் பீதியுடன் வாழ்வதுடன், அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த வர்த்தகர்கள் நாரம்மல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சமயம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் விசேட பொலிஸ் பிரிவினரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் ஷத்தார் விளக்கமளிக்கையில்,
குருநாகல், நாரம்மல பிரதேசத்தில் கடந்த பல வரு டங்களாக முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு 50 முஸ்லிம் வர்த்தகர்கள் உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை தபால் மூலம் 50 துண்டுப்பிரசுரங்கள் கிடைத்தன. அந்த துண்டுப்பிரசுரங்கள் பௌத்த அமைப்புகளின் ஒன்றியத்தால் அனுப்பப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பவை வருமாறு:
“ஹலால் மூலம் மக்களின் பணத்தைச் சுரண்டித் திண்ணும் தம்பியா, மார்ச் மாதத்துக்குள் கடைகளை விட்டு நீங்கள் வெளியேறாவிட்டால் உங்களுக்கு மரணம்தான்…” என்று எழுதப்பட்டிருந்தது.
இவ்வாறு 50 துண்டுப் பிரசுரங்கள் அனுப்பப்பட்டிருந்தன. இதையடுத்து முஸ்லிம் வர்த்தகர்களிடமும், பிரதேச மக்களிடமும் மரணப்பீதி ஏற்பட்டதுடன், பெரும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இதன்பின்னர் நாம் நாரம்மல பொலிஸ் நிலையத்திலும், மதம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் விசேட பொலிஸ் பிரிவினரிடமும் முறைப்பாடு செய்துள்ளோம். இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, திங்கட்கிழமை இரவு நாரம்மல குருவிக்கொடுவ பகுதியிலுள்ள 6 முஸ்லிம் கடைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.அத்துடன், தொழுகைகளுக்காகச் சென்ற இருவரும் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பிலும் பொலிஸ் முறைப்பாட்டில் நாம் குறிப்பிட்டுள்ளோம்.
இந்தப் பிரச்சினையானது குருநாகல் மாவட்டத்திலுள்ள பௌத்த பிக்குகளா லும், பௌத்தர்களாலும் ஏற்படுத்தப்படுவதொன்றல்ல. இது வெளிமாவட்டங்களில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் சதித்திட்டம்.
எனவே, இது விடயம் தொடர்பில் குருநாகல் மாவட்டத்திலுள்ள பௌத்த பிக்குகளுடனும் பேச்சு நடத்த நாம் எதிர்பார்க்கிறோம். அத்துடன், பாதுகாப்பு அதிகாரிகளிடமும் இது தொடர்பில் பேசிவருகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக