03 பிப்ரவரி 2013

ஜெனீவாவிற்கு இராஜதந்திரிகளை அனுப்ப சிறீலங்கா திட்டம்!

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்கும் பரப்புரைகளில் இருந்து இம்முறை அமைச்சர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக இராஜதந்திரிகளை ஈடுபடுத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாத இறுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிராக நடைமுறைத் தீரமானம் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் இம்முறை இராஜதந்திரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளே சிறிலங்கா அரசினால் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறியப்படுகிறது.
பெரும்பாலும் ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இந்த நடவடிக்கைக்குத் தலைமை தாங்குவார் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு ஜெனிவா தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் ஜி.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா, அனுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட சிறிலங்கா அமைச்சர்கள் பலரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதற்காக நூற்றுக்கும் அதிகமானோர் சிறிலங்காவில் இருந்து ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைத் தோற்கடிக்கும் இராஜதந்திர முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்தநிலையிலேயே இம்முறை இராஜதந்திரிகள், அதிகாரிகளை கொண்டு பரப்புரைகளை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவே, ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்கா அணிக்குத் தலைமையேற்கும் என்று கடந்த வாரம் சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக