13 பிப்ரவரி 2013

மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கைக்கு சர்வதேச விசாரணை தேவை

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைமைகள் கண்காணிக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் நகல் பிரதியொன்று இலங்கை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த வலயத்தில் உட்கட்டுமான வசதிகளை மீளமைத்தல், இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் போன்ற விடயங்களில் அரசாங்கம் பாரியளவு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நீதி, நல்லிணக்கம் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைளில் இன்னமும் பாரியளவு அபிவிருத்தி ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் சட்டம், தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டம், சட்டவிரோத கைதுகள் கடத்தல்களுக்கு எதிரான சட்டம், சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோத தண்டனைகளுக்கு எதிரான சட்டம் போன்றனவற்றை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நீதிமன்றம், காவல்துறை திணைக்களம் போன்ற தேசிய நிறுவனங்கள் சுயாதீனப்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் பரிந்துரை செய்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் உரிய முறையில் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரியுள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சகல தரப்பினரதும் பிரச்சினைகளுக்கு காத்திரமான முறையில் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக