24 பிப்ரவரி 2013

நாளை சிறிலங்காவுக்கான யுத்தகாண்டம் - தமிழர்களுக்கு விடிவு வருமா?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடர், சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகிறது.
நாளை ஆரம்பமாகும் இக் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால், சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பில் மார்ச் மாதம் 20ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக பிரேரணையை எதிர்வரும் 21ம் திகதி அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ளது.
குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் இடம்பெறம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை சிறிலங்கா மீதான மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை நிராகரிக்கும் இரகசிய அறிக்கை ஒன்றை ஐ.நா பொதுச் செயலர் பான் கீமூனிடம் சிறிலங்கா அரசு கையளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவுக்கு எதிராக சாட்சியங்களை பதிவு செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார்.
சிறிலங்கா அரசுக்கு எதிராக காத்திரமான அழுத்தங்கள் இந்த கூட்டத்தொடரின் போது பிரயோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, சனல்4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்டுள்ள போர்க்குற்ற காணொளியும் இதற்கு வலுச் சேர்க்கும் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் உள்ளனர்.
சர்வதேச ரீதியாக எதிர்பார்க்கப்பட்டிருக்கும் இந்த கூட்டத்தொடர், தமிழர்களுக்கான தீர்வுக்கு விடியலைத் தேடித் தருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக