11 பிப்ரவரி 2013

ஜெனீவாவிற்கு செல்வதா?இல்லையா?கூட்டமைப்பு ஆராய்கிறதாம்!

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கூட்டத்தொடரின் ஓரங்க கூட்டங்களில் கலந்து கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன என்று அறியமுடிகிறது.
இந்தமுறை ஜெனிவாக் கூட்டத்தொடர் நடைபெறும் காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு அங்கு சென்று இராஜதந்திரிகளுடன் பேசி, இலங்கை அரசுக்குத் தீர்வு விடயத்தில் அழுத்தங்களைக் கொடுக்க முயற்சிக்க வேண்டுமென கூட்டமைப்புக்குள் ஒருசாரார் கருதுகின்றனர்.
ஆயினும் இது விடயத்தில் கூட்டமைப்பின் தலைமைத்துவம் இதுவரை உத்தி யோகபூர்வமான முடிவு எதனையும் எடுக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், "ஜெனிவாவுக்குத் தமிழ்க் கூட்டமைப்பு செல்வதா, இல்லையா என்பது தொடர்பில் கட்சி ஆராய்ந்து வருகிறது. எனினும், உத்தியோகபூர்வமாக முடிவு எதனையும் எடுக்கவில்லை.
ஜெனிவாவுக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் சென்றாலும் அங்கு சென்று பிரேரணையை எங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியாது. ஜெனிவாவில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்துப் பேசுவதை விட அந்தத் தூதுவர்கள் பொறுப்பு வகிக்கும் நாடுகளுடன்தான் நாங்கள் பேச்சு நடத்தி சில காய்நகர்த்தல்களைச் செய்யவேண்டும்.
அந்த இராஜதந்திர செயற்பாட்டை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். அண்மையில் கூட தென்னாபிரிக்கா சென்று நாம் பேச்சு நடத்தி ஆபிரிக்க நாடுகளிடம் எமது பிரச்சினைகளை முன்வைத்துள்ளோம்.
அதேபோல், ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க, ஆசிய நாடுகளுக்கு நாம் இராஜதந்திர ரீதியில் விளக்கங்களை அளித்துவருகிறோம். எவ்வாறாயினும், ஜெனிவாவுக்குச் செல்வது தொடர்பில் இப்போது ஆராய்ந்து வருகிறோம்'' என்றார்.
இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இதுபற்றித் தெரிவிக்கையில்
இதுகுறித்துச் சில தினங்களில் நாம் ஒன்றுகூடி முடிவெடுக்கவுள்ளோம்.
இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தவுள்ள ஜெனிவா மாநாடு நடைபெறும் நாள்களில் அங்கு பல சர்வதேச நாடுகளின் கூட்ட அமர்வுகள் நடைபெறும். அனேகமாக இந்த அமர்வுகளில் எமது கூட்டமைப்பின் தலைவரும் இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வதற்கான சாத்தியங்கள் உண்டு.'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக