16 பிப்ரவரி 2013

சொந்த பூமியை மீட்கும்வரை போராட்டம்",சுரேஷ் பிரேமசந்திரன்

நாம் வீதியில் இறங்கி போராடாவிட்டால் எமக்கு எம் நிலம் கிடைக்காது. இதற்கு முன்னர் ஒரு சில பகுதிகளை சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகமே எமக்கு இந்த அரசாங்கம் தந்திருக்கிறது என தமிழ் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பிருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15) வலி வடக்கு பிரதேசத்தில் மீள் குடியேறாதோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வலி வடக்கு பிரதேசத்தில் மட்டுமின்றி கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை என வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இராணுவம் பல காணிகளை கையகப்படுத்தியுள்ளது. இன்று நாம் இந்த உண்ணாவிரதத்தை நடாத்துவது கூட இராணுவத்துக்கு விருப்பமான செயல் அல்ல.
எதிர் கட்சி தலைவர் வந்து போகும் வரையில் அமைதியாக நின்ற இராணுவம் தமது புலனாய்வு பிரிவினரை அனுப்பி இங்கு என்ன அட்டகாசம் செய்தார்கள் என்பதை இங்கு நேரடியாக பார்த்தீர்கள். அமைதியாக நாம் போராட்டத்தை முன்னெடுப்பதை கூட சகித்து கொள்ள முடியாத இராணுவமே இங்கு உள்ளது.
அதே போல் பொலிசாரும் இங்கு அராஜகம் செய்தவர்களையும் அடாவடி செய்தவர்களையும் கைது செய்யாமல் அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்புவதிலேயே இருந்தார்கள்.
யாழ்ப்பாண டி ஐ ஜி இராணுவ தளபதிகளுடன் பேசி இனி இவ்வாறானவை நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும் வெறுமனவே பொலிசாரை பார்வைக்கு அனுப்புவதிலே எந்த அர்த்தமும் கிடையாது. இவ்வாறனவற்றை தடுக்க எம்மால் முடியாது இராணுவத்திற்கே முழு அதிகாரமும் இருக்குதென்றால் அதனை பொலிசார் வெளியில் சொல்லவேண்டும். ஏனென்றால் இங்கு நடைபெறும் காடைத்தனம் என்பது இன்று நேற்றல்ல பல போராட்டங்களில் இந்த காடைத்தனம் இராணுவத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இன்று மாலை நாம் வீடு திரும்பும் போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் முன்னரும் இவ்வாறு நடைபெற்றது. கல்லெறிந்தார்கள் கழிவொயில் ஊற்றினார்கள் இன்னும் செய்வார்கள். ஆனால் நாம் இவை எவற்றுக்கும் அஞ்சாமல் எமது காணிகளுக்கு நாம் போக வேண்டும் அதற்காக தொடர்ந்து போராட வேண்டும்.
மயிலிட்டி என்பது இலங்கையில் அதிக மீன் வளம் கொண்ட பிரதேசம் அதனை மக்களிடம் கையளிக்காமல் பொருளாதாரம் பற்றி பேசுகிறது என்றால் இந்த அரசாங்கம் ஒரு முட்டாள் தனமான அரசாங்கமாகவே இருக்க முடியும். அதே போல் இந்த வலிகாம் வடக்கு மண் விவசாய மண் அதனை இன்று இராணுவம் கையகப்படுத்தி மக்கள் விளைநிலங்களில் அவர்கள் விவசாயம் செய்கின்றார்கள் ..
எனவே எமது சொந்த நிலங்களுக்கு எங்களை விடுவிக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம் போராட்டங்களை பல வழிகளில் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக