31 ஜூலை 2010

மீண்டும் படைத் தடுப்பு முகாமில் போராளிகள்.



மன்னார் - மருதமடு புனர்வாழ்வு முகாமில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் சுமார் 100 பேர் விசாரணைகளுக்காக சிறிலங்கா இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருதமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளிடம் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டிருந்தன. 17 கைத்தொலைபேசிகள், 14 கைத்தொலைபேசி இணைப்பு அட்டைகள், 30 கைத்தொலைபேசி மின்கலங்கள், மின்கலன்களுக்கு மின்ஏற்றும் 21 கருவிகள் என்பன இந்தப் புனர்வாழ்வு முகாமிலிருந்து மீட்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணகள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா இராணுவத் தலைமையக ஊடகப் பிரிவைச் சேர்ந்த கேணல் துமிந்த கமகே தெரிவித்தார். புனர்வாழ்வு முகாமுக்குள் தடைசெய்யப்பட்டிருந்த இந்தப் பொருட்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன, அவற்றுடன் தொடர்புடையயவர்கள் யார், இந்தத் தொலைபேசிகளில் இருந்து யார் யாருக்கு அழைப்புகள் எடுக்கப்பட்டிருந்தன என்பன குறித்த விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம தொடர்பாக புனர்வாழ்வு முகாமிலிருந்த 100 முன்னாள் போராளிகள் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவர்கள் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஈழம் நாசமாக கருணாநிதிதான் காரணம்.-பழ,கருப்பையா.


தமிழ் ஈழம் நாசமாக கருணாநிதிதான் காரணம் என்றும், இந்த முறை ஜெயலலிதா ஆட் சிக்கு வந்த பின் இனி எப்போதும் கருணாநிதி ஆட்சிக்கு வர முடியாது என்றும். பழ .கருப்பையா கூறியுள்ளார்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றை கண்டித்து திண்டிவனத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் இலக்கிய அணி தலைவர் பழ.கருப்பையா பேசும்போது கூறியதாவது:கருணாநிதி அழகிரியை வழக்கிலிருந்து காப்பாற்றி இருக்கலாம்.ஆனால். குற்ற வழக்குகள் முடிவடைவதில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அழகிரி போக வேண்டிய இடத்திற்கு போவார். விலைவாசி உயர்வால் மக்கள் வாழ முடியாத நிலையை தி.மு.க., ஏற்படுத்தியுள்ளது.காமராஜர், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., ஆகிய 3 பேரின் ஆட்சிமட்டும் தான் தமிழகத்தில் நடந்த சிறப்பான ஆட்சியாகும். மக்களிடம் ஒரு மாற்றம் தெரிகிறது. அதனால் கருணாநிதி அஞ்சுகிறார். கருணாநிதி தி.மு.க., வை குடும்ப சொத்தாக மாற்றி விட்டார்.ஈழம் நாசமாக கருணாநிதிதான் காரணம். கருணாநிதி என்ன கடவுளா? என நான் எழுதியதற்காக தாக்கப் பட்டேன். மக்களுக்காக இலவச டி.வி., வழங்கப்படுகிறதா? மருமகன் சம்பாதிக்க வழங்கப்படுகிறதா?இந்த முறை ஜெ., ஆட் சிக்கு வந்த பின்பு, இனி எப்போதும் கருணாநிதி ஆட்சிக்கு வர முடியாது. தமிழகத்தின் நிதி நிலை சரியில்லை. சிந்திக்க கூடிய நிலை இல்லாமல் மக்களை ஆக்கி விட்டார் கருணாநிதி. கரும்பு சக்கை விலை கூட கரும்பு விவசாயிக்கு கிடைக்கவில்லை.யாருக்கும் நன்மை செய்யாத ஆட்சி தி.மு.க., ஆட்சி. எதற்காக இந்த ஆட்சி நீடிக்க வேண்டும்?இவ்வாறு பழ. கருப்பையா பேசினார்.

இளங்கோவன் இன்னும் பாடம் கற்கவில்லை.-நாம் தமிழர்.


ஈழப்போருக்கு எதிராக காங்கிரஸ் பேருதவி செய்ததாலும் தமிழ் மக்கள் சீமானின் தலைமையில் இளங்கோவனுக்கு நல்ல பாடம் அளித்தார்கள். அதன் பின்னாவது அவர் பாடம் கற்றிருக்க வேண்டும். ஆனால் அதன் பின்னும் அவர் பாடம் கற்க வில்லை என்று தெரிகின்றது என்று நாம் தமிழர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் கூத்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
பெரியாரின் பேரன் என்று கூறிக்கொண்டு பகலிலும் தன்னிலை மறந்து பேசும் குணம் கொண்டவர் சோனியாவின் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.சமீபத்திய பேட்டி ஒன்றில் வழக்கம் போல் வாய்க்கு வந்த படி உளறிக்கொட்டி இருக்கின்றார்.இதனைப்படித்தால் அவர் இன்னும் அரசியலில் பாடம் கற்கவில்லை என்று தெரிகின்றது.
அவர் தனது பேட்டியில் சில முத்துக்களை உதிர்த்திருக்கின்றார்.அவருக்கு நாம் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளோம்.
”அண்டை நாடுகளோடு பிரச்னை ஏற்படும்போது சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, வன்முறையைத் தூண்டக் கூடாது.இலங்கை அரசு தமிழ் மீனவன் மீது தாக்குதல் நடத்தினால் பேசித்தீர்க்க வேண்டும்.ஆனால் சீமான் வன்முறையைத் துண்டுகின்றார் என்று கூறியிருக்கின்றார் தன்னிலை மறந்த இளங்கோ.
சாதாரண மனிதர்கள் இடையே பிரச்சனை இருந்தால் பேசித்தீர்க்கலாம்.ஆனால் இங்கு நம் மீனவர்களை அடிப்பதே இலங்கை அரசு தானே, காலம் காலமாக இது நடக்கின்றது.எத்தனை தடவை முறையிட்டும் இது தீரவில்லை.இலங்கை அரசு துளி கூட கேட்க வில்லை.இந்தநிலையில் சீமானைக்குறை கூறுவதை விட்டு விட்டு இதனைத்தடுக்க துப்பில்லாத அவர் ”அன்னை” என்று கூறிக்கொண்டு திரியும் சோனியாவை கண்டனம் செய்வதே உண்மையாக இருக்கும்.
இது போக அவருக்கு நாம் சொல்லிக்கொள்வதற்கு நிறைய இருந்தாலும் சிலவற்றை மட்டும் கூற விரும்புகின்றோம்.
சென்ற தேர்தலில் மான மறவன் முத்துக்குமார் மரணத்தை கொச்சைப்படுத்தியதாலும், ஈழப்போருக்கு எதிராக காங்கிரஸ் பேருதவி செய்ததாலும் தமிழ் மக்கள் சீமானின் தலைமையில் அவருக்கு நல்ல பாடம் அளித்தார்கள். அதன் பின்னாவது அவர் பாடம் கற்றிருக்க வேண்டும்.ஆனால் அதன் பின்னும் அவர் பாடம் கற்க வில்லை என்று தெரிகின்றது.மாறாக வாய்க்கொழுப்புடன் இன்னும் பேசிக்கொண்டு திரிகின்றார்.இதே நிலை தொடர்ந்தால் வரும் தேர்தலுடன் அவர் அரசியலை விட்டே ஒதுக்கபப்டுவது உறுதி.

மகேஸ்வரனின் வெற்றி எம்மை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.



பிரித்தானியா ஊடகங்களின் பொய்யான பரப்புரைகளுக்கு எதிராக பரமேஸ்வரன் ஈட்டிய வெற்றி புதிய வரலாற்றை உருவாக்கி உள்ளதாக சிறிலங்காவில் உள்ள ஜனநாய மக்கள் முன்னனியின் தலைவர் திரு மனோ கணேசன் திரு பரமேஸ்வரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றிபெற்றுள்ளது எம்மை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ் சமூகத்தின் மீது அபகீர்த்தியை ஏற்படுத்த முயன்றவர்களுக்கு இது பலத்த ஏமாற்றம். பிரித்தானியாவின் ஊடகங்களுக்கு இந்த பொய்யான தகவல்களை வழங்கியவர்கள் யார் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.
பிரித்தானியா ஊடகங்களின் பொய்யான தகவல்களின் பின்னனியில் சிறீலங்காவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்புகள் உண்டா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
எது எவ்வாறானாலும், நீங்கள் வரலாற்றை உருவாக்கி இருக்கிறீர்கள், அது நீண்டகாலம் பயணிக்கும். உங்களுக்கு எமது கட்சியின் ஆதரவுகள் எப்போதும் உண்டு என அவர் பரமேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள தனிப்பட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

30 ஜூலை 2010

ஊடக நிலையமொன்றை தாக்கிவிட்டு தப்பியது எப்படி?


உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலுள்ள ஊடக நிறுவனமொன்றின் மீது 12 பேர் கொண்ட கும்பலொன்று வாகனத்தில் வந்து தாக்கிவிட்டு பத்திரமாகத் திரும்பிச் செல்ல முடிந்தது எப்படி என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்ணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று அதிகாலை தாக்கப்பட்டு தீவைக்கப்பட்ட, வெற்றி எவ்.எம்.,சியத்த எவ்.எம்., ரியல் எவ்.எம். ஆகிய வானொலிகளின் அலுவலகத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஆயுதந்தாங்கிய 12 பேர் கும்பலொன்று வாகனத்தில் வந்து பாரிய தாக்குதலொன்றை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கிறது. இந்த இடத்திற்கு சில நூறு மீற்றருக்குள்தான் ஜனாதிபதியின் வாசஸ்தலுமும் உள்ளது. இத்தகைய உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் வந்து தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் செல்ல முடிந்தது எப்படி என நாம் கேள்வி எழுப்புகிறோம்.
ஊடகங்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக மௌனமாக இருந்தது போதும். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் அனைவரும் ஒற்றிணைந்து செயற்பட வேண்டும்.
தாக்குதல் நடத்தியவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கில்லை. ஆனாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸாரிடம் கோருகிறோம் என்றார்.

தர்சிகாவின் உடலுறுப்பு மாயம்,இருவர் கைது.


வேலணை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்சிகாவின் மரணம் தொடர்பாக யாழ். போதனா வைத்திய சாலையின் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் இருவர் ஊர்காவற்றுறை நீதிமன்றின் உத்தரவின்பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2ஆம் திகதிவரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மருத்துவ மாதுவின் சடலம் கொழும்புக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட போது சடலத்தின் உட்பகுதியில் உறுப்புகள் எவையும் இருக்கவில்லை என்று கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஊர்காவற்றுறை நீதிவானுக்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதிவான் ஆர்.வசந்தசேனன் குறித்த சடலத்தை பிரேத அறையில் வைத்துத் துப்புரவு செய்த பணியாளர்களை விசாரணைக்கு உட்படுத்தினார்.
இதனையடுத்து குறித்த மருத்துவ மாதுவின் சடலத்தினுள் இருந்த உடல் உறுப்புகள் வேறாக எடுக்கப்பட்டு யாழ். கொட்டடியில் உள்ள மயானம் ஒன்றில் நிலத்தினுள் புதைக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த இடத்துக்கு அவர்களுடன் விஜயம் செய்த நீதிவான் அந்த உறுப்புகளை எடுத்து கொழும்புக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து, மேற்படி உறுப்புக்கள் மீள தோண்டியெடுக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சிவந்தனுக்கு வைக்கோ வாழ்த்து.


இலங்கைத் தமிழர்களை காக்கக் கோரியும், போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபட்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரியும் பாரிஸ் நகரிலிருந்து ஜெனீவா நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ஈழத் தமிழர் சிவந்தனுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அழிவின் பிடியிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காக்கவும், கொடூரக் கொலைகளைப் புரிந்த ராஜபட்ச கூட்டத்தை அனைத்துலக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும், உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் இடையறாத போராட்டங்கள், கிளர்ச்சிகள், அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகின்ற வகையில் ஈழத்தின் வீரப்பிள்ளை சிவந்தன் பாரிஸ் பட்டணத்தில் இருந்து கால்நடையாகப் புறப்பட்டு சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அவையை நோக்கி நடைப்பயணத்தைத் தொடங்கிவிட்டார்.
பகலில் நெருப்பெனக் கொதிக்கும் வெயிலிலும், இரவில் ஊசிமுனையாகத் தைக்கும் கொட்டும் பனியிலும் தன்னைத்தானே வருத்திக் கொண்டு நடக்கிறார்.
சிவந்தனின் பயணம் வெற்றிகரமாக நடைபெறவும் பயணத்தின் குறிக்கோள் ஈடேறவும், அவரது உடல்நிலை பாதிக்காத வகையில் இயற்கைத் தாய் துணை புரிய வேண்டும்.
தியாகப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

29 ஜூலை 2010

செந்தமிழன் சீமானை தமிழ் உணர்வாளர்கள் சந்தித்தனர்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமானை, சசிகலாவின் கணவர் நடராஜன், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.இன்று காலை இவர்கள் இருவர் மற்றும் நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி ஆகியோர் வேலூர் சிறைக்குச் சென்றனர். அங்கு சீமானை சந்தித்து முக்கால் மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்து நடராஜன் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் அரசு தன்னை வேண்டும் என்றே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளதாக சீமான் கூறியதாக தெரிகிறது.

மணலாற்றில் நடந்தது என்ன?






கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மணலாறுக் காடுகளில் இராணுவத்தினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்றும், அதில் இடம்பெற்ற தாக்குதலில் சுமார் 40 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. இராணுவத்தில் உள்ள சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான சிலரையே இவ்வாறு, கொண்டுசென்று கோத்தபாயவுக்கு ஆதரவான படையினர் கொன்றனர் என்றும் செய்திகள் கசிந்தது. இருப்பினும் தடுப்பு முகாமில் உள்ள புலிகளின் உறுப்பினரை புலிகளின் சீருடைகளை அணியச் செய்து அவர்களை, காட்டிற்கு கொண்டுசென்று இராணுவம் அவர்களை சுட்டுக்கொலைசெய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இங்கு இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் உள்ள ஜீப் வண்டிகளில் சீருடைகள் கொத்துக் கொத்தாகக் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. தற்போது மணலாறில் இருந்து வெளியாகியுள்ள புகைப்படங்களில் இவை நன்கு புலனாகிறது. இராணுவத்தினர் மணலாறு காட்டிற்கு செல்லும் வழியில் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. அதில் இராணுவத்தினர் பாரிய தாக்குதல் எதுவும் நடாத்தும் திட்டத்தோடு செல்லவில்லை என்று புலனாகிறது. சிறிய ரக துப்பாக்கிகள் சகிதம் வேறு நடவடிக்கைக்காகவே இவர்கள் புறப்பட்டது தெள்ளத்தெளிவாகிறது. இராணுவத்தினர் தாம் விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பு சாதனங்களைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.இருப்பினும் இராணுவத்தினர் காட்டுப்பகுதிக்கு எதற்காகச் சென்றனர், அங்கு நடைபெற்றது என்ன, என்பது இதுவரை ஆதாரத்தோடு வெளியாகவில்லை. இராணுவ முகாமில் இருந்து மணலாறு நோக்கி புறப்பட்ட இராணுவத்தையே இப் படத்தில் காண்கிறீர்கள். அடர்ந்த காடுகளுக்குள் நடந்தது என்ன என்பது குறித்து இதுவரை சரியாகத் தெரியவில்லை.

28 ஜூலை 2010

தொல்புரத்தில் சிறுமி மீது பாலியல் முறைகேடு,குற்றவாளி தேடப்படுகிறார்.


யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் பத்து வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற சந்தேக நபர் ஒருவரைத் தேடி வட்டுக்கோட்டை பொலிஸார் வலை விரித்துள்ளனர். அப்பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியமையைத் தொடர்ந்தே பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

இந்த மாணவியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் இவர் இந்த மாணவியை அவ்வப்போது பாடசாலைக்கு அழைத்து செல்கின்றமை வழக்கம் என்று கூறப்படுகிறது. சம்பவ தினம் பரீட்சை ஒன்றுக்காக இந்த மாணவியை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற இவர் பாடசாலை நிறைவடைந்து மாண வி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே குற்றம் புரிய முயன்றுள்ளார் என கூறப்படுகின்றது.

இந்த மாணவியைக் காணவில்லை என்று பெற்றோர் தேடிச் சென்ற போது இவர் பற்றை மறைவொன்றில் வைது மாணவியைத் துன்புறுத்திக் கொண்டிருந்ததாரெனவும், பெற்றோரைக் கண்டமையுடன் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயப்பட்டமையைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை இந்த நபருக்கு இரண்டு மனைவிகளும் ஏழு பிள்ளைகளும் உள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்தவின் அழைப்பினால் இந்திய அதிகாரி வருகிறார்,கருணாநிதியின் வேண்டுகோளால் அல்ல.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது.
பாதுகாப்பு விவகாரத்துக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இத்தகவலைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
இந்தியப் பிரதிநிதிகளை அனுப்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழக முதல்வர் கருணாநிதி மூலமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே சனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது இந்த வேண்டுகோளை விடுத்தார். இதன் படியே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். அரசு ஒருபோதும் தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. இது விடயத்தில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். என்றார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அமைச்சர் பதில் அளித்தார்.
புலிகளின் முக்கிய தலைவர்களின் மனைவியர் உட்பட சுமார் 8,000 விதவைகள் வடக்கு, கிழக்கில் வாழ்கின்றனர் என்றும் இவர்கள் தம்மிடம் உதவி கோரியதாகவும் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இருந்தும் அவரினால் பெயர் குறிப்பிடப்பட்ட புலிகளின் தலைவர்கள் இருவரும் தடுப்புக் காவலில் இருக்கின்றனர் என்று முன்னர் அரசு தெரிவித்திருந்தது. அவர்களது நிலை என்ன? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் பதில் அளிக்கையில், இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு அடுத்த வாரம் பதில் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

பிரசன்ன டி சில்வா பிரித்தானியா வந்தால் கைது செய்யப்படுவார்.



பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் அவர் போர்க்குற்றவாளி என கைதுசெய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார்.
லண்டன் பிரண்ட் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற தொழில்கட்சியின் மக்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
பிரண் ரவுண் ஹோலில் நடைபெற்ற தொழில்கட்சியின் மக்கள் பொதுக்கூட்டத்தில் மக்களின் கேள்வி நேரத்தின் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் முக்கியமானதாக இரண்டு கேள்விகள் அமைந்திருந்தன. அதில் முதலாவதாக லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய சிவந்தனின் மனிதநேயப் பயணம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டதோடு அவருக்கான ஆதரவையும் ஒத்துழைப்புக்களை தொழில்கட்சி வழங்கவேண்டும் எனவும், பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு புதிதாக இலங்கை அரசினால் புதிய அதிகாரியாக முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவரான 55 ஆவது டிவிசன் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா அனுப்பப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில் இதுதொடர்பாக உங்களின் கருத்து என்ன என கேட்கப்பட்ட போது பதிலளிக்கையிலேயே அவர் கீழ்கண்டவாறு தெரிவித்தார்.
சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணம் மிகச்சிறந்ததொன்றானதோடு பாராட்டுக்கு உரியது. இவ்வாறான செயற்பாடு மிகச்சிறந்த விளிப்புணர்வை ஏற்படுத்தும். அத்தோடு தொழில்கட்சியின் சகோதரக்கட்சிகள் உலகெங்கும் பரவியுள்ளது. அதனால் சிவந்தன் மேற்கொள்ளும் நடைபயண வளிகளில் எமது சகோதர கட்சிகளினூடாகவும் அதன் உறுப்பினர்களையும், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அந்தந்த பிரதேசங்களில் சிவந்தனை சந்தித்து வரவேற்பு கொடுத்து உற்சாகப்படுத்த முடியும் எனவும் கூறினார். டேவிட் மிலிபானின் பிரதிநிதியாக அக்கூட்டத்திற்கு வருகைதந்திருந்த டான் அவர்கள் இது தொடர்பாக இன்றே உடனடியாக டேவிற் மிலிபான்ட் இன் கவனத்திற்கு கொண்டுசென்று ஆவன செய்வதாக தெரிவித்தார்.
அடுத்து மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வாவின் பிரித்தானிய வருகை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் நீங்கள் கூறுவது போன்ற செய்தியை நான் அறியவில்லை. இது மிகவும் வியப்பாக உள்ளது. போர்க்குற்றம் புரிந்த ஒரு இராணுவ படைப்பிரிவின் தளபதி தூதரக அதிகாரியாக பிரித்தானியா வருவது உண்மையானால் அவர் நிச்சயமாக கைதுசெய்யப்படுவார். ஆனால் அதற்கான ஆதாரங்களை நீங்கள் எமக்கு தரவேண்டும்.
அதாவது அவரின் முழு விபரம், அவர் பணிபுரிந்த படைப்பிரிவின் பெயர், அவர் பதவி வகித்த காலம், அவரின் படைநடவடிக்கையின் போது மக்கள் கொல்லப்பட்டதற்கான சான்றுகள் என்பவற்றை விரைவில் தந்துதவினால் அவர் சட்டத்திடம் இருந்து தப்பிக்காமல் நிச்சயம் கைது செய்யப்படுவார்.
உதாரணமாக கடந்த வருடம் இடம்பெற்ற வன்னிப்பேரவலத்தின் போது இவரின் பொறுப்பில் இருந்த படையினரின் தாகுதல்களில் மக்கள் கொல்லப்பட்டது, வைத்தியசாலைகள் தாக்கப்பட்டது போன்ற ஆதாரங்களை பத்திரிகைச்செய்திகளில் இருந்தோ, அல்லது அங்கு பணிபுரிந்த உதவி நிறுவனங்களின் மூலமோ உறுதிப்படுத்தும் பட்சத்தில் அது கண்டிப்பாக அவரை கைது செய்வதை உறுதிப்படுத்தும்.
எனவே இத்தரவுகளையும், ஆதாரங்களையும் உடனடியாக பிரித்தானியா வாழ் தமிழர்கள் திரட்டித்தரும் பட்சத்தில் அதனை பாராளுமன்றம் வரை எடுத்துச்செல்வது மட்டுமன்றி பிரித்தானியாவுக்குள் அவர் கால் பதிக்கும் போதே கைது செய்யவும் முடியும். அதற்கு சட்டத்தில் இடமுண்டு எனக் கூறினார்.

27 ஜூலை 2010

சரத்குமார்,அசினின் போலி மனித நேயம்.




நடிகர் சரத்குமார் அவர்கள் IIFA விழாவிற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்தே, புறக்கணிப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் பேசத்தொடங்கினார். Headlines Today செய்தி நிறுவனத்தின் IIFA தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட போது, சரத்குமார் பேசியதைக் காணும் யாவரும் அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள்.
இவர் ஏன் இப்படி பேசுகிறார் எனத்தெரியாது குழம்பிய பலருள் நானும் ஒருவன். அதற்கான விடையை, பின்னணியைப் பின்பு அறிய நேர்ந்தது. அதைப் பற்றி பேசுவதற்கு முன் சிங்கள அரசை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதை தூங்குவது போல் நடிக்கும் இவர்களுக்கு விளக்கிவிடுவோம்.
உலகப்புகழ் பெற்ற அமெரிக்கப் பாப் இசை கலைஞரான செனிஃபர் லோபசின் பிறந்தநாள் இம்மாதம் 24 ஆம் நாள். இதை முன்னிட்டு ஒரு கலைநிகழ்ச்சி நடத்துமாறு, அவர் வட சைப்ரசுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரும் முதலில் அழைப்பை ஏற்றார். இதற்காக அவர் பெற இருந்த தொகை மூன்று மில்லியன் டாலர்கள். அதாவது ரூபாயில் மதிப்பு 13 கோடியே 80 லட்சம். “வட சைப்பரஸ் துருக்கியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மண். அங்கு ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன” என்று கண்டனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. இதைத் தொடர்ந்து அவர் என்ன செய்தார் தெரியுமா? “நான் அறிந்தே மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய எந்த ஒரு அரசையோ, நிறுவனத்தையோ, நாட்டையோ ஆதரிக்க மாட்டேன் என்றும் அப்பகுதியில் உள்ள அரசியல் நிதர்சனங்கள் குறித்து எங்களுக்கு உள்ள புரிதலிலிருந்து எடுக்கப்பட்ட முடிவு இது” என்றும் அறிவித்துவிட்டு அங்கு போக மறுத்தார். இதைத் தான் நாம் இங்குள்ள நடிகர், நடிகைகளிடம் எதிர்பார்க்கின்றோம்.
http://www.cbc.ca/arts/music/story/2010/07/09/lopez-cyprus-cancel.html
புறக்கணிப்பின் அவசியத்தை விளக்குவதற்காக மட்டுமே சரத்குமார் அவர்கள் நடித்த திரைப்படத்திலிருந்தே ஒரு உதாரணம் இதோ,நியாயமாக வழங்கிய தீர்ப்பு தனக்கு எதிராக இருப்பதால் நாட்டாமையைக் கொன்றதற்கும், ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதற்கும் வில்லனாக நடித்த பொன்னம்பலம் குடும்பத்தை 18 ஆண்டுகள் ஊரை விட்டே தள்ளி வைப்பார் நாட்டாமை. அப்பொழுது நாட்டாமை தனது மகனுக்கு சொல்லும் முக்கிய அறிவுரை, “தீர்ப்பு வழங்கும் போது சொந்தம் பந்தம் எதையும் பார்க்க கூடாது. நியாயப்படி செயல்பட வேண்டும்” என்பது. பொன்னம்பலத்தைக் குடும்பத்தோடு ஊரைவிட்டே தள்ளி வைப்பது எனபது, அவரை அவமானப்படுத்தவோ, அவருக்கு அநீதி இழைக்கவோ அல்ல.மாறாக, தான் செய்த தவறை அவர் உணரவேண்டும் என்பதற்கும், அவரோ அல்லது பிறரோ மீண்டும் அந்த தவறைச் செய்துவிடக் கூடாது என்பதற்கு ஒரு பாடமாகவே பொன்னம்பலம் குடும்பம் புறக்கணிக்கப்பட்டதைத் திரைப்படத்தில் பார்த்தோம். ’ஈழ தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசுக்கு கொடுக்கும் தண்டனை, உலகில் தன் சொந்த மக்களோடு போராடும் மற்ற அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும்’ என பாகிசுதானில் இருந்து வெளிவரும் ’”டான்’ (விடியல்)” என்னும் நாளேடு குரல் கொடுத்திருக்கிறது.
http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/the-newspaper/editorial/sri-lankas-war-crimes-570
இயற்கை சீரழிவால் ஒருநாட்டின் நிதியோ, நிர்வாகத் திறனோ பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் உதவுவது ஒவ்வொருவரின் கடமை. ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நடந்தது ஓர் அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. தமிழர்களுக்கு உதவ அந்த நாட்டிடம் பணமோ நிர்வாக வசதியோ இல்லாமலா இருக்கிறார்கள்? போருக்காக பல நூறு கோடி செலவழிக்கும் நாட்டில், புதிதாக பல படைவீரர்களை இணைக்கும் நாட்டில், இவர்கள் சென்றுதான் தமிழர்களுக்கு உதவ வேண்டிய நிலைமை என்பதை எந்த மடையன் ஏற்றுக்கொள்வான். தமிழர்களுக்கு உதவ இவர்களைச் சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கும் அதே நாடு ஏன் உலகத் தொண்டு நிறுவனங்களையோ, ஐ.நா-வையோ அனுமதிக்க மறுக்கிறது எனும் எளிய காரணத்தைக் கூட உணர மறுக்கின்றார்கள் இவர்கள்.
சரி. இப்போது நிகழ் உலக சரத்குமாருக்கு வருவோம்.
இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இவர் சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தான் நடந்து கொண்டு வந்துள்ளார். இவர்கள் குடும்பத்தின் வணிகப்பின்புலனும், இவரின் மனைவி இராதிகா சிங்கள வழித்தோன்றல் என்பதும் முதன்மையான காரணம். சிங்கள அரசின் அறிவிக்கப்படாதத் தூதுவர்களாகச் செயல்படும் இவர்கள், சிங்களப் பேரினவாத அரசுக்கு நற்பெயர் வாங்கப் பாடுபடுவதோடு, நடிகை அசினுக்கு விதிக்கப்படும் தடை, நாளை தங்களுடைய சின்னத்திரை இரேடான் நிறுவனத்திற்கும் வரும் என்பதாலும், அசினுக்கு சார்பாக செயல்படுகிறார். இவருக்குத் துணையாக தன் நடிகர் சங்கத் தலைவர் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் பார்க்கிறார். இதன் மூலம் இவர் அடைய கருதும் நன்மைகள் IIFA வால் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியை வெற்றிமுகமாக்குவது, தமிழ்த்திரையுலகத் தடையைச் செல்லாக்காசாக்குவது, சிங்களப் பேரினவாத அரசு தமிழர்கள் மீது கருணையோடு செயல்படுவதாக உலகிற்கு வெளிப்படுத்தல் எனப் பற்பல.தொழில்தொடர்பு என்பதையும் மீறி, நினைத்தபோதெல்லாம் வானூர்தி பிடித்து கொழும்பு சென்று சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டில் தங்கும் அளவிற்கு இவர்களுக்கு நெருக்கம் உண்டு. கணவன் மனைவி இருவருமே, நாம் அனைவரும் தெருவில் நின்று கொண்டு போரை நிறுத்த கோரியிருந்த வேளையிலே, போர் நிறுத்தப்படக் கூடாது எனத் தீவிரமாக வேலை பார்த்தார்கள். மதிப்பிற்குரிய தமிழ் திரைப்பட உறுப்பினர் ஒருவர் இலங்கை தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு தன் சங்க நிர்வாகிகளுக்குள் போர் அவலம் குறித்து ஒரு கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்த்திருந்தார். இதை காவல் துறைக்கும், உளவுத்துறைக்கும் தெரியப்படுத்தி அதை நடக்கவிடாது தடுக்க முயன்றார் சரத்குமார். இதனால் அவருக்கும், சரத்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை திரையுலகமே அறியும் என்றாலும், இம்முறை பல நடிகர்கள் இவரோடு இணையும் அபாயம் உள்ளது. ஏனெனில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இவரைப் பிடியில் வைத்துக்கொள்ள முதல்வர் கருணாநிதியும் முண்டுகொடுப்பதாக தெரிகிறது.
இவர் இப்படியென்றால், இவர் மனைவி இராதிகா, அனைத்துக் கட்சியினரும் தலைமை அமைச்சரைக் கண்டு போரைநிறுத்த முறையிட தில்லிக்கு சென்றபோது, சமத்துவ மக்கள் கட்சி சார்பாக சென்றவர், நம் அனைவரின் உணர்வுக்கும் எதிராக, ஈழத்தமிழ்கள் கொன்று குவிக்கப்பட்டப் போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என வாதிட்டவர். இங்கிருந்து போன அனைவரும் போரை நிறுத்தவே கோரிக்கை வைத்ததாகக் கருதிய அப்பாவிகளில் நானும் ஒருவன். திரையுலகம் கொண்டு வந்த IIFA தடைக்கு எதிராக இவர் செயல்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.இவர்கள் இருவருக்கும் நீதி, மனித உரிமைகளைவிடவும், தங்கள் வருவாயே முதன்மையானது. குழம்பியகுட்டையில் மீன்பிடிப்பவர்கள் இவர்கள் என யாரும் கருத வேண்டாம், தேவைபட்டால் குட்டையையும் குழப்பக்கூடியவர்கள். போர் உச்சமடைந்த காலத்தில் நாளும் பல நூறு மக்கள் கொல்லப்பட்ட பொழுதும், மூன்று இலட்சம் மக்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த பொழுதும் மக்களை பற்றி கவலைப்படாத இவர்கள், இன்று தாம் சிங்கள் அரசுடன் உறவாடுவதால் எங்கே தங்கள் திரைப்பட எதிர்காலம் தமிழகத்திலும், புலம் பெயர் தமிழர்களிடத்தும் கேள்விக்குறி ஆகிவிடுமோ என்று அஞ்சி சிங்கள அரசின் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் அடிமையாக இருக்கும் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்யப் புறப்படுகின்றனர்.
இலங்கை சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவது போல் அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், சிங்கள அரசு எழுதிக்கொடுக்கும் அறிக்கைகளை ஊடகங்களில் படித்துக் கொண்டும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளிலிருந்து மீட்க நடக்கும் முயற்சிகளை மழுங்கடித்து, நீதிக்காகப் போராடி வருபவர்களைக் கோமாளிகளாக உலத்தின் முன்பு நிறுத்த முயல்கின்றனர்.<=(வவுனியாவில்இராசபக்சே மனைவியுடன் நடிகை அசின்) IIFA விழா தோல்வியில் முடிந்துவிட்டதைத் தொடர்ந்து, சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்து வருகின்றது. இதைக் கண்டித்தத் தமிழுணர்வாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நேரம் பார்த்து, திட்டமிட்டு இவர்கள் செயல்படுகின்றார்கள். தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலையைச் செய்தும், நம் தாயகக் கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வரும் நூற்றுக்கணக்கான நம் மீனவர்களைத் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகக் கொன்று வரும் இலங்கை அரசின் இனவெறி முகம், டப்ளின் தீர்பாயத்தின் தீர்ப்பு, GSP+ சலுகை இரத்து போன்றவை மூலம் உலக மக்களுக்கு தெரியவரும் வேளையில், மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் இலங்கையை உலகிற்கு அமைதி நிலவும் நாடு என்று சொல்லத் துடிக்கின்றனர் இந்த நடிகர்கள். சாதாரணத் தமிழர்கள் காசு கொடுத்து படம் பார்த்ததால் தான் பணக்காரர்களாகவும், புகழ்மிக்கவர்களாகவும் மாறிப்போன இவர்கள், இன்று ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து நீதிக்கானப் போராட்டத்தை மலிவாக்க முயல்கின்றனர். நம்மாலான வரையில் இதுபோன்றவர்களை எச்சரிப்பதோடு, இவர்களின் அனைத்து படங்களையும், தொலைகாட்சித் தொடர்களையும், அனைத்து தளத்திலும் புறக்கணிக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு இங்கு வாழ்வது எளிதல்ல எனப் புரிய வைக்க வேண்டும். அதுவே, இனி சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல்பட இருக்கும் எல்லாத் துறையினருக்கும் பாடமாக அமையும். தமிழுணர்வாளர்களை ஆழம்பார்க்கவும், எதிர்ப்புக் குறைவாகவிருந்தால் அதை பயன்படுத்தவும் பல வழிகளில் வேலை நடக்கின்றது. நாம் விழிப்போடு தொடர்ந்து செயல்பட வேண்டும். இறுதியாக சில: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுபவர்களை ஏன் எதிர்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு: இன்று இவர்கள் உதவி செய்யப் போகும் இடம், வெள்ளத்தினாலோ, பூகம்பத்தினாலோ பாதிக்கப்பட்ட ஒரு இடம் அல்ல. ஆப்பிரிக்க நாடான சூடானில் நடந்ததைப் போல் மிகக் கொடூரமாக, சாட்சியமின்றி நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலை நடந்த இடத்திற்கு செல்கின்றனர். இன்று இவர்கள் ஏறி மிதித்தவர்களோடு(சிங்கள அரசோடு) கைகோர்த்துக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது போல் பாவனை செய்வதற்கு மாறாக , ஐ நா சபையின் சார்பாக ‘குட் வில்’ தூதராக சூடானில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்க நடிகை ஏஞ்சலினா சோலி(சால்ட் பட நாயகி) சூடான் சென்றிருந்தார்.
களத்தில் தங்கி தன்னால் ஆன உதவிகளை அம்மக்களுக்கு செய்து விட்டு அவர் மேலும் ஒரு காரியத்தை செய்தார். “இந்த மக்களுக்கு எதிராக நடந்தது போர் குற்றம், இவர்கள் மீது நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை.
இதற்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்” என்று உலக அரங்கில் நீதிக்காக குரல் கொடுத்தார். அவர் வாசிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் ‘டார்ஃபர் மக்களுக்கு நீதி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை இச்சுட்டியில் காண்க.
http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2007/02/27/AR2007022701161.html
இன்று போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு போகும் சரத்குமார், அசின், சல்மான் கான், விவேக் ஓபராய் அல்லது இனி செல்லவிருக்கும் யாராகட்டும், அங்கு இலங்கையில் குண்டு போட்டு தகர்க்கப்பட்ட பள்ளிக்கூடங்கள், கோயில்கள், எண்ணற்ற மருத்துவமனைகளைப் பார்த்துவிட்டு அங்கு நடந்தது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று நீதிக்காகக் குரல் கொடுப்பார்களா?

’திரைத்துறையினரை மட்டும் ஏன் இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் என வற்புறுத்துகிறீர்கள்?’ என்று கேட்பவர்களுக்கு.
திரைத்துறையினர் தவிர விளையாட்டுத்துறை, வணிகத்துறை என்று எல்லோரையும் அணுகி இலங்கை அரசைப் புறக்கணிக்கச் சொல்ல வேண்டும். ஆனால், திரைப்படத்துறைக்கும் மக்களுக்கும் உள்ள உறவு மிக நெருக்கமானது. பலப் பத்தாண்டுகளாகத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கும் திரைப்பட மோகம், இதுவரை பல நடிகர்களைத் தமிழகத்தின் பல அரசியல் பதவிகளில் அமர்த்தியுள்ளது. நாளை கூட புதிதாய் ஒரு நடிகர் தொடர்ந்து சில வெற்றி படங்களை கொடுத்துவிட்டு, மக்களுக்கு சமுதாய அக்கறையுடன் சில கருத்துக்களைக் கூறி உதவிகளையும் செய்தால், அவரும் அடுத்த தேர்தலில் நிற்பார். இது தமிழனின் பலவீனமாகக் கூட இருக்கலாம். ஆனால் இந்த வாய்ப்பு திரைப்படத்துறையினரை தவிர வேறு எவருக்கும் கிடைப்பதில்லை. தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் வாங்கும் தமிழன் முதல் புலம்பெயர்ந்து நாட்டில் அரை கோடி ஊதியம் வாங்கும் தமிழன் வரை தமிழர்களைத் தமிழுடன் இணைய வைப்பதில் தமிழ்த் திரைத்துறை முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் இவர்கள் தங்கள் ஊதியம் குறைவானாலும் ஒவ்வொரு மாதமும் திரைப்படங்களுக்கும் ஒரு தொகையைச் செலவிடுகின்றனர். மக்களுக்கும், தமக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது, விலை பேச முடியாதது என்பதை உணர்ந்தே பல மறைந்த, வாழும் நடிகர்கள் இம்மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது, “உடுக்கை இழந்தவன் கை போல” ஒற்றுமையுடன் குரல் கொடுக்கின்றனர்.இவர் நமக்காக பேசக் கூடியவர் என்று ஓவ்வொரு வீட்டிலும் காலத்திற்கும் மதிக்கின்றனர் ( நடிகவேள். எம். ஆர்.ராதா,போன்றோர்). நமக்கு அநீதி இழைக்க முயல்பவர்கள் நம் நெஞ்சங்களில் இருந்து மறக்கடிக்கப்படுகின்றனர்.

தமிழினத்தை ஈழத்திலும், தமிழகக் கடற்கரை கிராமங்களிலும் அழித்து வரும் பேரினவாத சிங்கள அரசுடன் கைகோர்க்கச் செல்லும் நடிகர்கள் இதை உணர்ந்து நீதியின் பக்கம் நிற்காவிடில், நீதிக்காக மன்றாடிவரும் தமிழினத்தால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதை நினைவில் கொள்ளட்டும்.
மறத்தமிழன்
தமிழ் நாடு.

26 ஜூலை 2010

அகதிகளுடன் சென்ற கப்பல் பற்றி தகவல் இல்லை!



இலங்கை அகதிகளுடனான எம் வீ சன் சீ கப்பல் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றது என்பது குறித்த தகவல்களை அறியமுடியாதிருப்பதாக கனேடிய செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தத் தகவல்களை வழங்க கனேடிய மற்றும், அமெரிக்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருவதாக ஊடகங்கள் சில குற்றம் சுமத்தியுள்ளன.
219 இலங்கை அகதிகள் மற்றும் 13 இந்திய தமிழ் அகதிகளுடனும் செல்லும் இந்த கப்பல், தற்போது கனடாவை அண்மித்துள்ளதாக முன்னதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
எனினும், தற்போது இந்த கப்பல் குறித்த ஊடக செய்திகளை மாத்திரமே அவதானித்து வருவதாக கனடாவின் வெளியுறவுத்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதே மாதிரியான தகவல்களையே ஐக்கிய அமெரிக்காவின் அதிகாரிகளும் வழங்கி வருவதாக கனேடிய செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்த கப்பல் குறித்த தகவல்களை வெளியிட கூடாது என்ற உத்தரவுக்கு இணங்க, இது தொடர்பில் தகவல் வழங்க முடியாதுள்ளதாக அமெரிக்க கடற்துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் கடந்த வெள்ளிக்கிழமை, குறித்த கப்பல் தாய்லாந்தின் கொடியுடன், பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகம் நோக்கி வருகின்றமையை அமெரிக்க கடற்துறை அதிகாரி எடம் ஸ்டன்டொன் உறுதிப்படுத்தி இருந்தார்.

ஜெகத் டயசை தூதராக ஏற்றுக்கொண்டதற்கு எதிராக வழக்குத்தாக்கல்.


சுவிஸ், நோர்வே ஈழத்தமிழர் அவைகள், இன அழிப்புக்கெதிரான அமெரிக்க தமிழர் அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து முதலாவது சட்ட நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளன ஜேர்மனி நாட்டுக்கான சிறிலங்காத் தூதுவராக தற்போது பணியில் அமர்த்தப்பட்டுள்ளவரும் போர்க்குற்றம் இழைத்தவர்களில் ஒருவருமான சிறிலங்கா இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜெகத் டயஸ் எதிராக முதல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றமிழைத்து 4 மாதங்களே கழிந்த நிலையில் சிறிலங்கா அரசு ஜெகத் டயசை தூதராக நியமித்ததை ஜேர்மனி ஏற்றுக்கொண்டிருப்பதற்கு எதிராக இந்த வழக்கு தாக்கலாவதாக சுவிஸ் ஈழத்தமிழர் அவையின் சட்ட விவகாரக்குழுவின் இணைப்பாளரான செல்வி அருள்நிதிலா தெய்வேந்திரன் தெரிவிக்கிறார்.
சுவிற்சர்லாந்து, நோர்வே ஆகிய இரண்டு நாடுகளிலும் வதியும் சுமார் 60,000 புலம் பெயர் ஈழத்தமிழர்கள் சார்பாக இவ்விரு நாடுகளிலும் ஜனநாயகரீதியில் ஈழத்தமிழர்களால் தெரிவான நாடு தழுவிய மக்கள் அவைகளான சுவிஸ் ஈழத்தமிழர் அவை (SCET), நோர்வே ஈழத்தமிழர் அவை (NCET) ஆகியவை அமெரிக்காவைச் சேர்ந்த இனவழிப்புக்கெதிரான தமிழர் (TAG) என்ற அமைப்போடு சேர்ந்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் (European Court ofHuman Rights) இந்த வழக்கைத் தாக்கல் செய்கின்றன.
மனித உரிமை, அடிப்படைச் சுதந்திரங்களுக்கான பாதுகாப்புக்கான சாசனம் (Convention for the Protection of Human Rights and Fundamental Freedoms) என்ற ஐரோப்பிய மனித உரிமைச் சாசனத்தை நோர்வே 1952 இலும் சுவிற்சர்லாந்து 1974 இலும் கைச்சாத்திட்டு அங்கீகரித்திருக்கின்றன. இந்தச் சாசனத்தின் பிரிவு 34 அனுமதிக்கின்ற வழக்குத்தாக்கல் செய்யும் உரிமைக்கு இசைவாகவே குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது.
குறித்த சாசனத்தின் பிரிவுகளான 3, 8, 11(2), 12 ஆகியவை மீறப்படுகின்ற அடிப்படையிலேயே குறித்த வழக்குத் தொடுக்கப்படுகிறது.
வழக்கிற்கான ஆதாரங்களில் ஜனவரி 2009 இல் இருந்து மே 2009 வரை வெளியான 182 வீடியோ பதிவுகளை ஆராய்ந்திருப்பதாகவும் அவற்றோடு சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெகத் டயஸின் வன்னி மீதான படைநகர்வுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து தமது ஆதாரங்களை முன்வைப்பதாகவும் குறிப்பிடுகின்ற வழக்காளர்கள் 5 வீடியோ பிரதிகளையும், பதின்மூன்று படங்களையும் நான்கு வரைபடங்களையும் பகிரங்கமாகவும் வெளியிட்டுள்ளனர்.
தம்மிடம் இருக்கக்கூடிய ஆவணங்கள் மாத்திரம் 10,740 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் 12,442 பேர் படுகாயப்படுத்தப்பட்டதையும் ஆதாரப்படுத்துவதாக சுவிஸ் மக்களவையின் பிரதிநிதி தெரிவிக்கின்றார். நாட்டு எல்லைகள் தாண்டிய நிலையில் குடும்ப ரீதியான உறவுகளைப் பேணி வாழுகின்ற ஒரு சமுகமான ஈழத்தமிழர் ஒரு நாட்டில் நடாத்தப்படுகின்ற ஓர் அரசியல் நியமனத்தின் ஊடாக, அதுவும் குறிப்பாகப் போர்க்குற்றம் புரிந்தவராகக் கருதப்படும் ஒருவரால், அச்சுறுத்தலுக்குள்ளாவது தொடர்பான சட்டவியற் கரிசனைகளின் அடிப்படைகளைக் கொண்டதாக குற்றப்பத்திரிகை அமைகிறது.
குறித்த நாடான சிறிலங்கா சட்டரீதியான விசாரணைகளை மறுதலித்து இன ஒடுக்குமுறையைக் கையாளும் நிலையில் விசாரணைக்கான தார்மீக அடிப்படைகள் மேலும் வலுப்படுத்தப்படுவதாக வழக்கைத் தாக்கல் செய்வோர் மேலும் தெரிவிக்கின்றனர். தவிரவும், ஐ.நா. சபையின் விசாரணை நடந்து முடிந்திருக்காத தருவாயில் குறித்த சாசனத்தின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்தாகவேண்டிய நிலையைத் தாம் எதிர்கொண்டிருப்பதாகவும் வழக்குத்தாக்கலை முன்னெடுப்போர் தெரிவிக்கின்றார்கள்.
ஓர் ஐரோப்பிய யூனியன் நாடானது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இன்னொரு நாட்டின் இராணுவத் தளபதியை தனது நாட்டிற்கான தூதராக ஏற்றுக்கொள்வது எந்த வகையில் ஐரோப்பிய சமூகத்திற்கு ஏற்புடையது என்ற கேள்விக்கான நீதியை ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றிடம் குறித்த வழக்கு கோருகிறது.இன்னொரு நாட்டின் தூதராக ஒரு நாட்டிற்கு அனுப்பப்படுபவருக்கு தூதர் செல்லும் நாட்டின் சட்டங்களிலிருந்து அரசியற் கேள்விக் கோட்பாட்டிற்கிணங்க விலக்கு வழங்கப்படுவதால் உள் நாட்டுச் சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குத் தொடருவதென்பது இயலாதது.
இந்நிலையில் ஐரோப்பிய மட்டத்தில் குறித்த விவகாரத்தை அணுகுவதாக சுவிஸ், நோர்வே மக்களவைகளின் சட்டக் குழு தெரிவிக்கிறது.குறித்த சட்ட நகர்வை மேற்கொள்ளும் அதேவேளை சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள், ஈழத்தமிழரின் அவலங்கள் தொடர்பான கவன ஈர்ப்பு முன்னெடுப்பாக சுவிஸ் ஈழத்தமிழர் அவை ஆறு அஞ்சல் முத்திரைகளையும் வெளியிட்டுள்ளது. இம் முத்திரைகளைப் பயன்படுத்தி தமது கருத்துக்களை உரிய வட்டாரங்களுக்குத் தெரியப்படுத்துமாறு ஈழத்தமிழரவை சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நோர்வே, சுவிஸ்சர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா ஆகிய நாடுகளில்ஜனநாயக ரீதியாகத் தெரிவான நாடளாவிய தமிழர் அவைகள் அண்மையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் இன அழிப்புக்கெதிரான தமிழர் எனும் அமைப்போடு சட்ட ரீதியான முன்னெடுப்புக் குறித்து ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டுள்ளன.
இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களுக்கெதிரான முதலாவது சட்டநடவடிக்கையாக சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களில் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கும் ஓர் இராணுவத் தளபதியைச் தனது நாட்டில் செயற்பட ஜேர்மனி அனுமதித்திருப்பது தொடர்பாக மேற்கொள்ளப்படுகிறது. இதர நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களும் இவ் வேலைத்திட்டத்தில் இணைவது தொடர்பாக தம்மோடு கலந்துரையாடி வருகின்றன என்று சுவிஸ் ஈழத்தமிழரவையின் அருள்நிதிலா தெய்வேந்திரன் தெரிவிக்கிறார். அருள்நிதிலா தெய்வேந்திரன் சுவிஸ் ஈழத்தமிழர் அவையின் சட்ட விவகாரக்குழுவின் இணைப்பாளராக இருக்கின்றார்.

25 ஜூலை 2010

தேங்காய்க்குள் கை உருவம்,கல்முனையில் அதிசயம்!


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தேங்காய்க்குள் இருந்து ஆறு விரல்களுடன் கூடிய கை உருவம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பாலிகா வீதியில் முன்னாள் உயர் கல்வித்துறைப் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் வீட்டுக்கு அருகில் உள்ள பி.எம்.எம்.நிஸாம் மௌலவி என்பவரின் வீட்டிலேயே இந்த பேரதிசயம் இடம்பெற்றுள்ளது.
இந்த வீட்டில் வளவில் உள்ள தென்னை மரத்தில் இருந்து பறித்த தேங்காய் ஒன்றை சமையல் தேவைக்காக வீட்டுக்கார பெண்மணி உடைத்தபோதே அதற்குள் ஆறு விரல்களுடன் கூடிய கை உருவம் ஒன்று இருக்கின்றமை கண்ணில் பட்டது. இந்த பேரதிசயத்தைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த வீட்டுக்கு வருகை தந்து கொண்டு இருக்கிறார்கள்.

அகதிகள் கப்பல் கனேடிய கரையை அண்மிக்கிறது.



உலகின் பார்வையையே தன்பக்கம் திருப்பி கடந்த நான்கு மாதங்களாக இங்கே நிற்கிறது, அங்கே நிற்கிறது என ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட தாய்லாந்தில் பதியப்பட்ட கப்பல் கனடாவின் கரையை எப்போதும் அடையலாம் என அமெரிக்க பசுபிக் பிராந்திய கடற் கண்காணிப்புப் பிரிவு உறுதி செய்துள்ளது. விடுதலைப்புலிகளின் கப்பல் என இலங்கை அரசாலும் மேற்குலக ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்ட இக்கப்பலில் அகதி அந்தஸ்துக்கோரும் 200க்கு மேற்பட்டோர் பயணிக்கிறார்கள் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இக் கப்பலின் நிலை பற்றிக் கருத்துத் தெரிவித்த மேற்படி அமெரிக்க அதிகாரி, தாய்லாந்துக் கொடி யுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இக் கப்பல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் கரையை நோக்கிச் சென்று கொண்டி ருப்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். மேற்படி அமெரிக்க பசுபிக் பிராந்தியக் கடற் கண்காணிப்புப் பிரிவு தனது எல்லைக் குட்பட்ட 12 கடல் மைல் தூரத்தையே கண்காணிப்பதால் இக் கப்பல் கரையை அண்மித் தவாறே பயணிக்கிறது என்றே நம்பப்படுகிறது. கனடாவின் கடல் எல்லைக்குள் இக்கப்பல் நுழையும் வரை கனடாவால் இந்த விவகாரத்தில் ஒன்றுமே செய்ய முடியாது என்பதும், சர்வதேச நீர்ப்பரப்பிலிருந்து அது கனடாவின் நீர்ப்பரப்பிற்குள் நுழைய எத்தனிக்கும் போது கனடியக் கடற்படையால் தடுத்து நிறுத்த முடியும் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார். மேற்படி கப்பல் விவகாரம் தொடர்பான விசாரணையில் பல நாடுகள் பங்களிப்புச் செய்து இக் கப்பலின் பயணத்தைக் கண்காணித்ததுடன், தமிழர்களின் வரலாற்றில் இவ்வாறு ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஒரு கப்பல் இவ்வளவு அகதிகளுடன் பயணிப்பது இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

மாயாவின் பாடல்களுக்கு தடையாம்.


பிரித்தானியாவில் வாழும் ஈழத் தமிழ்ப் பொப்பிசைப் பாடகியான மாயாவின் வீடியோக்களும், இசைதொகுப்புக்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையில் அமைகின்றதால் அவரின் இசைக்கு எம்.டிவி , யு டியூப் போன்ற ஊடகங்கள் தடை விதித்துள்ளன.


பொப் இசை உலகில் முன்னணிப் பாடகர்களில் ஒருவர். எம்.ஐ.ஏ. என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் .


மாயாவின் பாடல்களில் பெரும்பாலானவற்றில் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இதனாலேயே பலமுறை இவரின் பாடல்கள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன. அண்மையில் இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்பு ஒன்றும் இது போன்ற சர்ச்சைக்குள்ளாகி பெரும் தோல்வியை சந்தித்தது.

அவருடைய தீவிர ஆசைகளும், வாழ்க்கையும், பொப் இசையும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதவை என்றும் அதனால் அவ்ற்றின் தாக்கம் பாடல்களில் இருக்கத்தான் செய்யும் என்றும் மாயா கூறி உள்ளார்.

24 ஜூலை 2010

தமிழ் கைதிகள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்.



கொழும்பு விளக்கமறியல் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் மீது சிறைக்காவலர்களும், சிங்கள கைதிகளும் தாக்குதலை நடத்தி வருவதாக சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை சிறைக்காவலர் ஒருவர் தமிழ் கைதி மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதனையடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 380 தமிழ் கைதிகளும் ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ் கைதிகள் மீது சிங்கள கைதிகள் தாக்குதல்களை நடத்தியதாகவும் தற்போதும் இந்த தாக்குதல் தொடர்வதாக சிறைக்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள கைதிகள் தமிழ் கைதிகள் மீது தாக்குதலை நடத்தும் போது சிறைக்காவலர்கள் அதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சிங்கள கைதிகளின் தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தமிழ் கைதிகள் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த தமிழ் கைதிகளை வைத்தியசாலைக்கு எடுத்து செல்வதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு பா.அரியநேத்திரன், பொன் செல்வராசா ஆகியோர் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு டியூ குணசேகர மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வணிகர் சங்க கூட்டமைப்பை உடைக்க முடியாது-வெள்ளையன்.

வணிகர் சங்க பேரவையில் குழப்பம் ஏற்படுத்தி உடைக்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன், வணிகர் சங்க மாநாட்டின் மூலமாக, பேரவையின் பெரும்பான்மை பலத்தை பார்த்து வியந்த சில அரசியல் கட்சிகள், வணிகர் சங்கத்தில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்கின்றன. இதனால், தவறு செய்பவர்களுக்கும், வணிகர் பேரவைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது போன்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள், அவர்களுக்கு உந்துசக்தியாக உள்ளன. பொய் பிரசாரம் மூலமாக, வணிகர் பேரவையை உடைத்து குழப்பம் ஏற்படுத்தலாமென்ற முயற்சி தவிடு பொடியாகி விடும்.
பொது செயலர் மோகன் நடத்திய கூரியர் நிறுவனத்தில் நடந்த மோசடியை பேரவை கண்டித்தது. அதனால், சிலருடன் சேர்ந்து கொண்டு, அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், கட்சி சார்பற்ற வணிகர் பேரவையை உடைக்க முயற்சிக்கிறார். பேரவையில் உயர்மட்டக் குழு என்ற நிர்வாக அமைப்பே கிடையாது. ஆனால், உயர்மட்டக் குழுவில் முடிவு செய்து நீக்கப்பட்டதாக தகவல் பரப்புகின்றனர். அரசும், அரசியல் கட்சிகளும் கூட்டாக செயல்பட்டாலும், வணிகர் சங்க பேரவையில் குழப்பம் ஏற்படுத்தி உடைக்க முடியாது. அனைத்து மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகள், பேரவைக்கு ஆதரவாக உள்ளனர். வரும் 25ம் தேதி சென்னையில் அனைத்து வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் நடத்தி, இப்பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் என்றார்.

தமிழ் பெண்களை உடன் விடுதலை செய்யவும்.


கடந்த 30 வருட கால யுத்தத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 765 தமிழ்ப் பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இது தொடர்பாக அரியநேத்திரன் அவசரக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். கடந்த 30 வருட கால யுத்தத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 765 தமிழ்ப் பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கும் அரியநேத்திரன் எம்.பி இப்பெண்களின் பெயர்கள் மற்றும் ஏனைய விபரங்களையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார். 'தமிழ் அரசியல் கைதிகளில் பெண்களின் பரிதாப நிலை' என்கிற தலைப்பில் அரியநேத்திரன் எம்.பி. அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது : "எமது நாட்டில் 30 வருட காலமாக இடம்பெற்று வந்த ஆயுதப் போராட்டம் கடந்த 2009.05.19 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் போராட்ட காலங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய மாகாணங்களிலுருந்தும் வசித்து வந்த தமிழ் யுவதிகள் சுமார் 765 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைகளினதும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்-விபரங்களையும் இத்துடன் இணைத்துள்ளேன். இந்த 765 பேரில் வெலிக்கடைப் பெண்கள் பிரிவுச் சிறையில் 50 பெண்களும், 5 குழந்தைகளுமாக 55 பேர் உள்ளனர். அவர்களில் 5 தாய்கள் குழந்தைகளுடன் மிகவும் பரிதாபமாக வாழ்க்கையை நடத்துகின்றனர். இவர்கள் கைக் குழந்தைகளுடன் கண்ணீர் மல்க சொல்லொணாத் துயருடன் பரிதாபமாகக் கஷ்டப்படுகின்றனர். குழந்தைகளுக்குப் போஷாக்கான புட்டிப் பால் இல்லாமலும், நோய் தொற்றும் அபாயத்துடனும், அசுத்தமான சூழலிலும் அவர்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். இப்பெண்களில் சிலர் அங்கவீனர்களாகவும் உள்ளனர். குழந்தைகள் பரிதவிப்பு இவர்களின் குழந்தைகள் தந்தையையும் மற்றும் உறவுகளையும் கேட்டு பரிதவிக்கும் ஏக்கக் காட்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இதனைவிட , இவர்களில் அநேகமானவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டும் , உளரீதியாக தாக்கத்துக்குள்ளாகியும், பல்வேறு நோய்த் தாக்கங்களை அனுபவித்தும் வருகின்றார்கள். இவர்கள், தாம் எப்போது விடுதலை செய்யப்படுவோம் என்று ஏங்கிக் கண்ணீர் சிந்தித் தவிக்கின்றனர். இந்தப் பெண்கள் சிறைச்சாலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி தொடக்கம் தடுத்து வைக்கப்பட்டிருந்த வட்டக்கச்சியை பிறப்பிடமாகக் கொண்ட நடராசா இராஜேஸ்வரி எனும் பெண் (18 வயது)- மனநோயால் பாதிக்கப்பட்டு, தாய் தற்போது இந்த சிறைச்சாலையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டாரென அறிகின்றேன். கடந்த காலத்தில் நேரடியாக யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களும், யுத்தத்தின்போது பல உதவிகளைச் செய்தவர்களும், யுத்தத்துக்காக சர்வதேச ரீதியாகச் செயற்பட்டவர்களும் அரசியல் தலைவர்களாகவும், சமூக நற்பிரஜைகளாகவும் மாற்றப்பட்டுள்ளமையை நான் மிகவும் பாராட்டுகின்றேன். அது போல் யுத்தத்தில் எந்தவித சம்பந்தமுமில்லாமல் சந்தேகத்தின் பேரில் பல வருடங்களாக சிறை வாழ்வை அனுபவித்து வரும் இப்பெண் சிறைக் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென தயவுடன் வேண்டுகின்றேன். பொது மன்னிப்பு வழங்குகின்றமையில் தங்களுக்கு சிரமங்கள் உள்ள பட்சத்தில் அவர்களை பிணை அடிப்படையிலாவது விடுதலை செய்து, நீதி விசாரணை செய்யும் வாய்ப்பையாவது வழங்குங்கள் என மன்றாடிக் கேட்கின்றேன். பல்வேறு சிறைகளில், பல வருடக்கணக்காக அவலங்களைச் சந்தித்து நிம்மதியற்று நிர்க்கதியில் தவிக்கும் 765 பெண் கைதிகளுக்கும் ஒரே தடவையில் பொது மன்னிப்பு வழங்கமுடியாது எனத் தாங்கள் கருதும் பட்சத்தில், வெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் சொல்லொணாத் துன்பத்துடன் சோக வாழ்க்கையுடன் தத்தளிக்கும் 50 பெண் கைதிகளையும், 05 குழந்தைகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்கின்றேன். தாங்கள் இவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுப்பீர்களானால் அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள நான் தயாராகவுள்ளேன். பெண்களுக்கான உரிமையிலும், சிறுவர் நலனிலும் அதி கூடிய அக்கறை காட்டும் தாங்கள் மனிதாபிமான அடிப்படையில் இவ்விடயத்தில் கட்டாயம் கருணை காட்டுவீர்கள் என்கிற நம்பிக்கையில் இந்த வேண்டுகோளை தங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்."

23 ஜூலை 2010

தமிழர் அமைப்புக்கள் இணைந்தமைக்கு சீமான் மகிழ்ச்சி.


அன்புடையீர் வணக்கம்!

புலம்பெயர் தமிழர்களின் தமிழ் மக்கள் அவையும் (TCC), இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழ் அமைப்பும் (TAG) மேற்கொள்ளவிருக்கும் இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனஅழிப்பு ஆகியவற்றை ஐரோப்பிய நீதிமன்றங்களிலும், சர்வதேச நீதிமன்றங்களிலும், குற்றவியல், சிவில் வழக்குகளை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ளும் சட்டபூர்வ நடவடிக்கைகளை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏம் இனம் என்றும் வீழாது: எதிரிகள் முயற்சி வெல்லாது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ள இத்தகைய சட்டபூர்வ நடவடிக்கைகள் நாளை தமிழீழம் மலரும் என்கிற நம்பிக்கையை வலுப்படுத்துவதாக உள்ளது. இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள TAG இளையோருக்கும், மக்களவை இளையோருக்கும் எனது நெஞ்சம் நிறைநத வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.சிங்களக் கடற்படை தமிழக மீனவரை தாக்குவதைக் கண்டித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா.வின் விசாரணைக் குழு பற்றி தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் இதுவரை எவ்விதக் கருத்தும் சொல்லாததைக் கண்டித்தும் குரழெழுப்பிய காரணத்திற்காக என்னைத் தமிழக முதல்வர் கருணாநிதி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை வைத்துள்ளார். அவரது தமிழின விரோதப் போக்கை புலம்பெயர் வாழ் தமிழர்கள் தமிழக முதல்வருக்கு கண்டனக் கடிதங்கள் அனுப்பியிருப்பதை கேள்விப்பட்டு பெரிதும் மகிழ்ந்தேன். அளவற்ற உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றைக்கும் சீமான் நன்றி சொல்வதோடு கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று போர்க்குணத்தோடு வாழ்வான் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம் தேசியத் தலைவரின் இலட்சியமான தமிழீழம் அமைய உலகத் தமிழர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பு பெரிதும் இணைந்திருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

செந்தமிழன் சீமான்.

இனப்படுகொலையின் இரத்த சாட்சியம்!



தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 27 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச இயந்திரத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன்....
......பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி உட்பட்ட எமது விடுதலைப் போராளிகளும், மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி, பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப்பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது.
சிறிலங்காவின் இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந்திருக்கின்றனவேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன. இனப்படுகொலை எல்லா இடங்களிலும் ஒரே வடிவம் எடுப்பதில்லை. ஒடுக்குமுறையாளர்களைப் பொறுத்து அது பல்வேறு வடிவங்களிலும் தளங்களிலும் இடம் பெறுகிறது. போரின் இறுதிக் கால கட்டங்களில் எமது மக்கள் மீது சிறிலங்காப்படைகள் புரிந்த இனப்படுகொலையில் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் அழிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனமாக்கப்பட்டனர். மூன்று லட்சம் வரையிலான மக்கள் தடுப்புமுகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். இன்றும் இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர்; முகாம்களில் தான் வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்குரிய புனர்வாழ்வும் புனர்நிர்மாணமும் வழங்கப்படவில்லை. இவர்களை விட அடைத்துவைக்கப்பட்டுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் நிலை அச்சம் தருவதாகவே உள்ளது. 1983 இல் நடந்தேறிய சிறைச்சாலைப் படுகொலைகளின் நினைவுகள் எமது அச்சத்தை மேலும் அதிகரிக்கின்றன.
1983 ஆம் ஆண்டு யூலையில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் இவ்வேளையில், சிறிலங்கா அரசபடைகளால் கொல்லப்படட் 200,000 க்கும் மேற்பட்ட எமது மக்களையும் சாட்சியாக நிறுத்தி நாம் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோருகிறோம். நீதி வழங்கப்படாத எந்த ஒரு மக்கள் சமூகமும் அதன் காயங்களை என்றுமே ஆற்றிவிட முடியாது.
நீதியின் பெயராலும் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்கு நியாயம் கோரி அனைத்துலக சமூகத்திடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
1.இனப்படுகொலைக்குள்ளாகி வரும் மக்கள் சுயநிர்ணயத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு ஒரேவழி அவர்களுக்கான ஒரு நாடு அமைவதேயாகும். எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதே ஒரேவழி என்பதால் அனைத்துலக சமூகம் அதற்கு தனது ஆதரவினை வழங்க வேண்டும்.
2. சிறிலங்கா அரசால் கொடும் சிறைக்கூடங்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள எமது போராளிகள் போர்க்கைதிகளாக மதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டும். சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் போராளிகளினது பெயர் விபரங்கள் உடனடியாக வெளியிடப்படுவதற்கும்;, போராளிகளை அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் சென்று பார்வையிடுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
3.அனைத்துலக சமூகம் நீதியின் அடிப்படையிலும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்காகக் உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.
அத்தோடு இத்தருணத்தில் 1983 யூலை படுகொலையின் போது தமக்கு வரக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது, மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் பல தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாத்த சிங்கள மக்களை நாம் நன்றியுடன் மனதில் இருத்துகிறோம். சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாகப் புரிந்து வந்த இனப்படுகொலையை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்த சிங்கள முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரது கரங்களையும் தோழமையுணர்வுடன் நாம் இறுகப் பற்றிக் கொள்கிறோம். உங்களது குரல்கள் பெரும்பான்மையின் மத்தியில் பலவீனமாக இருந்தாலும் நீதியின் முன்னே வலுவானவை. நீதிக்கான எமது போராட்டத்துக்கு உங்கள் இணைவு மேலும் வலுச் சேர்க்கும்.
1983 ஆம் ஆண்டு இனப்படுகொலையினை நாம் நினைவுகூரும் இவ் வேளையில், எம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகளை வலியுறுத்தியும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்யக் கோரியும் ஜி.சிவந்தன் எனும் தமிழ் செயல்வீரன் பிரித்தானியாவிலிருந்து ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைமைப்பணிமனை நோக்கி யூலை 23 ஆம் திகதி இரவு நடைபயணம் ஒன்றினை ஆரம்பிக்கிறார். இரண்டு வாரங்கள் இடம் பெறப்போகும் இந் நடைப்பயணத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினைத் தெரிவிப்பதோடு, இப் போராட்டம் பூரண வெற்றியடைவதற்குரிய பங்களிப்பினை வழங்குமாறு தமிழ் மக்களை வேண்டி நிற்கிறது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று பல்வேறு அரசாங்கங்களுக்கு தமிழின அழிப்பு தொடர்பான ஆவணம் ஒன்றை அனுப்பி வைக்கிறது. இதனைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் பன்னாட்டுத் தலைவர்களை நேரடியாக சந்தித்து, சிறிலங்கா அரசின் இனவழிப்புக்கு எதிராக நீதிகோரும் வகையிலான அரசியல் செயற்பாடுகளுக்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இனப்படுகொலைக்குள்ளாகிவரும் ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வினை இனப்படுகொலை புரிபவர்களிடம் இருந்தோ அல்லது மற்றோரிடம் கெஞ்சியோ மீட்டுவிட முடியாது. சலுகைகளின் அடிப்படையில் இல்லாமல் நீதியின் அடிப்படையிலும், அனைத்துலக சட்டங்களுக்கமைய எமக்குரிய உரிமைகளின் அடிப்படையிலுமே நமது குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும்.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர்.

இலங்கை அரசுக்குள் மூன்று குழுக்கள்.


இலங்கை அரசு மூன்று குழுக்களாக உடைந்து விட்டது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.


பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தலைமையில் ஒரு குழுவும்,நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ எம்.பி தலைமையில் இன்னொரு குழுவும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் மற்றொரு குழுவும் செயற்பட்டு வருகின்றன என்று அச்செய்திகள் தெரிவிக்கின்றன.


முன்பு அமைச்சர் பஸில் ராஜபக்ஸ எம்.பி தலைமையிலான குழுவில் செயற்பட்டு வந்தவர்களில் அநேகமானவர்கள் இப்போது நாமல் ராஜபக்ஸ எம்.பியின் குழுவில் இப்போது இணைந்திருக்கின்றார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்று குழுக்களுக்களுக்குள்ளும் சிக்கி இலங்கை அரசின் நடவடிக்கைகள் சின்னாபின்னமாகிக் கொண்டு இருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

செல்லக்கிளி அம்மான் நினைவு நாள் இன்றாகும்.




23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம் . 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி
ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.
நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.
முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.
எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.
விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.
தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.
செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.
வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் “அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ”" என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.
“அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.
நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.
சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எடக`கும` எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.
ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.
ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.
தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது.
ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது.
சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.
ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.
ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.
இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.
அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.
விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து `”பசீர் காக்கா”" றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். `சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே `கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.
இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் “தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.
ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.
சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.
மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து “யாரது”" என்று முன்னே வந்தனர்.
“அது நான்ராப்பா”" என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். “அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை”" என்றார் ரஞ்சன்.
“இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்”" என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.
மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.
இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. `எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து “அண்ணா அவன் அனுங்குகிறான்.” மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.
இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.
“கரையால் வாருங்கள்”" என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.
இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து “யாரது“ என்று வினவ அம்மான் “அது நான் தம்பி” என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.
பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க “அம்மானைக் காணவில்லை”" என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். “டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.
வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.
லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.
வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.
- அன்புடன் கிட்டு -

22 ஜூலை 2010

இஸ்ரேல் சார்பான டொனால்ட் பெரேராவின் கருத்துக்கு எதிர்ப்பு.



பலஸ்தீனர்கள் பேச்சுவார்த்தையை நிராகரித்தால் யுத்தத்தை இஸ்ரேல் தீவிரப்படுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் டொனால்ட் பெரேரா கருத்துத் தெரிவித்தமை தொடர்பாக பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகம் கடும்; எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகத்தின் இணைத் தலைவரான அமைச்சர் அதாவுட செனவிரட்ண, டெய்லிமிரர் இணையத்தளத்திற்குக் கருத்துத் தெரிவிக்கையில், தூதுவர் டொனால்ட் பெரேரா என்ன கூறினாலும் இலங்கை அரசாங்கம் பலஸ்தீன மக்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல், பலஸ்தீனம் ஆகிய இருதரப்பினரையும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுமாறு வலியுறுத்துவதாகவும கூறினார். இதேவேளை, டொனால்ட் பெரேராவின் கூற்று, இலங்கை அரசாங்கத்தின் கருத்தை பிரதிபலிக்கிறதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்;டும் என பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகத்தின் மற்றொரு இணையத்தலைவரான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கூறியுள்ளார்.ஊடகங்களுக்கு இத்தகைய பொறுப்பற்ற வகையில் கருத்துத் தெரிவிப்பதற்காக தூதுவருக்கு எதிராக பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சமூகத்தின் ஸ்தாபகத் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்துள்ளார்.“இஸ்ரேல் இரட்டை வேடம் பூணுகிறது. இஸ்ரேல் ஒரே சமயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் உதவியளித்ததாக நூலாசிரியர் ஒருவர் எழுதியுள்ளார். எனவே டொனால்ட் பெரேரா போன்ற முன்னாள் படை அதிகாரிகள் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையானது. பலஸ்தீன மக்கள் சுதந்திரம் கோருகிறார்கள். அவர்களுக்கு இலங்கை ஆதரவளிக்கிறது” எனவும் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் மேலும் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களும் பயிற்சியும் பெற்றமைக்காக பலஸ்தீனத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண் போராளிகளுக்கு நடனப்பயிற்சி அளிக்கப்படுகிறதாம்.


இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்துள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் 12,000 பேருள் 3028 பேரைத் தாம் இதுவரைக்கும் விடுவித்து விட்டதாகவும் தற்போது 7980 பேர் மட்டுமே புனர்வாழ்வு முகாமில் உள்ளனர் என்று புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர நேற்று தெரிவித்தார். மேலும் இவ்வாண்டு நடக்கவுள்ள க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு 364 பேர் தோற்றவுள்ளதாகக் கூறிய அவர், அப்பரீட்சை முடிவடைந்ததும் இந்த 364 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் கூறினார். கொழும்பு, பொரளையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே இத்தகவல்களை அவர் தெரிவித்தார்.புலிகளின் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட 1300 பேர் உட்பட ஏனையோர் இயக்கத்துடன் எவ்வாறு தொடர்புபட்டிருந்தனரோ அதே அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ் வளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுள் 98 சத வீதமானோர் பெற்றோருடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்று தெரிவித்த டி.யூ குணசேகர சரணடைந்த புலிப்போராளிகளில் 2000 பெண்களும் அடங்குவர், இவர்களில் 600 பேருக்குத் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும், பிரபல நடிகை அனோஜா வீரசிங்க இவர்களுக்கு நடனப் பயிற்சியளித்து வருகிறார் என்றும், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

21 ஜூலை 2010

இராணுவத்தளபதியை நாடாளுமன்றில் முன் நிறுத்தவேண்டும்-சரத்.

நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவை அழைக்க வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா இன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமைப் பிரச்சினையொன்றைக் கிளப்பிய சரத் பொன்சேகா, ஜூலை 16 ஆம் திகதி நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தன்னை பங்குபற்றவிடாமல் செய்ததன் மூலம் தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்படுவதற்கு இராணுவத் தளபதியே பொறுப்பெனவும் கூறினார்."இராணுவத்தினர் எனக்குப் பாதுகாப்பு வழங்குவதை மாத்திரமே செய்யவேண்டும். சிறைச்சாலை அதிகாரிகள் என்னை அன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரத் தயாராக இருந்தனர். ஆனால், இராணுவ அதிகாரிகள் என்னை அதில் பங்குபற்றவிடவில்லை" எனவும் சரத் பொன்சேகா கூறினார்.

20 ஜூலை 2010

தர்சிகாவின் சடலத்தை தோண்டி எடுத்து கொழும்புக்கு அனுப்ப உத்தரவு.


வேலணை அரச வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் பதில் கடமையாற்றிய குடும்ப நலப் பணியாளர் எஸ்.தர்ஷிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


ஊர்காவல்துறை நீதிவான் ஆர் வசந்தசேனன் அச்சடலத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி தோண்டியெடுக்க வேண்டும் என்றும் மரண பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


மகளின் திடீர் மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என்று தெரிவித்து அவரின் தாயார் ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தனிப்பட்ட சட்டத்தரணி ஒருவர் மூலம் தாக்கல் செதிருந்தார்.

இச்சந்தேகத்தை நிவர்த்தி செய்ய மகளின் மரண பரிசோதனையை நீதிமன்றம் மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்று அம்மனுவில் கோரி இருந்தார். இந்நிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறுவனை கொலை செய்த கள்ளக்காதலி!



தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த கள்ளக் காதலி, கள்ளக்காதலனின் 4 வயது மகனை கடத்திச் சென்று கொலை செய்து சூட்கேசில் அடைத்து நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் போட்டது தெரியவந்துள்ளது.
.
இதுதொடர்பாக கள்ளக்காதலியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகர் இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 34). இவரது மனைவி அனந்த லட்சுமி. இவர்களுக்கு நிவேதிதா (வயது 6) மற்றும் ஆதித்யா (வயது 4) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நான்கு வயது சிறுவனான ஆதித்யாவை தந்தை ஜெயக்குமாரின் காதலி பூவரசி கடந்த 17ம் தேதி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் மயமானார். அதற்கு மறுநாள் ஜெயக்குமாரின் காதலி பூவரசி தான் அழைத்துச் செல்லவதாக கூறப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் அருகில் உள்ள பிளாட்பிராத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டனர்.பின்னர் பூவரசி ஜெயக்குமாருக்கு தொடர்பு கொண்டு தான் மயங்கி விட்டதாகவும், தன்னுடன் வந்த ஆதித்யா காணவில்லை என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் புதிய பஸ் நிலையத்தில் கடந்த 18ம் தேதி அடையாளம் தெரியாத 4 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் சூட்கேஸில் பிணம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சூட்கேஸில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் உடல் ஆதித்யாவாக இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட சிறுவனின் உடலை அடையாளம் காண ஆதித்யாவின் தாயார் அனந்த லட்சுமியை போலீசார் நாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றனர். உடலை பார்த்த அனந்த லட்சுமி கொலை செய்யப்பட்ட உடல் தனது மகன் தான் என உறுதி செய்தார். இந்நிலையில், ஜெயக்குமாரின் கள்ளக்காதலி பூவரசி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதில் கூறியதாவது: நான் வேலூரைச் சேர்ந்தவர். எம்எஸ்சி வரை படித்திருக்கிறேன். 2006ம் ஆண்டு வீட்டை விட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும்போது ஜெய்குமாருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல முறை நெருக்கமாக இருந்தோம். இதனால் நான் கருவுற்றேன். கருவை கலைக்கும் படி கூறினார். நானும் அதன்படி கலைத்தேன். என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரிடம் கேட்டேன். அதனை ஜெயக்குமார் மறுத்துவிட்டார். இருப்பினும், ஜெயக்குமார் மீது இருந்த காதலால் அடிக்கடி அவரை பார்க்க வீடு மற்றும் அலுவலகத்திற்கு சென்று வந்தேன். அதே போல் கடந்த 17ம் தேதி ஜெயக்குமாரின் அலுவலகத்திற்கு சென்ற போது அவருடன் மகன் ஆதித்யா இருந்தார். அப்போது ஆதித்யாவை சென்னை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி சிறுவனை அழைத்துச் சென்றேன்.வேப்பேரியில் தங்கியிருந்த எனது விடுதிக்கு ஆதித்யாவை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சிறுவனை சூட்கேஸில் வைத்து ஆட்டோ மூலம் கோயம்பேடு எடுத்துச் சென்றேன்.பின்னர் அங்கிருந்து பஸ் ஏறி பாண்டிச்சேரிக்கு சென்றேன். அங்கிருந்து நாகப்பட்டினம் பஸ்ஏறி நாகப்பட்டினம் செல்லும் போது சிதம்பரம் அருகே சென்றவுடன் பயமடைந்து பஸ்சில் இருந்து கீழே இறங்கி விட்டேன் என போலீசாரிடம் பூவரசி கூறியிருக்கிறார். பஸ் நாகப்பட்டினம் சென்றடைந்போது பஸ்சில் அனாதையாக சூட்கேஸ் இருந்ததால் அதனை எடுத்து பஸ் நிலையத்தில் வைத்துள்ளனர். பின்னர் பஸ் நிலையத்தில் கிடந்த சூட்கேஸில் ஈக்கள் மொய்ததால் சந்தேகம் அடைந்த பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் முகமூடி அணிந்தோர் இளம் பெண்கள் மீது தாக்குதல்.

கிளிநொச்சியில் விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பகுதிகளில் இனந்தெரியாத குழுவால் இளம் பெண்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முறையிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இப்பகுதிகளில் இரு சம்பவங்களில் குடும்பப் பெண்ணொருவர் உட்பட இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரம் கிழக்கு கிராம சேவையாளரின் உதவியாளராகவுள்ள விஸ்வமடுவைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண்ணொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார்.
முகமூடிகள் அணிந்து முச்சக்கரவண்டியொன்றில் விஸ்வமடுவிலுள்ள இவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத இளைஞர் குழுவொன்றே இந்தப் பெண்ணைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது.
உறவினர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து இக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இவர்களின் தாக்குதலில் இந்தப் பெண் தலையில் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மற்றைய சம்பவத்தில் கட்டைக்காடு அ.த.க.பாடசாலையில் தொண்டராசிரியராகப் பணியாற்றும் 26 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர் தாக்கப்பட்டிருக்கின்றார்.
முன்னைய பெண் தாக்கப்பட்ட அதே பாணியிலேயே இந்தப் பெண்ணும் தாக்கப்பட்டிருக்கின்றார். முகமூடி அணிந்த நிலையில் முச்சக்கரவண்டியில் வந்த நான்கு இளைஞர்கள் முச்சக்கரவண்டியை விட்டு இறங்கியதுடன், இந்தப் பெண்ணைத் தாக்கியதாகவும் அவ்வேளை இவரது வீட்டில் நின்ற கணவனும் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்தப் பெண்கள் தாக்கப்பட்ட போதிலும் இவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களோ,உடைமைகளோ அபகரிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

19 ஜூலை 2010

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய நடைபயணம்.



பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல்வரை நடைபயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார் சிவந்தன். பிரித்தானியாவில் இருந்து கால்நடைப் பயணமாக சுவிஸ், ஜெனீவாவரை செல்ல சிவந்தன் என்ற இளைஞர் முன்வந்துள்ளார்.
23ம் திகதி லண்டனில் நடைபெறும் இரவு நேரப் போராட்ட முடிவில் இந்தக் கால் நடைப் பயணம் ஆரம்பிக்க இருப்பதாக அறியப்படுகிறது. சுமார் 12 நாட்கள் தொடர்பயணம் மேற்கொள்ள இருக்கும் இவர் 6ம் திகதி ஜெனீவாசென்று அங்கு ஐ.நா முன்றலில் நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்கேற்று, ஐ.நா பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுவைக் கையளிக்க உள்ளார்.
போராளிகளின் விடுதலை குறித்து ஐ.நா துரித நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மற்றும் இன அழிப்பு தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்த நடைபயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
1983ம் வருடம் ஜூலை 23ம் நாள் சிங்கள காடையர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டு, சொத்துக்கள் சூறையாடப்பட்ட நாள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் ரத்தவெள்ளத்தில் மிதந்த நாள் கறுப்பு ஜூலை ஆகும். தமிழன் ரத்தம் குடிக்க புறப்பட்ட சிங்கள காடையரின் அடக்குமுறைகளை உலகிற்கு நாம் பறைசாற்றும் நாள் கறுப்பு ஜூலை.
எனவே பிரித்தானியா வாழ் மக்களே அன்று இரவு 9.00 மணிக்கு நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொள்ள வேண்டும். அத்தோடு அங்கு இளையோர்களால் ஆரம்பிக்கப்பட இருக்கும் நடை பயணத்திற்கும் மக்கள் தமது ஆதரவை வழங்கவேண்டும்.
ஜூலையில் கொல்லப்பட்ட அனைத்து தமிழர்களின் ஆத்மசாந்திக்காக நாம் ஒன்றுகூடுவோம்!

மாயா அருள்பிரகாசத்தின் திடீர் பல்டி!


எனது தந்தையார் இலங்கை செல்கின்றபோதெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து காப்பாற்ற இலங்கை அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்திருக்கின்றது இப்படிக் கூறி உள்ளார் பிரபல பொப் பாடகி மாயா .


மாதங்கி அருட்பிரகாசம் என்கிற சொந்தப் பெயரை உடைய இவரின் பெற்றோர் இலங்கையர் ஆவர்.பிரித்தானியாவில் வசித்து வருபவர்.


இவரின் தகப்பனாரான அருட்பிரகாசம் எனப்படும் அருளர் ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய பிரமுகராக இருந்தவர். அமெரிக்கப் பிரஜையான புரோன்ஃப்மன் என்பவரை மாயா திருமணம் செய்துள்ளார்.

இருவருக்கும் 16 மாதக் குழந்தை உண்டு. ஆனால் மாயாவுக்கு கிறீன் அட்டை கிடைக்கின்றமையில் பலத்த சிக்கல் நிலவுகின்றது. அமெரிக்க விசா சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இவருக்கு இது வரை பாதகமாகவே இருந்து வந்துள்ளன.

இவருடைய தகப்பன் அருளர் புலிச் சார்பு கொள்கை உடையவர் என்று அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் விளங்கி வைத்திருக்கின்றமையும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.

தற்போது நியூயோர்க் சென்றிருக்கும் மாயா கிறீன் அட்டையைப் பெற்றுக் கொள்கின்றமையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையிலேயிலேயே அவர் தகப்பன் இலங்கை செல்கின்றபோதெல்லாம் புலிகளிடம் இருந்து தகப்பனைக் காப்பாற்ற இலங்கை அரசு பாதுகாப்பு வழங்கி வந்திருக்கிறது என்று ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

18 ஜூலை 2010

கொடிகாமம் பகுதியில் இளம் பெண் சுட்டுக்கொலை!


நேற்று சனிக்கிழமை காலையில் கிட்டத்தட்ட 7.30 மணியளவில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒரு இளம் பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இச்சம்பவம் தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு அண்மையில் நடந்துள்ளது. இறந்த பெண்மணி இன்னமும் அடையாளங் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெள்ளிக்கிழமையன்று சாவகச்சேரியிலுள்ள மந்துவில் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தென்மராட்சிப் பகுதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்மினி சிதம்பரநாதன் விபத்தில் காயம்.



யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் வாகன விபத்து ஒன்றில் காயமடைந்துள்ளார். கொடிகாமத்தில் நேற்று மாலை அவர் பயணம் செய்த வேன் லொறி ஒன்றுடன் மோதியது.
இதன் போது பத்மினி சிதம்பரநாதன், அவருடைய கணவர் உட்பட்ட மூவர் காயமடைந்தனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் காயமடைந்தவர்கள் யாழ், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

17 ஜூலை 2010

அஞ்சமாட்டோம் அடிபணியவும் மாட்டோம்!நாம் தமிழர் இயக்கம் ஆவேசம்.


நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழினத்தின் மேன்மைக்கும் எழுச்சிக்காகவும் பாடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது தமிழக முதல்வர் கருணாநிதி தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவி கைது செய்துள்ளார். சிங்கள பேரினவாத இலங்கை அரசு அன்றாடம் எமது மீனவர்களைச் சுட்டுக் கொல்கிறது. எண்பதுகளில் தொடங்கி இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இறையாண்மையுள்ள ஒரு தேசத்தின் சட்டமும் போலீசும் இந்த மீனவர்களைக் காப்பாற்ற வேண்டாமா? இலங்கை ஒரு அண்டை நாடு என்றால் அண்டை நாட்டுக்காரன் அடுத்த வீட்டுக்காரனை அன்றாடம் கொல்கிறானே ஏன்? இலங்கை அரசு தமிழர்கள் என்றாலே அவர்களை அழித்தொழிக்கும் தீர்மானத்தோடு இருக்கிறது. அவன் இலங்கையில் இருந்தாலும் சரி இந்தியாவில் இருந்தாலும் சரி. தமிழனை வெட்டினால், கொன்றால் கூட கேட்க நாதியில்லை என்பது சிங்களனுக்குத் தெரிந்து விட்டது.
தட்டிக் கேட்பது மட்டுமல்ல கொலைகாரப் பாவிகளை விமர்சனம் செய்து பேசக்கூட இங்குள்ள ஆட்சியாளர்கள் அனுமதிப்பது இல்லை. தமிழ் மீனவர்களின் உயிரை விட சிங்கள மாணவர்கள் மீது இங்குள்ள அரசுகள் கரிசனையுடன் இருக்கின்றது. இங்குள்ள அரசுகள் தமிழக மீனவனைக் கொன்றவனைப் பாதுகாக்கின்றது, அதற்கு எதிராக குரல் கொடுத்தவனை தனிமைச் சிறையில் அடைக்கின்றது. தமிழினத்தை அழித்து விட்டு தமிழர்களுக்கு உரிமையைத் தருவோம் என்று சொல்லும் ராஜபக்‌சேவுக்கும் கருணாநிதிக்கும் என்ன வேறுபாடு? உள்ளூரில் தமிழர்கள் கஞ்சிக்கு வழியில்லாமல், வேலை வாய்ப்
பில்லாமல், பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வுக்கே அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். கடுமையான மின்வெட்டால் தமிழகம் முழுவதும் சிறு தொழில்கள் நசிந்து விட்டன, விலைவாசி விண்ணை முட்டி என்ன செய்வதென்று அறியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் ஏழை மக்கள். ஆனால் கருணாநிதியோ அது குறித்து கவலைப்படாமல் புகழ் பாடும் பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு பொழுதைக் கழிக்கின்றார். போர் வெறியர்களான சிங்கள ராஜபட்சே, மற்றும் சோனியாவின் மனம் புண்பட்டு விடக் கூடாது என்று கவலைப்படுகிறார்.
உலகமே ராஜபக்‌சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதியும் அவரது அரசும் சிங்களனையும் ராஜபக்‌சேவையும் பாதுகாக்க சட்டம் கொண்டு வருகின்றார்கள்? உண்மையில் இது யாருக்கான அரசு?
ராஜபட்சேவின் சொல்படி கேட்டு நடக்கும் தேவை சோனியாவுக்கு இருக்கலாம் கருணாநிதிக்கு இருக்கலாம் ஆனால் நாம் தமிழர் இயக்கத்திற்கோ அதன் தலைவர் சீமானுக்கோ இல்லை. எம் மண்ணின் மைந்தர்களான மீனவ மக்களைக் காக்கவும், திமுகவின் அராஜக ஆட்சியில் சிக்கி வதைபடும் தமிழக மக்களிடம் இருந்து காங்கிரஸ், கருணாநிதி கும்பலை வேரறுக்கும் பணியை நாம் தமிழர் இயக்கம் தொடர்ந்து செய்யும். அடக்கு முறைகளைக் கண்டு ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் பெரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. அதனைத் தூண்டிவிட்டுத்தான் நீங்கள் இயக்கம் வளர்த்தீர்கள், அந்த நெருப்பு உங்களைச் சுட்டுப் பொசுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.